Sunday, November 29, 2009

யார் இந்தக் குழந்தை?


இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!

நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!

கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.

மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!

அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!

அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.

அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!

அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!

ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.

ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.

மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.

இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.

மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.

ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.

கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!






முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!

அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!

முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!

பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!

ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!

மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!

சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!


--கவிநயா

பி.கு.: "நினைவின் விளிம்பில் உலவும் நேரம்" நாளை மறு நாள் தொடரும் :)

படத்துக்கு நன்றி: http://murugan.org/gallery/kanda_puranam/images/kp_02.jpg

Monday, November 23, 2009

நினைவின் விளிம்பில் உலவும் நேரம்

பதிவெழுத வந்த கதையை பதிவா எழுதறதுதான் இந்த தொடர் பதிவின் நோக்கம் :) அன்புத் தம்பி கோபிநாத்தின் அழைப்புக் கிணங்கி இந்த பதிவு. அதனால் போற்றுதல்னா எனக்கும் தூற்றுதல்னா கோபிநாத்துக்கும் சேர்வதாக! ஹி..ஹி!!

கவிதை எழுதற பழக்கம் கல்லூரி நாளில் தொடங்கியது. என் அம்மாவுக்கு தமிழ் ஆர்வம் உண்டு. அவ்வப்போது ஏதாச்சும் எழுதுவாங்க. ஏதோ ஒரு சிரமமான காலகட்டத்தில், கவிதை போல ரெண்டு வரி சொன்னாங்க: “வேதனையும் சோதனையும் விருந்துக்கு வந்திருக்கு!” அப்படின்னு. அது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதில் இன்னும் சில வரிகள் சேர்த்து முழு கவிதையாக்கினேன்:

வேதனையும் சோதனையும்
விருந்துக்கு வந்திருக்கு.
‘உமக்கென்ன வேலை இங்கு?
போம்… போம்’, என
யாரோ விரட்டினார்கள்.
யார் இந்த நண்பர்கள்?
அட, நம்பிக்கையும் தைரியமும்தான்!

நல்லாருக்கா? :) இதுதான் என்னோட முதல் கவிதை.

அதற்குப் பிறகு பல வாழ்த்துக் கவிதைகளும், நட்புக் கவிதைகளும், இயற்கைக் கவிதைகளும் எழுதினேன். அவ்ளோதான். திருமணமான பிறகு மேல் படிப்புக்கும் சேர்ந்ததால் கவிதையெல்லாம் காற்றில் போயிடுச்சு! சில வருஷங்களுக்கு ஒண்ணும் எழுதல. அப்பப்ப பூர்வ ஜென்ம நினைவு மாதிரி சில கவிதைகள், கதைகள் எழுதியிருப்பேன். ஆனால் வாசகர்கள் யாருமில்லை.

அமெரிக்கா வந்த பிறகு தனிமை. மறுபடியும் எழுத்தோடு அறிமுகம். சில நண்பர்களோடு சேர்ந்து தமிழுக்கு சங்கம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். அப்போ அன்னைத் தமிழை வாழ்த்தி (உருப்படியா) ஒரு கவிதை எழுதி, தொடக்க நாளன்று மக்கள் முன்னாடி வாசிக்கவும் செய்தேன்.

கவிதை எழுதுவேன்னு தெரிஞ்சப்புறம் சில நண்பர்கள் நிறைய எழுதச் சொல்லி அன்பா ஊக்குவிச்சாங்க! இதில் நாகு, மற்றும் ஸ்ரீலதா (இவர்தான் என் முதல் வாசகரா ரொம்ப நாள் இருந்தார். என்ன எழுதினாலும் முதலில் இவருக்கு அனுப்பிடுவேன்!), இவங்க பெயர்களை சொல்லியே ஆகணும். பிறகு தமிழ்ச் சங்கம் மூலமா நடந்த கவிதை / சிறு கதை போட்டிகளில் பரிசு வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் சிறுகதை முயற்சியும்!

இந்த இடத்தில் ஒரு குலோப்ஜாமூன் விளம்பரம் நினைவுக்கு வருது!

அப்பா: “என்ன விசேஷம், குலோப்ஜாமூன் செய்திருக்கே?”
அம்மா: “ரேஸ்ல செகண்டாம்”
அப்பா: “வெரி குட். வெரி குட். எத்தனை பேர் ஓடினாங்க?”
பையன்: “ரெண்டு!”

அந்த மாதிரிதாங்க! அந்த போட்டிகள்ல விரல் விட்டு எண்ணக் கூடியவங்கதான் கலந்துக்கிட்டிருப்பாங்க! :) ஆனால் இன்னொரு முறை “அவளைப் போல்” என்கிற கதைக்கும் பரிசு வாங்கினேன்.

