Showing posts with label மார்கழி. Show all posts
Showing posts with label மார்கழி. Show all posts

Monday, January 12, 2015

குன்று குடையா எடுத்தான்!

ஏரார்ந்த கண்ணி - 5


கோவர்த்தன கிரிமலையில் கோலாகலம்!
கோபர்களும் கோபிகளும் கொண்டாட்டம்!
நீல வண்ணன் திருவடிக்கு நீராஞ்சனம்!
கோல எழில் கண்ணனுடன் குதூகலம்!

தேவர்கள் தலைவன் இதனைக் கண்டான்!
தணியாத கோபம் கொண்டவன் வெகுண்டான்!

படபடவென்று வானம் இடிபட
தடதடவென்று பேய்மழை பொழிந்திட
வீசும் புயலினில் மலைகளும் அசைந்திட
மிகப் பெரும் நாசம் செய்திடத் துணிந்தான்!

குழந்தைகள், பெரியவர் அனைவரும் அரண்டனர்;
ஒதுங்க இடமின்றி தவித்தே அலைந்தனர்;
ஆவினம் யாவையும் அஞ்சி நடுங்கின;
ஓலமிட்டே எங்கும் ஓடித் திரிந்தன!

அவல நிலையிதைக் கண்டான் கண்ணவன்...
துவளும் உயிர்களைக் காக்கப் பிறந்தவன்...

அபயம் தந்திடத் திருவுளம் கொண்டான்!
சிறு இதழ் மீதினில் குறு நகை தவழ
சிற்றஞ் சிறுவிரல் நுனியின் மீதினில்
கோவர்த்தனத்தைத் தாங்கிப் பிடித்தான்!

மாபெரும் குடையொன்று செய்தான் கண்ணன்,
மக்கள், மாக்கள் அனைவரும் ஒதுங்கிட!
தஞ்சம் என்று வந்தவர்க் கெல்லாம்
அஞ்சேல் என்றே அடைக்கலம் அளித்திட!

அனைத்தும் கண்டாள், அன்னை யசோதை…
விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்


 

Monday, December 29, 2014

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...


ஏரார்ந்த கண்ணி - 4

பூதனை இறந்த செய்தி கேட்டான்
பூவைப் பூநிறக் கண்ணனின் மாமன்!
சகடாசுரனைச் சடுதியில் அழைத்தான்
சின்னக் கண்ணனைக் கொல்லப் பணித்தான்!

கோகுலம் நோக்கிச் சகடனும் விரைந்தான்
குழந்தைக் கிருஷ்ணனைத் தேடி அலைந்தான்!
சாய்ந்து நின்றதோர் வண்டியின் அடியில்
தொட்டிலில் துயின்ற குழந்தையைக் கண்டான்!

வண்டிச் சக்கரம் புகுந்தான் அரக்கன்
வண்ணக் கண்ணனைக் கொல்லத் துணிந்தான்!
அறியாக் குழந்தை போலே பரமன்
அழுதான் சின்னக் கைகால் உதைத்து!

சற்றே பிஞ்சுக் காலை நீட்டி
சகடந்தன்னை எட்டி உதைத்தான்!
சடசடவென்று முறிந்தது வண்டி
திருவடி பட்டுச் சகடனும் ஒழிந்தான்!

பூந்தளிர்ப் பாதமும் கொஞ்சம் வலித்ததோ!
தீங்குரலெடுத்து அழுதான் கண்ணன்!
ஓடி வந்தாள் அன்னை யசோதை!
சிதறிக் கிடந்த வண்டியைக் கண்டாள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: மாதவிப் பந்தல்

Monday, December 15, 2014

ஆண்டவனை ஆண்டவள்

ஏரார்ந்த கண்ணி - 1


மார்கழித் திங்கள்...

ஆண்டாள், அவள் ஆண்டவனை.
நம்மையும் இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறாள் அப்பாவை, தம் திருப்பாவை மூலம்.

