Sunday, January 29, 2012

பாத யாத்திரை போகப் போறீங்களா?


ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப்பீங்க. அதுல, இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாம போகப் போற (என்னை மாதிரியான) பேர்வழிகளும் கொஞ்சப் பேராவது இருப்பீங்க… ஹி..ஹி.. உங்களுக்காக அங்கங்கே படிச்ச, கேள்விப்பட்ட, அனுபவத்தில் உணர்ந்த சில குறிப்புகளை இங்கே கொடுக்கலாமேன்னு தோணுச்சு.

வைத்தீஸ்வரன் கோவில் போறதுக்கு ஒரு வாரம் விரதம் இருக்கணும் அப்படின்னு சொல்வாங்க. பழனிக்கும் அப்படி ஏதாச்சும் இருக்கும், எனக்கு தெரியல. விரதம்னா சாப்பிடாம இருக்கிற விரதம் இல்லை! நம்மை யாத்திரைக்கு மனதாலும் உடலாலும் தயார்படுத்தறதுக்குதான் விரதம். கிடைக்கறதை சாப்பிடணும். இருக்கிற இடத்தில் படுக்கணும், வெறுங்காலோட நடக்கணும். இதுக்கெல்லாம் நாம் தயாராகணும்.

சைவம் சாப்பிடணும், தரையில் படுத்து தூங்கணும், மிதியடி போடாம எல்லா இடத்துக்கும் போகணும், முடிஞ்ச வரை இறை சிந்தனையோட இருக்கணும். இதனால சுகமாவே வாழ்ந்து பழகின உடம்பும் காலும் கொஞ்சம் உறுதிப்படும்; மனசும் நெடுந்தூரப் பயணத்துக்கு போகப் போறோம்னு தயாராகத் தொடங்கும்.

ஆனா ஒரு வார விரதம் மட்டும் போதுமான்னு கேள்வி வருதில்ல? சபரி மலை போறவங்கள்லாம் 41 நாள் இருக்காங்களே! விரதம் என்பது நம்ம மனசு சம்பந்தப்பட்டது, எவ்வளவு நாள் வேணுன்னாலும் இருக்கலாம். ரொம்ப சுகவாசியா இருக்கவங்களுக்கு உடம்பும் மனசும் பழக, இதை விட அதிக நாள் தேவைன்னு நினைக்கிறேன் :)

என்னை மாதிரி குளிர் தேசத்தில் இருந்தா ஏப்ரலிலும் நல்லா குளிரும். அந்த சமயம் செருப்பு போடாம நடந்து பயிற்சி செய்ய முடியாது. அதுதான் பிரச்சனை :( சரி…போகட்டும்; சொந்த சோகக் கதையை விட்டுட்டு, இப்ப தலைப்புக்கு வருவோம்.

நடக்கறவங்களுக்கு கொப்பளம் வர்றதுதான் பெரிய பிரச்சனை. அது வர்றதுக்கு முன்னாடி, முன்னோடியா, கால்ல முள்ளு அருவுற மாதிரி ஒரு உணர்வு வரும். அந்த சமயத்திலேயே காலை கொஞ்சம் தாஜா பண்ணி, சுத்தம் பண்ணி, vaseline தடவினா வராமல் அப்படியே அமுங்கி விட வாய்ப்பு இருக்குங்கிறாங்க. ஆனா கொஞ்ச நேரம் பாதத்துக்கு ஓய்வும் குடுக்கணுமாம். ம்… நடக்கும்போது அதெல்லாம் நடக்கற காரியமா? நான் இன்னும் முயற்சித்துப் பார்க்கலை. ஆனா இது வரை எனக்கு கொப்பளம் வராம இருந்ததே இல்லை!


யாத்திரைக்கு முன்னால்:

கடுக்காயைப் பொடி பண்ணி, நல்லெண்ணெயோட கலந்து, தினமும் ராத்திரி பாதத்தில் தடவிக்கிட்டா, பாதம் கெட்டிப்படுமாம். Rubbing alchohol அல்லது benzine தடவினாலும் அதே பலன் கிடைக்குமாம். இதுவும் இனிமேதான் செய்து பார்க்கணும்.

