Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, March 1, 2015

சொற்களும் நானும்


சொற்களை நான் நேசிக்கிறேன்!

சொற்கள் இனிமையானவை…

சில சொற்களின் இனிமை

அவற்றின் ஒலியிலேயே தெரியும்…

சில சொற்களின் இனிமை

எழுத்துகளின் கோர்வையில் தெரியும்…

இன்னும் சில சொற்களின் இனிமை

அவற்றின் பொருளில் புலப்படும்…

சில சொற்களுக்குத் தனி

அழகிருக்கும், கம்பீரமிருக்கும்…

சில சொற்களுக்கு

நிறம் இருக்கும், மணம் இருக்கும்…

இன்னும் சில சொற்களுக்கோ

சுவை கூட இருப்பதுண்டு…

ஆனால்,

இவை அனைத்தும் ஒருசேர இருக்கும்

ஒரே ஒரு சொல் எது தெரியுமா?

.

.

.

உன் பெயர்!


--கவிநயா

இந்த வாரம் அம்மன் பாட்டிலும் உன் பெயர்

படத்திற்கு நன்றி: http://www.fanpop.com/clubs/roses/images/13966980/title/rose-love-wallpaper

Monday, December 15, 2014

காதல் சொன்னானோ?

மார்கழி மாதத்திற்கு வந்தனம்! இந்த மாதம் முழுவதும் இறை நினைப்பில் திளைத்திருக்கலாம்.

அந்த மாயக் கண்ணனின் நினைவில் பிறந்த ஒரு கவிதை கண்ணன் பாட்டில்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...

அன்புடன்
கவிநயா


Sunday, June 15, 2014

என்று வருவாயென...

http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481

காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!



நீண்டு கிடக்கும்

காலமெனும் பாதையில்

விழிகள் பதித்து –

முரண்டு பிடிக்கும்

புத்திக்குள் வித்தாக

உன்னை விதைத்து -

துவண்டு கிடக்கும்

மனக் குடிலின் வாயிலில்

மலர்கள் விரித்து –

வண்டு குடிக்கும்

மதுவாக உன்

அன்பை நினைத்து -



மண்ணூடே ஓடி

நீர் தேடும் வேர் போல -

மரம் தேடி ஓடி

கிளை சுற்றும் கொடி போல -

மடி தேடி ஓடும்

பாலுக் கழும் கன்றாக -

கடல் தேடி ஓடும்

காதல் மிகு நதியாக -

உனைத் தேடி நானும்என்

உயிர் களைத்துப் போன பின்னே…



இன்று,

என் மனக் கதவின்

ஒரு ஓரத்தில்…



காவல் இருக்கின்றேன்,

காத்துக் கிடக்கின்றேன்,

வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…

வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://seventhfairy.deviantart.com/art/WaitiNG-FOr-yOu-336571481


Sunday, June 23, 2013

நேற்று இல்லாத மாற்றம்...















என்மனதில் உன்வதனம் வரைந்து பார்க்கிறேன்
என்னுடலில் உன்னுயிரால் வாழ்ந்து பார்க்கிறேன்
கண்ணிமையில் உன்கனவு ரசித்துப் பார்க்கிறேன்
கனியிதழில் உன்பெயரை ருசித்துப் பார்க்கிறேன்!

எண்ணி எண்ணிப் பார்த்திருந்தேன் எண்ணம் நின்றது
வண்ண வண்ண வார்த்தை சொல்லிக் கவிதை என்றது
முன்னும் பின்னும் நடந்த தெல்லாம் மறந்து போனது
நேற்றும் இன்றும் நாளும் பொழுதும் கலந்து போனது!

மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்
மடுவின் நடுவில் தாமரை போல் மலர்ந்து சிரிக்கிறாய்
காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
தாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!

வானைப் போல விரிந்த அன்பில் தொலைந்து போகிறேன்
தேனைக் குடித்த வண்டாய் நானும் கிறங்கிப் போகிறேன்
நுனி விரலால் தீண்டினாலும் உருகிப் போகிறேன்
பனி மலராய்ப் பாதம் சேர்ந்து புனிதமாகிறேன்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.kateathome.com/love-birds/

Monday, April 8, 2013

ரகசியமாய்...



மூடி மூடி வைத்தாலும்,

மல்லிகைப் பூவின் இருப்பை
அதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

பனிக் கட்டியின் இருப்பை
பாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

கதிரவனின் இருப்பை
அவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

என் மனதில் உன் இருப்பை...

திடீர் பகற் கனவுகளும்,
ரகசியப் புன்னகைகளும்,
கன்னத்தின் கனிச் சிவப்பும்,

காட்டிக் கொடுத்து விடுகின்றன!


--கவிநயா


நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.panithulishankar.com/2010/07/blog-post_19.html

Sunday, March 25, 2012

பாவை வனம்



கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.

என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.

என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

Sunday, February 12, 2012

சோடி போட்டு பாடுங்க!

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)

லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!



பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே

ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே

பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே

ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே

பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா

ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

Monday, June 6, 2011

நீ இல்லாத போதும்...

(100-வது கவிதை)



கடற்கரை மணலில்
கால் பதித்து நடக்கிறேன்
கூடவே பதிகின்றன
உன் பாதச் சுவடுகளும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தனிமையின் அமைதியிலும்
இரைச்சலில் அமிழ்கையிலும்
தெளிவாய் ஒலிக்கிறது,
உன்னுடைய இன்குரல் மட்டும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

தெருவின் வெறுமையிலும்
திருவிழாக் கூட்டத்திலும்
புன்னகையுடன் பளிச்சிடுகிறது,
அன்பொளிரும் உன் வதனம் -
என்னருகில் நீ இல்லாத போதும்…

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/eaglella/246690652

பி.கு.: பாத யாத்திரை செய்வதை விட, அதைப் பற்றி எழுதறது கஷ்டமா இருக்கும் போல! போன வாரம் முழுக்க எழுதறதுக்கு போதிய நேரம் கிடைக்காததால இந்த வாரம் கவிதை. கூடிய விரைவில் யாத்திரையை தொடர்கிறேன்...

