பதிவுலகத்தில இருந்தே ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடறோம்னு வைங்க. அதுக்கு அவங்க பதில் எழுதலைன்னு வைங்க. அதனால நமக்கு வருத்தம் ஏற்படுது. ஏன்? ஒண்ணு, “நான்” இட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் அவங்க எப்படி பதில் எழுதாம இருக்கலாம், அப்படிங்கிற எண்ணம். ரெண்டு, அவங்களைப் பாராட்டுவது மட்டுமே நம்ம நோக்கமா இருந்திருக்கணும், அதை விட்டுட்டு நம் பாராட்டுக்கு அவங்க பதில் எழுதணும்னு “எதிர்பார்க்கிறது”. (“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” அப்படின்னு கண்ணன் சொன்னது நினைவு வருதா?)
இதே போலத்தான் வாழ்க்கையில ஏற்படற எல்லா விதமான மன வேற்றுமைகளுக்கும், அதனால ஏற்படற துன்பங்களுக்கும், நாமேதான் காரணம். அதனாலதான் அந்தக் காலத்தில இருந்து எல்லா ஆன்மீகவாதிகளும், “நான்”, “எனது”ங்கிற எண்ணத்தை ஒழிக்கணும்னு சொல்லி வந்திருக்காங்க.
சரி… இதுக்கு என்னதான் தீர்வு? சண்டையை நிறுத்திட்டு, ஒருத்தராவது “நான் சொல்றதே சரி” ங்கிற எண்ணத்தை விட்டு இறங்கி வந்து, அடுத்தவர் சொல்றதை மதிச்சு காது கொடுத்து கேட்கணும். இந்த உலகத்தில பிறந்திருக்கிற, உலகத்திற்கு வந்திருக்கிற, “எல்லாருமே” “பிழைக்கத்தான்” வந்திருக்கோம்கிறதை மறக்காம, ஒருத்தொருக்கொருத்தர் அன்பா அனுசரணையா இருக்க பழகிக்கணும். அப்படி ஒரு காலம் விரைவில் வர, உலகெல்லாம் அமைதி நிலவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.
இது வரை பொறுமையா படிச்சதுக்கு நன்றி. அப்படியே இதோ இந்தக் கவிதையையும் படிச்சிடுங்களேன்… :)

வேண்டும்...
அன்பென்னும் ஓருணர்வே
அகிலத்தை ஆள வேண்டும்!
அகந்தை இல்லா நெஞ்சம்
அனைவருக்குமே வேண்டும்!
மனிதத்தை மறக்க வைக்கும்
மதவெறியை ஒழிக்க வேண்டும்!
சாதிகளும் பேதங்களும்
சடுதியிலே கரைய வேண்டும்!
போரோடு போர் தொடுக்க
புவியினர் புறப்பட வேண்டும்!
அமைதியின் அருமை தன்னை
அகிலத்தோர் உணர வேண்டும்!
இனம் மொழியாம் வேறுபாட்டை
இன்றே களைந்திடல் வேண்டும்!
உலகமெல்லாம் ஒர் குடிலாய்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்!!
--கவிநயா