Sunday, October 26, 2008

அக இருள் அகன்று ஒளி பெறட்டும்!

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!




ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!

வைகறைப் பொழுதில் விழித்தெழுந்து
வாகாய்க் கங்கா ஸ்நானம் செய்து
புத்தாடைகள் பல புனைந்து
பலகாரங்கள் பகிர்ந்திடுவோம்!

படபட பட்டாசு முரசொலிக்க
பளபள மத்தாப்பு ஜொலிஜொலிக்க
ஊருடன் உறவுடன் ஒன்றாகி
நானிலம் நலம்பெற வாழ்த்திடுவோம்!

அகஇருள் அகன்று ஒளி பெறட்டும்!
முகம்மிகும் அன்பால் பொலிவுறட்டும்!
தீயன யாவையும் திசைநடுங்க
தீபஒளிதனில் கருகிடட்டும்!

ஆயிர மாயிரம் விளக்கேற்றி
அவனியில் அன்பெனும் ஒளியேற்றி
ஆடியும் பாடியும் கொண்டாடுவோமே
ஆனந்தமான தீபாவளி!


--கவிநயா

பி.கு. இந்தப் பாடலுக்கும், இந்தக் கண்ணன் பாடலுக்கும் எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க எங்க ஊர் தமிழ்ச் சங்கத்துக்காகப் பாடப் போறோம். ஒலிப்பதிவை அப்புறமா (நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு)வலையேத்தறேன் :)

Wednesday, October 22, 2008

நம்பிக்கையின் சிறப்பு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து...


இறைவனை அடைய நினைப்பவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith, என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்பிக்கை என்பது குழந்தைக்கு தாயிடம் இருப்பதைப் போல் இருக்க வேண்டும். "இவர் தான் உன் அப்பா", " இதுதான் உன் அண்ணன்", இப்படி தாய் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறது குழந்தை. அம்மா தனக்கு நல்லதுதான் செய்வாள், சொல்வாள் என்பதை கேள்வி கேட்காமல் நம்புகிறது. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வசித்தார்கள். அந்த பிள்ளை பள்ளிக்கு போவதற்கு அடர்ந்த காட்டு வழியே போக வேண்டியிருந்தது. அது அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. தன் அம்மாவிடம் சொன்னான், "அம்மா, எனக்கு காட்டு வழியே தனியே நடக்கையில் மிகவும் பயமாக இருக்கிறதம்மா", என்று.

அம்மாவும், "இனிமேல் அப்படி பயமாக இருந்தால், மதுசூதனா என்று கூப்பிடு, அவன் துணைக்கு வருவான்", என்றாள்.

மகனும், மதுசூதனன் யார் என்று கேட்டதற்கு, அவள், "அது உன் அண்ணன்", என்றாள்.

மறுநாள் அவன் காட்டு வழி நடக்கையில் ஏதேதோ சப்தங்கள் கேட்டு பயந்து கொண்டான். அப்போது அம்மா சொன்னது நினைவு வந்தது.

"மதுசூதனா... மதுசூதனா...", என்று கூப்பிட்டான். யாரும் வரவில்லை. இன்னும் பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.

"அம்மா சொன்னாளே, அண்ணன் வரவில்லையே", என்று நினைத்து, பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அழுது கொண்டே அவன் திரும்பத் திரும்பக் கூப்பிட்டதும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், வந்தே விட்டான் மதுசூதனன்!

அவனை பத்திரமாக கொண்டு போயும் சேர்த்து விட்டான். "இனி பயமாக இருக்கும் போதெல்லாம் கூப்பிடு. உடனே வருகிறேன்", என்றும் சொன்னான்.