நாகுதான் எங்க ஊர் எழுத்தாளர்கள் நிறைய பேருக்கு ‘பின்னாடி’ இருந்து ஊக்குவிக்கிறவர் (குத்தறவர் இல்லை!). அவர் மூலமாத்தான் ஈ-கலப்பை அறிமுகமாச்சு. தமிழ் தட்டச்ச கத்துக்கிட்ட பின் நிறைய எழுத ஆரம்பிச்சேன். நன்றி நாகு! அந்த காலகட்டத்தில்தான் ‘கவிநயா’ன்னு நானே நாமகரணம் செய்துகிட்டேன். ‘திண்ணை’யில் கவிதைகளும் சிறுகதைகளும் தொடர்ந்து வாராவாரம் எழுத ஆரம்பிச்சேன்.

‘திசைகள்’ வர ஆரம்பிச்சதும் அங்கேயும் கதை கவிதைகள் எழுதினேன். புது எழுத்தாளர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த திரு.மாலன் அவர்கள், என்னோட “அமெரிக்க வாழ்க்கை” என்ற கவிதையை முதன் முதலா பிரசுரிச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது!

பிறகு வாசகர் வட்டத்தையும் கருத்து பரிமாறல்களையும் தேடி “மரத்தடி”க்குப் போனேன். ஆனா அங்கே அவ்வளவா ஒட்டலை. தூரத்தில் இருந்து பார்ப்பேன், அவ்வளவுதான். அங்கே என் கவிதை ஒன்றைப் படிச்ச முஜிப் என்பவர், ‘அன்புடன்’ தமிழ் குழுமத்தில் எழுதுங்களேன்னு சொல்லி, அங்கே என்னை அறிமுகம் செய்தார். அதுதான் என் எழுத்துக்கு சரியான உரமாக அமைஞ்சது!


இன்னும் கொஞ்சம் இருக்கு. அது அடுத்த வாரம்... (வேண்டாம்னு சொல்லிட மாட்டீங்கன்னு ரொம்பவே நம்பிக்கை! :)


அன்புடன்
கவிநயா

Saturday, November 21, 2009

பிறப்பும், இறப்பும், நடுவில் நாம் இருக்கும் இருப்பும்…

நாம் ஏன் பிறந்தோம்? வாழ்க்கை ஏன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு? நல்லவர்களாக இருக்கிறவங்க துன்பப் படறாங்க. கெட்டவர்களாக இருக்கிறவங்க சுகமா வாழறாங்க. பக்தர்களா இருக்கவங்க நிறைய சோதனைகளை அனுபவிக்கிறாங்க. ஏன் இப்படி? இந்த உலகத்தில் நடக்கிறதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கே?

இந்த மாதிரி கேள்விகள் நம்மில் பலருக்கு அவ்வப்போதோ, அடிக்கடியோ தோணறதுதான். நமக்கு மட்டும் இல்லை; காலம் காலமா சித்தர்களும், ஞானிகளும், பக்தர்களும், பலரும், விடை தேடுகிற கேள்விகள்தான்.

குறிப்பா இறப்பை, அதுவும் அகால மரணங்களை நம்மால ஜீரணிக்க முடியறதில்லை. சின்ன வயசில் ஏதோ ஒரு காரணத்தால் பிள்ளைகள் இறந்து விடும்போது, பெற்றோர் மட்டுமல்ல, மற்றோராலும் அதை ஒப்புக் கொள்ள முடியறதில்லை. இது என்ன கொடுமை? அந்தப் பிள்ளை என்ன பாவம் செய்தது? இப்படிப் பட்ட கேள்விகள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையை உதாரணமா எடுத்துக்கலாம். அவர் சாதாரண மனிதரில்லை, அவர் இறைவனின் அவதாரம் ஒன்று என்று நம்புகிறவர்கள் இருக்காங்க. அப்படியே அவர் சாதாரண மனிதராகவே இருந்தாலும், அவர் பெரிய மகான் என்பதை மறுக்க முடியாது. அவர் இறைவனை உணர்ந்து அறிந்தவர். Realized soul. அப்படிப்பட்டவருக்கு ஏன் தொண்டையில் புற்று நோய் வரணும்? சாதாரண மனுஷங்களைப் போல அவர் ஏன் வலியினாலும் வேதனையாலும் துன்பப்படணும்?

இறைவனைப் பற்றியபடி எப்படி உலகில் வாழ்வது என்று மனிதருக்கு காட்டுவதற்காகவே பிறந்தவர் குருஜி. பிறவி எடுத்த பிறகு யாராக இருந்தாலும் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று உணர்த்துவதற்காகவே அவர் அத்தகைய கொடிய புற்று நோயை ஏற்றுக் கொண்டு, அந்த வேதனையை அனுபவித்ததாகச் சொல்லுவர். அவருக்கே அந்த நிலைமைன்னா, நாமெல்லாம் எந்த மூலைக்கு?

துன்பங்களிலிருந்து விடுதலை பெற, அல்லது அவற்றைத் தாங்கிக் கொள்ள, நமக்கு உதவி செய்யும் ஒரே வழி, நான் கற்றுக் கொண்ட வழி, இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளுதல்தான். அவனைத் தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை.

