Friday, June 20, 2008

ஸ்ரீராமகிருஷ்ணரும் சிட்டுக்குருவியும்…


கத்துக் குட்டியான நான் இந்த மாதிரி ஒரு பதிவு முதல் முறையா எழுதப் போறேன். அன்னையின் திருப்பதங்கள் பணிந்து துவங்கறேன்!

எனக்குத் தோணறதை, எனக்கு புரிஞ்சதை அப்படியே சொல்லப் போறேன். குற்றம் குறை இருந்தா பெரியவங்க மன்னிக்கணும்.

சரணாகதி! அப்படின்னு அடிக்கடி சொல்றோம் ஆன்மீகத்துல. முழுமையான நம்பிக்கை வைக்கணும்; முழுமையான பக்தி வைக்கணும். முழுமையா சரணடையணும். இப்படில்லாம் சர்வ சகஜமா சொல்றோம். ஆனா முயற்சி செய்யறப்பதான் தெரியுது, இது எதுவுமே அவ்வளவு சுலபமில்லைன்னு. சரணடையறதுன்னா என்ன? ஒருத்தரை முழுமையா நம்பி, நம்பறதுன்னா சும்மா இல்லை, துளி சந்தேகம் கூட இருக்கக்கூடாது! அவங்களால நமக்கு துன்பமே ஏற்பட்டாக் கூட, அதுவும் கூட ஏதோ ஒரு நன்மைக்குத்தான் அப்படின்னு நினைச்சு அதையும் இயல்பா ஏத்துக்கிற அளவு நம்பிக்கையும், பக்குவமும் வேணும். அப்படி ஒருத்தரை நம்பி, அவர்கிட்ட நம்மை அப்படியே ஒப்புக் கொடுக்கிறதுதான், சரணாகதி!

நம்மால அப்படி இருக்க முடியுதா? இறைநம்பிக்கை இருக்குன்னு சொல்லிக்கிறவங்ககூட இன்பம் வந்தா அதுலயே மூழ்கிப் போய், இறைவனை மறந்துடறோம். துன்பம் வந்துட்டாலோ அவனைத் திட்டித் தீர்த்திடறோம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இறைவனை நாமும் விருப்பு வெறுப்பில்லாம வணங்கணும், அப்படின்னு ஐயன் சொல்லியிருக்கிறது நினைவிருக்கா?

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சரணாகதின்னா என்னன்னு ஸ்ரீராமகிருஷ்ணர் அழகா ஒரு கதை மூலமா விளக்கறார். பூனைக் குட்டி, குரங்குக் குட்டி கதை. குரங்குக் குட்டி என்ன பண்ணும்? அம்மாவை இறுக்கிப் பிடிச்சுக்கும். அம்மா மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவற வேகத்துக்கு ஈடு குடுத்து அதுவும் பிடிச்சிக்கணும். இல்லன்னா அவ்ளோதான்! அதான் குரங்குப் பிடின்னு ஒரு பிரயோகம் கூட இருக்கே! :)

ஆனா பூனைக்குட்டி என்ன பண்ணுமாம்? அதுக்கு ஒண்ணுமே தெரியாதாம். தாய்பூனை அதை எங்க வைக்குதோ அங்க அப்படியே இருக்குமாம், தாய்பூனை வந்து அதை வேற இடத்துக்கு நகர்த்தற வரை, வச்சது வச்சபடி! எங்க போனாலும் தாய்பூனைதான் குட்டியை வாயில கவ்வி எடுத்துகிட்டு போகணும்! குட்டிக்கு பிடிச்சுக்க தெரியாது!

பூனைக் குட்டிதான் நாம. தாய்பூனைதான் இறைவன். சரணடையறதுன்னா அதுதான். தாயை நம்பி, இறைவனை நம்பி, நீ என்ன செய்தாலும் சரின்னு ஒத்துக்கறது! பரிபூரணமா நம்மை ஒப்படைக்கிறது!

அதுக்காக நாம ஒண்ணுமே செய்யாம பூனைக் குட்டி மாதிரி உட்கார்ந்திருக்கணும்னு அர்த்தம் இல்லைங்கோ! சொல்ல வந்த கருத்தை அந்த செயலுக்கு(context-க்கு) தகுந்த மாதிரி சரியா எடுத்துக்குவீங்கன்னு நம்பறேன்.

அதெல்லாம் சரிதான், ஆனா சிட்டுக் குருவிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? நான் சில நாட்களுக்கு முன்னாடி இட்ட சிட்டுக்குருவி பதிவு நினைவிருக்கா? இன்னும் படிக்காதவங்க அதைப் படிச்சுட்டு வாங்க! நான் காத்திருக்கேன்...

