Tuesday, June 10, 2008

சின்னக் கண்ணா வாடா!!

சில கண்ணன் பாடல்கள் எழுதணும்கிற எண்ணம் ஏற்கனவே இருந்தது. நம்ம குமரன் இங்க போட்ட படத்தைப் பார்த்ததும் சொக்கிப் போய், உடனே எழுதிட்டேன்! :) அதே படம்தான் இங்கயும்... நன்றி, குமரா!




கண்ணன் - என் குழந்தை

சின்னக் கண்ணா வாடா
செல்லக் கண்ணா வாடா
அன்னை மடி ஏங்குதடா
அழகுக் கண்ணா வாடா!

பால் வடியும் முகத்தினிலே
பசும் மழலைச் சிரிப்பினிலே
தேன் வடியும் குரலினிலே
தே சொளிரும் தேகத்திலே

ஏழுலகின் எழிலையெல்லாம்
உன்னுருவில் ஏந்தி வந்து
அன்னை உள்ளம் கொள்ளை கொண்டாய்
அள்ளிக் கொள்ள ஆசை தந்தாய்!

பவழ வாய் திறந்து
பாலுக் கழுதி டுவாய்
பதறி நான் ஓடிவர
பகலவன் போல் சிரித்திடுவாய்!

திரட்டி வெண்ணை வைத்தால்
திகட்டாமல் தின்றிடுவாய்
விரட்டி பிடிக்க வந்தால்
விரைந்தோடி ஒளிந்திடுவாய்!

மண்ணை உண்டு விட்டு
மலங்க மலங்க விழித்திருப்பாய்
இழுத்து வாய் திறக்க
ஏழுலகம் காட்டிடுவாய்!

அறியாப் பாலகனாம்
அரக்கரெல்லாம் அழிப்பவனாம்
குறும்புச் சிரிப்பினிலே
ஊரைக் கொள்ளை அடிப்பவனாம்!

நல்வினையின் தவப் பயனாய்
என் மடியில் தவழ வந்தாய்
நீ எந்தன் சூல் தங்க
நூறு ஜன்மம் நானெடுப்பேன்!


--கவிநயா

30 comments:

  1. கண்ணன் படம் கண்டு சொக்கி நீங்க எழுதின கவிதைல நான் சொக்கிப்போய்ட்டேன் கவிநயா அருமை!

    ReplyDelete
  2. நானும் தான் கவிநயா அக்கா.

    ReplyDelete
  3. எளிமையான மனதை மயக்கும் கவிதை. 3 சந்தம் என முடிவெடுத்தபின், அதில் இன்னமும் சற்று கவனம் செலுத்தினால், கவி நயம் மிளிரும்! உதாரணத்துக்கு,
    //அறியாப் பாலகனாம்
    அரக்கரெல்லாம் அழிப்பவனாம்
    குறும்புச் சிரிப்பினிலே
    ஊரைக் கொள்ளை அடிப்பவனாம்!//


    "அறியாச் சிறு பாலகனாம்
    அரக்க ரெல்லாம் அழிப்பவனாம்
    குறும்பு நகைச் சிரிப்பினிலே
    ஊரைக் கொள்ளை அடிப்பவனாம்!"

    என்று வந்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்குங்க கவிநயா...
    உங்க பேருக்கு ஏத்த மாதிரி நயமான கவிதை எழுதி இருக்கீங்க :-)

    (என்னை நீங்க "ஹைடி" ன்னு கூப்பிடலாம் :-) )

    ReplyDelete
  5. அக்கா
    பாட்டு சூப்பர்! வீட்டுக் குழந்தைக்கு அப்படியே பாடலாம்! பாப்பாப் பாட்டு!
    I specially liked the lines
    தேன் வடியும் குரலினிலே
    தே சொளிரும் தேகத்திலே

    SK ஐயா சொன்னா மாதிரி மூனு மூனு சீரா பாட்டு முழுசும் கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  6. என்னைப் போலவே சொக்கிப் போன மைபாக்காவிற்கும், குமரனுக்கும் நன்றிகள்! :)

    ReplyDelete
  7. //எளிமையான மனதை மயக்கும் கவிதை. 3 சந்தம் என முடிவெடுத்தபின், அதில் இன்னமும் சற்று கவனம் செலுத்தினால், கவி நயம் மிளிரும்!//

