ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 3
முதல் பகுதி: இங்கே; இரண்டாம் பகுதி: இங்கே
ரசம்னு சொன்னவுடனே பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், இந்த ரச வகைகள் பத்திப் பேசப் போறோம்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா, மன்னிச்சுக்கோங்க :) இன்னிக்கு நாம பரதத்தில் உள்ள நவரசங்களைப் பத்திதான் பார்க்கப் போறோம்!
‘ரசம்’ என்பது என்ன? நடனம் ஆடுபவர் வெளிப்படுத்தும் பாவங்கள், பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே ரசம் அப்படின்னு நாட்டிய சாஸ்திரம் சொல்லுது. ரசனை, ரசிகர், இந்த சொற்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தா தெரியும்...
சினிமா பார்க்கும்போது எத்தனை பேர் கைக்குட்டையால கலங்கின கண்ணை துடைச்சிருக்கீங்க! வில்லனை பார்க்கும்போது நாமே திரைக்குள்ள போய் ரெண்டு போடு போடலாம்கிற மாதிரி கோவம் வந்திருக்கா? :) எல்லாம் சுபமா முடியும் போது ‘அப்பாடி’ன்னு மனசு நிறைவா, சந்தோஷமா உணர்ந்ததுண்டா?
அதே போலத்தான் இதுவும். நடனமாடுபவர் மிகவும் திறமையானவராய் இருக்கும் பட்சத்தில் அவர் வெளிப்படுத்தும் பாவங்கள் கண்டிப்பா பார்ப்பவர்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவரச பாவங்கள் என்பது தென்னிந்திய நடனங்களுக்கே, குறிப்பா பரதத்துக்கே உரிய சிறப்பு. மற்ற நடனங்கள் பார்த்தீங்கன்னா, வெறும் உடலை, கைகால்களை மட்டுமே பயன்படுத்துவாங்க. ஆனா பரதத்திலும், பிற தென்னிந்திய பாரம்பரிய நடனங்களிலும்தான், கதை சொல்லும் உத்தியும், அதன் காரணமா பலவித உணர்வுகளை முகபாவத்தாலும், முத்திரைகளாலும் வெளிப்படுத்துவதும் இருக்கு.
அன்றாட வாழ்க்கையில் நாம அனுபவிக்கும் பலவிதமான மன நிலைகளைத்தான் விதவிதமான முகபாவங்களாக பரதத்தில் வெளிப்படுத்தறாங்க. நாட்டிய சாஸ்திரத்தில் இந்த மாதிரியான உணர்வுகளை ஒன்பது விதமா வகைப்படுத்தி இருக்காங்க.
சிருங்காரம் –
சிருங்காரம் என்றால் அழகு. மனிதனுக்கு அழகு எது? அன்பு. அன்பில் பலவகை இருக்கு. ஆண், பெண்ணுக்கிடையேயான காதல், தாய், பிள்ளைக்கிடையேயான அன்பு, குரு, சிஷ்யர்களுக்கிடையிலான அன்பு, முக்கியமாக, இறைவனிடம் பக்தன் காட்டும் அன்பு, இப்படி…
ஏனோ சிருங்காரம்னா காதல் மட்டுமேங்கிற மாதிரிதான் இப்போதைய புரிதல் இருக்கு. இது தவறு. நாட்டியமே ஆன்மீகத்துக்கு மிக நெருக்கமானது, அதுவும் இறைவனை அடைய உதவுகிற ஒரு யோகம் தான்! அதனால இறைவனிடம் காட்டும் அன்புதான் இங்கே தலையாயது. அஷ்டபதியில் கோபியர்கள் கண்ணனிடம் காட்டும் அன்பு வெறும் காதல் மட்டும் இல்லை. அது மிகவும் மேலான ஒரு நிலைப்பட்ட பக்தி. சிருங்காரம் பற்றி இப்படி சொல்வது நான் இல்லை, திருமதி. பாலசரஸ்வதி, திரு. தனஞ்சயன், இந்த மாதிரியான நாட்டிய ஜாம்பவான்கள்தான் இப்படி சொல்லி இருக்காங்க.
இதன் காரணமாத்தான் சிருங்காரத்தை ரசங்களில் முதன்மையானதாக சொல்றாங்க. (‘king of rasas’)
ரௌத்ரம் –
கோபத்தை பல விதமா வெளிப்படுத்துவதுதான் ரௌத்ரம். கோபம் வராதவங்கன்னு யாராவது உண்டா? விசுவாமித்திரர், துர்வாசர், இவங்களைப் போன்ற முனிவர்களுக்கே மூக்குக்கு மேல கோவம் வருமாம்! அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?
அதனால மிக சுலபமா யாருமே வெளிப்படுத்த முடியற உணர்வு இதுதான் :) உங்களையும் சேர்த்துத்தான்!