அந்த மதுசூதனன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமே? அந்தக் குழந்தையைப் போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் நமக்கும் இறைவனிடம் வேண்டும். அதைப் போன்ற நம்பிக்கையுடன் இறைவனுக்காக ஏங்கி அழுதால், அவனால் வராமல் இருக்கவே முடியாது என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஸ்ரீ ராமன், அவனே இறையாக இருந்த போதிலும், கடலைக் கடக்க பாலம் கட்ட வேண்டியிருந்தது, ஆனால் ஆஞ்சநேயரோ, ஸ்ரீ ராமன் மேல் இருந்த நம்பிக்கை ஒன்றாலேயே கடலை ஒரே தாவில் தாண்டி விட்டார்; அவருக்கு பாலமெல்லாம் தேவைப்படவில்லை, என்று வேடிக்கையாகச் சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஒரு மனிதன் கடலைக் கடக்க வேண்டி இருந்த போது, ராம நாமத்தை ஒரு ஓலையில் எழுதி, அதை அவன் மேல்துணியில் முடிந்து, "உனக்கு வேண்டியது இதில் இருக்கிறது. தைரியமாக போ", என்று அனுப்பி வைத்தானாம் விபீஷணன். அந்த மனிதனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக நீர்மேல் நடந்து சென்றானாம். பாதி வழி போகையில், அந்த முடிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆசை வந்ததாம். அதை எடுத்து அதில் இருந்த ராம நாமத்தைப் பார்த்ததும், "இவ்வளவுதானா?" என்று நினைத்தானாம். அந்த எண்ணம் முடியும் முன்னே நீரில் முழுகி விட்டானாம்.

அதனால், குழந்தைக்கு தாயின் மேல் உள்ள நம்பிக்கை போல நமக்கு இறைவனிடம் ஏற்பட அவனிடமே இறைஞ்சுவோம்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்!


பி.கு. : பக்தியிலும் நம்பிக்கையிலும் எனக்கு மிக மிகப் பிடிச்சவர் ஆஞ்சநேயர். அதான் அவருடைய படம் இங்கே. இங்கே இருந்து எடுத்தேன். http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg

Sunday, October 19, 2008

சிறகு முளைத்த சின்னப் பூ



மது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல ‘தொப்’புன்னு ஒக்கார்றா.

“மது… மது… சாப்பிட வாடீ”, அம்மா கீழ இருந்து கொரல் குடுக்குறாங்க.

“இரும்மா.. தோ வரேன். இன்னொரு அர மணி நேரத்துல வரேன் இரு”, அம்மா கத்திக்கிட்டே இருப்பான்னு, ஒரு நேரம் சொல்லி வக்கிறா.

மண்டைக்குள்ள கசாமுசான்னு ஒரே எரைச்சல். என்னத்த பண்றதுன்னு அவளுக்கு ஒண்ணும் புரியல.

“ஸ்….ப்ஸ்…”

“ம்? …. “, சத்தங் குடுத்தது யாருன்னு சுத்தும் முத்தும் பாக்குறா.

யாரையும் காணல.

“ஏய் மது…”, இன்னும் கிசுகிசுப்பா ஆனா இப்ப அவ பேரச் சொல்லியில்ல யாரோ கூப்பிடறாங்க!

ஒண்ணும் புரியாம அவ ‘திருதிரு’ன்னு முழிக்கிறப்ப அவ காலுக்கு பக்கத்துல கெடந்த ஒரு பூ லேசா ஆடுறத பாக்குறா.

என்னடா இது அப்பிடின்னு குனிஞ்சு பாத்தா…,

“அப்பாடி… இப்பவாச்சும் ஒனக்கு என்னய பாக்கணும்னு தோணிச்சே. நாந்தான் கூப்புட்டேன்”, அப்பிடின்னு சொல்லுது அந்த பூ!

“இதென்னடா இது. எனக்கென்ன மூள கீள கொழம்பிருச்சா?” அப்பிடின்னு மதுவுக்கே சந்தேகம் வந்திருச்சு.

“ஒனக்கு மூளயெல்லாம் நல்லாதான் இருக்கு. நாந்தான் கூப்புட்டேன். கொஞ்ச நேரத்துல என் வாழ்க்க முடிஞ்சுரும். அதுக்குள்ள நான் சில விஷயம் யார்கிட்டயாச்சும் சொல்லணும். இங்க ஒன்ன விட்டா யாரும் இல்ல”, அந்த பூ ரொம்ப சோகமா சொல்லிச்சு.

அப்பதான் மது, அத ஒழுங்கா பாக்குறா. அது ஒரு அழகான செகப்பு ரோஜாப்பூ. ஆனா ரொம்ப வாடி வதங்கி போய் பாக்க பரிதாபமா இருக்கு.

“சரி சொல்லு…” சத்தமா சொல்லிட்டு அவளே சுத்து முத்தும் பாத்துக்கறா. அவளுக்கே வினோதமா இருக்கு போல. அப்புறம் கொரல தழச்சுக்கிட்டு, “சரி சொல்லு…” அப்படின்னு கிசுகிசுப்பா சொல்லுறா.