ம்… படிச்சிட்டீங்களா? அந்த குருவிக் குஞ்சு எவ்வளவு உதவியற்ற நிலையில இருந்தது! அதனால செய்ய முடிஞ்சது எதுவுமே இல்ல :( அதுவும் பூனைக் குட்டி மாதிரியேதான். அதைப் பார்த்த போது எனக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன இந்தக் கதைதான் நினைவு வந்தது. அவர் சொன்ன பூனைக்குட்டிக்கும் இந்த குருவிக் குஞ்சுக்கும் அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு தோணுச்சு. அம்புட்டுதாங்க விஷயம்! இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றி!

கொசுறு செய்தி:
நேத்து சாயந்திரம் எங்க வீட்டு செடி ஒண்ணுல இன்னொரு நல்ல ஆரோக்கியமான குருவிப் பாப்பாவைப் பார்த்தேன்! தன் அம்மாவோட தன் மொழில பேசிக்கிட்டிருந்தது :) அன்னிக்கு இறந்து போன குருவியை நினைச்சு வருந்தினதை மாத்தற மாதிரி இப்படி ஒண்ணு நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! அந்தக் குருவிப் பாப்பாவின் படம்தான் மேல. எப்பவோ எழுதின இந்தப் பதிவை போடாம வச்சிருந்தேன். ஏன்னே தெரியல. இப்பதான் தெரியுது. இதுவும் அவள் செயலே! அன்னையின் திருவடிகள் சரணம், சரணம்!

--கவிநயா

24 comments:

 1. நல்வரவு கவிநயா.

  பூனைக்குட்டி, சிட்டுக்குருவின்னு என் சப்ஜெக்டைத் தொட்டுட்டீங்க.

  சிண்ட்டு & தத்து வை வளர்த்தேன்.
  (சிட்டுக்குருவிகள்தான். பழைய பதிவுகளில் தேடினால் கிடைக்கலாம்)

  எளிமையா அலங்காரச் சொற்கள் இல்லாம மனசை வருடும் பதிவு உங்களுடையது.

  வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 2. அட! உண்மையச் சொல்லங்க கவி! அந்த நிழற்படத்தைப் படித்தது நீங்கதானா? அருமையாயிருக்கிறது. அதனினும் சிறப்பாக தங்களின் எழுத்து.

  ///இறைநம்பிக்கை இருக்குன்னு சொல்லிக்கிறவங்ககூட இன்பம் வந்தா அதுலயே மூழ்கிப் போய், இறைவனை மறந்துடறோம். துன்பம் வந்துட்டாலோ அவனைத் திட்டித் தீர்த்திடறோம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இறைவனை நாமும் விருப்பு வெறுப்பில்லாம வணங்கணும், அப்படின்னு ஐயன் சொல்லியிருக்கிறது நினைவிருக்கா?///

  நம் மனமும் ஒரு குரங்குதான். அதனாலதான் முற்பகலில் நம்பிய இறைவனைப் பிற்பகலில் துன்பம் வரும்போது அவனைத் திட்டித்தீர்க்கிறோம்.

  அதனால தான் இறைவனை வாலறிவன் என்கிறார்வள்ளுவர். நமக்கு இருப்பதெல்லாம் வெறும் நூலறிவுதான். அதையும் நாம் தப்புத்தப்பாகப் புரிந்து வைத்திருக்கிறோம். உதாரணத்திற்குக் காண்க என் "கலவும் கற்று மற" "களவும் அகற்றி மற" ஆகிய இரு கட்டுரைகளை.

  நாம் முழுமையான ஞானத்தைப் பெறும் போதுதான் சரணாகதி அடையமுடியும். அதுவரை அப்படிச் சொல்லிக்கொண்டு வேண்டுமானால் திரியலாம்.

  ReplyDelete
 3. //பூனைக் குட்டிதான் நாம. தாய்பூனைதான் இறைவன். சரணடையறதுன்னா அதுதான். தாயை நம்பி, இறைவனை நம்பி, நீ என்ன செய்தாலும் சரின்னு ஒத்துக்கறது! பரிபூரணமா நம்மை ஒப்படைக்கிறது!//

  எளிய வார்த்தைகளில் பெரிய தத்துவத்தை விளக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் கவிநயா.

  ReplyDelete
 4. நல்ல தொடக்கம், இதுபோல இன்னமும் நிறைய எழுதிட வாழ்த்துக்கள். பதிவெழுத எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை - தெரிந்தவர்கள் வந்து விளக்கம் சொல்வார்கள். நம்ம கடமையை நாம செய்துவிட்டு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்...