மார்கழி பிறந்தாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. ஆண்டாளுடன் கண்ணனும், மாணிக்க வாசகருடன் நமசிவாயமும் வந்து விடுகிறார்கள். மாதம் முழுவதும் அவர்களுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் இருப்பது போலத் தோன்றும்.

நவராத்திரி சமயத்திலும் அப்படித்தான். இந்த மாதிரியான பண்டிகைக் காலங்கள் முடியும் போது ஒரே ஏக்கமாக இருக்கும். ஏனென்றால் அந்த விசேஷ நாட்கள் முடிந்ததும், பழைய வேண்டாத எண்ணங்களும், பழக்கங்களும், காத்திருந்தாற் போல வந்து ஒட்டிக் கொண்டு விடும்.

அதே உணர்வுதான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கும் போதும்… என்னதான் அழுது அழுது சிரமப்பட்டு நடந்தாலும், அந்த அழுகையும் அவளிடமேதான் என்பதாலோ என்னவோ, நடந்து முடியும் போது எதையோ இழந்தாற் போல இருக்கும்.
ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். மார்கழி மாதமும் அதுவுமாக, திருப்பாவையில் (முடிந்தால் திருவெம்பாவையிலும்) பிடித்த சில வரிகளை எடுத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாமா என்று தோன்றியது… “கூடியிருந்து குளிர்வதுதானே” திருப்பாவையின் சிறப்பு?

முதல் பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்:
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்”
“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”

“ஏரார்ந்த கண்ணி” என்பதற்கு, அழகான கண்களை உடைய யசோதை என்பதாகப் பொருள் சொல்வார்கள்.  அழகான கண்கள் மட்டுமல்ல, பொருத்தமான கண்களும் கூட. எதற்குப் பொருத்தமான கண்கள்? ஓங்கி உலகளந்த உத்தமன் குழந்தையாக அவளிடம் வந்த போது, அவனைப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொள்வதற்கு அவள் கண்கள்தான் தகுதியுடையவையாக, பொருத்தமானவையாக இருந்தன.

யசோதைக்கு எப்படி அப்படிப்பட்ட அழகான கண்கள் அமைந்தனவாம்? குட்டிக் கிருஷ்ணன் பிறந்தது முதல், அவன் அழகையும், அவன் குறும்புகளையும், அவன் லீலைகளையும், பார்த்துப் பார்த்துக், கண்களை விரித்து விரித்து வியப்பாளாம். பெருமைப்படுவாளாம். சந்தோஷப்படுவாளாம். அதனால்தான் அவள் கண்கள் அவ்வளவு அழகான கண்களாக இருந்தனவாம். 

இப்படியும் ஓரிடத்தில் வாசித்தேன். எனக்குமே இந்த விளக்கம் பிடித்திருந்தது… யசோதை கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் விழி விரித்து வியப்பதான கவிதைகளை இனி அவ்வப்போது பார்க்கலாம்…

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

திருச்சிற்றம்பலம்.



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்.



Sunday, December 25, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.1: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.
பி.கு.2: வேறே எழுத நேரம் இல்லாததால், இன்றைக்கு கண்ணன் பாட்டில் இட்டதே இங்கேயும்.

Sunday, December 18, 2011

பேராசைக் கண்ணன்!

கோதையின் நிலையைக் கண்டு பெரியாழ்வாரின் உள்ளம் துவள்கிறது. அவளுக்கு எப்படி உற்சாகம் ஊட்டுவது என்று யோசிக்கிறார்.

“கோதை… அம்மா கோதை…”

தூணின் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளின் விழிகள், மெதுவாகத் திரும்பி அவரை நோக்குகின்றன.

“கூப்பிட்டீர்களா அப்பா?”

“ஆம் அம்மா. அப்படி என்னம்மா யோசனை, நான் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல்?”

அவளுடைய செவ்விதழ்கள் புன்னகையில் நெளிகின்றன, இலேசாக.

