Saturday, January 8, 2011

சிந்தனைக்கும் அரியாய்!


திருப்பள்ளியெழுச்சி - 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. எம்பெருமானே! நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொண்டு அருள்வதற்காக, பள்ளி எழுந்தருள்வாயே!

2 comments:

  1. // நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு உன்னைப் போற்றிப் பாடியும் ஆடியும் மகிழ்வோரைக் கண்டிருக்கிறோமே அல்லாது, உன்னை உண்மையாகக் கண்டறிந்தவர் எவரென அறிந்ததில்லை. //

    மிக அருமையான விளக்கம் கவிநயா.

    ஒவ்வொரு நாளும் நீங்கள் தரும் பொருத்தமான படங்களையும் ரசித்து வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  2. சில பொருள் விளக்கங்களை படிச்சு, அதை வச்சுதான் எழுதிகிட்டு வரேன் ராமலக்ஷ்மி.

    புகைப்பட ஸ்பெஷலிஸ்ட், நீங்க ரசிப்பீங்கன்னு தெரியும் :)

    மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)