பாதம் இயற்கையாவே உறுதிப்படணும்னா, ரொம்ப நாள் முன்னாடியே பயிற்சி ஆரம்பிக்கணும். சூடான மணல்ல நடக்கறதும், சரளைக் கற்கள் மேலே நடக்கறதும் இதுக்கு ரொம்ப உதவியா இருக்குமாம்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயிற்சியை ஆரம்பிக்கிறது நல்லது. நல்லா சாப்பிடணும். நிறைய்ய்ய்ய்ய தண்ணீர் குடிக்கணும். ரொம்ப முக்கியம். நடக்கும்போது உடம்பு ரொம்ப வேகமா தண்ணீரை இழந்துடுமாம். அதே வேகத்தோட தண்ணீர் குடிக்கணும்.

பயிற்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி கை, கால் எல்லாம் நல்லா stretch பண்ணிக்கோங்க. பிறகு நீங்களே குறிப்பிட்ட நேரமோ, தூரமோ நிர்ணயிச்சிக்கிட்டு அந்த தூரத்துக்கு செருப்பு போடாம நடங்க. ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது உங்க பயிற்சியின் வேகத்துக்கு தகுந்த மாதிரியோ தூரத்தையும், நேரத்தையும் அதிகப் படுத்திக்கலாம். நடந்து முடிஞ்ச பிறகும் stretch பண்ணுவது அவசியம்.

முடிஞ்சா முன்னெச்சரிக்கையா ஒரு டெட்டனஸ் ஊசி போட்டுக்கறது நல்லது. ஒரு தரம் போடறது 5 வருஷத்துக்கு போதும்னு சொல்றாங்க… ஆனா அது எனக்கு கொஞ்சம் புரியல. மூணாம் வருஷம் நடந்துட்டு திரும்பி வந்த பிறகு, கொப்பளம் சரி பண்ண சிகிச்சைக்கு போன போது டெட்டனஸ் ஊசி போட்டுக்கிட்டேன். போன வருஷம் அதே காரணத்துக்காக வேற ஒரு டாக்டர்கிட்ட போனேன். போன வருஷம்தான் போட்டதுன்னு சொன்னேன், ஆனா அவங்க அதெல்லாம் பத்தாது, இப்ப ஒண்ணு போட்டே ஆகணும்னு சொல்லிட்டாங்க. அது என்ன கணக்கோ?

யாத்திரை தொடங்கிய பின்:

முதல்ல வேண்டியது, நம்பிக்கை. ‘நம்மால முடியுமா’ன்னு கொஞ்சம் மலைப்பா இருப்பது இயற்கை. ஆனாலும், ‘என்ன ஆனாலும் நிச்சயமா பாத யாத்திரையை நல்லபடியா முடிப்பேன்’, அப்படின்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கோங்க. நம்ம தேடிப் போற தெய்வம் எப்படியாவது நம்மைக் கொண்டு போய் சேர்த்துடும்னு நம்புங்க!

(ரொம்ப தளர்ந்து போற நேரங்களில் நானும் என் தங்கையும், ‘எல்லாரும் போய் சேர்ற அதே நாள்ல சேர முடியாட்டியும், அதுக்கு மேல எத்தனை நாளானாலும் எப்படியாச்சும் நடந்துதான் போய்ச் சேருவோம்’ அப்படின்னு சொல்லிக்குவோம்!)

நல்லா சாப்பிடுங்க. நடக்கும் போது Carbohydrates நிறைய சாப்பிடணும். அதுதான் நடக்கறதுக்கான சக்தியைக் (energy) கொடுக்கும். உடம்பு வெயிட் போடுவது பற்றில்லாம் கவலைப்பட சரியான நேரம் இது இல்லை! நடக்கும் போது கஞ்சி குடுப்பாங்கன்னு சொன்னேனே, அதன் ரகசியம் இதுதான்! கஞ்சி, இளநீர், மோர், இதெல்லாம் ரொம்ப நல்லது.

கண்டிப்பா கையில் வச்சுக்க வேண்டிய விஷயங்கள்: தண்ணீர், பேரீச்சம்பழம் (விரைவா சக்தி கொடுக்கக் கூடியது), குளுகோஸ், (இப்பல்லாம் protein bar னே கிடைக்குதே), கை விளக்கு, விரிச்சு உட்கார பாய் அல்லது துணி, அயோடெக்ஸ் மாதிரியான வலி நிவாரண மருந்து மாத்திரைகள், vaseline, முதல் உதவி சமாசாரங்கள். அதிக சுமை வேண்டாம்.

நடக்க ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி சாப்பிட்டுட்டு, ரெண்டு பாட்டில் (16 அவுன்ஸ்) தண்ணீராவது குடிக்கணுமாம். அதன் பிறகு நடக்கும் போது 15 நிமிஷத்துக்கு ஒரு முறை அரை கப்பாவது குடிக்கணுமாம். காஃபி குடிக்கிறதை தவிர்ப்பது நல்லது. இல்லன்னா அது உடம்பிலிருக்கிற தண்ணி சத்தை குடிச்சிடுமாம்.

குத்தாலந் துண்டுன்னு சொல்லுவோம், கொஞ்சம் மெல்லிசா இருக்கும். அந்த மாதிரி ஒரு துண்டை எடுத்து இடுப்பில் இறுக்கமா கட்டிக்கிட்டா, வெகு தூரம் நடக்கும் போது இடுப்பு வலி வராம இருக்கும்.

நடக்கும் போது அவ்வளவா பயன்படுத்தாத உடலோட மற்ற உறுப்புகளை அவ்வப்போது stretch பண்ணிக்கிறது நல்லதாம்.

பாதத்தைக் கழுவறதோ அல்லது குளிக்கிறதோ, பாதத்தை மென்மையாக்கிடுமாம். அதனால நடந்து முடிஞ்ச பிறகுதான் அதைச் செய்யணும்னு எங்கேயோ படிச்சேன். ஆனா நாங்க யாத்திரை போன போது நடக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தினமும் சாயந்திரம் குளிச்சிட்டுதான் கிளம்பணும்னு சொல்வாங்க. ஆனா அது இராத்திரி நடக்கும்போது தூக்கம் வராம இருக்கறதுக்கு. இதுக்கு என்ன பண்றது?

அவ்வளவு கவனமா இருந்த பிறகும் பாதத்தில் கொப்பளம் வந்துட்டா என்ன செய்யறது? வந்துட்டாலும், கண்டிப்பா காலை நல்லா ஊணிதான் நடக்கணும். அப்பதான் கொப்பளம் அப்படியே மேலே வந்துரும். நொண்டி நடக்க ஆரம்பிச்சீங்கன்னா, அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடும்! எதையாவது மிதிச்சிட்டா, காலைத் தேச்சிராதீங்க. உராய்வு, கொப்பளம் வரதை விரைவுபடுத்திரும். குறிப்பா மாட்டுச் சாணத்தை மிதிச்சா அது நல்ல விஷயம் தான். ஏன்னா அது ஒரு நல்ல கிருமி நாசினி.


யாத்திரை முடிந்த பின்:

அப்பாடான்னு இருக்கும்! நிறைவ்வ்வ்வா இருக்கும்! பிறகென்னங்கறீங்களா. ஆனா கால் வலி, பாத வலி, கொப்பளம், இதையெல்லாம் கவனிச்சுக்கணும். அலட்சியமா இருந்துராதீங்க. உடனடியா மருத்துவர்கிட்ட போய் குறிப்பா கொப்பளத்தை சரி பண்ணிக்கோங்க. சர்க்கரை நோய் இருக்கறவங்க இன்னும் கவனமா இருக்கணும்.

கால் வலி, பாத வலிக்கு தேங்காயெண்ணெயே நல்ல மருந்து. தாராளமா தடவிக்கிட்டு காலை நீட்டி வச்சுக்கிட்டு நல்லா ஓய்வெடுங்க.

கணபதியும், வேலும், மயிலும், சூலமும், மழுவும் துணை வர, நல்லபடியா போயிட்டு வாங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, January 22, 2012

சிறகடித்துப் பறக்கலாம்!


சின்னஞ் சிறிய குருவி போல
சிறகடித்துப் பறக்கலாம்!
வண்ண வண்ணப் பறவை போல
வான்முழுதும் அளக்கலாம்!

கன்னங்கருங் காக்கை போல
கூடியிருந்து மகிழலாம்!
பென்னம் பெரிய மரத்தைப் போல
பிறர்க்கு நிழலைக் கொடுக்கலாம்!

அளிந்த கனியைப் போல இனிய
வார்த்தைகளைப் பேசலாம்!
இயலாமல் இருப்பவர்க்கு இயன்ற
உதவி செய்யலாம்!

அன்பு என்னும் இறையை நமது
மனதில் நிலைக்கச் செய்யலாம்!
அகிலம் எல்லாம் நமது என்ற
உணர்வினிலே திளைக்கலாம்!!

