Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, November 26, 2017

நன்றி நவிலும் நாள்


இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில் நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி சொல்வது நல்லதல்லவா?

எங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான் கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.

மனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன் அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச் சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில் வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.

ஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப் பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி.

இன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருந்ததா? நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா? நன்றி சொல்லுங்கள்.  உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா? நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக் கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள் தானாக மறைந்து விடும்.

நமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில் சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின் மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.

“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா

Tuesday, February 23, 2016

மாறும் மனம்

மாற்றம் ஒன்றே மாறாதது-ன்னு சொல்வாங்க. மனுஷங்களுக்கும், அவங்க மனசுக்குமே இது பொருந்தும்னு நானே உணர்ந்துகிட்டு வரேன். சரி, அதைப் பற்றி அப்புறம் பேசலாம்…

இப்பதான் ஊருக்கு போயிட்டு வந்தேன். நிஜமாவே ‘flying visit’ தான். ஆனா முடிஞ்ச வரை கோவில்களுக்குப் போனேன். எங்க அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில், மாங்காடு காமாக்‌ஷி, வட பழனி முருகன், கற்பகாம்பாள் (கபாலீஸ்வரர் கோவில்) மதுரை மீனாக்‌ஷி, திருப்பரங்குன்றம், அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற ஆஞ்சநேயர் கோவில், அவ்ளோதான்.

வடபழனியில் முருகனுக்கு சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசம்.

மதுரையில் அம்மாவுக்குத் தங்கக் கவசம்.

மாங்காட்டிலும் கூட்டத்துக்கு முன்னாடியே போனதால ரொம்ப நேரம் பக்கத்தில் நின்னு தரிசனம்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, சிந்தூரக் காப்பு.


சரி, இப்ப மாற்றத்துக்கு வருவோமா.  முன்னல்லாம் எழுதாம இருக்க முடியாது. பிறகு மனசின் பக்குவத்துக்குத் தகுந்த மாதிரி, எழுதற விஷயம் மாறிக்கிட்டே இருந்தது. உணர்வு பூர்வமான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பொது விஷயங்கள், பக்திப் பாடல்கள், இப்படி…இப்பல்லாம் எழுதறதுக்கோ, பகிர்ந்துக்கறதுக்கோ ஒண்ணுமே தோணறதில்லை. சொல்றதுக்கு என்ன இருக்கு அப்படின்னுதான் தோணுது. பேசாம இருக்கலாம் போல இருக்கு. அதுக்குன்னு வாழ்க்கை சலிப்பா இருக்குன்னோ, மன அழுத்தத்தில் (depressed) இருக்கேன்னோ பொருள் இல்லை. மௌனத்தில் ஒரு சுகம். அதைக் கலைக்க மனசு வரதில்லை. நிறைய யோசிக்காம இருக்கறதும் ஒரு விதத்தில் நல்லதுதானே…

எப்படியோ ப்ளாக் எழுதாம இருக்க காரணம் கண்டு பிடிக்கிறேன்னு தோணுதா? ஆனா உண்மையிலேயே மனநிலை இப்ப அப்படித்தான் இருக்கு. ஒரு வேளை சோம்பேறித்தனமாக் கூட இருக்கலாம். எனக்கே தெரியலை. எப்படியும் மாறிக்கிட்டே இருக்கற மனசுதானே… சீக்கிரமே இத்தை எழுது, அத்தைச் சொல்லுன்னு தொந்தரவு பண்ணினாலும் பண்ணும். அப்படி ஏதாச்சும் சொல்றப்ப மறுபடியும் வரேன்… உருப்படியா ஏதாச்சும் சொல்ல முடியும்ணு தோணினா அப்பவும் வருவேன்…

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Monday, January 25, 2016

அகரம் முதல் எழுத்தானது ஏன்?

வந்துட்டேன்னு பிரமாதமா அறிவிப்பெல்லாம் கொடுத்திட்டு, மறுபடி காணாமப் போயிட்டேன்! தொடர்ந்து ஒரு வேலையைச் செய்யறது இருக்கே, அது ரொம்ப சிரமம்தான். முதல்ல மனசும் விருப்பமும் இருக்கணும். பிறகு உடம்பும் அறிவும் ஒத்துழைக்கணும். என்ன சொல்றீங்க? நானும் எழுதுவேன்னு சொல்லிக்க ஆரம்பிச்சு ரொம்ப வருஷமாச்சு. அதுல இந்த மாதிரி ஒரு பெரிய தேக்கம் இதுவரை வந்ததில்லை. வலைப்பூவில் இடலைன்னாக் கூட ஏதாச்சும் எழுதிக்கிட்டிருப்பேன். ஆனா இப்பல்லாம் எழுதறதுக்கு நிறைய கரு தோணினாலும், அப்பப்பவே எழுத முடியாததால மறந்து போயிடுது. அப்புறமா திரும்ப யோசிச்சு எழுத சோம்பேறித்தனம் வந்துடுது. ஹ்ம்… இந்த மனநிலைலதான் இப்ப இருக்கேன்.

