Sunday, February 21, 2010

கண்மணியே கண்வளராய் !

பெண்குழந்தைக்கான தாலாட்டு. கீதாம்மாவுக்காக சில நாட்களுக்கு முன் எழுதியது :) அவங்க பாப்பாங்கிறதுக்காக இல்லை, அவங்க கேட்டாங்கங்கிறதுக்காக :P




கண்மணியே கண்வளராய்
கண்மணியே கண்வளராய்
பொன்மணியே கண்வளராய்
பூவிழியே கண்வளராய்

ஆதிசிவன் அருகினிலே
வீற்றிருக்கும் சக்தியளோ
பாதியுடல் தந்தவளோ
பரமசிவன் பத்தினியோ

ஆதிசேஷன் மடிதுயிலும்
மாயவனின் மனையவளோ
பூமியெல்லாம் போற்றுகின்ற
பூமகளோ புதுமலரோ

நான்மறைகள் தான்வணங்கும்
நாமகளோ நல்லவளோ
நானிலத்தைக் காக்கவென்றே
தோற்றம்கொண்ட தூயவளோ

மூன்றுபெரும் தேவியரும்
உன்னுருவாய் வந்தனரோ
முன்புசெய்த நல்வினையின்
பரிசெனவே தந்தனரோ

வானவில்லை வளைத்துவந்து
வாகாக தொட்டில்கட்டி
வண்ணமலர் பறித்துவந்து
வாசனையாய் தொட்டில்கட்டி

விண்மீன்கள் தொடுத்துவந்து
விதவிதமாய் தொட்டில்கட்டி
கண்மீன்கள் ஓய்வெடுக்க
கருத்துடனே தொட்டில்கட்டி

தென்றலதை விசிறச்சொன்னேன்
தேவதைநீ கண்ணுறங்க
சூரியனை ஒளியச்சொன்னேன்
சொக்கத்தங்கம் நீயுறங்க

ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ

--கவிநயா

24 comments:

  1. அருமை கவிநயா.

    //வானவில்லை வளைத்துவந்து
    வாகாக தொட்டில்கட்டி
    வண்ணமலர் பறித்துவந்து
    வாசனையாய் தொட்டில்கட்டி//

    சுகமாய் வருகிறது வாசிக்கும் இந்தக் காலைவேளையிலும் எனக்குத் தூக்கம்:)!

    முன்னுரையை ரசித்தேன்:)!

    ReplyDelete
  2. "விண்மீன்கள் தொடுத்துவந்து....
    கண்மீன்கள் ஓய்வெடுக்க"
    அழகான வரிகள்.பாராட்டுக்கள்.

    //ஆதிசிவன் அருகினிலே
    வீற்றிருக்கும் சக்தியளோ//

    சக்தியவளோ என்றிருக்கணுமில்லையா

    ReplyDelete
  3. /வானவில்லை வளைத்துவந்து
    வாகாக தொட்டில்கட்டி
    வண்ணமலர் பறித்துவந்து
    வாசனையாய் தொட்டில்கட்டி

    விண்மீன்கள் தொடுத்துவந்து
    விதவிதமாய் தொட்டில்கட்டி
    கண்மீன்கள் ஓய்வெடுக்க
    கருத்துடனே தொட்டில்கட்டி
    /

    நல்ல இருக்கிறது

    எனக்கும் பின்னாடி உதவும்
    எதற்கும் பாடலைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. திகழ் said...
    //எனக்கும் பின்னாடி உதவும்
    எதற்கும் பாடலைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கிறேன். //

    செய்யுங்கள் திகழ்:)! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //சுகமாய் வருகிறது வாசிக்கும் இந்தக் காலைவேளையிலும் எனக்குத் தூக்கம்:)!

    முன்னுரையை ரசித்தேன்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  6. //சக்தியவளோ என்றிருக்கணுமில்லையா//

    கவிதைக்கு இப்படி இருக்கலாம் என்றுதான் நம்புகிறேன்.

    வருகைக்கு நன்றி திரு.சகாதேவன்.

    ReplyDelete
  7. //எனக்கும் பின்னாடி உதவும்
    எதற்கும் பாடலைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கிறேன்.//

    மிக்க மகிழ்ச்சி திகழ். அப்படியே செய்ங்க :) மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //செய்யுங்கள் திகழ்:)! வாழ்த்துக்கள்!//

    :)))

    ReplyDelete
  9. //அழகான வரிகள் ;))//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  10. ஏகப்பட்டதை தொட்டிலில் கட்டுனா, தொட்டில் கயிறு அறுந்துறாது? :-))
     
    //
    தென்றலதை விசிறச்சொன்னேன்
    தேவதைநீ கண்ணுறங்க
    சூரியனை ஒளியச்சொன்னேன்
    சொக்கத்தங்கம் நீயுறங்க//
     
    அருமை..

