Thursday, May 22, 2014

பாஞ்சாலியின் சபதம்!

வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு... தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு... 

பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு. துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும் போது கூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும், எப்படி இந்த அதருமத்தை இத்தனை தூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா? 

பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்... அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்.


பாஞ்சாலியின் சபதம்

1.
அண்டம் நடுநடுங்க
அலை கடலும் இடம் மாற
தென்றல் காற்றதுவும்
சீற்றங் கொண்டு தடம் மாற
செய்யும் செயல் யாவும்
கைநழுவிப் புலம் மாற
வையம் முழுவதுமே
காரிருளில் தடுமாற
பெய்யும் மாமழையும்
பொய்த்து விட்டுப் போயிருக்க
உய்யும் வகையின்றி
உயிர்களெல்லாம் பரிதவிக்க
தருமம் தலை குனிய
தவமுனிவர் தவித்து நிற்க
சாத்திரம் சொன்னதெல்லாம்
நீர்த்து விட்ட பேச்சாக…!

2.
தீயில் உதித்து வந்த
தேவதைக்கும் இந்நிலையோ?
உலகை ஆள வந்த
உத்தமிக்கும் இத்துயரோ?
கண்ணிழந்த மன்னனவன்
            மனதாலும் குருடானான்;
பெண்ணின் துயர்த் தீயை
            வளர்த்து விட்ட நெய்யானான்!
சொல்லில் அடங்காத
            வேதனைக்கு வித்திட்டான்;
புல்லுக்கும் கீழான
            புத்திரரைப் பெற்றிட்டான்;
வினையை விதைத்திட்டால்
            அறுத்திடவும் வேண்டுமென
அறியாமல் அறிவிழந்தான்
            அத்தினாபுர அரசன்!

3.
ஐயோ என்றழுத
            அன்னைக்குத் துணையில்லை;
ஐவரை மாலையிட்டாள்
            ஆனாலும் பலனில்லை;
கண்ணீர் விட்டழுதாள்
            காப்பாற்று வாரில்லை;
கதறித் தானழுதாள்
            கற்பரசி திரௌபதையாள்!
விவேக விதுரரவர்
            வேதனையால் தலைகவிழ்ந்தார்;
பிதாமகர் பீஷ்மருமே
            பேசாதிருந் தாரே!
தருமத்தின் வாழ்வுதன்னை
            சூதாட்டம் கவ்வியதே;
அதருமப் பிடியினிலே
            அவையோரும் சிக்கினரே!

4.
துஷ்டன் துரியனுமே
            தம்பிக்கு ஆணையிட
துச்சாதன அரக்கன்
            துகிலுரிய வந்து விட்டான்!
வீரர் ஐவருமே
            வீணாக நின்றிருக்க
வில்லும் கதையம்பும்
            வேலையற்றுப் போயிருக்க
கதறிப் பரிதவித்த
            கண்மணியாள் திரௌபதியும்
கூவி அழைத்திட்டாள்
            கார்மேகக் கண்ணனைத்தான்;
கண்ணா கோவிந்தா
            நீயேயென் கதியென்றாள்;
துவாரகையை விட்டெனக்குத்          
            துணையாய் வா என்றழுதாள்!

5.
கூப்பிய கரமிரண்டும்
            சிரசின் மேல் வீற்றிருக்க
கூறிய சொல்லிலெல்லாம்
            ஹரி நாமம் ஒலித்திருக்க
மூடிய விழியிரண்டில்
            கண்ணீர் பெருகி வர
நாடிக் கலந்து விட்டாள்
            கண்ணனவன் திருவடியில்!
கமலத் திருவடியே
            சரணமெனக் கொண்டு விட்டாள்;
கண்ணன் தனையன்றி
            துணையில்லை என்று விட்டாள்;
செதுக்கிய சிற்பம் போல்
            சேயிழையாள் சமைந்து விட்டாள்;
ஒதுக்கி விட்டாள் அனைவரையும்
            ஒருவனையே பற்றி விட்டாள்!

6.
கண்ணன் வந்து விட்டான்
            வண்ணத் துகிலுருவில்!
பெண்ணிற் கருளிவிட்டான்
            பிரியமுடன் மனமிரங்கி!
துஷ்டத் தம்பியும்
            இழுத்துக் கொண்டிருக்கையிலே
விதவிதமாய் மேலாடை
            முளைத்தபடி இருந்ததுவே!
பட்டாய் பருத்தியாய்
            பகட்டாய்ப் பலநிறமாய்
கண்டவர் மயங்கிடவே
            மலையெனவே குவிந்ததுவே!
இழுத்துக் களைத்து விட்டான்           
            அற்பத் தம்பியுமே;
கரமிரண்டும் சோர்ந்திடவே
            நிலைகுலைந்து விழுந்து விட்டான்!

7.
துரியன் தலை கவிழ்ந்தான்
            பாண்டவரோ தலை நிமிர்ந்தார்!
போன உயிர் வந்தது போல்
            அவையோரும் விழித்தமர்ந்தார்!
பீமன் சூளுரைத்தான்
            துரியன் தொடை பிளப்பதாக!
விஜயன் சூளுரைத்தான்
            கர்ணனைத் தான் மாய்ப்பதாக!
துஷ்டர்தம் செந்நீரைப்           
            பூசிக் குளித்த பின்னே
குழல் முடிப்பேன் அதுவரையில்
            குழல் முடியேன் தானெனவே
பாஞ்சாலத் திருமகளாம்
            பாரதத்தின் நாயகியாம்
திரௌபதையும் சூளுரைத்தாள்
            திக்கெட்டும் எதிரொலிக்க!



--கவிநயா
           
           
 நன்றி: வல்லமை