உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, June 30, 2013
தண்ணீர்... தண்ணீர்...!
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
“யாரைப் பார்க்க வேண்டும்?”
“உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்”
வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?!
இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி (Aabid Surti) என்பவர். இவர் விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியரும் கூட. ஆனால் இவர் தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவது பல்லாயிரம் லிட்டர் தண்ணீரின் சேமிப்பைத்தான். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 414,000 லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்!
70-களில் இருக்கும் இவருக்கு, இளம் வயதிலேயே தண்ணீரின் அருமையை மும்பை வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது. ஒரு முறை ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் ஒழுகிய குழாய் இவரை ரொம்பத் தொந்தரவு செய்திருக்கிறது. ஒழுகும் குழாயை சரி செய்வதில் என்ன கஷ்டம் என்று பலரிடமும் பேசிப் பார்த்த போது, குழாய் சரி செய்பவர்கள் கிடைப்பது அரிதென்றும், கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துச் சரி செய்யும் வசதி பலருக்கும் இல்லையென்றும் தெரிய வந்தது.
ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்! அவர் அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம்!
அத்துடன் இல்லாது, எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம் என்ற செய்தியையும் வாசித்திருக்கிறார்.
இந்த இரண்டு விஷயங்களையும் அவரால் நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. சரியாக 2007-ல் (உலக தண்ணீர் வருடம்) அவருக்கு உத்தர பிரதேச அரசிடமிருந்து சாகித்ய சந்த்ஸா (Sahitya Santhsa award) விருது ரூ.100,000 கிடைத்தது. உடனடியாக அந்தப் பணத்தை இந்தப் பணிக்குச் செலவிட முடிவெடுத்து விட்டார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தன்னுடன் ஒரு குழாய் பழுது பார்ப்பவரைக் (plumber) கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று இலவசமாக குழாய்களைப் பழுது பார்த்துத் தருகிறார். இப்போது இவருடையது ஒரு இயக்கமாகவே மாறி விட்டது. பள்ளிக் குழந்தைகளையும் இவருடைய தண்ணீர் சேமிக்கும் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.
“A penny saved is a penny earned” என்று சொல்வார்கள். அது தண்ணீருக்கும் நிச்சயம் பொருந்தும். சிறு துளி பெரு வெள்ளமல்லவா? குறிப்பாகப் பருவ மழை பொய்த்துப் போகும் இந்தக் காலத்தில், ஆறு குளங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், தனி மனிதனால் செய்யக் கூடியவற்றவைகளையாவது நாம் செய்ய வேண்டுமல்லவா? அதுதானே நாம் நம் சந்ததியினருக்கு விட்டு போகும் செல்வம்? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் வறண்ட பூமியைத்தான், உணவும், நீரும், இல்லாத பூமியைத்தான் அவர்களுக்கு விட்டுப் போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்!
நாம் ஒவ்வொருவரும் ஆபிட் சுர்தியாக ஆக முடியா விட்டாலும், தண்ணீரைச் சேமிக்க நம்மாலான பல எளிய வழிகள் இருக்கின்றன.
ஒழுகும் குழாய் இருந்தால் உடனடியாகச் சரி பார்க்கலாம்.
காலையில் பல் துலக்கும் போது பலரும் தண்ணீரைத் திறந்து வைத்து, அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, அவர்கள் பல் துலக்குவார்கள். அப்படியில்லாமல் தண்ணீரை வேண்டுமென்னும் போது மட்டும் திறந்து கொள்ளலாம்.
பாத்திரம் துலக்கும் போதும் சிலருக்கு தண்ணீர் போய்க் கொண்டே இருக்க வேண்டும், அல்லது முழு வேகத்தில் திறந்து விடுவார்கள். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
குளிக்கும் போதும் அப்படியே. சோப்பு போடும் போது தண்ணீரை நிறுத்தி வைக்கலாம். குளிக்கும் போது கனவு கண்டு கொண்டிருந்தாலும் (மற்ற விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும்), தண்ணீர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. அதனால் குளியல் கனவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். (இதை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்!)
சிலர் தண்ணீர் குடிப்பதற்கென எடுக்கும் போது தம்ளர் நிறைய எடுத்து விட்டு, கால் தம்ளர் மட்டுமே குடித்து விட்டு மீதியைக் கீழே ஊற்றி விடுவார்கள். அதற்குப் பதில் வேண்டுமென்கிற அளவு மட்டுமே எடுத்துக் குடிக்கலாம்.
சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.
தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
பி.கு.: சுகி. சிவம் அவர்கள் ஒரு முறை இவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அதிலிருந்துதான் இந்தக் கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. ஆகையால், அவருக்கு நன்றி!
படத்துக்கு நன்றி: http://superaalifragilistic.wordpress.com/2013/01/26/saving-the-planet-one-drop-at-a-time/
நன்றி: வல்லமை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பகிர்வு...
ReplyDelete//எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம்//
கொடுமை....
//தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும்//
மிகவும் உண்மை...
வாங்க ஸ்கூல் பையன்! வருகைக்கு நன்றி.
Deleteஅனைவரும் அறிய வேண்டியது... உணர வேண்டியது... நன்றி...
ReplyDeleteதிரு. ஆபிட் சுர்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்!
Deleteதனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நன்றி அம்மா!