    நன்றி அண்ணா! ஆனால் அப்படி முடிவெடுத்தெல்லாம் எழுதவில்லை. இயல்பா தோணினதையே எழுதினேன். இப்ப நீங்க சொன்ன பிறகுதான் யோசிக்கிறேன். கருத்துக்கு நன்றி, அண்ணா!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //பாட்டு சூப்பர்! வீட்டுக் குழந்தைக்கு அப்படியே பாடலாம்! //

    நன்றி கண்ணா! உங்களுக்கு பிடிச்ச வரிகள் எனக்குமே பிடிச்சது :) அந்த நாலு வரிதான் முதல்ல எழுதினது. நீங்களும் அண்ணாவும் சொன்ன சீர் கணக்கை(!) இனிமே நினைவில் வச்சுக்கறேன் :)

    ReplyDelete
  10. கண்ணனைக் கண்டு சொக்கி எழுதிய பாட்டு அருமை கவிநயா, கவி(தை)நயமாக எழுதுகின்றீர்கள்.

    அந்த மாயக்கண்ணன் சூல் கொள்ள வந்தால் நூறு என்ன ஆயிரம் ஆண்டுகள் கூட காத்திருக்கலாமே.

    ReplyDelete
  11. இக் கண்ணனின் பாட்டில் தங்கள் தாயுள்ளத்தைக் காணமுடிகிறது. கவிதை அருமை. என்னைக் கவர்ந்த சில வரிகள்...

    ///ஏழுலகின் எழிலையெல்லாம்
    உன்னுருவில் ஏந்தி வந்து
    அன்னை உள்ளம் கொள்ளை கொண்டாய்
    அள்ளிக் கொள்ள ஆசை தந்தாய்!

    பவழ வாய் திறந்து
    பாலுக் கழுதி டுவாய்
    பதறி நான் ஓடிவர
    பகலவன் போல் சிரித்திடுவாய்!

    திரட்டி வெண்ணை வைத்தால்
    திகட்டாமல் தின்றிடுவாய்
    விரட்டி பிடிக்க வந்தால்
    விரைந்தோடி ஒளிந்திடுவாய்!

    மண்ணை உண்டு விட்டு
    மலங்க மலங்க விழித்திருப்பாய்
    இழுத்து வாய் திறக்க
    ஏழுலகம் காட்டிடுவாய்!///

    ///நல்வினையின் தவப் பயனாய்
    என் மடியில் தவழ வந்தாய்
    நீ எந்தன் சூல் தங்க
    நூறு ஜன்மம் நானெடுப்பேன்!///


    இறுதிவரிகள் வாலியின் இக்கவிதையை நினைவுபடுத்துகிறது.

    என்னைப்போன்ற புன்னியம் செய்த
    அன்னை எவளும் இருப்பாளா?
    சத்தியம் ஒன்றையே சூல்கொண்டவளாய்
    பத்தியம் கிடந்தேன் நெடுநாளா!

    கவனிக்கவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கவிநயா,

    மழலைக் குறும்பை, குட்டி கண்ணன் மூலம் காட்டியது அருமை.

    ReplyDelete
  13. கண்ணனைப்பாடும் கவியினை
    என்ன சொல்லி பாராட்ட ?

    எனக்குத் தெரிந்த ஒரே வழி
    நானே பாடுவதுதான்.
    அப்பப்பா ! அம்மம்மா !! என்ன சுகம் ! என்ன சுகம் !

    என் அம்மா பாடிக் கேட்கணும் போலத்தோன்றுகிறதே !
    ம்...அது அடுத்த ஜன்மத்தில் தான் முடியும்.

    வருக. கேளுங்கள். உங்கள் குரலில் ஒரு தரம்
    இதே மெட்டில் பாடுங்கள்.
    http://menakasury.blogspot.com
    you may also go here if u are not getting the video in my blog:

    http://www.youtube.com/watch?v=Prt0hZn2wyo

    ReplyDelete
  14. //அன்னை மடி ஏங்குதடா
    அழகுக் கண்ணா வாடா!//

    ஒரு தாயின் ஏக்கத்தை வார்த்தைகளில் வடித்துக் கொடுத்திருக்கிறீர்கள்.. இந்த வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்..