ரோஜாப்பூ ஒரு பெருமூச்சோட சொல்ல ஆரம்பிச்சது…

“நான் மொட்டு விட்டப்போ, என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க…” ன்னு ஆரம்பிக்கவும்.

“அம்மாவா?” அப்படின்னு குறுக்கிட்டா மது.

“ஆமா, நான் மொட்டு விட்ட செடிதான் எனக்கு அம்மா. இது கூட தெரியலயே ஒனக்கு?” ன்னு சொன்னது ரோஜாப்பூ. அதை ஒரு மொற மொறக்கிறா மது.

“சரி.. விடு. ஒங்கூட சண்ட போட எனக்கு தெம்பில்ல. என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்களா… அப்புறம் நான் லேசா மலர ஆரம்பிச்சதும், அவ்ளோதான்… அவங்க சந்தோஷம் எல்லை மீறிடுச்சு. அதுலயும் நான் எல்லா மொட்டையும் விட குட்டியா இருந்ததால, என் அம்மா எப்பவும் என்னைய கவனமா பாத்துக்கிட்டாங்க. நான் அதிகமா வெளிய தெரியாம, என்னைய எலைக்குள்ளயும், மத்த கெள, பூக்களுக்குள்ளயும் இருக்க மாதிரி பாத்து பாத்து வச்சுக்குவாங்க…”

“அப்படி இருக்கும்போது.. நான் மலர ஆரம்பிச்ச ரெண்டாம்நாள் எனக்கு செறகு மொளச்சிருச்சு!”

எஃபெக்டுக்காக, அந்த ரோஜாப்பூ ஒரு நொடி நிறுத்திச்சு. இல்ல, மூச்சு விடத்தான் நிறுத்திச்சோ என்னமோ.

“ஏய்! என்ன கிண்டலா?” ங்கிறா மது.

அப்புறம் இந்த பூ கிட்ட நாம பேசிக்கிட்டிருக்கோமே – அது மட்டும் என்னவாம் அப்படின்னு ஒறைக்குது அவளுக்கு.

“கிண்டலா? கிண்டல் பண்ணவெல்லாம் எனக்கு நேரம் இல்ல மது…” அப்படின்னு அந்த பூ பாவமா சொன்னதும், ரொம்ப வருத்தமா போச்சு மதுவுக்கு.

அத எடுத்து மென்மையா உள்ளங்கைல வச்சுக்கிட்டு அன்போட பாக்கிறா…”ம்… அப்புறம் என்னாச்சு?” அப்படிங்கிறா.

“என் அம்மாவுக்கு கூடதான் நம்பவே முடியல. பூவுக்காவது செறகு மொளக்கிறதாவது, அப்பிடின்னு நம்பவே இல்ல, அவங்க. நானா லேசா பறந்து காண்பிக்கிற வரைக்கும். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. எங்க நான் பறந்து போயிருவனோன்னு. அவங்க பயமும் நியாயமானதுதான். பறக்கிறது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா?”

அப்பிடியே கொஞ்ச நேரம் அந்த அனுபவத்துல மூழ்கினாப்ல மௌனமா இருந்தது ரோஜாப்பூ.

“ம்…பறக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த பிடிமானமும் இல்லாம சுதந்திரமா மெல்ல மெல்ல மேல எழும்பி பறக்கிற சுகம்… எதுலயுமே கெடக்காது. மேல போனப்புறம் கீழ இருக்கவங்கள அங்கேர்ந்து பார்க்கிற அனுபவம்…!”

அது சொல்லச் சொல்ல மதுவுக்கே பொறாமை ஆயிடுச்சு.

“சரி சரி… ரொம்ப அலட்டிக்காம சீக்கிரம் மேல சொல்லு” அப்பிடின்னு அவசரப்படுத்தறா.

