Tuesday, June 1, 2010

சாப்பிடத் தெரியுமா, உங்களுக்கு?

சின்னப் பிள்ளையில் யாரையாச்சும் கிண்டல் பண்றதுன்னா, “உனக்கு என்னதான் தெரியும், நல்லா சாப்பிட மட்டும் தான் தெரியும்”, அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா உண்மையில், நல்லா, ஒழுங்கா, சாப்பிட தெரிஞ்சவங்க ரொம்ப குறைவுன்னே தோணுது. அதை சரியா செய்தாலே நம்மை எந்த நோயும் அண்டாது!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அப்படின்னு சொல்வாங்க… ஏதாவது ஒரு வியாதி வந்து துன்பப் படும்போதுதான் அதனுடைய உண்மையான பொருள் புரியுது இல்லையா, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பதைப் போல.

நாம ஆரோக்கியமா இல்லைன்னா, நாம மட்டும் கஷ்டப்படறதில்லை. நம்மை சேர்ந்தவங்களும் நமக்காக, நம்மோட சேர்ந்து பலவிதங்களில் சிரமப்படறாங்க. பல முதியோர்கள் பலவிதமா கஷ்டப்படறதையும், உறவினர்களால கூட பார்த்துக்க முடியாத அளவு துன்பப்படறதையும் பல இடங்களில் பார்க்கிறோம். வாழவும் முடியாம, சாகவும் முடியாம… எப்படிப்பட்ட வேதனை!

வயசு ஆக ஆகத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும் போல இருக்கு. பல விஷயங்கள் நம்ம கையில் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் நம்மால முடிஞ்ச வரைக்கும் முடிஞ்ச விஷயங்களை பண்றதுதானே நமக்கு நல்லது?



பாதி வியாதி உணவினால்தான் வருது. உணவில் இருக்கும் கிருமிகளை பத்தி மட்டும் சொல்லலை; உணவின் அளவு, சாப்பிடற நேரம், சாப்பிடற விதம், இப்படி எத்தனையோ காரணங்கள். ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்ததுன்னா, அதை அளவே இல்லாம சாப்பிடறோம். பசிக்குதோ பசிக்கலையோ, எல்லா வேளையும் மூச்சு முட்ட சாப்பிடறவங்களும் இருக்காங்க.

‘உணவே மருந்து’ அப்படிங்கிறார் ஒருத்தர். எப்படி?

• உணவு, நீர், உறக்கம், மூணும் அளவோட இருக்கணும்
• ஒரு முறை சாப்பிட்டது நல்லா ஜீரணமாகி, பசித்த பிறகுதான் அடுத்த முறை சாப்பிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்கிடணும்
• உடம்புக்கு ஒத்துக் கொள்கிறவற்றையும் அளவோடுதான் சாப்பிடணும்
• சுவையா இருக்கேன்னு மிதமிஞ்சி சாப்பிடவே கூடாது

இதெல்லாம் நான் சொல்லலைங்க! வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்க வள்ளுவப் பெருந்தகைதான் இதையும் சொல்லி இருக்கார், ‘மருந்து’ என்கிற அதிகாரத்தில்.

விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)

ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…

மண்ணோடு மண்ணாப் போகப் போகிற உடம்பைப் பற்றி எதுக்காக இவ்வளவு கவலைப் படணும், அப்படின்னு தோணுதில்ல? எனக்கும் அப்படித்தான் தோணும்.. முந்தில்லாம்.

உடல் நலத்தை யாரும் அலட்சியப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு உரிய கடமைகளை நிறைவேற்றவாவது, உடல் நலத்தை கவனிச்சுக்கணும். ஆன்மீகத்தில் இருக்கிறவங்க கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. திருமூலர் சொல்லுவார்:

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!

இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?

இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கடமை இருக்கு. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? (பேப்பர் பேனா இருந்தா போதும்னு சொல்லாதீங்க :)

இனிமேல் சாப்பிடறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் நினைவில் வச்சுக்குவோம். சரிதானே?

அனைவரும் அளவோடு உண்டு ஆரோக்கியமாய் வாழ, மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.thirumurugan.in/2007/06/delicious-pictures-of-indian-food.html

16 comments:

  1. அருமையான பதிவு கவிநயா. நல்லா வச்சீங்க தலைப்பும்:)!

    ReplyDelete
  2. // இறைவன் உறையும் உடலை எப்படி அலட்சியப்படுத்த முடியும்? அரிதாகக் கிடைக்கிற மனிதப் பிறவியை தவற விட்டு விட்டால் அவனை அடைவது எப்படி?//

    சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் ரகசியமாய் பேசிக்கொண்டதை ரிகார்டு செய்தது:


    "மேடம் கவினயா இஸ் பர்ஃபெக்ட்லி கரெக்ட். மீனாட்சி, நன்னா கேட்டுக்கோ !! அதனாலே நாளை மறு நாள் லேந்து தினம் தினம் மிளகு சீரக ரசமும், பருப்பு துவையலும், சுட்ட அப்பளமும் தான்.?
    " நாளை மறு நாள்லேந்து அப்படின்னு சொன்னா, நாளைக்கு என்ன சமைக்கிறது ?"

    "அப்படி கேளு.ஒண்ணும் பிரமாதமா, உடம்பை வருத்திக்கிட்டு செய்யவேண்டாம். எழுதிக்கோ... என்னது? மனசிலேயே
    வாங்கிப்பயா? சரி சரி. சொல்றேன். நாளைக்கு மெனு:

    "வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், பீன்ஸ் உசிலி
    சேனை வருவல், அப்பளம், கதம்ப சாம்பார், வெண்டைக்காய் மோர்க்குழம்பு, சுண்டைக்காய், வெத்தக்குழம்பு,
    அவியல், தக்காளி ரசம், சேமியா பாயசம், ஆமை வடை,ஜாங்கிரி, மாங்காய் தொக்கு,, கொஞ்சமா புளியோதரை,
    லேசா மிக்சர், கடைசி ஐடமா, தயிர் சாதம், "

    "அப்ப, நாளைக்கு மறு நாள் எனக்கு லீவு தான் போங்க..."