‘second wind’ அப்படின்னு சொல்லுவாங்க. மலை ஏறும்போதோ அல்லது ஏதோ ஒரு களைப்பு தரும் செயலைச் செய்யும்போதோ, இதுக்கு மேல முடியாதுங்கிற அளவு களைப்பு ஏற்படும். அதை மீறி ஒரு பிரயத்தனம் செய்துட்டோம்னா, மறுபடியும் புதுசா ஆரம்பிக்கிறாப்போல ஒரு சக்தி கிடைக்கும்.

இது நம்முடைய இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். துன்பம் எல்லை மீறும்போது மனசு விட்டுப் போவதும், நம்பிக்கை இற்றுப் போவதும் இயற்கை. எவ்வளவோ பூஜை செய்து, பரிகாரங்கள் செய்து, கோவில் குளம் போய் வந்து, என்னென்னமோ செய்யறோமே, என்ன பிரயோசனம்னு தோணும். ஆனால் ஒரு மூச்சுப் பிடித்து அதனை மீறி வந்தால்தான் அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொள்ளும் சக்தி நமக்குக் கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. முக்கியமாக துன்பத்தைப் போல நம் மனதைப் பண்படுத்தும் சக்தி வேறெதற்கும் இல்லை. என்ன… அது நமக்கு உடனே தெரியாது. காலம்தான் புரிய வைக்கும்.

தீர்க்க முடியாத துயரங்களும் தூசாவதற்கு - நம்மால்
பார்க்க முடியாத இறைவன் எனினும், அவன் அருள்வான்.

நம்புங்கள்.


அன்புடன்
கவிநயா

பி.கு. : இன்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியைப் பற்றி யோசிச்ச போது என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களின் பதிவே இது...

Sunday, November 15, 2009

தேடல்


ஏதோ ஒன்றைத் தேடித்தான்
எந்தன் மனசு அலைகிறது;
தேடும் பொருளே தெரியாமல்
திசைகள் எல்லாம் அளக்கிறது!

காற்றில் ஏறிப் பறக்கிறது;
கனவில் ஏறி மிதக்கிறது;
மலையில் ஏறி மலைக்கிறது;
கடலில் மூழ்கித் தவிக்கிறது!

எல்லாம் இருப்பது போலிருக்கும்;
ஏதோ ஒன்று இருக்காது!
எதுவும் இல்லை போலிருக்கும்;
இருப்பவை கண்ணுக்குத் தெரியாது!

அதனால் என்ன பூமனமே!
அலைக்கழியாதே என்மனமே!
நீ வெளியே தேடும் பொருளெல்லாம்
உன்னுள்ளே இருக்குது உணர்வாயே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fernandosanchez/2384851617/sizes/m/


Sunday, November 8, 2009

நலந்தானே?

வணக்கம். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாள் ஓய்வு குடுத்தாச்சில்ல! அதான் நீங்க என்னை மறந்து போறதுக்குள்ளே கொஞ்சமா தலையை காண்பிச்சுட்டு போலாம்னு... :)


தென்கச்சின்னா என்ன நினைவு வரும் உங்களுக்கு? கரெக்ட்! சமீபத்தில் அவருடைய 'தென்கச்சி பதில்கள்' அப்படிங்கிற புத்தகத்தை படிக்கிற வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள் இங்கே...


'பல் போனால் சொல் போச்சு' என்கிறார்களே ஏன்?


பல் போகாமல் இருக்கும்போது கூடச் சொல் போய் விடுகிறதே... அது தெரியுமா உங்களுக்கு! வெற்றிலை பாக்குப் போடுக்கிறவர்களைத்தான் சொல்லுகிறேன். தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டு 'ஸ்டாம்பு' வாங்கி வரச் சொல்லிப் பாருங்கள்... அவர் 'ஷாம்பு' தான் வாங்கி வருவார்!

அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?

அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம் முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!

மதுவும் - மாதுவும் ஒன்றுதானே?

ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்... அதனால்தான் உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை... எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!

தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு அம்சம் என்ன?

உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில் இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான் அதன் சிறப்பு அம்சம்!

விதி என்பது என்ன? விளக்கம் தருக.

ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!

மறுக்க முடியாதது எது? மறைக்க முடியாதது எது? மறக்க முடியாதது எது?

தயாராக இருங்கள்... உங்களை கொஞ்சம் குழப்பப் போகிறேன்...

மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறைக்க முடியாது! மறைக்க முடியாததை மறக்க முடியாது!

ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?

உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன் மனிதன் என்பது வாரியார் வாக்கு. இதை அளவுகோலாக வைத்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

***

இப்போதைக்கு அம்புட்டுதான்! பிடிச்சிருந்தா சொல்லுங்க, இன்னும் கொஞ்சம் தட்டச்சி தாரேன்!

இந்த கேள்விகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருப்பீங்க என்பதையும் தெரிஞ்சுக்க ஆவல்!



அன்புடன்
கவிநயா