--கவிநயா

நன்றி: அதீதம்
படத்துக்கு நன்றி: கூகுளார்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

பண்டிகைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது பொங்கல்தான். அதுவும் கிராமத்தில் கொண்டாடும் சுகமே சுகம்!

எங்க வீட்டுக் கோலம்

பாட்டி வீடு 'ஜே ஜே'ன்னு இருக்கும். சும்மாவே எனக்கு கோலம் போடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே பொங்கலும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு போல. (சொல்ல மறந்துட்டேனே! மார்கழியும் அதனாலதான் பிடிக்கும் - சின்னப் பிள்ளையா இருக்கும் போதே!)

முதல் நாள் இராத்திரியே முற்றத்தில் பெருசா பெருசா மாக்கோலம் போடுவோம். பிறகு அடுப்பு, பானைகளுக்கெல்லாமும் கோலமிட்டு மஞ்சள் கொத்து கட்டுவோம். மறு நாள் காலையில் குளிச்சு, புதுசு கட்டி, வாசல் நிறைய்ய்ய்ய வண்ணக் கோலம் போடுவோம். பிறகு அடுப்பில் விறகை வச்சு புகையப் புகைய ஊதி ஊதி கண்ணு எரிய எரிய அதை எரிய வச்சு பொங்கல் இட்டாதான் பொங்கல் கொண்டாடின மாதிரியே இருக்கும்! கோவிலுக்கு எல்லாப் பொருளும் எடுத்துகிட்டு போய் அங்கேயும் பொங்கல் வைப்போம். இதுக்கு நடுவில் சமையலும் நடக்கும். இன்னொரு பக்கம் கரும்பு, பனங்கிழங்கு இதெல்லாம் உள்ள போயிக்கிட்டே இருக்கும்!


அவலை நினைச்சுக்கிட்டே உரலை இடிச்ச கதைதான் இங்கே. வீட்டுக்குள்ளேயே குட்டியா கோலம் போட்டு, மின் அடுப்பில் பொங்கல் வச்சு, கிடைக்கிற காயை சமைச்சு வச்சு சாமி கும்பிட்டா பொங்கல் முடிஞ்சது. இந்த வருஷம் ஞாயிற்றுக் கிழமை வந்ததில் இங்கே எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம் :) ஓரளவு உருப்படியா சூரியன் இருக்கும் போதே சாமி கும்பிட்டாச்சு. (நம்மூர்ல விடுமுறை நாள்ல ஒண்ணு குறைஞ்சிருச்சேன்னு வருத்தம் போல!). என்ன செய்யறது, ஒருத்தருக்கு இருட்டுன்னா இன்னொருத்தருக்கு பகல்!

நீங்களும் சாப்பிட வாங்க!

நிலங்கள் அழிஞ்சு நகரங்கள் ஆகாமல், விவசாயமும் விவசாயிகளும் செழிப்பா இருக்கணும். உணவளிக்கும் உழவர்களுக்கும், கதிரவனுக்கும், மாடுகளுக்கும், எல்லாவற்றையும் நடத்தும் இயற்கைக்கும், அதையும் நடத்தும் இறைவனுக்கும், நன்றி... நன்றி... நன்றி!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, January 8, 2012

காஃபியா, கோப்பையா?

ரு பேராசியர் இருந்தார். அவரைச் சந்திக்க அவரோட பழைய மாணவர்கள் சிலர் வந்திருந்தாங்க. அவங்க எல்லாருமே வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருந்தாங்க. அதாவது நல்ல வேலையில், நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில், இப்படி. பழைய நினைவுகளை சந்தோஷமா அசை போடுவதில் ஆரம்பிச்ச பேச்சு, எல்லோருடைய வாழ்க்கையிலும் எப்படி மன அழுத்தம் (அதாங்க, stress!) அதிகமாக இருக்கு என்பதில் வந்து நின்னுது. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பிரச்சனைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

“நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் போய் காஃபி கொண்டு வரேன்”, அப்படின்னு சொல்லிட்டு உள்ளே போனார், பேராசிரியர். வரும் போது எல்லாருக்கும் காஃபியும், பலவிதமான கோப்பைகளும் (அதாங்க, cups!) எடுத்துட்டு வந்தார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருந்தது, வடிவமைப்பிலும், விலை மதிப்பிலும், வேலைப்பாட்டிலும், நிறத்திலும், தோற்றத்திலும், இப்படி…


எல்லாரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்து அதில் காஃபியும் எடுத்துக்கிட்டு, குடிச்சுக்கிட்டே பேச்சை தொடர்ந்தாங்க.