“எனக்கு வேறென்னப்பா யோசனை இருக்கப் போகிறது? தெரியாதது போல் கேட்கிறீர்களே?”

“இல்லையம்மா… உன் தோழிகள் வந்து சென்றார்களே… அவர்கள் கூட உன்னை எங்கோ கூப்பிட்டார்கள் போல் தெரிந்தது. நீ போயிருப்பாய் என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.”

“ஆம் அப்பா. அவர்கள் எல்லாம் ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு, அருகிலிருக்கும் நந்தவனத்தில் விளையாடப் போகிறார்களாம். என்னையும் கூப்பிட்டார்கள்.”

“போயிருக்கலாமே அம்மா. இங்கே தனியாக உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய்?”

“போங்கள் அப்பா. அவர்களெல்லாம் எந்தக் கவலையும் இல்லாதவர்கள், உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். என் நிலை அப்படியா? என்னுடைய அந்தரங்கம் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படிக் கேட்பது நியாயமா அப்பா?”

மகளின் கண்களில் துளிர்க்கும் நீரைப் பார்த்ததும் பதறி விட்டார், தந்தை.

முற்றத்தின் வழியாக சத்தமின்றி நுழைந்த தென்றல், அவள் கூந்தலை அன்புடன் கோதி விடுகிறது, அவரை முந்திக் கொண்டு.

“நீ எப்போதும் இப்படி சோகத்திலேயே இருப்பதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அம்மா”

“என்னப்பா செய்யட்டும்? ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிக்க எனக்கும் ஆசைதான். அந்த ரங்கன் மட்டும் வந்து விட்டால்…”, விழியில் நீருடன் இப்போது கனவும் கோர்த்துக் கொள்கிறது.

“அவன் நிச்சயம் வருவானம்மா. சந்தேகமே இல்லை!”

“ஆனால் எப்போது?” கோதையின் குரல், அவளின் இயலாமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே தழுதழுக்கிறது.

“நீ சூடிக் கொடுத்த மாலைதான் வேண்டுமென்கிறான். அதிலிருந்தே தெரியவில்லையா, அவன் உன்மீது அன்பு கொண்டிருப்பது?”


“அப்படிச் சொல்பவன் ஏன் என்னிடம் முகம் காட்ட மறுக்க வேண்டும்?”

“அங்குதான் இருக்கிறதாம்மா சூட்சுமம்”

“அப்படி என்னப்பா சூட்சுமம்?”

“நீ ஏன் உன் தோழிகளுடன் விளையாடப் போகவில்லை? அதைச் சொல் முதலில்!”

“ஏனப்பா பேச்சை மாற்றுகிறீர்கள்?” செல்லமாகச் சிணுங்குகிறாள் கோதை.

“காரணம் இருக்கிறது; சொல்லம்மா…”

“எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அவன் நினைவு அதிகமாகிறது, அப்பா. அது என் மனதை அறுத்துப் பிழிகிறது”

மறுபடியும் மெல்ல மெல்ல அவன் நினைவில் ஆழத் துவங்கும் மகளின் எழில் வதனத்தை, கனிவுடன் பார்க்கிறார் தந்தை.

விழிகள் ஏதோ ஒரு கிறக்கத்தில் செருகியிருக்க, இதழ்கள் எப்படியோ வார்த்தைகளைக் கண்டு பிடித்துப் பேசுகின்றன.

“ஆற்றில் விளையாடச் சென்றால், அவன் கோபியரின் ஆடைகளைக் களவாடி அவர்களுடன் கிரீடை செய்த நினைவு வருகிறது…”

“ம்…”, மகள் பேசுவதைச் செவிமடுத்த வண்ணம், திண்ணையின் மீது அமர்ந்து கொள்கிறார், அவர்.

“மலைச்சாரலில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களைக் கண்டால் அவனுடைய மேனியின் நிறம் கண்முன்னே தோன்றுகிறது…”

“சரிதான்…”

“மழை பொழியத் தயாராக சூல் கொண்டிருக்கும் மேகங்களைக் கண்டால், ஒரே கோபமாக வருகிறது!”

