இலங்கையில், அசோகவனத்தில், எத்தனை பேர் இருந்தாலும், அவள் மட்டும் தனிமையில். மனம் எப்போதும் ராமனிடத்தில்.
பத்து மாதங்கள்! பத்து மாதங்கள் பொறுத்தவள், இன்னும் இரண்டு மாதங்களே மீதம் இருக்கின்றன என்று உணர்கிற போது நம்பிக்கை நொறுங்கி விட்டது. இராவணனின் வற்புறுத்தலையும், அரக்கிகளின் கொடூரத்தையும் சகித்துக் கொண்டு இனியும் உயிர் தரித்துக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றி விட்டது.
நம்பிக்கை இழந்தது தன் நாயகன் மீதா, அல்லது தர்மத்தின் மீதா என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே அல்லவா?
சிம்சுபா விருட்சத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு தன் முடிவை செயல்படுத்தும் வழியை ஆலோசிக்கிறாள். கண்களில் கண்ணீர் மட்டும் வழியா விடில், தூசு படர்ந்த அழகான ஓவியம் மரத்தில் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி எழில் படைத்தவள். ‘ராமா ராமா’ என்று அரற்றுகிறது நெஞ்சம்.
காவல் இருக்கும் அரக்கிகள் அயர்ந்திருக்கிறார்கள், இதுவே தருணம் என்று நினைக்கிறாள். அந்த நிமிடத்தில்தான் எதிர்பாராவிதமாக அவள் செவிகளில் அமிருத தாரை பாய்கிறது.
“ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம். அயோத்தியில் தசரதன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று மனைவியர். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றார்கள். அதில் ஸ்ரீராமன் மூத்தவன். இளைய மனைவி கைகேயிக்குத் தந்த வரத்திற்காக தசரதர் ஸ்ரீராமனை பதினாலு வருடங்கள் காட்டிற்கு அனுப்ப நேர்ந்தது. அவருடன் இளவல் லக்ஷ்மணனும், மனைவி சீதையும் உடன் வந்தார்கள்…”
யாரோ மிக மதுரமான குரலில் நாதனின் சரிதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குரலில்தான் எத்தனை குழைவு; எத்தனை இனிமை; எத்தனை அன்பு! இந்த இலங்கையில் அவர் பெயரை, வரலாற்றை, இத்தனை அழகாகச் சொல்லுபவர்கள் யார்? அவர் மீது இத்தனை பிரியமும் பக்தியும் வைத்திருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்களா?
சுற்றும் முற்றும் பார்க்கிறாள். யாரும் தென்படவில்லை. ஒரு வேளை கனவு காண்கிறேனோ என்று எண்ணுகிறாள். அன்புக்குரியவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரமையோ என்றும் தோன்றுகிறது. ஸ்ரீராமனைப் பற்றிக் கேட்பது இந்தக் காயம்பட்ட உள்ளத்துக்குத்தான் எவ்வளவு இதமாக இருக்கிறது!

பாலைவனத்தில் தாகத்தில் தவிப்பவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த குளிர்ந்த நீருற்றுப் போலவும், பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கிடைத்த விருந்தைப் போலவும், இருளில் வழிதெரியாத கானகத்தில் கிடைத்த கைவிளக்கு போலவும் இருக்கிறது. அவரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. மேனியெங்கும் புளகமடைந்து மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.
இந்த பத்து மாதங்களில் இது போன்ற ஒரு சந்தோஷத்தை அனுபவித்ததில்லை. என் வாழ்நாளில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலமும் உண்டா என்றல்லவா அவளுக்கு சந்தேகமாக இருந்தது? சக்கரவர்த்தித் திருமகனின் சரிதை, அவள் மனதில் பழைய ஆனந்தமான நினைவுகளைப் புதிதாகப் புஷ்பிக்கச் செய்கிறது. இது கனவாகவே இருந்தால்தான் என்ன, அந்தக் கனவு நீடிக்கட்டும் என்று எண்ணுகிறாள்.
அந்தக் குரலும் தொடர்ந்து ஸ்ரீராமனின் வரலாற்றைச் சொல்கிறது. அவருடைய அற்புதமான குணநலன்களையும், நிகரில்லாத வீரத்தையும், அவருக்குத் தன் துணைவியின் மேல் இருக்கும் அளவில்லாத பிரேமையையும், அவளைத் தேடுவதற்கென அகிலமெங்கும் அவர் வானரங்களை ஏவியிருப்பது பற்றியும், இப்படி எல்லாவற்றையும் அந்தக் குரல் சொல்கிறது.
சீதா தேவி மறுபடியும் தேடிப் பார்க்கிறாள். தனக்கு இத்தகைய மகிழ்ச்சியைத் தந்தவர் யார் என்று. அப்போது அந்த சிம்சுபா விருட்சத்தின் கிளைகளுக்கு இடையில் மின்னல் கீற்றுப் போல் ஒரு சிறிய உருவம் தெரிகிறது. நன்றாகப் பார்க்கையில் அது ஒரு சிறிய வானரம் போல் இருக்கிறது. இந்த வானரமா இத்தனை நேரமும் என் நாயகனைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்லியிருக்கும்? இருக்காது என்று நினைக்கிறாள்.
அந்தச் சமயத்தில், சொல்ல முடியாத தேஜசுடன் ஒளி வீசிய அந்த வானரம், மரத்தினின்றும் மெதுவாகக் கீழே இறங்கி வந்து அவளைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறது.
**
இராமாயணத்தில் எனக்குப் பிடித்த கட்டங்களில் இதுவும் ஒன்று. அனுமன் சீதைக்காக ஸ்ரீராம சரித்திரத்தைச் சொல்வதும், அதைக்கேட்டு சீதை ஆனந்தப்படுவதும். அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் எனக்கும் எழுத ஆசை!
ஸ்ரீராம ஜெயம்.
வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு. 200-வது பதிவும்.
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.forumohalu.org/index.php?topic=1930.0