    ReplyDelete
  11. http://www.youtube.com/watch?v=xL8JdqD_MHI

    ஒரு அழகான தாலாட்டுப் பாடலை அதுவும் வான வில்லை வளைத்து விண்மீன்களையெல்லாம்
    கொண்டு வந்து சூரியனையும் தூங்கச்சொல்லிப் பாடிவிட்டு,

    என்னை மட்டும் பாடாதே, பேசாம இருங்க, பேரக் குழந்தை முழிச்சுக்கப்போறது அப்படின்னு சொன்னா
    நடக்கிற காரியமா என்ன !!

    மூணு ராகங்களிலே முயற்சி செஞ்சேன். வழக்கமான நீலாம்பரி ( தாலாட்டுக்க்காகவே பிறந்து இருக்கிறது இந்த ராகம்)
    பாடி முடிச்சேன். என்ன வழக்கமா இதுலேயே பாடினா எப்படின்னு ஒரு பாட்டு வாங்கினப்பறம்,

    செஞ்சுருட்டியிலே ( " என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்... அந்த ராகம் மாதிரி )
    ஊஹும்.... சுமாராத்தான் வர்றது.

    கடைசியா, யதுகுல காம்போதிலே ட்ரை பண்ணின போது தான் ஒரு தினுசா திருப்தியா இருந்தது.

    எப்படி அப்படின்னு எங்க வீட்டு ஆச்சிய கேட்டேன்.

    நாப்பது வருசம் முன்னாடி உங்க குரல் நன்னாவே இருந்தது என்கிறாள் மீனாட்சி ஆச்சி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  12. //அவங்க பாப்பாங்கிறதுக்காக இல்லை, அவங்க கேட்டாங்கங்கிறதுக்காக//

    தாலாட்டு நல்லாயிருக்கு...

    ReplyDelete
  13. //ஏகப்பட்டதை தொட்டிலில் கட்டுனா, தொட்டில் கயிறு அறுந்துறாது? :-))//

    தொட்டிலை அழகாவும் வாசனையாவும் ஸ்ட்ராங்காவும் ஆக்கதான் இதெல்லாம் :) நம்ம கற்பனை மாதிரி அதுவும் ஜோரா இருக்கும் :)

    //அருமை..//

    ரசனைக்கு மிக்க நன்றி உழவன்.

    ReplyDelete
  14. //கடைசியா, யதுகுல காம்போதிலே ட்ரை பண்ணின போது தான் ஒரு தினுசா திருப்தியா இருந்தது.//

    மிக்க நன்றி தாத்தா. யதுகுல காம்போதி perfect! எனக்கே கேட்கும்போதே சொக்குது தூக்கம் :) உங்க பேரக் குழந்தைகள் படங்களோட சூப்பரா இருந்தது படம். உங்க குரல் இப்பவும் நல்லாவே இருக்கு அப்படின்னு நான் சொன்னதா பாட்டிகிட்ட சொல்லுங்க :)

    ReplyDelete
  15. //தாலாட்டு நல்லாயிருக்கு...//

    மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா.

    ReplyDelete
  16. அழகான தாலாட்டு பாட்டு. அடுத்த தமிழ் சங்க விழாவில சேர்ந்திசை போட்டுடுவோமா? :-))

    ReplyDelete
  17. "விண்மீன்கள் தொடுத்துவந்து
    விதவிதமாய் தொட்டில்கட்டி
    கண்மீன்கள் ஓய்வெடுக்க
    கருத்துடனே தொட்டில்கட்டி"

    நல்லா இருக்கிறது.

    ReplyDelete
  18. மூன்றுபெரும் தேவியரும்
    உன்னுருவாய் வந்தனரோ
    முன்புசெய்த நல்வினையின்
    பரிசெனவே தந்தனரோ//

    கற்பனையும்... கருத்தும் நிறைந்த நல்ல தாலாட்டு
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. //அழகான தாலாட்டு பாட்டு. அடுத்த தமிழ் சங்க விழாவில சேர்ந்திசை போட்டுடுவோமா? :-))//

    போடலாமே! ஆனா ஆடியன்ஸை பாடி தூங்க வச்சா, தலைவர் யாரை உதைப்பார்னு முதல்ல தெரிஞ்சிக்கிட்டு, பிறகு செய்யலாம் :)

    ரசித்தமைக்கு நன்றி மீனா.

    ReplyDelete
  20. //நல்லா இருக்கிறது.//

    நன்றி மாதேவி!

    ReplyDelete
  21. //கற்பனையும்... கருத்தும் நிறைந்த நல்ல தாலாட்டு
    பாராட்டுக்கள்.//

    ரசனைக்கு நன்றிங்க கருணாகரசு.

    ReplyDelete
  22. //திகழ் said... எனக்கும் பின்னாடி உதவும் எதற்கும் பாடலைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்கிறேன்.//...

    எஸ், நானும் பத்திரப்படுத்திக் கொண்டேன்!அழகான தாலாட்டு பாட்டு!!!

    ReplyDelete
  23. //எஸ், நானும் பத்திரப்படுத்திக் கொண்டேன்!அழகான தாலாட்டு பாட்டு!!!//

    உங்களுக்கும் பயன்படுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ப்ரியா :) மிகவும் நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)