“ஏனம்மா அப்படி?”

“பின்னே என்னப்பா? அவன் வண்ணத்தைப் பூசிக் கொள்ள அவற்றுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?”

“சரியாகச் சொன்னாய், தாயே!”

“குயிலின் கீதம் கேட்டால் அவன் இதழைச் சுவைத்துக் கொண்டிருக்கும் குழலின் நினைவு வருகிறது”

“அடேயப்பா! அப்புறம்…?”

“மயிலின் ஆட்டம் கண்டால் அவன் ஆயர்குலச் சிறுவர்களுடன் சந்தோஷமாகத் துள்ளித் திரிவதும், கோபிகளுடன் ஆடிப்பாடி மகிழும் காட்சியும் கண்முன்னே விரிகிறது”

”…..!”


“அதுமட்டுமல்ல. நந்தவனத்தில் வரிசையாகப் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களைக் கண்டால், அவையெல்லாம் சேர்ந்து, என் நிலை கண்டு பல் தெரியச் சிரித்து என்னைப் பலவிதமாக ஏளனம் செய்வது போல் தோன்றுகிறதப்பா. அதனால்தான் அவன் நினைவுகளைத் தூண்டும் இடங்களுக்குப் போக எனக்குப் பிடிக்கவே இல்லை!”

குழந்தையைப் போன்ற பிடிவாதம், கோதையின் குரலில்.

“கோதை… இப்படி வா அம்மா”

தந்தையின் அருகில் வந்து, அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறாள். பெரியாழ்வார் அவள் தலையை பரிவுடன் வருடி விடுகிறார்.

“உன் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா. ஆனால் நீ தோழியருடன் போகா விட்டால் மட்டும் என்ன? இங்கேயே இருந்த போதும், அவன் நினைவுடனே தானே இருக்கிறாய்?”

கோதையின் அழகிய கன்னங்கள், நாணத்தால் சற்றே சிவக்கின்றன.

“அத்துடன் நீ சொல்வதையெல்லாம் பார்க்கும் போது அவன் உள்ள உகப்பு என்ன என்று எனக்கு நன்றாகப் புரிகிறதம்மா”

“என்னப்பா அவன் உள்ள உகப்பு? என்னை இப்படி பிரிவாற்றாமையால் துன்புறச் செய்வதுதான் அவனுக்கு இன்பமா?”

பாவம் கோதை... அந்தக் கள்வன் மேல் கோபம் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை, அவளால்.

“அது இல்லை அம்மா. அவனுக்கான உன் அன்பு வளர்ந்து கொண்டே போக வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அதனால்தான் உன்னைப் பிரிந்தே இருக்கிறான்.”

தந்தையின் சொற்கள் அவள் ஆவலைத் தூண்டி விடுகின்றன. எழுந்து அமர்ந்து கொண்டு, அவர் சொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கிறாள்.

“அவனைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனையே நினைக்கிறாய். காணுகின்ற பொருள் எல்லாவற்றிலும் அவனையே காண்கிறாய். ஒவ்வொரு சுவாசத்திலும் அவன் பெயரையே உச்சரிக்கிறாய். இப்படிச் செய்யச் செய்ய உனக்கு அவன் மீதான அன்பும் பிரேமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன அல்லவா? அதனால்தான் சொல்கிறேன், உன் அன்பு முழுவதற்கும் தான் ஒருவனே சொந்தக்காரனாக வேண்டுமென்ற பேராசையம்மா, அந்தக் கள்வனுக்கு! அதனால்தான் உன் அன்பை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறான்!”

தந்தை சொன்ன விஷயம் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தருகிறது, கோதைக்கு. சிறு குழந்தை போல் கை கொட்டிக் கலகலவென்று சிரிக்கிறாள். கண்ணீர்த் துளிகளுடன் சேர்ந்த அவளுடைய சந்தோஷ வதனம், பனித்துளிகளை ஏந்திய செந்தாமரை மலர் போலத் துலங்குகிறது.

