Sunday, February 21, 2010

கண்மணியே கண்வளராய் !

பெண்குழந்தைக்கான தாலாட்டு. கீதாம்மாவுக்காக சில நாட்களுக்கு முன் எழுதியது :) அவங்க பாப்பாங்கிறதுக்காக இல்லை, அவங்க கேட்டாங்கங்கிறதுக்காக :P




கண்மணியே கண்வளராய்
கண்மணியே கண்வளராய்
பொன்மணியே கண்வளராய்
பூவிழியே கண்வளராய்

ஆதிசிவன் அருகினிலே
வீற்றிருக்கும் சக்தியளோ
பாதியுடல் தந்தவளோ
பரமசிவன் பத்தினியோ

ஆதிசேஷன் மடிதுயிலும்
மாயவனின் மனையவளோ
பூமியெல்லாம் போற்றுகின்ற
பூமகளோ புதுமலரோ

நான்மறைகள் தான்வணங்கும்
நாமகளோ நல்லவளோ
நானிலத்தைக் காக்கவென்றே
தோற்றம்கொண்ட தூயவளோ

மூன்றுபெரும் தேவியரும்
உன்னுருவாய் வந்தனரோ
முன்புசெய்த நல்வினையின்
பரிசெனவே தந்தனரோ

வானவில்லை வளைத்துவந்து
வாகாக தொட்டில்கட்டி
வண்ணமலர் பறித்துவந்து
வாசனையாய் தொட்டில்கட்டி

விண்மீன்கள் தொடுத்துவந்து
விதவிதமாய் தொட்டில்கட்டி
கண்மீன்கள் ஓய்வெடுக்க
கருத்துடனே தொட்டில்கட்டி

தென்றலதை விசிறச்சொன்னேன்
தேவதைநீ கண்ணுறங்க
சூரியனை ஒளியச்சொன்னேன்
சொக்கத்தங்கம் நீயுறங்க

ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ

--கவிநயா

Saturday, February 13, 2010

அதிசயக் குளம்!


வற்றாத குளமொன்று
வாகாக வெட்டி வைத்தேன்
கருத்தோடு தூரெடுத்து
கச்சிதமாய்க் கட்டி வைத்தேன்

அள்ள அள்ளக் குறையாத
அதிசயக் குளம் இதுவாம்
சொல்லச் சொல்ல இனிப்பாகி
சொக்க வைக்கும் குளம் இதுவாம்

புது முகம் பழைய முகம்
பேதங்கள் பார்ப்பதில்லை
வழிப்போக் கரானாலும்
வரம்புகள் ஏதுமில்லை

பாலை யெல்லாம் சோலையாக்கும்
கோழை யென்றால் வீரமாக்கும்
காய்ந்த தெல்லாம் தழைக்கவைக்கும்
பாய்ந்து மனம் குளிரவைக்கும்

ஆழ் மனதால் நெய்தகுளம்
ஆசை யாகச் செய்தகுளம்
இறைக்கக் குறையாத இன்பக்குளம் -
இந்த அன்புக்குளம்!


***

காதலர் தினம்னா காதலரின் தினம் மட்டும்தானா என்ன? அதையே அன்புள்ளங்களின் தினம், அல்லது அன்பின் தினமாகவும் கொண்டாடலாம்தானே. நீங்க ஒவ்வொருத்தரும், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும், ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப நல்ல்ல்லா இருக்கணும்னு மனமார வாழ்த்தி வேண்டிக்கிறேன்.

அன்புடன்
கவிநயா

Sunday, February 7, 2010

ஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…!



அப்படின்னு சொல்லத்தான் ஆசை. அபூர்வமா இது உண்மையாகவே இருந்தால் கூட 60-ஐ 40-ன்னாவது கொஞ்சம் குறைக்கத்தான் வேணும்!

பரதநாட்டியம்!

இந்தக் காலத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பு தவிர பல கலைகளும் கத்துக்கணும், பல துறைகளிலும் சிறந்து விளங்கணும்னு எல்லா பெற்றோர்களும் ரொம்ப விரும்பறாங்க. பல அம்மாக்கள் பெண் குழந்தை பிறந்த உடனேயே “எப்பங்க என் பொண்ணை டான்ஸ் க்ளாசில் சேர்க்கலாம்?”னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க!