 
சரி, இப்ப தலைப்புக்கு வருவோம்… எந்த மொழியை எடுத்துக்கிட்டாலுமே, அதுக்கு வரி வடிவம்னு ஒண்ணு இருக்கு. சுழி, பிறை,வளைவு, நேர் கோடு, குறுக்குக் கோடு, என்கிற இவைதான் எந்த மொழியின் வரிவடிவத்துக்குமே அடிப்படை. பொதுவா எந்த மொழியையாவது எழுதக் கத்துக் குடுக்கணும்னா, எது ரொம்ப சுலபமா எளிமையா இருக்கோ அந்த எழுத்தைத்தான் முதல் எழுத்தாக வெச்சு கத்துத் தருவாங்க. ஆனா தமிழ்ல மட்டும் “அ” வைத்தான் முதல்ல கத்துக் குடுக்கிறோம். நமக்கே தெரியும் “அ” எழுதறது எவ்வளவு கஷ்டம்! அதிலும் முதல் முதலா எழுதக் கத்துக்கற குழந்தைங்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டமா இருக்கும்! ஆனா, “அ”வைக் கவனிச்சு மெதுவா எழுதிப் பார்த்தா தெரியும்... அதில மேலே சொன்ன 5 அடிப்படையும் இருக்கு. சுழி இருக்கு, வளைவு இருக்கு, பிறை இருக்கு, குறுக்குக் கோடு இருக்கு, பிறகு நேர் கோடும் இருக்கு. அதனால “அ” வை முறையா எழுதக் கத்துக்கற குழந்தைங்களுக்கு மற்ற எழுத்தெல்லாம் சுலபமா வந்துடுமாம். எழுத்து என்ன, வேற எந்த மொழி எழுதறதும் கத்துக்கறதும் அவங்களுக்கு கஷ்டமில்லையாம்.

கலைமாமணி திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்கள் ஒரு சொற்பொழிவின் போது சொல்லக் கேட்டது.

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா


Monday, July 27, 2015

வறுமையும் வசதியும்



ஒரு பணக்கார அப்பா இருந்தார். அவர் தன் மகனுக்கு எவ்வளவு வசதியான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்றும், மக்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்க முடியும் என்றும், கண்கூடாகக் காட்ட விரும்பினார்.

“வா, நாம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்”, என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு ஏழை விவசாயியிடம் போனார். இரண்டு பேரும் அந்த விவசாயியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார்கள்.

ஊருக்குத் திரும்பும் வழியில் அப்பா, மகனைக் கேட்டார்:

“நம்ம பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிற? என்ன கத்துக்கிட்ட?”, அப்படின்னு.


மகன் சொன்னான்: “அப்பா, இந்தப் பயணம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. நான் நிறைய கத்துக்கிட்டேன்!”


மகன் சொன்னதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவர் நோக்கம் நிறைவேறி விட்டதே!


மகன் மேலும் சொன்னான்: “நம்ம வீட்டில் ஒரே ஒரு செல்ல நாய்க்குட்டி இருக்கு. அவங்க வீட்ல ஆடு, மாடு கோழி, எல்லாமே இருக்கு. நம்ம வீட்ல ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கு. அவங்களுக்கு எங்கே முடியுதுன்னே தெரியாத அளவு பெரிய ஓடை இருக்கு. நம்ம வீட்டில் மின்சாரத்தால எரியற விளக்குகள் இருக்கு. அவங்களுக்கு வானமே கூரையா, கணக்கில்லாத நக்ஷத்திரங்களோட இருக்கு.


இதெல்லாம் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு ஏழைன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அப்பா. புரிய வெச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி!” அப்படின்னானாம்.

அப்பா, கப்சிப்!


எல்லாமே பார்வையில் தானே இருக்கு?

எல்லோரும் நல்லாருக்கணும்!



அன்புடன்

கவிநயா



பி.கு. எங்கோ எப்போதோ ஆங்கிலத்தில் படித்ததைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.
படத்துக்கு நன்றி: கூகுளார்