Deleteநம் நாட்டில் ஒரு பக்கம் தண்ணீர் வெள்ளமாக ஓடும். இன்னொரு பக்கம் குடிக்கக் கூடக் கிடைக்காது. என்ன சொல்ல! தண்ணீர் சேமிப்புக் கட்டாயம் தேவை. முன்பெல்லாம் தென் மாவட்டங்களில் பெண் பார்க்கும்போது வரப்போகும் மாமியார் பெண் தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவழிக்கிறாளா எனப் பார்த்து அதன் பின்னரே சம்மதம் சொல்வாளாம். இப்போதெல்லாம் நடவாத ஒன்று. தண்ணீர் அதிகம் செலவழித்தால் பணமும் அத்தனைக்கத்தனை அதிகம் செலவழிப்பாள் என்றும் சொல்வார்கள். இப்போத் தண்ணீர்ச் செலவு அதிகமா, பணம் அதிகமா என்றூ கேட்கமுடியாமல் ஒன்றுக்கொன்று போட்டி! :((((
ReplyDelete//நம் நாட்டில் ஒரு பக்கம் தண்ணீர் வெள்ளமாக ஓடும். இன்னொரு பக்கம் குடிக்கக் கூடக் கிடைக்காது. என்ன சொல்ல!//
Delete//இப்போத் தண்ணீர்ச் செலவு அதிகமா, பணம் அதிகமா என்றூ கேட்கமுடியாமல் ஒன்றுக்கொன்று போட்டி!//
ஆமாம் அம்மா... என்ன செய்யறது? ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா.
அனைவரும் அவசியம்
ReplyDeleteகடைபிடிக்கவேண்டிய பயனுள்ள கருத்துக்கள்
அடங்கிய பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, திரு.ரமணி.
Deleteஎழுத்தாளரும் ஓவியருமான திரு. ஆபிட் சுர்தி அவர்களின் சேவை பாராட்டுக்குரியது. விழிப்புணர்வு தரும் நல்லதொரு பகிர்வு கவிநயா.
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி!
Deleteநல்ல கட்டுரை...
ReplyDeleteஅருமையாக சொல்லியிருக்கீங்க...
அவருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சே.குமார்!
Deleteஅருமையான கட்டுரை!!. சென்னையில் இருந்து, தண்ணீர் கஷ்டத்தின் முப்பரிமாணங்களும் தெரியும் ஆதலால், தண்ணீர் வீணாக்காமல் இருப்பது அனிச்சைச் செயல் மாதிரி ஆகிவிட்டது. இருந்தும், பெங்களூர் வந்ததும், கொஞ்ச நாள் டச் விட்டுப் போய் இருந்தேன். இப்போ இங்கேயும் தண்ணீர் தேவை வந்து விட்டதால் வீணாக்குவதில்லை.
ReplyDeleteதண்ணீர் சிக்கனத்திற்கு சொல்லியிருக்கும் யோசனைகள் அருமை. நான் ஃபாலோ செய்வதையும் சொல்கிறேன்.
காய் வேக வைத்த நீரை வீணாக்காமல் சூப் செய்யவோ அல்லது குழம்புக்கு புளி கரைக்கவோ உபயோகிக்கலாம்.
சமையலறையிலும் (ஸிங்க் இருந்தாலும்), குளியலறையிலும் ஒரு பக்கெட்டில் நீர் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகிப்பது தண்ணீர் விரயத்தைத் தடுக்கும்.
இரண்டாம் தடவை பாத்திரம் கழுவும் நீரை தரை துடைக்க உபயோகிக்கலாம்.
நாலு, ஐந்து துணிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷின் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
'எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!' என்ற தங்கள் பதிவின் முத்திரை வாக்கியத்தை நினைவில் வைத்தால் தண்ணீர் சிக்கனம் தானே வந்து விடும். பகிர்விற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாங்க பார்வதி! தண்ணீர் சேமிக்க அருமையான யோசனைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு சிறப்பு நன்றிகள்!
Deleteநல்ல கட்டுரை கவிநயா... தண்ணீர் சேமிப்பு நிச்சயம் அவசியம். பின்னாளில் தண்ணீருக்காக உலகப் போரே நடக்கலாம். உண்மை - இப்போது காவேரிக்கு அடித்துக் கொள்கிறோமே.... :(
ReplyDeleteஆமாம். அந்த அபாயம் இருக்கிறது :(
Deleteநன்றி வெங்கட்.
நீர் பற்றிய மிக அருமையான கட்டுரை.
ReplyDeleteஎமது அலட்சியத்தால் எவ்வளவு வீணாகிறது.
பகிர்ந்ததற்கு நன்றி
மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான கட்டுரை. விறுவிறுப்பாக எழுதியிருந்தது கூடுதல் நேர்த்தி.
ReplyDeleteஇந்தப் பகிர்தலில் பயன் உண்டு நிச்சயம்.
நன்றி.
மிக்க நன்றி ஜீவி ஐயா.
DeleteMiga arumai and it is necessary to save every drop of water.
ReplyDeleteNatarajan.
மிக்க நன்றி திரு.நடராஜன்.
Deleteதனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!
ReplyDeleteஒரு துளி நீர்விரயமாக
ஒரு நதி அழுகின்றதே..!
அவசியமான பதிவு அனைவருக்கும் பொதுவான சிந்தனை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
//ஒரு துளி நீர்விரயமாக
Deleteஒரு நதி அழுகின்றதே..!//
ஆமாம்.
முதல் வருகைக்கும், வாசித்தமைக்கும் மிக்க நன்றி சீராளன்!
//ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். //
ReplyDeleteஅம்மாடியோவ் !! நல்ல பகிர்வு :)
முதல் வருகைக்கும், வாசிப்பிற்கும், மிக்க நன்றி விஜயன்!
Delete