  ReplyDelete
 5. //எளிமையா அலங்காரச் சொற்கள் இல்லாம மனசை வருடும் பதிவு உங்களுடையது.//

  வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 6. //நமக்கு இருப்பதெல்லாம் வெறும் நூலறிவுதான். அதையும் நாம் தப்புத்தப்பாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.//

  வழிமொழிகிறேன். :-))

  ReplyDelete
 7. அக்கா. ரொம்ப நல்லா எளிமையா இருக்கு இருவித சரணாகதியைப் பற்றிய கதைகளும். தமிழக வைணவத்தில் இருக்கும் இரு பிரிவுகளான வடகலை தென்கலை பிரிவுகள் பிரிந்து நிற்பது இந்த ஒரே ஒரு கருத்தில் தான். வடகலை குரங்குக்குட்டியைப் போல் பெருமாளைத் திடமாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று சரணாகதிக்கு விளக்கம் சொல்ல தென்கலை பூனைக்குட்டியைப் போல் பெருமாள் இட்ட படி கிடப்பதே சரணாகதி என்று விளக்கம் சொல்லும். இதைத் தவிர சில சின்ன சின்ன வேறுபாடுகள் உண்டு. மற்றபடி தமிழையும் வடமொழியையும் ஒரே தட்டில் (சில நேரங்களில் தமிழுக்கு மிகுதியாக ஏற்றம் கொடுத்து) வைத்துப் போற்றுவதிலும் திருமகளையும் திருமாலையும் இணைந்தே போற்றுவதிலும் இன்னும் பல விதங்களிலும் எந்த வேறுபாடும் அவற்றிடையே இல்லை.

  யாரையோ ஒருத்தர் கடவுள் நேரில வந்தா என்ன கேப்பீங்கன்னு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் இது.

  //எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும்.//

  இதுல முதல் பதில் குரங்குக்குட்டி சொல்றது. ரெண்டாவது பூனைக்குட்டி சொல்றது.

  ReplyDelete
 8. //நேத்து சாயந்திரம் எங்க வீட்டு செடி ஒண்ணுல இன்னொரு நல்ல ஆரோக்கியமான குருவிப் பாப்பாவைப் பார்த்தேன்! தன் அம்மாவோட தன் மொழில பேசிக்கிட்டிருந்தது :) அன்னிக்கு இறந்து போன குருவியை நினைச்சு வருந்தினதை மாத்தற மாதிரி இப்படி ஒண்ணு நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!//


  மிக அழகாக,எளிமையான வார்த்தைகளால சொல்லியிருக்கீங்க கவிநயா.குருவிக்குஞ்சின் இளஞ்சூடான வயிற்றைத் தடவும் இதமான சுகம் உங்கள் வரிகளில் காண்கிறேன்.
  புகைப்படம் அழகு.குருவிக் குஞ்சும்தான்.. :)

  ReplyDelete
 9. குமரன் சொன்னதுபோல, மார்ஜார[பூனை] பக்தி, மர்க்கட[குரங்கு] பக்தி என்ற வைஷ்ணவப் பிரிவுகளின் தத்துவத்தை எளிமையாகச் சொல்லிச் சிறப்பித்திருக்கிறீர்கள்.

  யான் உனைத் தொடர்ந்து சிக்கெனெப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே![ மர்க்கட பக்தி]

  நன்றே செயினும் தீதெ செயினும் யானோ அதற்கு நாயகமே [மார்ஜார பக்தி]

  ReplyDelete
 10. வாங்க துளசிம்மா!

  //சிண்ட்டு & தத்து வை வளர்த்தேன்//

  உங்க பதிவுகள்ல போய் பார்க்கிறேன் :)

  //எளிமையா அலங்காரச் சொற்கள் இல்லாம மனசை வருடும் பதிவு உங்களுடையது.//

  மிக்க நன்றிம்மா! :)

  ReplyDelete
 11. வாங்க அகரம்.அமுதா!

  படம் எடுத்தது ரங்கமணி :) எழுதினது மட்டுமே அடியேன்.

  //நமக்கு இருப்பதெல்லாம் வெறும் நூலறிவுதான். அதையும் நாம் தப்புத்தப்பாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.//

  ரொம்ப சரியா சொன்னீங்க.

  //நாம் முழுமையான ஞானத்தைப் பெறும் போதுதான் சரணாகதி அடையமுடியும்.//

  அதற்கும் அவன்/ள்தான் அருள வேண்டும்!

  நன்றி அகரம்.அமுதா!

  ReplyDelete
 12. //நல்லாயிருக்குங்க...//

  வாங்க மௌலி! ஆணி அதிகமா இருக்கு போல, ஒரே வார்த்தையில சொல்லிட்டீங்க :) வாசிச்சதுக்கு நன்றி!