    கவிதை என்பது வரிக்கு வரி யோசித்து எழுதுவதல்ல.. இயல்பான வெளிப்பாடு இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிவருவது..
    ஊத்துக்காடு வேங்கடகவியின் அத்தனை கிருதிகளிலும் இவற்றை நீங்கள் பார்க்கலாம்..அவரின் பாடல்கள் பலவற்றைத் தேடிப்படியுங்கள்..அவரது உணர்வுகளை பாடல் வரிகளின் கோலமாக்கி அவர் வெளிப்படுத்தும் பாங்கை ரசித்துச் சுகிக்கலாம்.

    ReplyDelete
  15. அம்மாடி !
    இப்ப தான் இங்கே வந்து எல்லா கமென்ட்ஸ் படிச்சேன்.
    யாரோ ஏதோ சொல்றாகன்னு எதையும் மாத்திடாதீங்க..

    இந்த எதுகை, மோனை, சீர், தளை எல்லாம் படிச்சுட்டு
    பாட்டு எழுதினா அதை பாட முடியாது.
    ப்ளஸ் டூ விக்கு வேணா பாடமா வெக்கலாம்.

    என்னமா குற்றால அருவி போல கொட்டுது கவிதை
    இப்பதான் என் மக ந்யூ ஜெர்ஸிலேந்து ஃபோன் போட்டு
    சொல்லித்து.பாத்தேன்.

    மகராசியா நன்னா பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும் நீ.

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.
    http://paattiennasolkiral.blogspot.com

    ReplyDelete
  16. //நல்வினையின் தவப் பயனாய்
    என் மடியில் தவழ வந்தாய்
    நீ எந்தன் சூல் தங்க
    நூறு ஜன்மம் நானெடுப்பேன்!//

    இப்படிக் கவி பாடிட ஒரு அன்னை இருக்கையில் கண்ணன் வாராது போய் விடுவானா..செல்லம் போல் வந்திடுவான்!

    ReplyDelete
  17. vsk அவர்கள் சந்தம் பற்றி சரியான அறிவுரைதான் தந்துள்ளார் எனினும், அதைப் பார்த்ததும், நான் எழுதுவதை எல்லாம் கவிதை என்றே சொல்லக் கூடாது எனத் தோன்றியது. ஆனால் மீனாட்சிப் பாட்டியின் //இந்த எதுகை, மோனை, சீர், தளை எல்லாம் படிச்சுட்டு பாட்டு எழுதினா அதை பாட முடியாது.// என்ற பின்னூட்டம் ஒரு ஆறுதலாய் இருந்தது. ஹி.ஹி. நன்றி மீனாட்சிப் பாட்டி!

    ReplyDelete
  18. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, ஹைடி! :)

    ReplyDelete
  19. நல்வரவு, கைலாஷி!

    //அந்த மாயக்கண்ணன் சூல் கொள்ள வந்தால் நூறு என்ன ஆயிரம் ஆண்டுகள் கூட காத்திருக்கலாமே.//

    ஆஹா! உண்மைதான்!! நூறை எண்ணிக்கையற்றதாக நினைச்சே எழுதினேன்! :)

    ReplyDelete
  20. வாங்க அகரம்.அமுதா!

    //இக் கண்ணனின் பாட்டில் தங்கள் தாயுள்ளத்தைக் காணமுடிகிறது.//

    மிக்க நன்றி! குட்டிக் கண்ணனைப் பார்த்தாலே யாருக்குமே தாயன்பு வந்து விடும் என்று நினைக்கிறேன் :)

    வாலி அவர்கள் வரிகளை எடுத்துக் காட்டியதற்கும் நன்றி!

    ReplyDelete
  21. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, சதங்கா!

    ReplyDelete
  22. //என் அம்மா பாடிக் கேட்கணும் போலத்தோன்றுகிறதே !//

    வாங்க ஐயா! இந்த வரிகளைப் படிச்சதும் மனசு குளிர்ந்து போச்சு! :) சில கவிதை/பாடல் எழுதும்போது எனக்கு ஏதாவது ஒரு மெட்டு தோன்றுவது வழக்கம். (எனக்கு ராகம் பத்தில்லாம் அ,ஆ கூட தெரியாது). இந்த பாடலைப் பொறுத்த வரை எனக்கு தோணின அதே மெட்டில் நீங்க பாடியதும் அமைஞ்சிருக்கது பார்த்து ஆச்சர்யம். உங்களுடைய வழக்கமான ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள், ஐயா!