Sunday, February 13, 2011

நீயும் நானும்



காலைச் சுற்றிச் சுற்றிவரும்

நாய்க் குட்டியைப் போல

என்மனதைச் சுற்றிச் சுற்றி வரும்

உன்னுடைய நினைவுகள்…








மலரைப் பார்த்தால்

அதன் நிறம் தெரியும் – என்

மனதைப் பார்த்தால்

அதில் நீ தெரிவாய்!









ஒளியாய் என்றன் கண்ணுக்குள்...

வளியாய் என்றன் மூச்சுக்குள்...

பொருளாய் என்றன் கவிதைக்குள்...

உயிராய் என்றன் உடலுக்குள்...

.

.

நீ!







அனைவருக்கும் இனிய அன்பர் தின வாழ்த்துகள்!


அல்லிப்பூ படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fwp/444262241. மற்ற படமெல்லாம் கூகுளார் தந்தார்.

Monday, March 1, 2010

உன் நினைவு

காதலர் தினத்துக்காக இளமை விகடனில் பிரசுரமானது...



நொடி கூட நிற்காமல்
ஓடிக் கொண்டே இருக்கிறாயே
என் நினைவுக்குள்...
உனக்கு கொஞ்சமும்
கால் கடுக்கவில்லையா?

**

அடிக் கரும்புச் சாறாய்
தித்தித்துக் கிடக்கின்றாய்
அடிமனசில்...
ஆனாலும் எனக்குச் சற்றும்
திகட்டுவதே இல்லை,
உன் நினைவுகள்!

**

உன் நினைவே என்னுடைய
சுவாசமாய் ஆகியபின்
மனசெல்லாம் எப்போதும்
மணத்தே கிடக்கின்றது...
உன் வாசமாய்!

**

--கவிநயா

Sunday, August 30, 2009

நினைவுகள்...




உன்நினைவு மகரந்தங்களை
சேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென.

--

இலக்கை அடைய எத்தனித்து,
முடியாமல்,
உன் நினைவுகளில்
தடுக்கித் தடுக்கி
விழுந்து கொண்டேயிருக்கிறது
மனசு.

--


நிலவொளியை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
சகோர பறவையைப் போல
உன் நினைவுகளை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
நான்.

--

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/leo-avelon/467505613/sizes/m/

Sunday, June 28, 2009

காத்திருப்பேன்...



அன்றொரு நாள் அழுதிருந்தேன்
ஆதுரமாய் அன்பு செய்தாய்
உயிர் கொண்ட தேவதையாய்
உவந்தென்னை மகிழ வைத்தாய்

கைகால்கள் முளைத்தெழுந்த
கனவாக நீ வந்தாய்
கவிதைக்குள் கருவானாய்
நிஜத்தினிலே உருவானாய்

துயர்துடைத்து முடித்த பின்னே
தொலைவினிலே மறைந்து விட்டாய்
உன் கடமை முடிந்தது போல்
உதறி விட்டுச் சென்று விட்டாய்

வந்திடுவாய் நீ என்றே
வாசல் பார்த் திருக்கின்றேன்
உன்னோடு சேர்ந்திடவே
உயிர் சேர்த்து வைக்கின்றேன்...


--கவிநயா

('அன்புடன்' குழுமத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த போது படத்திற்கென எழுதிய கவிதை)

சுப்பு தாத்தாவின் குரலில், இசையமைப்பில்... (நன்றி தாத்தா!)

Sunday, November 9, 2008

காதல் கொஞ்ச(ம்)...

...கவிதை கொஞ்ச(ம்). தமிழுக்கே உரிய அழகான சில வார்த்தைகள்ல காதலும் ஒண்ணுன்னு எனக்குத் தோணும். காதல் இல்லாத கவிதை இருக்கலாம்; ஆனா கவிதை இல்லாத காதல் இருக்குமோ? அதொண்ணுமில்லங்க, சில அழகழகான காதல் கவிதைகளைப் படிச்சதும் எனக்கும் ஒரு ஆசை - காதல் கவிதை எழுதணும்னு. அப்படி எழுதினதுல ஒண்ணுதான் இது. ஆனா அதே போல அழகழகா இருக்கான்னுதான் தெரியல.



நினைவுகள்

சுட்டு விரலைக்
கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு நடக்கும்
குட்டிப் பிள்ளை போல
உன் நினைவுகளுடன்
உரிமையாய்க் கைகோர்த்தபடி
பயணிக்கிறது மனசு.
கோர்த்த மனம் வேர்த்தாலும்
நினைவுகள் நழுவுவதில்லை;
ஊர் போய்ச் சேர்ந்த பின்னும்
ஓருயிர் இரண்டாவதில்லை...

***

நேராக நடப்பதையே மறந்து விட்ட
செக்குமாடுகள் போல்
வேறெங்கும் செல்லாமல்
உன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன
என் நினைவுகள்…

***

வானம் வெகுதொலைவில் இருந்தாலும்
மழைக்கரம் நீட்டி
பூமியைத் தழுவிக் கொள்வதைப் போல்
நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
நினைவுக்கரம் நீட்டி
உன்னைத் தன்னுடன் இறுக்கிக் கொள்கிறது
மனசு…


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/29643650@N04/2831493184/sizes/m/