Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, January 25, 2015

என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்?

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! 

இந்தியா எங்கள் தாய் நாடு!
இதுவே எங்கள் திரு நாடு!
கோடி கோடியாம் மக்கள் சேர்ந்து
கட்டியிருக்கும் பெருங்கூடு!
(இந்தியா)

காடு கரை உண்டு, பாயும் நதியுண்டு,
பச்சை வயலுண்டு, திரு நாட்டில்!
மாடு மனை உண்டு, மக்கள் உழைப்புண்டு,
மதியும் நிதியும் உண்டு வள நாட்டில்!
(இந்தியா)

இயற்கை வளமுண்டு, இயங்கத் திறனுண்டு,
என்ன இல்லை எங்கள் திரு நாட்டில்?
அணைக்கும் அன்புண்டு, ஆன்ம பலமுண்டு,
என்ன இல்லை எங்கள் வள நாட்டில்?
(இந்தியா)


--கவிநயா 

Tuesday, August 14, 2012

எங்கள் இந்தியா!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! 


எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!

இந்தியர் நாம் என்பதிலே
இன்பம் மிகக் கொள்ளுவோம்!
இந்தியராய் வாழ்ந்து நல்ல
இதயங்களை வெல்லுவோம்!

கடமைகளைச் செய்வதிலே
பெருமை மிகக் கொள்ளுவோம்!
கொடுமைகளை வேரறுத்து
சிறுமைகளை வெல்லுவோம்!

நல்லொழுக்கம் நம்முடைய
விழிகளெனப் போற்றுவோம்!
நற்குணங்களை வளர்த்து
நன்மைகளைக் கூட்டுவோம்!

சுத்தம் சுகா தாரமென்னும்
சூத்திரத்தை எண்ணுவோம்!
சுற்றும் பூமித் தாயைக் காக்க
சுற்றுச் சூழல் பேணுவோம்!

அன்பு என்னும் வேதந்தன்னை
அகிலமெங்கும் பரப்புவோம்!
அன்னை பாரதத்தை என்றும்
அருமையுடன் ஏற்றுவோம்!

எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.indiacsr.in/en/?p=3795/

Friday, August 14, 2009

பாரதம் வாழியவே!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!


வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே!
வாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே!

கல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே!
அன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே!

ஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே!
வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே!

போரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே!
வீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே!

விஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே!
அஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே!

கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே!
புவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே!!


--கவிநயா

Sunday, January 25, 2009

99. நாளைத் தரணியில் இந்தியர் நாம்...

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். வந்தேமாதரம்!





கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி!
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென்று கும்மியடி!

உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
வருந்துவோர்
எவரும் இருக்க மாட்டார்
நோயற்ற வாழ்க்கையை
குறைவற்ற செல்வமாய்
அடைந்து மகிழ்வோமென கும்மியடி!

அன்பு பெருகிடும்
பண்பு உயர்ந்திடும்
தீதொன்று பிறர்க்கு
நினைக்க மாட்டோம்
மக்கள்தம் சேவையே
மகேசன் சேவையாய்
எண்ணி மகிழ்வோமென கும்மியடி!

சந்திரனைக் காட்டி
சோறூட்டும் பிள்ளைக்கு
சந்திரனில் சென்று
சோறூட்டுவோம்
சூரியன் போலவே
ஒளிர்ந்திடுவோம் அறிவில்
சுற்றுப்புறத்தையும் காத்திடுவோம்!

இயற்கை அன்னையை
மதித்திடுவோம் நாங்கள்
காடுகள் மரங்கள்
அழிக்க மாட்டோம்
வனவிலங்கினத்தை
வேட்டையாடாமலே
விவேகமாகவே பராமரிப்போம்!

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டி கும்மியடி
நாளைத் தரணியில்
நானிலம் போற்றிட
நாங்கள் வாழ்வோமென கும்மியடி!

--கவிநயா