“ஒரு நிமிஷம்”, அப்படின்னார் பேராசிரியர்.

“எல்லாரும் அவங்கவங்க கோப்பையைப் பாருங்க. நீங்க ஒவ்வொருத்தருமே நல்ல அழகான, விலை உயர்ந்த கோப்பையா பார்த்து எடுத்துக்கிட்டிருக்கீங்க. விலை குறைஞ்ச, பார்க்க அவ்வளவா நல்லா இல்லாத கோப்பையெல்லாம் யாருமே எடுக்கலை. இதிலிருந்து என்ன தெரியுது? எல்லாருமே எது மிகச் சிறந்ததோ அதுதான் வாழ்க்கைக்குத் தேவைன்னு நினைக்கிறீங்க. அதுதான் சந்தோஷம் தரும்னு நினைக்கிறீங்க. அதுதான் மன அழுத்தத்தின் மூல காரணம்”.

“அதோட மட்டுமில்லாம, ஒரு கோப்பையை எடுத்துக்கிட்ட பிறகும், மற்றவங்க எதை எடுத்திருக்காங்கன்னு பார்த்து அதை ஒப்பிட வேறு செய்யறீங்க. இதுக்கு பதில் அதை எடுத்திருக்கலாமோன்னுகூட சிலர் நினைக்கிறீங்க.”

“நம்ம வாழ்க்கைதான் காஃபின்னா, பணம், பதவி, சமூக அந்தஸ்து, இது எல்லாமே வெறும் கோப்பைதான்; அவை எல்லாம் வாழ்க்கையை நடத்தறதுக்காக நமக்கு கிடைச்ச கருவிகள். காஃபியோட ருசியையும் தரத்தையும், கோப்பையால தீர்மானிக்க முடியாது. அது போலத்தான் வாழ்க்கையின் சந்தோஷத்தையும், தரத்தையும், கருவிகளால தீர்மானிக்க முடியாது. பல சமயங்களில் நாம கோப்பையைப் பற்றிய கவலையில் காஃபியின் ருசியை அனுபவிக்க மறந்துடறோம்.”

“சிறந்த வாழ்க்கை வாழறதுக்கு சிறந்த கோப்பைதான் வேணுமென்கிறதில்லை. கோப்பை எப்படி இருந்தாலும், வாழ்க்கை சந்தோஷமா இருப்பதும், இல்லாததும், நம்ம கையில்தான் இருக்கு”, அப்படின்னு சொன்னார், பேராசிரியர்.

எவ்வளவு உண்மை! பல சமயங்களில் வாழ்க்கையில் எது முக்கியம் என்பதே மறந்து போயிடுது. தேவையானதை விட்டுட்டு, தேவையில்லாத விஷயங்களில் நம்ம கவனத்தைச் செலுத்தி, அதுக்காக கவலைப்படறதே அதிகமா இருக்கு.

அதோட மட்டுமில்லாம. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும்போது, ஒருத்தரோட ஒருத்தர் ஒப்பிடக் கூடாதுன்னு சொல்றோம், ஆனா நாமே பல சமயம் நம்ம வாழ்க்கையை பிறருடைய வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாமே வருத்திக்கிறோம். அந்த வருத்தத்தில் நமக்கு ஏற்கனவே கிடைச்சிருக்கிற நல்ல விஷயங்களெல்லாம் அமாவாசையில் நிலவு மாதிரி மறந்து, மறைஞ்சு, போயிடுது.

இதை அழகா விளக்கற, ஆங்கிலத்தில் படிச்ச ஒரு செய்தியைத்தான் மேலே தமிழில் தந்தேன். முந்தி படிச்சதுதான்; ரொம்ப நாள் கழிச்சு இப்போ தற்செயலா மறுபடியும் வாசிச்சேன். நீங்களும் படிச்சிருக்கலாம். இருந்தாலும் நல்ல விஷயங்களை அவ்வப்போது நினைவு படுத்திக்கிறது நல்லது என்பதால் இங்கே பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு.

"The happiest people don't have the best of everything. They just make the best of everything."

இனிமேலாவது கோப்பையில் கவனம் செலுத்தறதை விட்டுட்டு, காஃபியை அனுபவிக்க பழக்கிக்குவோம். என்ன சொல்றீங்க?

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா