உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Showing posts with label விவேகானந்தர். Show all posts
Showing posts with label விவேகானந்தர். Show all posts
Sunday, September 18, 2011
உருவ வழிபாடு ஏன்?
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை, இராஜபுதன சமஸ்தானம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கிருந்த திவானுக்கு அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த திவான் ஒரு முறை, மகாராஜாவிடம் விவேகானந்தரைப் பற்றிக் கூற, அரசருக்கும் விவேகானந்தரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருக்கும் போது, மகாராஜா, “சிலைகளை வணங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை; என் கதி என்ன ஆகும்?” என்று கேட்டு விட்டு ஏளனமாகப் புன்னகை புரிந்தார்.
சுவாமிகள் உடனே, “என்ன ஏளனம் செய்கிறீர்களா?”, என்று கேட்டார்.
மகாராஜா மீண்டும், “இல்லை சுவாமிகளே. பாமரர் போன்று நான் கல்லையும், மண்ணையும், உலோகத்தையும் வணங்க மாட்டேன். இது ஒரு குற்றம் என்றால் நான் மறுமையில் துன்புற நேரிடுமோ?” என்று கேட்டார்.
சுவாமிகள் அதற்கு, “ நல்லது. ஒவ்வொருவரும் அவரவர் கொள்கையின் படி நடந்து கொள்ளட்டும்”, என்று அமைதியாகக் கூறினார்.
சிறிது நேரம் கழிந்த பின், அங்கு சுவரில் மாற்றப் பட்டிருந்த படம் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார். அப்படத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, திவானை நோக்கி, “நீர் சிறு காரியம் ஒன்றைச் செய்வீரா?” என்று கேட்டார்.
திவான் உடனே, “தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்”, என்று கூறினார்.
அவரிடமிருந்து அந்த வாக்கைப் பெற்றுக் கொண்ட பிறகு, சுவாமிகள் தன் கையில் இருந்த படத்தின் மீது காறித் துப்பும்படி திவானை ஏவினார்; மற்றவர்களையும் அவ்வாறே தூண்டினார். ஆனால் அவர்கள் எல்லோருமே அவ்வாறு செய்வதற்கு அஞ்சினார்கள்.
அப்போது சுவாமிகள், “ஏன், இது வெறும் கண்ணாடியும், காகிதமும் தானே? இதில் துப்புவதற்கு என்ன தயக்கம்?” என்று வினவினார்.
அதற்கு அவர்கள், “இது எங்கள் அரசர் பெருமானின் படம் அல்லவா?” என்று அடங்கிய குரலில் கூறினார்கள்.
அதைக் கேட்ட சுவாமிகள், “இந்தப் படம் உங்கள் மகாராஜா அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இது அவருடைய பிரதிபிம்பம் மட்டுமே. ஆனாலும் இதன் மூலம் நீங்கள் அவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள். இது போன்றே, கல்லும் மண்ணும் கடவுள் ஆகி விட மாட்டா. ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று யாரும் வழிபடுவதில்லை. இவற்றால் செய்திருக்கும் விக்கிரகங்கள் அல்லது சின்னங்களின் மூலம் எல்லாம் வல்லவனாய், எங்கும் நிறைந்தவனாய் விளங்கும் முழுமுதற் கடவுளையே நினைத்து மக்கள் வணங்குகின்றனர். கடவுள் பற்றிய நினைவை உண்டாக்குவதற்கே உருவங்கள் உதவி புரிகின்றன”, என்று விளக்கமாகக் கூறினார்.
அதைக் கேட்ட மகாராஜா, “ சுவாமிகளே. இந்த விஷயத்தில் நான் இது வரை அறிவில்லாதவனாக இருந்தேன். இப்போது கண் விழித்துக் கொண்டேன்”, என்று கூறி விவேகானந்தரை கைகூப்பி வணங்கினார்.
-- "விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்" என்ற புத்தகத்திலிருந்து...
Subscribe to:
Posts (Atom)