Sunday, March 28, 2010

நிலவுவட்ட வட்ட நிலவைப் பார்!
வானைச் சற்றே நிமிர்ந்து பார்!
குட்டிக் குட்டி விண் மீன்கள்
சுற்றி நிற்கும் அழகைப் பார்!

விண்ணில் நீந்தி மிதக்கும் பார்!
விளக்கைப் போல ஜொலிக்கும் பார்!
கண்ணில் மின்னும் மணியைப் போல்
விண்ணில் மின்னும் நிலவைப் பார்!

இருளை நீக்கி உதவும் பார்!
வெளிச்சம் தந்து மகிழும் பார்!
கருணை மிக்க அன்னை போல்
குளிர்ந்து இன்பம் நல்கும் பார்!

தேய்ந்து குறையும் போதி லும்
சோர்ந் திடாத உறுதி பார்!
மீண்டும் மீண்டும் வளரும் பார்!
வளர்ந்து மிளிரும் அழகைப் பார்!

நிலவைப் போல நீ இரு!
பலரும் போற்ற வாழ்ந் திரு!
அறிவொளி யை ஏற் றிடு - அறி
யாமை தன் னை அழித் திடு!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/isfppoet/4394138578/sizes/m/


Sunday, March 21, 2010

நீங்களும் நடனமணிதான்... :)

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 2

முதல் பகுதி இங்கே...நாட்டியக் கலைக்கு அடிப்படையான நூல்கள் இரண்டு உண்டு. அநேகமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.

1. "நாட்டிய சாஸ்திரம்", பரத முனிவர் எழுதியது
2. "அபிநய தர்ப்பணம்", நந்திகேஸ்வரர் அருளியது

குருகுலத்தில் முறையாக நடனம் கற்றுக் கொள்ளும்போது, நடனம் மட்டும் கத்துக்கறதில்லை. நடனத்துக்கு தேவையான வாய் பாட்டு, நட்டுவாங்கம், நடன அமைப்பு, இப்படி நடனத்துக்கு தேவையான எல்லாமே கத்துக்கலாம். அதோடு கூடவே, புராணக் கதைகள், கலாசாரம், பக்தி, போன்றவையும் அத்தகைய சூழ்நிலையில் இயல்பாக கை வந்துவிடும்.

ஆனால் அந்த மாதிரி சூழ்நிலை அமையாத போது என்ன செய்யறது? எனக்கெல்லாம் நடனம் தவிர மற்றதெல்லாம் தெரியாது. நடனம் மட்டுமே கத்துக்கிட்டேன். நடனம் ஆடறதுக்கும், அமைக்கிறதுக்கும் தாளம் கொஞ்சம் புரிஞ்சிருக்கணும், அவ்வளவுதான். அதை தவிர மற்ற அறிவெல்லாம் குறையுதே என்கிற குறை இப்போவும் இருக்கு. ஆர்வமும் வாய்ப்பும் இருக்கறவங்க மேலும் மேலும் வளர்வதையும் பார்க்கிறோம். அந்த வகையில் சந்தோஷம் தான்.

சரி, தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போயாச்சு... நான் தியானம் பண்ற அழகும் இப்படித்தான்! :) வாங்க, மறுபடி தலைப்புக்குள்ள போவோம்...

"நாட்டிய சாஸ்திர"த்தின் படி, நடனத்தில் மூன்று வகை இருக்கு. இதை "நடன பேதங்கள்" அப்படின்னும் சொல்லலாம் - நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் - அப்படிங்கிற மூணும்தான் அவை.

நிருத்தம் - அப்படின்னா முழுக்க முழுக்க வெறும் நடனம் தான். அதாவது அதில் கதையோ, செய்தியோ, எதுவும் இருக்காது. நடன அசைவுகளுக்கும் அடவுகளுக்குமே இதில் முக்கியத்துவம் தரப்படும். ('அடவு'ன்னா step அப்படின்னு முன்னமே பார்த்தோம்). நடனங்கள் பற்றி தெரிஞ்சவங்களுக்கு "ஜதிஸ்வர"த்தை உதாரணமா சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.

நிருத்தியம் - கதை சொல்லும் தன்மையோடு இருக்கிற நடனம்தான் நிருத்தியம். முத்திரைகளின் உதவியோடும், 'பா'வத்தின் உதவியோடும் ஒரு கதையையோ அல்லது செய்தியையோ சொல்லுவதே நிருத்தியம். கூடவே அடவுகளும் இருக்கும். சில கதை செய்திகள் குறிப்பால் உணர்த்தப்படும் (symbolic). இங்கே "சப்தம்" அல்லது "வர்ண"த்தை உதாரணமா சொல்லலாம்னு நினைக்கீறேன்.

நாட்டியம் - இங்கே முழுக்க முழுக்க 'பா'வம், அல்லது அபிநயத்திற்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். இங்கே ஒரு நிகழ்ச்சி 'நிருத்திய'த்தில் உள்ளது போல குறிப்பால் மட்டுமே உணர்த்தப் படாமல், அப்படியே விளக்கமாகவும் (realistic) செய்து காட்டப்படும். இதற்கு 'பத'த்தை உதாரணமா கொள்ளலாம்.

(இங்கே தந்த உதாரணங்களெல்லாம் என் புரிதலை வைத்து தரப்பட்டவை.)

"நாட்டிய சாஸ்திரத்தின்" படி அபிநயத்திலும் 4 வகை இருக்கு. அதாவது ஒரு செய்தியை எப்படியெல்லாம் சொல்லலாம், convey பண்ணலாம், அப்படிங்கிறதுக்கு.

ஆங்கிகம் - அங்க அசைவுகள், அடவுகள், முத்திரைகள், மூலமா சொல்றது

வாச்சிகம் - நடனத்துக்கு பக்கபலமாய் இருக்கின்ற பாடலையும் இசையையும் குறிக்கும், நாட்டிய நாடகங்களில் பேசறதையும் எடுத்துக்கலாம்

ஆஹார்யம் - ஆடை, ஆபரணங்கள் மூலமா சொல்றது - ராஜான்னா அதற்கு தகுந்த மாதிரி உடை, கிரீடம், கண்ணன்னா தலையலங்காரத்தில் ஒரு மயிலிறகு, இப்படி...

சாத்வீகம் - உணர்வுகளை வெளிப்படுத்தறது - முகத்தில் மட்டும் இல்லை, உடம்போட ஒவ்வொரு அசைவிலும் ஒரு உணர்வை வெளிப்படுத்தலாம், அதனாலதான் 'முக'பாவம் அப்படின்னு மட்டும் சொல்லாம பொதுவா 'பா'வம்னு சொல்றோம்.

விடை பெறும் முன்னாடி சிந்திக்க ஒரு செய்தி:

தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :) "இங்கே வா" அப்படின்னு தூ...ரத்தில் இருக்கிறவங்களை எப்படி கூப்பிடுவீங்க? கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் இருக்கவங்க கிட்ட அவங்க உடை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லணும்னு வைங்க, அப்ப நீங்க நிச்சயம் "ஹம்ஸாஸ்யோ" பண்ணியிருப்பீங்க! "கொஞ்சம் போதும்", அப்படின்னு காது கேட்காத உங்க பாட்டிக்கிட்ட எப்படி சொல்லுவீங்க? இப்படித்தான் நாம தினசரி பயன்படுத்தறவையே முத்திரைகளா (stylized) நடனத்தில் பயன்படும் போது பார்க்கிறவங்களுக்கும் புரிஞ்சுக்க சுலபமா இருக்கு. உங்க வீட்ல நீங்க செய்யும் முத்திரைகளை அடுத்த முறை நடன நிகழ்ச்சிக்கு போகும் போது ஒப்பிட்டு பாருங்க!


மீண்டும் பிறகு பார்க்கலாம்...


அன்புடன்
கவிநயா

Monday, March 1, 2010

உன் நினைவு

காதலர் தினத்துக்காக இளமை விகடனில் பிரசுரமானது...நொடி கூட நிற்காமல்
ஓடிக் கொண்டே இருக்கிறாயே
என் நினைவுக்குள்...
உனக்கு கொஞ்சமும்
கால் கடுக்கவில்லையா?

**

அடிக் கரும்புச் சாறாய்
தித்தித்துக் கிடக்கின்றாய்
அடிமனசில்...
ஆனாலும் எனக்குச் சற்றும்
திகட்டுவதே இல்லை,
உன் நினைவுகள்!

**

உன் நினைவே என்னுடைய
சுவாசமாய் ஆகியபின்
மனசெல்லாம் எப்போதும்
மணத்தே கிடக்கின்றது...
உன் வாசமாய்!

**

--கவிநயா