“நீங்கள் சொன்னதைக் கேட்ட பின், எனக்கு பிரிவே பிடித்து விடும் போல் இருக்கிறது அப்பா!”

--கவிநயா

பி.கு.: முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டில் இட்டது. மார்கழிக்காக கண்ணனை இங்கே கடத்தி வந்து விட்டேன்!

Monday, December 20, 2010

கோவிந்தக் கிளி

கோவிந்தா… கோவிந்தா’

பிருந்தை உள்ளே நுழையும் போதே கிளியின் குரல்தான் அவளை வரவேற்கிறது.

வீட்டில் நிசப்தத்தின் ஆட்சி. பெரியாழ்வார் வீட்டில் இல்லை போலிருக்கிறது. கோதை என்ன செய்கிறாள்? ஒரு வேளை உறங்கிக் கொண்டிருக்கிறாளோ? இந்த எண்ணம் வந்தவுடன் தன் கொலுசுச் சத்தத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கிளியின் கூவலுக்கு எழாதவளா என் கொலுசுக்கு எழுந்திருக்கப் போகிறாள், என்று கூடவே தோன்றுகிறது.

அதோ… தரையில் துவண்ட கொடி போல் கிடக்கிறாள் கோதை. விழிகள் திறந்துதான் இருக்கின்றன. சரிதான்… அவள்தான் உண்பதையும் உறங்குவதையும் மறந்து எத்தனையோ காலமாகிறதே.

பக்கத்தில் போய் மெதுவாக அமர்கிறாள், தோழியின் மோனத்தைக் கலைக்க மனமில்லாமல். அவளைப் பார்க்கப் பார்க்க, கழிவிரக்கத்தால் கண்கள் கசிகின்றன, பிருந்தைக்கு. எப்படி ஆகி விட்டாள், என் தோழி!

சிவந்திருக்க வேண்டிய கன்னங்களுக்குப் பதில் உறக்கமிழந்த கண்கள் சிவந்திருக்கின்றன. வெளுத்திருக்க வேண்டிய கண்களுக்குப் பதில் முகமும் அதரங்களும் வெளிறிப் போய்க் கிடக்கின்றன. வசந்த கால மலரைப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது இலையுதிர் கால உதிர்ந்த சருகைப் போல் கிடக்கிறாள்.

கன்னத்தில் விழுந்து கண்களை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலைப் பரிவுடன் விலக்கி விடுகிறாள், பிருந்தை. அந்த ஸ்பரிசத்தில் கோதையின் கருவிழிகள் இலேசாக அசைகின்றன.

“யார் அது?..... ஓ…. வா… பிருந்தை”

அந்த வார்த்தைகளிலேயே களைத்து விட்டவள் போல் மீண்டும் மௌனமாகி விட்டாள் கோதை.

திரட்டி வைத்த வெண்ணெய் எதையும் உருக விடாமல் உடனடியாக உண்டு உண்டு, பேழை வயிறோனாய்* இருக்கும் அந்த நீலக் கண்ணன், இந்தப் பெண்ணை மட்டும் இப்படி இரக்கமில்லாமல் உருக விட்டு, இவள் பேதை வயிறை இப்படிக் காய வைத்து விட்டானே!

“கோபாலா… கோபாலா…” மறுபடியும் கொஞ்சுகிறது கிளி.


கைகளைத் தரையில் ஊன்றி, சற்றே நகர்ந்து தோழியின் மடியில் தலை வைத்துக் கொள்கிறாள் கோதை.

ஊன்றிய கைகளிலிருந்து வளையல்கள் தானாகக் கழன்று விழுகின்றன. அவற்றை எடுத்து தோழியின் கைகளில் மறுபடியும் போட்டு விடுகிறாள், பிருந்தை.

