நாளைக்கு அலுவலகத்தில் முக்கியமான தலைகளோட ஒரு மீட்டிங் இருக்கு. கொஞ்சம் பார்க்கிற மாதிரி ட்ரஸ் பண்ணிக்கணும். நாளன்னிக்கு கோவில்ல பூஜைக்கு மாலை கட்டணும். கடைக்கு எழுதற லிஸ்ட்ல மறக்காம பூ எழுதணும். ஆங்! கடைக்கு போகும்போது ராத்திரி சாப்பிட ரெடி மேடா ஏதாச்சும் வாங்கிட்டு வந்துரலாமா? இல்லன்னா காலைல சீக்கிரம் எழுந்து என்னவாச்சும் சமைக்கணும். காய் என்ன இருக்குன்னு தெரியல. அச்சோ! அவங்களுக்கு குழந்தை பிறந்தாச்சுன்னு சொன்னாங்களே! எப்ப அவங்கள பார்க்க போலாம்? கடைக்கு போய் குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போகணும். இன்னிக்குக் காலைல எழுந்திருக்கும் போது ஒரு அழகான கவிதை வரி வந்துச்சே, அது என்ன? சே, எவ்வளவு பொருத்தமான உவமையோட வார்த்தைகளும் கோர்வையா அழகா வந்து விழுந்துச்சு! இப்ப மறந்து தொலைச்சிருச்சே. என்ன பண்றது? வேலையில இருந்து வரும்போது காருக்கு பெட்ரோல் வேற போடணும். அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போகும் போது போட நேரம் இருக்காது. டான்ஸ் வேற ப்ராக்டிஸ் பண்ணனுமே. பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்கிற டான்ஸை வேற ஒரு தரமாவது ஆடிப் பார்க்கணும். எதுக்கும் காலைல சீக்கிரம் எழுந்திரிச்சாதான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் படம் நல்லாதான் இருந்தது. அதில் ரிப்போர்ட்டரா வந்த பொண்ணு பேரு என்ன? எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. புதுசு யாரையும் தெரியல. நாளைக்காச்சும் ஏதாச்சும் சமைச்சே ஆகணும். ரெண்டு நாளா பழசை வச்சே ஓட்டியாச்சு. என்ன பண்றது? சப்பாத்தி பண்ணலாமா? பில்லெல்லாம் வேற கவனிக்கணும். இராத்திரி ப்ளாக் போஸ்ட் பண்ண நேரமிருக்குமான்னு தெரியலையே?
“க்ர்ர்ர்ர்ரிங்”. அலாரம் அடிக்குது.
பத்து நிமிஷம் ஆயாச்சு!
இன்னிக்கு நம்ம ‘தியானம்’ பண்ணி முடிஞ்சாச்சு!
--கவிநயா
பி.கு. வேடிக்கையா சொன்னாலும், மனசு இப்படித்தான் அலைஞ்சுகிட்டே இருக்கு :( உங்களுக்கு?