Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா

6 comments:

  1. தெரிரிந்தவர்கள் பதில் சொல்ல நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  3. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
    கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி, வெங்கட், கீதா ரங்கன் அம்மா, மற்றும் சே.குமார்!

    ReplyDelete
  5. படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகைஎன்னும்
    தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
    உடைபட்டது அண்டகடாகம்; உதிர்ந்தது உடுபடலம்
    இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே.

    என்று சொல்கிறது கந்தர் அலங்காரம். இதற்கு திரு கிவாஜ அவர்களின் விளக்கம் கீழ்வருமாறு.

    ”ஆயுதமாகிய அமைந்த வேலையுடைய முருகனிடம் வந்த வெற்றியை உடைய கொடி என்று பலரும் பாராட்டும், தடை அழித்த சேவலானது, தன் சிறகை அடித்துக் கொள்ள, அதனால் கடல் கிழிய, அண்ட சுவர் உடைபட்டது; நட்சத்திரப் படலம் உதிர்ந்தது. நடுவிலுள்ள மலைகளும் மகாமேரு கிரியும் இடிபட்டன.”

    சலதி என்றால் கடல். பிறவிப் பெருங்கடல். அது முருகனுடைய சேவல் தன் சிறகை அடித்துக் கொள்வதாலேயே அற்று போய்விடுகிறது. அதே போல் மேருவை மனிதருடைய மமகாரத்தை சுற்றி நான் எனது என்கிற குன்றுகள் சூழ்ந்த அகப்பற்றையும் புறப்பற்றையும் குறிப்பிடுவதாகக் கூறி அவைகளும் சேவலின் சிறகடித்தலில் இடிந்து போகிறது. நட்சத்திரங்கள் போன்ற தேவலோக இன்ப ஆசைகளும் உதிர்ந்து விடுகின்றன என்று பொருளை விளக்குகிறார் கிவாஜ.

    இதே கருத்தை இன்னொரு திருப்புகழிலும் அருணகிரியார் வெளிப்படுத்துகிறார். “ உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம்
    உருவுடைய மலினம் பவம் சல ராசி ஏறவிடும்” பாவங்கள் நிறைந்த பிறவிக்கடலில் ஏறச்செய்யும் என்பதாக சலராசி என்பது கடலை -பிறவிக்கடலை -குறிக்க வந்துள்ளது (http://www.kaumaram.com/vaguppu/vgp01.html)

    இவற்றை வைத்துப்பார்க்கும் போது கடல் என்பது நமது பிறவிப் பெருங்கடலையும், மலை என்பது நமது அகங்காரத்தையோ அல்லது கர்மவினைகளையோ குறிக்கவந்தது என்று கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
    சரஸ்வதி பூசையான இன்று வாணியின் அருள் பூரணமாக பொலிவதாக,

    ReplyDelete
  6. வருக கபீரன்பன் ஐயா!

    // கடல் என்பது நமது பிறவிப் பெருங்கடலையும், மலை என்பது நமது அகங்காரத்தையோ அல்லது கர்மவினைகளையோ குறிக்கவந்தது //

    மிகப் பொருத்தமான விளக்கம். மிக மிக நன்றி.

    உங்களுக்கும், வாசிக்கும் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். தேவி பராசக்தியின் அருள் நிறையட்டும்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)