“பாரடி இந்தக் கிளியை… எப்போது பார்த்தாலும் அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது…”, என்று தோழியிடம் முறையிடுகிறாள் கோதை, சின்னக் குழந்தையைப் போல.

“வேறு என்னடி செய்யும் பாவம்? நீதானே அவன் பெயர்களை மட்டுமே அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன் மேல்தான் தவறு!”

“ஆமாமடி. அவன் பெயரையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது அவன் பெயரைக் கேட்டாலே என் ஏக்கமும் துக்கமும் அதிகரிக்கிறதேடி…. என்ன செய்வேன்?”

“உலகளந்தான்… உலகளந்தான்” என்று அழைக்கிறது கிளி, இப்போது.

“ஏய் கிளியே… சற்று சும்மா இருக்க மாட்டாய்!”, பிருந்தைக்கே பொறுமை போய்விடும் போல் இருக்கிறது.

“என்றைக்கேனும் உணவு தராமல் இருந்து விட்டால், முறையிடுவதற்காக இப்படித்தான் அவனை அழைக்கும்.**

கிளி சிறகடித்து வந்து பிருந்தையின் தோளில் அமர்ந்து கொள்கிறது.

“என்னை விட இந்தக் கிளிதான் அவன் பெயரை அதிகம் சொல்லியிருக்கும் என்று தோன்றுகிறதடி”, என்றவள், “இந்தக் கண்ணன் இருக்கிறானே… அவன் சரியான கள்வனடி”, என்கிறாள், சம்பந்தமில்லாமல்.

“அதுதான் தெரிந்த செய்தியாயிற்றே… அதற்கென்னடி இப்போது?” என்கிறாள் பிருந்தை பேச்சை வளர்க்க எண்ணி. இந்த மட்டுமாவது கோதை மோனத்தைக் கலைத்து இந்த உலகிற்கு வந்தாளே என்று இருக்கிறது அவளுக்கு.

“மனிதர்களை விட அவனுக்கு மற்ற உயிர்களிடத்தில்தான் அதிகப் பற்று போலும் என்று சமயத்தில் தோன்றுகிறதடி”

“எப்படிச் சொல்கிறாய்?”

“ம்… பாரேன்… மாடு கன்றுகள் இறப்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவன் காளிங்கனைக் கொன்றான்?”

“ஆமாமடி”

“கஜேந்திரன் அழைத்தவுடன் நொடியும் தாமதிக்காது கருடனில் ஏறிக் கணத்தில் வந்து விட்டானே?”

“உண்மைதான்”

“ஆயர்பாடியில் ஆவினங்களைக் காப்பதற்காக தன் பிஞ்சு விரலில் குன்றைக் குடையாக எடுத்தவனல்லவா அவன்?”

“ம்…”

“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”

“ஓஹோ... இப்போதல்லவா புரிகிறது, நீ இந்தப் பொல்லாத கிளியைச் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம்!”, ஆச்சரியத்தில் கண்கள் பெரிதாக விரிகின்றன, பிருந்தைக்கு.

“என்றுதான் வருவானோ என் கண்ணன்?” பெருமூச்சொன்று தப்பிச் செல்கிறது, கோதையிடமிருந்து.

“ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!”

இதைச் சொல்லும்போது இத்தனை நேரமும் சோகமாக இருந்த கோதையின் முகம், ஏதோவொன்று புரிந்து விட்டாற் போல சட்டென்று ஒளி பெற்று, சந்தோஷத்தில் பொலிகிறது.

**
*1ம் பத்து 4-ம் (பெரியாழ்வார்) திருமொழி
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

**12-ம் (நாச்சியார்) திருமொழி
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

**

--கவிநயா

பி.கு.: சில நாட்களுக்கு முன் கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன். எனக்கே பிடித்த பதிவு என்பதாலும், மார்கழிக்குப் பொருத்தம் என்பதாலும், வாசகர் வட்டம் வேறு என்பதாலும், இங்கும் இடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே வாசித்தவர்கள், பொறுத்தருள்க!