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பரதம் கத்துக்க ஆரம்பிப்பதற்கு குறைஞ்சது 6 வயசாவது ஆகியிருக்கணும். அப்பதான் குழந்தைகளுக்கு கை கால்களை, விரல்களை விருப்பம் போல் நீட்டவும், மடக்கவும், சொல்வதை உள்வாங்கிப் புரிந்து கொண்டு அதன்படி செய்யவும் முடியும். coordination and comprehension ரொம்ப அவசியம்.

சில பேர் ஆர்வக் கோளாறால ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாலும், வயசுக்கேத்த மாதிரியும், கிரகிப்புத் தன்மைக்குத் தகுந்த மாதிரியும்தான் அவங்களோட கத்துக்கற வேகமும் இருக்கும். அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம்! 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.

முத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி! :)

கத்துக்க ஆரம்பிச்ச பிறகு ஆடிப் பார்க்கிறதும் பயிற்சி செய்யறதும் முக்கியம்தான். ஆனா குழந்தைகளுக்கு வெறுப்பு வந்திர்ற அளவு அவங்களை வற்புறுத்தக் கூடாது. எப்பவும் தன்மையா சொல்லி, நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். ஒரு சில பிள்ளைகளுக்கு நடனம் கத்துக்கறதில் விருப்பமே இருக்காது, பெற்றோரின் விருப்பத்துக்காக கஷ்டப்பட்டு வருவாங்க. அதனால பெற்றோருக்கும், சொல்லித் தர்றவங்களுக்கும், அந்த குழந்தைக்கும், இப்படி எல்லோருக்குமே கஷ்டம்தான்.

அதனால குழந்தைக்கு எதனாலாவது ஆர்வம் குறையற மாதிரி இருந்தா, அவங்க சொல்ற காரணங்களை காது கொடுத்துக் கேளுங்க. ஆனால், சில காலத்திற்கு பிறகுதான் குழந்தைக்கு ஓரளவாச்சும் தெரியும் தனக்கு இது பிடிக்குதா, இல்லையான்னு. அதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடந்துக்கணும். அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து முடிவுகள் எடுங்க.

பொதுவா, சிறுமிகள் பருவ வயசை எட்டறதுக்கு முன்னாடியே கத்துக்க ஆரம்பிக்கிறது நல்லது. டீனேஜ் வயசில் அவங்களுக்கு பல கவலைகளும் பல distractions-ம் இருக்கும். நண்பர் வட்டத்தின் பாதிப்பு நிறையவே இருக்கும். அதனால, சின்ன வயசிலேயே ஆரம்பிச்சிட்டா, வளரும்போதே அவங்களுக்கு பரதமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆயிடும்.

நல்ல அங்க சுத்தத்தோட அடவுகள் (steps) பண்ணவும், ஓரளவு பாவம் வரவும் குழந்தைக்கு மனதிலும் முதிர்ச்சி வரணும். இதுக்கெல்லாம் சில வருஷங்களாவது ஆகும். “30 நாட்களில் ஹிந்தி” அப்படின்னு அவசரமா கத்துக்கற மாதிரி இதுல சாத்தியமில்லை. அதனால இதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்.

பரதம் கத்துக்க அதிகபட்ச வயசுன்னு ஒண்ணும் இல்லை! ஆர்வம் இருந்தா, உடம்பில் தெம்பு இருந்தா, யார் வேணும்னாலும் கத்துக்கலாம்! ஆனால் என்ன இருந்தாலும் சின்ன வயசில் உடம்பு வளையற மாதிரி வயசான பிறகு வளையாது. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், தீவிரமான பயிற்சி இருந்தா அதையுமே சரி செய்திடலாம்.

உதாரணத்துக்கு நானே இருக்கேன். 30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன். என்னாலேயே முடியும்னா, ஆர்வம் இருந்தால் உங்களாலும் முடியும்னு சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன். நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.

எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும். கலைகள் இயல்பாகவே சுவாரஸ்யமாக இருக்கறதால, அவற்றில் ஈடுபடுதலும் இயல்பாகவே அமையுது. நடனக்கலைக்கு இருக்கும் இன்னுமொரு சிறப்பு, அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இயக்கறதால, தியானம் (மனசுக்கு), யோகம் (உடம்புக்கு), இரண்டுமே சாத்தியமாகும்படி செய்வதுதான்.

என்ன, பரதநாட்டிய வகுப்பை தேடி கிளம்பிட்டீங்களா? :)


அன்புடன்
கவிநயா

பி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.