Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts

Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!

நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம் தரும் நாள்
(நவ)

தேவியர்கள் மூவரும் நம்
இல்லம் தேடி வரும் நாள்
(நவ)

துர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்
(நவ)

அலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி அவற்றை அருள்பவளானாள்
(நவ)

நாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)


--கவிநயா

 

Friday, October 11, 2013

நவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி


தூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே
மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே
பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே
அருட்கடலாக சித்தி அளிக்கும் துர்க்கையே

ஆசுரி என்னும் நாமம் கொண்ட துர்க்கையே
அன்புடன் எம்மை என்றும் காக்கும் துர்க்கையே


அஷ்ட சித்திகள் யாவும் அருளும் துர்க்கையே
இஷ்டங்கள் யாவும் பூர்த்தி செய்யும் துர்க்கையே
சிவ நடன மென்னும் ஸ்ருங்கார தாண்டவத்திலே
சித்தி ராத்ரியாய் அவ தரித்த துர்க்கையே

சித்தாத்ரி துர்க்கையே சிவ தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

சர்வ சக்தியும் ஒன்றாய் இணைந்த துர்க்கையே
மர்த்தினியாக கன்மம் மாய்க்கும் துர்க்கையே
அபயம் தந்தெமை ஆ தரிக்கும் துர்க்கையே
ஜெயங்கள் யாவுமே தந்து காக்கும் துர்க்கையே

மூல துர்க்கையே மஹா லக்ஷ்மி துர்க்கையே
தேவி துர்க்கையே சரணம் தரணும் துர்க்கையே!


--கவிநயா

(சுபம்) 

வாசித்து வந்த அனைவருக்கும் அன்னையின் அருள் சிறக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

துர்க்காஷ்டகம் கேட்க: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்திற்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

Thursday, October 10, 2013

நவ துர்கா தேவியர் - தீப துர்க்கை, மஹாகௌரி


பந்த பாசங்கள் விரட்டிக் காக்கும் துர்க்கையே

ஞான ஒளிதன்னில் எம்மை நனைக்கும் துர்க்கையே

அஞ்ஞான இருள்தனை விரட்டி ஓட்டும் துர்க்கையே

உள்ளொளியாக நிலைத்து ஒளிரும் துர்க்கையே



தீப துர்க்கையே துயரம் தீர்க்கும் துர்க்கையே

தீபமாகியே நெஞ்சில் ஒளிரும் துர்க்கையே


வாலைக் குமரியாய் வந்து வாழ வைப்பவள்

வலிய அசுரரை அழித்த வலிமை மிக்கவள்

அத்தன் ஆடிய சுத்தத் தாண்டவத்திலே

எட்டு வயதினள் ஆக வந்த பட்டு துர்க்கையே



மஹா கௌரியாய் சஞ்சலம் தீர்க்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/
 

Wednesday, October 9, 2013

நவ துர்கா தேவியர் - லவண துர்க்கை, காலராத்ரி


பக்திக் கடலிலே பக்தரைக் கரைந்திடச் செய்து
பரம அருளுடன் பரத்துடன் இணையச் செய்பவள்
லவண அரக்கனை சத்ருகன் மாய்க்க உதவினாள்
மனதில் தூய்மையை அருளி நமக்கும் உதவுவாள்

லவண துர்க்கையே சுகங்கள் அருளும் துர்க்கையே
பவமது நீக்கி எம்மைக் காக்கும் துர்க்கையே


கரிய நிறத்தவள் இவள் காலம் வென்றவள்
காற்றின் வேகத்தில் வந்து கருணை செய்பவள்
ஈசன் ஆடிய பூதத் தாண்டவத்திலே
ஈ டில்லா அன்புடன் தோற்றம் தந்த தாயிவள்

கால ராத்ரியாய் வந்த கரிய துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 


--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

Tuesday, October 8, 2013

நவ துர்கா தேவியர் - ஜ்வாலா துர்க்கை, காத்யாயினி


பண்ட அசுரனை லலிதை எதிர்க்கும் போதிலே
சக்தி சேனையை இரவில் காக்க வேண்டியே
அக்கினியாலே பெரும் வளையம் அமைத்தவள்
அசுரர்கள் செய்த வஞ்சனை முறியடித்தவள்

ஜ்வாலா துர்க்கையே அருள் ஜோதி துர்க்கையே
அக்கினி ஒளியால் அதர்மம் அழித்த துர்க்கையே


காத் யாயன முனிவரின் விருப்பத்திற் கிணங்கி
கருணையினாலே மகளாய் வந்துதித்தவள்
சங்கரன் செய்த முனி தாண்டவத்திலே
அவன் நெற்றிக் கண்ணிலே தோற்றம் கொண்டவள்

காத் யாயினி யாக அருளும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/