Saturday, December 31, 2011

2012 - வாழ்த்துகள்!புத்தம் புது வருஷமிங்கே பூத்துக் குலுங்குது;
சித்தமெல்லாம் அதில் நிறைந்து சிரித்து மகிழுது!
வித்தை போலவே உலகில் வளமும் கூடட்டும்;
சத்தியமே நமது வாழ்வில் சிந்து பாடட்டும்!

கத்தி போல மாந்தர் அறிவு கூர்மையாகட்டும்! – நல்ல
சக்தி கொண்ட மக்களோடு நாடு வளரட்டும்!
இச்சகத்தில் இந்தியாவைப் போல நாடுண்டோ! - என்று
மிச்சமுள்ள ஊருலகம் வாழ்த்து பாடட்டும்!

பிணக்குகளை மறந்து நாட்டின் ஒற்றுமை காப்போம்! - மன
ஊக்கத்துடன் நேர்மைமிகும் வாழ்வினை அமைப்போம்!
கலக் கங்கள் எதுவரினும் தளர்ந்திட மாட்டோம்! - நம்
இலக்கைமட்டும் நோக்கிவீறு நடையைப் போடுவோம்!

--கவிநயா

நன்றி: அதீதம்


Sunday, December 25, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.1: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.
பி.கு.2: வேறே எழுத நேரம் இல்லாததால், இன்றைக்கு கண்ணன் பாட்டில் இட்டதே இங்கேயும்.

Sunday, December 18, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

பி.கு.: முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டில் இட்டது. மார்கழிக்காக கண்ணனை இங்கே கடத்தி வந்து விட்டேன்!

Sunday, December 11, 2011

தேவி சரணம்


போன வாரம் சனிக்கிழமை அன்று ‘தேவி சரணம்’ என்கிற நடன நிகழ்ச்சி செய்தேன். ரெண்டு மூணு வருஷங்களாகவே அவளுக்காக ஒரு நடன நிகழ்ச்சி பண்ணனும்னு தோணிக்கிட்டே இருந்தது. பல சிரமங்களுக்கு இடையில் அவள் அருளால் நல்லபடியாக நடந்து முடிஞ்சிட்டது.

அன்னை மீதான பல வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினேன். எல்லாமே பிரபலமான பாடல்களாக இருந்ததால, நடனம் எப்படி இருந்தாலும், மக்கள் இரசிச்சாங்கன்னு தெரிஞ்சது :) குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகலேது?’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, இவற்றுக்கெல்லாம் ஆடினேன். என்னுடைய நடன ஆசிரியைக்கும் இந்த சமயத்தில் வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன் (அவங்க இதல்லாம் படிக்க மாட்டாங்கன்னாலும் :).

தேவி பாடல்களுக்கான நடனம் அவ்வளவா தெரியாது, தெரிஞ்சதும் ரொம்ப நாள் முன்னாடி கத்துக்கிட்டதுங்கிறதால மறந்துருச்சு. சில சமயம் மனசில் இருப்பதை பாடணும்னு தோணற மாதிரி, ஆடணும்னும் தோணும். என் பாட்டை நானே பாடி, நானே அபிநயம் பிடித்து ஆடுவதுண்டு. ஆனால், சில பாடல்களாவது ஒழுங்கா கத்துக்கணும், அப்படிச் செய்யற போது அவளை நினைக்கிற நேரமும் அதிகமாகும் என்கிற (சுயநல) நோக்கத்தோடதான் ஆரம்பிச்சேன்.

நிறைய பேருக்கு நான் ஏன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றேன்னு புரியவே இல்லை. நான் ஏதோ புதுவிதமான நடன நிகழ்ச்சி செய்யணுங்கிறதுக்காக செய்யறதா நினைச்சாங்க. உண்மையில் இது திறமையின் வெளிப்பாட்டுக்காக இல்லை (இருந்தாதானே வெளிப்படுத்த! :) மன உணர்வின், அவளுக்கான அன்பின், வெளிப்பாட்டுக்காக என்பது ஒரு சிலருக்குத்தான் புரிஞ்சது.

வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நடக்குது. பல சமயங்களில் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு தெரியறதில்லை. காரணமில்லாம துயரங்கள் வரும் போது, ‘இதுதான் விதி’ன்னோ, அல்லது ‘பூர்வ ஜென்ம பாவம்’னோ, அல்லது ‘பிராப்தம் அவ்வளவுதான்’னோ எழுதி வெச்சிடறோம். சில விஷயங்கள் காலம் கடந்து புரியும். ‘ஓ, அன்றைக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு இப்பதானே தெரியுது?’, அப்படின்னு மனசுக்குள் ஒரு விளக்கு எரியும்.

என் வாழ்க்கையில் எனக்கு என்ன புரிஞ்சதோ இல்லையோ, ரெண்டு விஷயம் மட்டும் இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதன் காரணம், அவளைப் பாடணும் என்கிறதுக்காகவே என்பதும்; காலம் கடந்தாலும் நான் நடனம் கத்துக்கிட்டதுக்கு காரணம், அவளுக்காக ஆடணும் என்பதற்காகவே, என்பதும்தான்.

ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டிருந்தாலும், கவிதை என்பதை என் உணர்வுகளுக்கு வடிகாலாதான் இறைவன் கொடுத்திருக்கான்னு ரொம்ப நாள் நினைச்சிக்கிட்டிருந்தேன் – அவளுக்காக, அவளைப் பற்றி, அவளைப் போற்றி, எழுத ஆரம்பிக்கிற வரை. அதுக்கப்புறம் தான் அந்த விளக்கு எரிஞ்சது!