    ReplyDelete
  23. வாங்க ஜீவி ஐயா! உங்களுக்கு இந்தப் பாடல் பிடித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

    //ஊத்துக்காடு வேங்கடகவியின் அத்தனை கிருதிகளிலும் இவற்றை நீங்கள் பார்க்கலாம்//
    //அவரது உணர்வுகளை பாடல் வரிகளின் கோலமாக்கி அவர் வெளிப்படுத்தும் பாங்கை ரசித்துச் சுகிக்கலாம்.//

    சரியாகச் சொன்னீர்கள்! அவருடைய பாடல்கள் எல்லாம் எனக்கு மிகப் பிடித்தவை!

    ReplyDelete
  24. //மகராசியா நன்னா பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும் நீ.//

    உங்க ஆசிகள் படிச்சதும் கண்கலங்கிப் போச்சு! உங்களைப் போன்ற பெரியவங்க ஆசி கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்! ரொம்ப நன்றி பாட்டி!

    ReplyDelete
  25. //இப்படிக் கவி பாடிட ஒரு அன்னை இருக்கையில் கண்ணன் வாராது போய் விடுவானா..செல்லம் போல் வந்திடுவான்!//

    ஆஹா! வரட்டும், வரட்டும்! வருகைக்கு கட்டியம் கூறிய ராமலக்ஷ்மிக்கு நன்றிகள்! :)

    //மீனாட்சிப் பாட்டியின் பின்னூட்டம் ஒரு ஆறுதலாய் இருந்தது.//

    கவலை வேண்டாம் ராமலக்ஷ்மி! எனக்கும் இலக்கணமெல்லாம் தெரியாது. நான் எழுதறதெல்லாம் உணர்வுபூர்வமாதான் இருக்கும். 'நான் எழுதறதெல்லாம் கவிதையா'ன்னு எனக்கும் தோணியிருக்கு பலமுறை, சிலர் எழுத்துக்களை படிக்கும்போது. அதுக்காக எழுதாம இருக்கவும் முடியாது. என்ன செய்யறது? சட்டியில் இருக்கறதுதானே அகப்பையில் வரும்! :)

    ReplyDelete
  26. //இப்பதான் என் மக ந்யூ ஜெர்ஸிலேந்து ஃபோன் போட்டு
    சொல்லித்து.//

    உங்கள் மகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்து விடுங்கள், பாட்டி.

    (நீங்க பாட்டின்னு போட்டோன்ன, நானும் அப்படியே கூப்டுட்டேன். தவறா நினைச்சுக்காதீங்க :)

    ReplyDelete
  27. நமக்கு இந்த சந்தவசந்தம் எல்லாம் தெரியாது, பாடல் அருமை, படம் அதை விட அருமை.

    ReplyDelete
  28. நல்வரவு கீதாம்மா!

    //நமக்கு இந்த சந்தவசந்தம் எல்லாம் தெரியாது//

    எனக்கும்தான் :)

    //பாடல் அருமை, படம் அதை விட அருமை.//

    மிக்க நன்றி, உங்களுக்கும், குமரனுக்கும்! :)

    ReplyDelete
  29. பிரம்மாதம் கவிநயா. கவிதை சந்தம் அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் முத்து முத்தாய் இருக்கிறது. ஏதோ ஒரு வரியை தேர்ந்தெடுத்து பாராட்டலாம் என சிந்தித்தேன். கிருஷ்ணரின் தலை முடி அழகா, இல்லை திருவடி அழகா என சிந்திப்பது போல் ஆகிவிடும். படிக்கும் போதே மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது. எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நீங்கள் என்னுடைய இந்த பாடலை கேளுங்கள். உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும். http://smilemakerkrishna.blogspot.com/2008/06/krishna-beloved.html

    ReplyDelete
  30. //கிருஷ்ணரின் தலை முடி அழகா, இல்லை திருவடி அழகா என சிந்திப்பது போல் ஆகிவிடும்.//

    ஆஹா, என்ன அழகா சொல்லியிருக்கீங்க. சந்தோஷமா இருக்கு ரமேஷ். உங்களுடைய பாடலையும், படத்தையும் நானும் மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)