ராட்சதர்களைக் காட்டும் போதோ, அல்லது தெய்வம் அரக்கர்களை அழிக்கையில் ஏற்படும் ஆங்காரத்தைக் காட்டும் போதோ, அல்லது இயற்கையின் சீற்றத்தைக் காட்டும் போதோ, இந்த மாதிரி சமயங்களில் இந்த ரசம் பயன்படுகிறது. நடராஜர் ஆடும் பலவிதமான தாண்டவங்களில், அவர் அழிக்கும் கடவுளாக ஆடும் தாண்டவத்தை, ‘ருத்ர தாண்டவம்’ அப்படின்னுதானே சொல்றாங்க…
வீரம் –
தன்னம்பிக்கை, தைரியம், ஆண்மை, உறுதி, இந்த மாதிரியான மனநிலைகளை வெளிப்படுத்தறதுதான் வீரம் என்பது. வீரம் என்பதை உடலுடைய தோரணையிலேயே காட்டலாம். அதை சரியா செய்யலைன்னா அதுவே ‘ஹாஸ்ய’ ரசமாயிடும் அப்படிங்கிறார், திரு. தனஞ்செயன் :)
வீரம்னு சொன்ன உடனே வில்லேந்திய ஸ்ரீ ராமன் தான் என் நினைவுக்கு வருவான்….
பீபஸ்தம் –
பீபஸ்தம்னா அருவருப்பு. எதையாவது பார்க்கும் போது “ஐயய்ய…ச்சீ..ச்சீ” அப்படின்னு முகம் சுளிக்க வைக்கிற உணர்வு. அதை நினைச்சாலே உமட்டுதுன்னு சொல்றோம்ல, அந்த உணர்வை வெளிப்படுத்தற பாவம்தான் இது.
ஹாஸ்யம் –
சந்தோஷம், சிரிப்பு. நகைச்சுவை. இப்படி இதையெல்லாம் வெளிப்படுத்தறதுதான் ஹாஸ்யம். தோழியுடன் கிண்டல் பண்ணி விளையாடறபோதோ, அல்லது குட்டிக் கிருஷ்ணனோட குறும்புகளைப் பற்றிச் சொல்லும் போதோ, இந்த ரசம் பயன்படும்.
கருணா –
கருணை. இரக்கத்தால் ஏற்படுகிற அன்பு. ஒருவருடைய துன்பத்தைப் பார்த்து நமக்கு ஏற்படும் இரக்க உணர்வு. மனிதர்கள் படும் துன்பத்தைக் கண்டு புத்தருக்கு ஏற்பட்டது கருணை. அதனால தான் அந்த துன்பத்துக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்துச் சொன்னார். தேவர்கள் மகிஷனால் பட்ட துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு இரங்கி, அவர்களைக் காக்க வந்தாள், தேவி.
அத்புதம் –
அற்புதம். அதிசயம். ஆச்சர்யம். எதிர்பாராத ஒன்றை பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, அல்லது அதிர்ச்சி, இரண்டையுமே இதனால் வெளிப்படுத்தலாம்.
பயம் –
இதைப் பற்றி சொல்லாமலேயே தெரியுமே… கருங்கும்னு இருக்கிற இருட்டில் தனியாப் போகும்போதோ, சிங்கம், புலிகிட்ட மாட்டிக்கும் போதோ, தீயவற்றைக் கண்டு ஓடி ஒளியும்போதோ, இப்படி பல இடங்களில் ‘பயம்’ ‘காட்டலாம்’ :)
சாந்தம் –
சாந்தம் என்பது அமைதி. இன்பமோ துன்பமோ எதுவுமற்ற அமைதியான மனநிலை. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற போது இந்த நிலையைத்தான் அடைந்தார். பரதமும் ஆன்மீகமுக் கைகோர்த்துச் செல்வதால், வெவ்வேறு ரசங்களையும் அனுபவித்தப் பின், அலை ஓய்ந்தாற்போல அனைத்தும் ஓய்ந்து, இறைவனை அடைகையில் ஏற்படும் மிகவும் உயர்வான மனநிலை இது.
எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதால் இதை நவரசங்களில் ஒன்றாக சொல்லக் கூடாது என்ற சர்ச்சை இருக்கிறது. இருந்தாலும் நாட்டிய சாஸ்திரத்தின் படி, முதல் 8 ரசங்களையும் தந்தவர் பிரம்மா என்றும், சாந்தம் என்கிற ஒன்பதாவது ரசத்தை நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பரத முனிவரே சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலே படத்தில் இருப்பது இதுதான்...
***
அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி:http://www.carolinejariwala.com/paintings_03-05/images/navarasa_hasya.jpg
//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)//
ReplyDeleteகொஞ்சம் லொள்ளு ரசம்!
சொஞ்சம் ஜொள்ளு ரசம்!
