Showing posts with label திருப்பள்ளியெழுச்சி. Show all posts
Showing posts with label திருப்பள்ளியெழுச்சி. Show all posts

Thursday, January 13, 2011

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


திருப்பள்ளியெழுச்சி - 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!


இன்றுடன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!!

Wednesday, January 12, 2011

களிதரு தேனே! கடலமுதே! கரும்பே!


திருப்பள்ளியெழுச்சி - 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான சிவபெருமானே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! உனக்கு பணி செய்யும் அடியவர்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களின் கண்களில் அகலாது நின்று, இன்பம் தருகின்ற இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பினும் இனியவனே! உன்னை வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! இந்த உலகத்தின் உயிராகிய எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Tuesday, January 11, 2011

மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!



திருப்பள்ளியெழுச்சி - 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: என்னை ஆட் கொண்ட இனிமையான அமுதம் போன்ற சிவபெருமானே! அழகிய மெல்லிய விரல்களையுடைய பார்வதி தேவியுடன் அடியவர்களின் உள்ளங்களில் நிறைந்து அருள்பவனே! அனைத்துக்கும் முதலும், நடுவும், முடிவுமாய் நிற்பவன் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். (குருத்த மரத்தின் அடியில்) ஆசானாக வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

Monday, January 10, 2011

இது அவன் திருவுரு; இவனே அவன்!


திருப்பள்ளியெழுச்சி - 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையின் தலைவனே! பரம்பொருளின் சுவையானது பழச்சுவையோ, அமுதத்தின் சுவையோ, அறிந்து கொள்ள அரியதோ, அன்றி எளியதோ என்பதை தேவர்களும் அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில், இதுவே அவர் திருவுருவம், அவரே இவர், என்று நாங்களும் அறிந்து கொள்ளும்படி, இந்த மண்ணுலகில் எழுந்தருளிக் காட்சி அளிப்பவனே! எங்களை உன் விருப்பம் போல ஆட்கொண்டு அருளிட, பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.tamilhindu.net/t1118-topic

Sunday, January 9, 2011

அணங்கின் மணவாளா!


திருப்பள்ளியெழுச்சி - 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்:
உமாதேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் மெய்யடியார்கள், தங்கள் பந்தபாசங்களை துறந்து, உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்களும் தங்களின் இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

Saturday, January 8, 2011

சிந்தனைக்கும் அரியாய்!


திருப்பள்ளியெழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. எம்பெருமானே! நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொண்டு அருள்வதற்காக, பள்ளி எழுந்தருள்வாயே!

Friday, January 7, 2011

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்


திருப்பள்ளியெழுச்சி - 4


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை எழுப்பியபடி ஒருபுறம் நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தோத்திரப்பாடல்களைப் பாடுவோரும் ஒருபுறம் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளுடன் உன்னுடைய பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் பெருக பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர்களுமாக சிலர் ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்கள் இருக்கையில், எளியவனான எனக்கும் அருள் செய்யும் என் இறைவனே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/

Thursday, January 6, 2011

யாவரும் அறிவரியாய், எமக்கு எளியாய்!



திருப்பள்ளியெழுச்சி - 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திரங்களின் ஒளி மங்கி, சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல இருக்கிறது. அழகிய கழல்களை அணிந்த உன் திருவடிகளை அன்போடு எனக்கு காட்டுவாயாக! தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/captain_don/368956096

Wednesday, January 5, 2011

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!


திருப்பள்ளியெழுச்சி - 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! அருணன் கிழக்கு திசையை அணுகி வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து ரீங்கரிக்கின்றன. அருளாகிய செல்வத்தை அளவின்றித் தருகின்ற ஆனந்த மலையை ஒத்தவனே! அலைகடலைப் போன்ற அருட்கடலே! பள்ளி எழுந்தருள்வாயே!

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jamieanne/5092080665

Monday, January 3, 2011

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே!

தன்னை ஆட்கொண்ட, திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு இட வேண்டும் என்று தோன்றியது. எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்...ஓம் நமசிவாய!



திருப்பள்ளியெழுச்சி - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!