“அதான் என் அம்மாவுக்கு பயம். நாம்பாட்டுக்கு எங்கயாச்சும் பறந்து தொலைஞ்சு போயிருவனோன்னு… நான் அம்மா சொல்றதயெல்லாம் கேக்கறதா இல்ல. இதோ கொஞ்ச நேரம்மா… இதோ கொஞ்ச தூரம்மா… இப்படி சொல்லி சொல்லி அந்த சுகத்த அனுபவிச்சேன். நான் பறந்து வரத பாத்து என்கிட்ட வர பட்டாம்பூச்சி, தேனீ எல்லாம், தான் பயந்து வெலகி போயிடும். அத பார்த்தா எனக்கு ஜாலியா இருக்கும். கை தட்டி சிரிப்பேன். என் அம்மா திட்டுவாங்க. இப்படி ஒன்ன தேடி வரவங்களையெல்லாம் வெரட்டறியே, கர்வம் கூடாதுன்னு…”

“ரொம்ப தூரம் போயிடாதே. காத்துல மாட்டிக்குவே. பட்டாம்பூச்சி செறக விட ஒன்னுது எளசா இருக்கு, தாங்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் தான் கேக்காம ஒரு நாள்…”

மறுபடி கொஞ்சம் மூச்சு விட நிறுத்திச்சு பூ.

“என்ன? என்ன ஆச்சு?” மதுவுக்கு ஆவல அடக்க முடியல.

“ஹ்ம்ம்… என்னத்த சொல்ல? ஒரு நாள் அதோ அங்க இருக்க மரத்த தொடப் போறேன் இன்னிக்குன்னு சொல்லிட்டு அம்மா சொல்ல சொல்ல கேக்காம பறந்தேன். கொஞ்சம் எழும்ப எழும்ப தைரியம் வந்து இன்னும் வேகமா பறக்க போனப்போ…”

“வேகமா ஒரு காத்து சொழட்டி அடிச்சது. அதுல நான் ஒண்ணுமே செய்ய முடியல. காத்தோட சேந்து போய் சுத்தியடிச்சு, கடைசீல கீழ விழுந்தேன். நான் சுதாரிக்கிறதுக்குள்ள இன்னொரு காத்து. மறுபடி இழுத்து பொரட்டி எங்கயோ போய் தள்ளி விட்டுச்சு. இப்படியே காத்துல அகப்பட்டு அகப்பட்டு, என் அம்மாவ விட்டு தொலை தூரம் வந்துட்டேன். உடம்பெல்லாம் காயப்பட்டு… சாகப் பொழக்கக் கெடந்துக்கிட்டு… இதோ ஒங்கூட பேசிக்கிட்டிருக்கேன்..” கண்ணீரை வரவைக்கிற மாதிரி உருக்கமான கொரல்ல சோகமா சொல்லி முடிச்சது ரோஜாப்பூ.

மதுவுக்கு ரோஜாப்பூ மேலதான் கோவம் கோவமா வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அப்படின்னு மது திட்டறா அதை.

அப்புறம் அவளுக்கே பாவமா இருக்கு… எரக்கத்தோட கைல இருக்க ரோஜாப்பூவை பார்த்தா…

அதை காணும்!

“மது… மது… எவ்வளவு நேரமா கூப்புடறது ஒன்னய!”, கீழ இருந்து கேக்கற அம்மா கொரல்ல லேசா கோவம் தெரியுது.

மதுவுக்கு ஒண்ணும் புரியல. இவ்ளோ நேரம் கைல ஒக்காந்து பேசிக்கிட்டிருந்த பூ எங்கே, எப்பிடி மாயமா போச்சுது?! மறுபடி கொஞ்ச நேரம் ‘திருதிரு’ன்னு முழிச்சதுக்கப்புறம்தான் புரியுது அவளுக்கு - கட்டில்ல ஒக்கார்ந்தவ அப்பிடியே அசந்துட்டிருக்கான்னு.

மறுநாள் காலைல காலெஜ்ல கூடப் படிக்கிற ஜோசஃபோட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு போக எடுத்த முடிவு, ஏதோ கனவைப் போல நெனைவு வருது.

“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே?” அவ சொன்ன வார்த்தைகள் அவளுக்கே மறுபடி கேக்குது…

செறகு மொளச்சிருச்சு, சரி… ஆனா பறக்கலாமா வேணாமான்னு இப்பதான் மொதல் மொறையா யோசிக்கிறா மது.


--கவிநயா

பி.கு. படத்துல இருக்க ரோஜா எங்க வீட்ல பூத்தது... என்னோட profile-ல இருக்கதும் அதான். அழகா இருக்குல்ல? :)

Wednesday, October 15, 2008

நெருப்பு!


நிஜம்

நிமிர்ந்து ஜொலிக்கிறது நெருப்பு!
நீண்டு வளைந்து வானத்தை
எட்டி முத்தமிடும் உத்தேசத்துடன்...