இதை எப்படிக்கா அபிநயம் புடிக்கறது? :)
ம்ம்ம் நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது. இன்னைக்குத் தான் சலங்கை ஒலியில கமல் வகை வகையா ஷைலஜாவுக்கு ஆடிக் காமிக்கிறதைப் பார்த்தேன். அதில் கதக் ஆடும் போது சுத்தி சுத்தி ஆடுனார்; பரதமும் கதகளியும் ஆடும் போது தான் கண்களும் முகங்களும் கைகளும் கால்களும் பேசின. அப்ப கவனிக்கலை. இப்ப நீங்க சொன்னதைப் படிச்சபின்னாடி தெரியுது. :-)
ReplyDeleteசிருங்காரத்துக்கு நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு அக்கா. சரியானதும் கூட. சிருங்காரம்ன்னாலே காதலும் காமமும் மட்டும் தான்னு புரிதல் இருக்குறதால தான் அஷ்டபதியும் சிலருக்கு விகாரமா தெரியுது. விகாரம் அஷ்டபதியில இல்லை; தவறா புரிஞ்சிக்கிறவங்க மனசுல தான்.
வீரமில்லாதவர்கள் உள்ளதைப் போல் நடிக்கும் போதும் சில நேரம் அது ஹாஸ்யம் ஆகிவிடுகிறது! :-)
bharatha muni mentions only 8 rasae in his natyasastra. the ninth- santhi was added by abhinavagupta.
ReplyDeleteரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்யம்:)!
ReplyDelete//கொஞ்சம் லொள்ளு ரசம்!
ReplyDeleteசொஞ்சம் ஜொள்ளு ரசம்!
இதை எப்படிக்கா அபிநயம் புடிக்கறது? :)//
இதெல்லாம் 'ஹாஸ்ய'த்தில் வரும் தம்பீ :)
வருகைக்கு நன்றி கண்ணா.
வருக குமரன். ரசித்து வாசித்திருக்கீங்கன்னு தெரியுது :) மிகவும் நன்றி. தங்கமணி நடனம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்களா?
ReplyDelete//bharatha muni mentions only 8 rasae in his natyasastra. the ninth- santhi was added by abhinavagupta.//
ReplyDeleteநான் வாசித்தது தவறான தகவலாக இருக்கக் கூடும். திருத்தத்திற்கு நன்றி திரு.ருத்ரன். முதல் வருகைக்கும் மிக்க நன்றி.
//ரசபாவங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை சுவை சுவாரஸ்யம்:)!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
//அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... //
ReplyDeleteவீட்டுக்காரியுடன் சமரசம் செய்துகொண்டேன். என்ன விசயத்தில் அப்படின்னு கேட்கிறீங்களா ?
இங்கு நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு இல்லையா?
அதன் அடிப்படைலே இந்த ஒப்பந்தம்.
அதாவது, ரசம் செய்யும்போது, வாணலியை ஸ்டவ்விலே வைக்கிறது, எண்ணை ஊத்தி, கடுகு , பெருங்காயப் பவுடர்
போட்டு, மஞ்சள் தூள் போட்டு, கடுகு நன்னா வெடிச்சப்பறம் , ஒரு மூன்று கப் முதல் நாலு கப் தண்ணீர் ஊற்றிவிட்டு,
நறுக்கி வைத்த தக்காளிப்பழத்தையும் போட்டுவிடுவேன்.
அம்புட்டுதான் என் . அதுக்குமேலே அவ ஜாப்.
அதுக்கு மேலே புளி பேஸ்ட், ரசப்பொடி, உப்பு, போட்டு கொதிச்சபின்னே, வெந்த பருப்பை கரைச்சு ஊத்தி,
கருகப்பிலை, கொத்தமல்லி எல்லாம் கிள்ளி போடறதெல்லாம் அவ தான் செய்யணும்.
சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com
அழகா எழுதியிருக்கீங்க கவிநயா ....
ReplyDeleteருக்மணி தேவி அருண்டேல் பரதத்தை எடுத்த போது ,ஆபாசமா இருக்கிறதா சொல்லி சிருங்கார ரசத்தையும் அது சார்ந்த அபினயங்களையும் கொறைச்சிட்டார் ன்னு படிச்சிருக்கேன் .
வாங்க சுப்பு தாத்தா :) உங்க வீட்டு (சம)ரசம் சூப்பரா இருக்கும் போலிருக்கே :) அடுத்த தரம் வந்துடறேன், சாப்பிட...
ReplyDeleteவருகைக்கு நன்றி தாத்தா.
வாங்க பூங்குழலி. நீங்கள் சொன்ன விஷயம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. கொஞ்சூண்டு கேள்வி ஞானம் மட்டும்தான். அதனாலதான் அதைப் பற்றி எழுதலை :)
ReplyDeleteவருகைக்கும் ரசனைக்கு மிகவும் நன்றி.
மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்கு தெரியும்....:)
ReplyDelete//மைசூர் ரசமும், மங்களூர் ரசமும் தான் தக்குடுவுக்கு தெரியும்....:)//
ReplyDeleteதக்குடுவுக்கு அதுக்கும் மேலே என்னென்னவோ தெரியும்னு எனக்குத் தெரியும் :)