    பிச்சை ப்ரனாவ்
    ( நான் சுப்பு தாத்தாவின் பேரன்)
    http://ourceebrosgarden.blogspot.com

    ReplyDelete
  3. அதான் சிப்ஸ் கூட படத்தில் அளவாப் போட்டிருக்கீக போல :)

    ReplyDelete
  4. //அருமையான பதிவு கவிநயா. நல்லா வச்சீங்க தலைப்பும்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  5. //அதனாலே நாளை மறு நாள் லேந்து தினம் தினம் மிளகு சீரக ரசமும், பருப்பு துவையலும், சுட்ட அப்பளமும் தான்.?//

    ப்ரணவ், தாத்தாகிட்ட சொல்லு - வள்ளுவர் சொல்லியிருக்கிற விதிகளுக்கு உட்பட்டு சாப்பிடறதுன்னா, தினமுமே விருந்தே சாப்பிடலாம்னு... :) ஆனா பாட்டிதான் பா..வம் :)

    ReplyDelete
  6. //அதான் சிப்ஸ் கூட படத்தில் அளவாப் போட்டிருக்கீக போல :)//

    அளவா போட்ட படத்தை எடுத்து இங்கே போட்டது மட்டும் தான் நானு :) வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  7. //;))) நல்ல பதிவு...;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  8. //ஆரொக்கியமா இருக்கணும்னா, அரை வயிறு நிரம்பற அளவுதான் சாப்பிடணும், கால் வயிறு தண்ணீர் குடிக்கணும், கால் வயிறு காலியாதான் இருக்கணும், அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன்…//

    முழு வயிறு, அரை வயிறு, கால் வயிறு இதெல்லாம் எப்படி தெரிஞ்சுக்க்றது ?

    வயிரு முட்டிடுச்சா இல்லயா ?

    உங்க மனசு தான் சொல்லுது. உங்க மனசு நிறம்பிடுத்துன்னா, வயிறும் நிரம்பிடுத்து.
    You stomach needs only as much as your mind wants (not needs)
    மனசு எப்ப நிறம்பும் ?

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  9. //விருந்துன்னா போதும், பலரும் எழுந்திருக்கவே முடியாத அளவு சாப்பிடுவோம்! யாராவது கை கொடுத்து தூக்கி விடணும்! அதனாலதான் இப்பல்லாம் தரையில் பந்தி வைக்காம, மேசை நாற்காலி போடறாங்களோ என்னவோ :)//

    ஹஹ்ஹஹா.. என்னங்க, ஒரு ஸ்மைலியோட விட்டுட்டீங்க..

    ReplyDelete
  10. ரொம்ப சரி. எங்க அப்பா கு கூட உணவே மருந்து-ல அபார நம்பிக்கை. ரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் படித்து பின்பற்ற வேண்டியபதிவு!

    ReplyDelete
  11. //முழு வயிறு, அரை வயிறு, கால் வயிறு இதெல்லாம் எப்படி தெரிஞ்சுக்க்றது ?//

    தாத்தா, உங்களுக்கு தெரியாததை நான் என்ன புதுசா சொல்லிட போறேன்? பசி போன பிறகும், இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் போல இருக்கேன்னு தோணும் போது நிறுத்திடணும் :)

    //மனசு எப்ப நிறம்பும் ?//

    தெரியலை :( கோழி / முட்டை கதை மாதிரி, அவனை அறிந்தால் அது நடக்கும், (அ) அது நடந்து விட்டால் அவனை அறியலாம்னு தோணுது...

    ReplyDelete
  12. //ஹஹ்ஹஹா.. என்னங்க, ஒரு ஸ்மைலியோட விட்டுட்டீங்க..//

    வாங்க ஜீவி ஐயா. நானே ஜோக்'கடி'ச்சுட்டு, நானே சிரிக்கக் கூடாதில்ல, அதான் :) வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  13. //ரொம்ப சரி. எங்க அப்பா கு கூட உணவே மருந்து-ல அபார நம்பிக்கை. ரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் படித்து பின்பற்ற வேண்டியபதிவு!//

    வாங்க மாதங்கி. முதல் முறையா வந்திருக்கீங்க. உங்க வலை பக்கத்துக்கு போய் பார்த்தேன், நிஜமாவே நீங்க பொடிப் பொண்ணுதான் போல :) வருகைக்கு நன்றி. வாழ்க, வளர்க!

    ReplyDelete
  14. அதாவது நம்ப வாயை திறந்தா காக்கா கொத்தும் அளவுக்கு சாப்டக்கூடாதுனு சொல்ல வரேளா அக்கா!!,,,;)

    என்றும் வம்புடன்,
    தக்குடு

    ReplyDelete
  15. //அதாவது நம்ப வாயை திறந்தா காக்கா கொத்தும் அளவுக்கு சாப்டக்கூடாதுனு சொல்ல வரேளா அக்கா!!,,,;)//

    ஆமாம் தக்குடு; அந்த ஒரு பாயிண்ட்தான் புரிஞ்சதா :) மத்ததெல்லாம்? :)

    //என்றும் வம்புடன்,
    தக்குடு//

    அதென்னமோ சரிதான்! :) வம்புக்கு.. ஐ மீன்... அன்புக்கு நன்றி :P

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)