என்ன வனப்பு! என்ன கம்பீரம்!

நெற்றிக் கண்ணில் பிறந்த நெஞ்சுரமோ
சீதையையும் சிதையிலேந்திய கருவமோ
தன்பலம் தானறிந்த தைரியமோ
ஏதோ ஒன்று...

தகதகத்து நகைநகைத்து
தன்னெழிலில் தானே மயங்கி
சுற்றியுள்ள உயிர்களெல்லாம்
சூழ்ந்து நின்று பார்த்திருக்க
கண்கவரும் ஜ்வாலையுடன்
கடலலைபோல் ஆர்ப்பரித்துக்
கருத்தை மயக்கும்
கொள்ளை அழகுடன்
ஜொலிக்கிறது!

பக்கத்திலே போய்
பாசமுடன் தொடுகையில்தானே
தெரிகிறது நெருப்பின் குணம்...


--கவிநயா

Sunday, October 12, 2008

பழப் பாயசம் செய்யலாம், வாங்க !



(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள்! :)

முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொஞ்சூண்டு பால்ல இதெல்லாம் ஊற வைங்க. செய்யறதுக்கு ஒரு 2 மணி நேரம் முன்னாடியே ஊற வச்சிடுங்க. ஏன்னா பாதாம் ஊற நேரம் ஆகும். அல்லது வென்னீர்ல ஊற வச்சா 10 நிமிஷத்துல ஊறிடுமாம். (இது துளசிம்மா டிப்ஸ் - அவங்களோட மத்த டிப்ஸ்க்கு பின்னூட்டம் பாருங்க :)

இப்ப கொஞ்சம் பால் இன்னொரு கிண்ணத்துல எடுங்க. அதுல நம்ம கஸ்டர்ட் பவுடர் இருக்கில்ல? இல்லையா? அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க! நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…

ம்… வாங்கியாச்சா? இப்ப அதுல ஒரு 2 மேசைக்கரண்டி எடுத்து ஆறின பால்ல – அதான் அப்ப எடுத்து வச்சோமே, அந்த பால்ல நல்லா கரைச்சுக்கோங்க. கட்டி கிட்டியெல்லாம் இல்லாம, பவுடர் இருந்த அடையாளமே தெரியாம கரைச்சுக்கோங்க. சூடான பால்ல கரைக்க வராது. இது முக்கியம்!

மறுபடி ஒரு 2 கப் பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து அடுப்புல வச்சு நல்ல்ல்லா காய்ச்சணும். ஓ, சொல்ல மறந்துட்டேனா – முதல்ல அடுப்ப பத்த வைச்சுக்கணுங்க!

பால் காயும்போது, பாதாம் பருப்போட தோல (வலிக்காம) எடுத்துட்டு முந்திரியையும் அதையும் பாலோட சேர்த்து மிக்ஸில அரைச்சுக்கோங்க.

காஞ்சுக்கிட்டிருக்க பால்ல கஸ்டர்ட் கரைசலை மெதுவா ஊத்தணும். ஒரு கை ஊத்தும்போது இன்னொரு கை பாலை கிளறிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா கட்டி தட்டிரும்! இதை செய்யும்போது அடுப்பைக் குறைச்சு வச்சுக்கோங்க. கலக்க கலக்க கொஞ்சம் கெட்டியா ஆகும் பாலு. இதுதான் நிஜமாவே கொஞ்சம் கவனமா செய்ய வேண்டிய வேலை.

பாயசம் கெட்டியா வேணும்னா அதுக்குத் தகுந்தாப்ல கஸ்டர்ட் பவுடரை சேத்துக்கலாம் – தண்ணியா வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனா ஆறினப்புறம் இன்னும் கெட்டிப்படும். அதனால பார்த்துக்கோங்க!

அப்புறம் கண்டென்ஸ்ட் மில்க் – அதாங்க, நம்ம ஊர்ல மில்க்மெய்ட்னு சொல்வோமே, அது, அரைச்ச பருப்பு விழுது, சில சொட்டுகள் வென்னிலா எசென்ஸ், ஏலக்காய் தூள், எல்லாத்தையும் பால்ல சேருங்க. நல்லா கலக்குங்க!

கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கிறது, இனிப்புக்காகத்தான். அது இல்லைன்னா வெள்ளை சீனி சேர்த்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ அது சேர்த்தாதான் கொஞ்சம் flavor, consistency, எல்லாம் நல்லாருக்குன்னு தோணும்.

இதோட அடுப்புக்கு வேலை முடிஞ்சிருச்சு. அடுப்பை அணைச்சு, பாயசத்தை எறக்கி வச்சு, நல்லா ஆற வச்சு, குளிர்பதனப் பொட்டில வைங்க.

பழப்பாயசம் பாக்கவும் அழகா இருக்கணும்னா பல வண்ணங்கள்ல பழங்கள் வாங்கி சேருங்க. ஆப்பிள், மாம்பழம் (ரொம்ப கனியாம கொஞ்சம் காய்வெட்டா இருக்கணும்), கருந்திராட்சை, செர்ரி, அன்னாசி, சாத்துக்குடி, இந்த பழமெல்லாம் சேர்க்கலாம். இன்ன பழம்தான் சேர்க்கணும்னு விதிமுறையெல்லாம் இல்லை. நல்லாருக்கும்னா சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் அழகா நறுக்கி அதையும் குளிர்பெட்டில வைங்க.

நல்லா குளுகுளுன்னு ஆனதுக்கப்புறம் பரிமாறுறதுக்கு முன்னாடி ஜிலுஜிலு பாயசத்துல வகைவகையா பழங்களை போட்டு அழகழகா எல்லாருக்கும் குடுங்க! நீங்களும் மறக்காம சாப்பிடுங்க!!

இந்த கஸ்டர்டையே கொஞ்சம் கெட்டியா ஐஸ்க்ரீம் பதத்துக்கு செய்து அதுல பழங்கள் போட்டும் குடுக்கலாம். அதுக்கு பேரு பழ சாலட் (fruit salad)!!

தேவையானதை மறுபடி ஒரு தரம் தொகுத்து சொல்லிர்றேன்:

பால் – 2.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் – 1 சின்ன can
கஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
வென்னிலா எசென்ஸ் – சில சொட்டுகள்
பழங்கள் – விருப்பப்படி

செய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!


--கவிநயா

Thursday, October 9, 2008

எங்க ஊரு கொலு !


நவராத்ரி சிறப்புப் பதிவு. கொலு படங்களைத் தந்துதவிய எங்கள் ரிச்மண்ட் மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

கொலு பார்த்த பின் மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போங்க!



பார்கவி வீட்டு கொலு


புவனா வீட்டு கொலு



சித்ரா வீட்டு கொலு




லக்ஷ்மி வீட்டு கொலு



மீனா வீட்டு கொலு



மாலதி வீட்டு கொலு



பிரசாதம் - பழப் பாயசம்


எங்கூரு கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி!

இது வரை வந்த நவராத்ரி இடுகைகளை படிக்காதவங்க, இங்கு வந்து துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்களின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கறேன்!

இத்துடன் இந்த வருட நவராத்ரி சிறப்பு இடுகைகள் நிறைவு பெறுகின்றன!

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

Sunday, October 5, 2008

நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. கலைமகளின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!



நான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்!
நாமணக்க பாடுகின்றேன் நாரணியே மனம்கனிவாய்!

நாதவடி வானவளே ஐந்தவியே அலர்மகளே
பாதமலர் பணிந்துன்னை பாடுகின்றேன் கலைமகளே
சீதள மதி முகத்தை சிந்தையிலே நிறுத்துகின்றேன்
பூதலத்தை ஆளுகின்ற பூவை உன்னை போற்றுகின்றேன்!

வேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே
பேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே
பக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே!

ஞானவடி வானவளே பாமகளே பைரவியே
வானவரும் தானவரும் வணங்கிடும் வசுந்தரியே
கானமழை பொழிந்துன்னை காலமெல்லாம் போற்றிடவே
ஞாலமெல்லாம் விளங்குகின்ற நாயகியே அருள்வாயே!


--கவிநயா



ஹைலஜா அக்கா இந்த பாடலை பாடித் தந்திருக்காங்க. கேட்டு கருத்து சொல்லுங்க. ஷையக்காவிற்கு நன்றிகள் பல.

Saraswathi_song.wa...

Thursday, October 2, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் !

நவராத்ரி சிறப்புப் பதிவு. ஸ்ரீலக்ஷ்மி தேவி அவள் பதங்கள் சரணம் !




தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/murtis/lakshmi.jpg