அதே போலத்தான் நடனமும். சின்ன வயசிலிருந்து உள்ளுக்குள்ள இருந்த ஆசை இங்கே வந்து நிறைவேறக் காரணம் என்னன்னு இப்போதான் புரியுது. இறைவனுக்கான ஏக்கத்தை அருமையாகவும், மனப்பூர்வமாகவும், வெளிப்படுத்த, பரதம் ஒரு மிகச் சிறந்த சாதனம். பரதமும், ஆன்மீகமும் கையோடு கைகோர்த்துச் செல்பவை. வர வர பரதம் குழு நடனமாகவும், fusion நடனமாகவும், மாறிக்கிட்டு வரதைப் பார்த்தா கொஞ்சம் கவலையாதான் இருக்கு. அதனோட ஆன்மீகத் தன்மை அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போயிடுமோன்னு தோணுது.

எந்த ஒரு கலைஞனுக்குமே இறையருளினால்தான் அந்தக் கலை வாய்க்கிறது. அந்தக் கலையை இறைவனுக்கே காணிக்கையா தரும்போதுதான் அதன் நோக்கம் நிறைவடைவதைப் போல ஒரு உணர்வு. ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச வட்டம், எல்லா இடமும் சுத்தி வந்து மறுபடியும் அதே புள்ளியில் முழுமை பெறுவதைப் போல.

சின்னப் பிள்ளைங்கல்லாம் அப்பா, அம்மா, மற்ற பெரியவங்கல்லாம் விசேஷங்களுக்கு தர்ற பணத்தை சேர்த்து வைப்பாங்க. பிறகு யாருக்காச்சும் எதுக்காவது பரிசு தரணும்னா, அதில இருந்துதான் எடுத்து செலவழிப்பாங்க. இல்லன்னா அவங்ககிட்ட ஏது பணம்? அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு? எல்லாமே அவன் தந்ததுதான். அவன் தந்ததை அவனுக்கே திருப்பித் தரோம்.

அந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.

பரிசு எப்படி இருந்தாலும், அதில் இருக்கிற பிரியம்தானே முக்கியம்?

அன்னையின் திருவடிகள் சரணம்.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

Sunday, December 4, 2011

நட்புக்கோர் நல்வணக்கம்!


ட்பு என்பது எவ்வளவு அழகான விஷயம்! இரத்த சம்பந்தம் இல்லாமல், ஏன், எந்த சம்பந்தமுமே இல்லாமல், எங்கோ பிறந்து, முற்றிலும் வெவ்வேறான சூழலில் வளர்ந்து, ஏதோ ஓரிடத்தில் சந்தர்ப்ப வசத்தால் சந்தித்து, எத்தனையோ விஷயங்களில் வேறுபட்டாலும், உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்ட மனமொத்த நட்பு அமையும் போது, அதன் சுகமே தனிதான்!

நட்பு, அழகான, மணம் மிகுந்த மலர் போன்றது;
மனமெல்லாம் மணம் பரப்புவதால்!
நட்பு, இதமான இசையைப் போன்றது;
இதயம் முழுக்க அமைதியைத் தருவதால்!
நட்பு, அன்பான தாய் மடி போன்றது;
தட்டிக் கொடுத்து தாலாட்டும் பாடுவதால்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றான் ஒரு கவிஞன். நட்பு அமைவதும் கூட இறைவன் கொடுத்த வரம்தான் என்று தோன்றுகிறது.

யாரிடத்திலும் சுலபத்தில் நெருங்கிப் பழகி விடாத சுபாவம் எனக்கு. கலகலப்பாகப் பேசவும், பழகவும் தெரியாது. அப்படிப்பட்ட எனக்கே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிய தோழி என்று சொல்லிக் கொள்ள ஓரிருவராவது இருந்திருக்கிறார்கள் என்றால், அது இறையருள் இல்லாமல் வேறென்ன?

நாடு விட்டு நாடு வந்த இடத்திலும் எனக்கு இப்படிப்பட்ட , விரல் விட்டு எண்ணக் கூடிய நட்பு கிடைத்திருக்கிறது. தெரிந்தவர்கள், உறவுகள், என்று யாரும் இல்லாமல் இங்கே வந்த போது கூடவே வந்த தனிமை, இத்தகைய புது உறவு கிடைத்தவுடன், என்னை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியே போய் விட்டது!

[“A true friend knows your weaknesses but shows you your strengths; feels your fears but fortifies your faith; sees your anxieties but frees your spirit; recognizes your disabilities but emphasizes your possibilities.”

-William Arthur Ward]

என் கஷ்டம், தன் கஷ்டம், என் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி, என்று உரிமையுடன் பங்கிட்டுக் கொள்ளும் நட்பு. என்ன நிகழ்வாக இருந்தாலும், என்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து மகாராணி போல தாங்கும் அன்பு. ஊஹூம்… மகாராணி போலக் கூட இல்லை, மிகவும் செல்லமான குழந்தையைப் போல!

இத்தனை அன்புக்கும் எனக்கு தகுதி இருக்கிறதா, அதற்காக நான் என்ன செய்திருக்கிறேன், என்று அடிக்கடி தோன்றும். அந்த அளவிற்கு நானும் என் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறேனா என்று தெரியவும் இல்லை. அந்த நட்பைப் பற்றி, அந்த பலன் எதிர்பாராத வெள்ளை உள்ளங்கள் பற்றி, அந்த உள்ளங்களில் விளையும் கொள்ளை அன்பைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.

என் தோழிகள், இல்லையில்லை… என்னுடைய உடன் பிறவா சகோதரிகள், வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று மிகச் சிறப்பான வாழ்வு வாழ வேண்டுமென அந்த இறைவனை மனமார வேண்டிக் கொள்கிறேன்.

(*touch wood* - கண் படாமல் இருக்க! :)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா