
நேத்து சாயந்திரம் ஒரு குட்டிக் குருவிக் குஞ்சை எங்க வீட்டு முன்னாடி இருக்க தோட்டத்துல பார்த்தேன். பக்கத்துல ஒடஞ்ச முட்டை ஓடு! அப்பதான் வெளிய வந்திருந்தது போல. தன்னோட குட்டி வாயைத் திறந்து, "ஆவ், ஆவ்"னு கத்திட்டிருந்தது. அது கத்தறது அதுக்கே கேட்டிருக்காது :( அம்மாக் குருவி எங்க போச்சுன்னு தெரியல. குருவிக் குஞ்சால நடக்கவும் முடியல; பறக்கவும் முடியல; கத்தவும் முடியல. என்னதான் செய்யும், பாவம்? அம்மாவா வந்து அதைக் காப்பாத்தினாதான் உண்டு. எனக்கோ ரொம்பப் பாவமா இருந்தது. ஆனா அதுக்கு எப்படி உதவறதுன்னு தெரியல. பக்கத்திலேயே இருந்தா அம்மாக் குருவி பக்கத்தில வராதுன்னு நினைச்சு நகர்ந்துட்டேன்.
பேசத் தெரிஞ்சிருந்தா இப்படித்தான் அந்தக் குருவிக் குஞ்சு அதோட அம்மாகிட்ட சொல்லியிருக்கும்!
டாக்டர் இல்ல நர்சும் இல்ல
நானாப் பொறந்தேன்
செறகு இன்னும் மொளக்கல
ஒன்னத் தேடி அழுதேன்
காலிருந்தும் சக்தியில்ல
நடக்க முடியல
கண்ணிருந்தும் ஒன் எடத்த
பாக்க முடியல
கத்தி ஒன்னக் கூப்புடவும்
கொரலும் எழும்பல - நீதான்
வந்து என்னக் காப்பாத்தணும்
வேற வழியில்ல
காலைல போய்ப் பார்த்தப்ப அது இறந்து கெடந்தது :,((( இந்த மாதிரி சமயத்துல வேற என்ன செய்யலாம்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க...