வணக்கம். நல்லா இருக்கீங்களா? ஹ்ம்... யாருடா இதுன்னு நீங்க புருவம் ஒசத்தி யோசிக்கிறது புரியுதுங்க. நான் வேற யாருமில்லை, நம்மூர்ல அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைஞ்சிருக்கிற குப்பைதான்! என்னைய வைக்கிற எடத்துல வச்சாதானே நீங்கள்லாம் நல்லா இருக்க முடியும்? அதுக்குதான் அந்தக் கேள்வி. நீங்க கூட "போட்டு வாங்கறது"ன்னு சொல்வீங்களே, அந்த ரகம்!
நம்ம ஊர்க்காரங்க அதிபுத்திசாலிங்கன்னு நமக்கெல்லாம் ரொம்பத்தான் பெருமை! ஆனா அதுக்குத் தகுந்தாப்ல நடந்துக்கதான் காணோம்.
மேல் நாடுகள்ல இப்பதான் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி "Reuse and Recycle" னு சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்காங்களே! ஆனா, நம்ம ஊர்லதான் ஆரம்பத்துல இருந்தே சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிற வகையில இப்படில்லாம் பெயர் வைக்காமலேயே எல்லாத்தையும் reuse-ம், recycle-ம், பண்ணிக்கிட்டிருந்தீங்க.
காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க, இதுக்கெல்லாம் கையோட பையோ, கூடையோ எடுத்துக்கிட்டு போவீங்களே, நினைவிருக்கா? திரும்பத் திரும்ப பயன்படுத்தற பாத்திரம் பண்டங்கள், விருந்தாளி வந்தா வாழை இலையில சாப்பாடு, இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை இப்ப மறந்துட்டீங்க! அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப? எங்க பாத்தாலும் "carry bag"-ன் ஆட்சிதான்.
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, எதை எதைத்தான் மேல் நாட்டுக்காரங்ககிட்ட இருந்து காப்பி அடிக்கிறதுன்னு வரைமுறையே இல்லாம போச்சு. எங்கே போனாலும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும், தட்டுகளும், பைகளும், மற்ற குப்பைகளும் ரோடெல்லாம் இறைஞ்சு கிடக்கு.
குறைஞ்சது என்னை எனக்குரிய இடத்திலாவது வைங்க. குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துங்க. பல சமயங்கள்ல என்னை சரியான இடத்துல போடணும்னு நினைக்கிறவங்க கூட, குப்பைத் தொட்டி இல்லாததால, கண்ட இடத்துலதான் எறியறாங்க.
சில சின்ன கிராமங்கள்ல கூட "மக்கும் குப்பை", "மக்காத குப்பை"ன்னு போட்டு, தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் இருக்கு. மக்கள் அப்படில்லாம் பிரிச்சு போடறாங்களோ இல்லையோ, அப்படி ஒரு இடமாச்சும் இருக்கு. ஆனா சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல நிறைய பகுதிகள்ல அதுகூட இல்ல. பெரும்பாலும் காலி மனைகள்தான் குப்பைத் தொட்டிகளா இருக்கு. அந்த இடத்துல வீடு வந்தாச்சுன்னா அதுவும் போச்சு.
மேல் நாட்டிலிருந்து பல விஷயங்களையும் காப்பி அடிக்கிறவங்க, அவங்க குட்டிப் பிள்ளைங்க கூட குப்பைகளை உரிய இடத்துல எப்படி போடறாங்கன்னு மட்டும் ஏன் இன்னும் கத்துக்கல? அங்க, ஒரே ஒரு முறை மட்டும் பயன்படற "disposable" நிறைய பயன்படுத்தினாலும், அதை மாத்தற விதமா இப்ப பல முறைகளை கையாள்றாங்க; அப்படி இயலாத சமயம் அந்த பொருட்களை முறையா "recycle" பண்றாங்க. இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் நீங்க கத்துக்கலாமே?
பெரிய பெரிய விஷயமெல்லாம் செய்ய வேண்டியதுதான். ஆனா இதைப் போல அடிப்படை விஷயங்கள் முக்கியமில்லையா? இதைக் கவனிப்பார் யார்???