Showing posts with label நடராஜன். Show all posts
Showing posts with label நடராஜன். Show all posts

Sunday, January 4, 2015

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!

ஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு...

சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள்! சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!



தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!

ஆடும் பதம் தூக்கி நாடும் அடியவர்க்கு
  தேடி அருள் புரியும் நடராஜா!
பாடி வந்துந்தன் பாதம் பணிந்தோர்க்கு
  ஓடி வர மருளும் அருள்நேசா!

தாவித் தாவி உந்தன் பதங்கள் நடமாட
  தேவி சிவகாமி உடனாட
கொன்றை மலரணிந்த செஞ்சடைகளாட
  கொத்தும் அரவுகள் கூத்தாட

கையில் தீயாட காலிற் சிலம்பாட
  காற்றும் வெளியும் சேர்ந்தாட
கண்ணில் கனலாட கங்கைப் புனலாட
  மண்விண்ணும் தம்மை மறந்தாட

மெய்யில் நீறாட வையம் புகழ்ந்தாட
  மெய்யா உன்னைப் பணிந்தோமே!
வெய்யும் துயரோட ஐயம் பறந்தோட
  ஐயா உன்னடி அடைந்தோமே!

தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம் தரிகிட தித்தித் தோம்!


--கவிநயா


படத்துக்கு நன்றி:  http://dwarak82.blogspot.com/2012/09/blog-post_9739.html


Thursday, December 27, 2012

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!

ஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு.

திரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) அவற்றை இங்கே பிரசுரிப்பதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அனுமதி தந்தமைக்கு, அவருக்கு நன்றிகள் பல.


அப்பனும், அம்மையும்                                                           ஊர்த்துவ தாண்டவம்



சுப்பு தாத்தா மோஹனத்தில் பாடிக் கலக்கியிருக்கிறார்! நீங்களும் கூடவே பாடிப் பாருங்களேன்! மிக்க நன்றி தாத்தா!


அண்டம் பிண்டம் அனைத்தும் அதிர்ந்திட!
கண்டம் நின்ற நீலம் மிளிர்ந்திட!
சடைவார் குழலெண் திசையில் பறந்திட!
விடைவா கனனோ விரைந்தே சுழன்றிட!

கங்கை பயந்து முடியினில் ஒடுங்கிட!
மங்கை பாகனின் மேனி ஒளிர்ந்திட!
உடுக்கை ஒலியோ உலகினை ஆக்கிட!
இடக்கை வளரும் தீ அதை அழித்திட!

வலது பாதத்தில் முயலகன் நசுங்கிட!
உலகின் தீமைகள் அவனுடன் பொசுங்கிட!
இடது பாதத்தில் அபயம் காட்டிட!
இதுவே உனது அடைக்கலம் என்றிட!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

மான் மழுவுமாட அர வணியுமாட காற் சதங்கை யாட தத்தோம்!
வான் மதியுமாட வளர் கொன்றையாட அரைத் தோலுமாட தித்தோம்!
வான் மழையுமாட கான் மயிலுமாட பூங் கழல்களாட தத்தோம்!
தேன் மலர்களாட நகை இதழ்களாட அருள் விழிகளாட தித்தோம்!

ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய தத்தோம்!
சிவாயநமஓம் சிவாயநமஓம் சிவாயநமஓம் தித்தோம்!

தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
தித்தோம் திகதோம் திரிகிட தித்தோம்!
நித்தம் சிவன்தாள் பணிவோம் தத்தோம்!
சித்தம் சிவன்தாள் தனிலே தித்தோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://natarajar.blogspot.com/2007/12/8.html

Thursday, August 7, 2008

அம்மாவோட நேயர் விருப்பம்...

"எல்லா கடவுள் மேலயும் பாட்டு எழுதியிருக்கியே, சிவன் மேல ஒண்ணு எழுதேன்", இதான் என் அம்மா என்கிட்ட போன முறை பேசும்போது சொன்னது :) அவங்களுக்காக இந்தப் பதிவு. இதுல கொஞ்சம் cheating இருக்கு! இந்த பாடல்/கவிதை முன்ன எழுதினதுதான். அம்மாவுக்கு நினைவு இருக்காதுன்னு ரொம்ப நம்பிக்கை! சில காலத்துக்கு முன்னாடி "நிலாச்சாரல்"ல பிரசுரமாச்சு. ஆனா அதுல இங்கொண்ணும் அங்கொண்ணுமா சில மாற்றங்களோட, புதிய கடைசி பத்தியோட, இங்கே பதிக்கிறேன். அவன் அருள் இருந்தா புதுசா வேற கூடிய சீக்கிரம் எழுதறேன், அம்மா :)



தாண்டவம்!!

நெஞ்சில் கனன்ற நெருப்பு கண்ணில் சிவப்பாய் உமிழ்ந்திடவே!
நெற்றிக் கண்ணின் வெப்பம் புவியைப் பொசுக்கத் தகித்திடவே!
"தனதன தந்தன" நவமணி மாலைகள் நர்த்தனம் புரிந்திடவே!
"தொம் தொம் தொம்" என ஒவ்வொரு அடியிலும் அண்டங்கள் அதிர்ந்திடவே!

கற்றைக்குழ லசைந் தெட்டுத் திசையிலும் காற்றைக் கிழித்திடவே!
காற்சதங் கைமணி ஒன்றுடன் ஒன்று உரசி உயிர்த்திடவே!
"டம டம டம" வென நந்தியின் கைகளில் மேளம் முழங்கிடவே!
"தரிகிட தரிகிட" உடுக்கையின் ஒலிஉல கெங்கும் நிறைந்திடவே!

தீயன யாவையும் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்திடவே!
நல்லவர் யாவரும் போற்றித் துதித்துத் திருவடி பணிந்திடவே!
"தீம் தீம் தீம்" என பாதம் தூக்கிப் பாவங்கள் போக்கிடவே!
"ஓம் ஓம் ஓம்" என ஓதுபவர்க்கு அபயம் அளித்திடவே!

நர்த்தனம் ஆடும் நடனராஜனை காண்போம் வாருங்கள்!
பொற்பதம் பற்றி பார்வதி கணவனை துதிப்போம் வாருங்கள்!
நானிலம் போற்றும் நாயகன் அவனைப் பணிவோம் வாருங்கள்!
‘நமசிவாய’ என நாளும் பொழுதும் சொல்வோம் வாருங்கள்!

--கவிநயா

நடராஜர் படத்துக்கு நன்றி: http://www.yogaelements.com/blog/today-is-the-night-of-shiva.html