  ReplyDelete
 13. //எளிய வார்த்தைகளில் பெரிய தத்துவத்தை விளக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் கவிநயா.//

  அச்சச்சோ, நான் இல்லைங்க, ராமலக்ஷ்மி. ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதை திருப்பி சொல்லிப் பார்த்தேன். நாம படிச்ச ஒரு விஷயத்தை நாம திரும்ப சொல்லிப் பார்க்கும்போதுதானே நமக்கு எவ்வளவு தூரம் புரிஞ்சிருக்குன்னு தெரியும். அப்படித்தான் :))

  ReplyDelete
 14. வாங்க ஜீவா!

  //நல்ல தொடக்கம், இதுபோல இன்னமும் நிறைய எழுதிட வாழ்த்துக்கள். பதிவெழுத எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை - தெரிந்தவர்கள் வந்து விளக்கம் சொல்வார்கள்.//

  ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி! :)

  ReplyDelete
 15. வாங்க குமரா! வைணவப் பிரிவுகளின் கருத்துன்னு எனக்குத் தெரிந்திருக்கல. ஸ்ரீராமகிருஷ்ணர் புத்தகத்துல படிச்சதையே எழுதினேன். நீங்க விவரமா சொன்னதுக்கு மிக்க நன்றி! அதுவும் குரங்குப் பிடி சரணாகதி பத்தி எனக்கு புரிந்தும் புரியாமயும் இருந்தது. நீங்க அழகா விளக்கிட்டீங்க!

  //எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும்.//

  இப்படிக் குரங்குக்குட்டியாவும், பூனைக்குட்டியாவும் சொன்ன தம்பியடிகளைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா, எல்லாரும் http://koodal1.blogspot.com/2008/06/2.html - இங்க போய் பாருங்க! :)))

  ReplyDelete
 16. வாங்க ரிஷான்!

  //குருவிக்குஞ்சின் இளஞ்சூடான வயிற்றைத் தடவும் இதமான சுகம் உங்கள் வரிகளில் காண்கிறேன்.//

  அதையும் இவ்வளவு அழகா சொல்ல உங்களாலதான் முடியும் :) நன்றி, தம்பி!

  ReplyDelete
 17. //யான் உனைத் தொடர்ந்து சிக்கெனெப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே![ மர்க்கட பக்தி]

  நன்றே செயினும் தீதெ செயினும் யானோ அதற்கு நாயகமே [மார்ஜார பக்தி]//

  அழகாகச் சொன்னீர்கள், அண்ணா! மிக்க நன்றி!

  ReplyDelete
 18. ஜீவா அவர்கள் சொல்கிறார்.
  // பதிவெழுத எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை //

  உண்மை.
  ஆயினும் தனக்கு என்ன தெரியும் எனத் தெரிந்திருக்கவேண்டும்
  அல்லவா ?
  அறியாமை குற்றமல்ல. அறியேன் என்று ஒருவன் உணரும்போது,
  அதனை நெஞ்சார ஒப்புக்கொள்ளும்போது தான், இனியாவது தான்
  அறியவேண்டும் எனும் விவேகம் ஏற்படும் வாய்ப்புளது.
  In Fact, awareness of ignorance is indeed bliss.
  மாறாக, ஒருவன் தான் (அல்லது தானே ) அறிவுடையோன் என்று எண்ணி
  செயல்படுவதினை செருக்கு எனவும் அச்செருக்கு
  அறியாமை என வள்ளுவர் கூறுவார்.
  "வெண்மை எனப்படுவது யாதெனின், 'ஒண்மை
  உடையம்யாம் ' என்னும் செருக்கு."

  இச்செருக்கொழிந்து எழுதப்படும் கவி நயாவின் பதிவுகள் வணங்கத்தக்கவை.
  கவி நயா அவர்களின் பதிவுகளை சிறிது காலமாக கவனிக்கிறேன்.
  இவர் கவி நயா மட்டும் அல்ல. உண்மையில் க விநயா
  இவரது 'க'ருத்துக்களிலும் 'க'விதைகளிலும் விநயம் (அடக்கம்)
  மிளிர்கிறது.
  'க'ற்றதை விநயத்துடன், நயத்துடன் சொல்வதிலும் இவர் நயா. (புதுமையாளர்)

  வாழ்க . வளர்க !

  //நாம் முழுமையான ஞானத்தைப் பெறும் போதுதான் சரணாகதி அடையமுடியும்.//

  அகரம் அமுதா சொல்வது சரியே. இருப்பினும் இது ஒரு வட்டச்சூழ்நிலை
  சரணாகதி அடைந்தால்தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தால்தான்
  சரணாகதி அடைய முடியும் .

  //அதுவரை அப்படிச் சொல்லிக்கொண்டு வேண்டுமானால் திரியலாம்.//
  ஆம்.

  சுப்பு ரத்தினம்
  தஞ்சை.
  http://movieraghas.blogspot.com

  ReplyDelete
 19. வாங்க, சுப்புரத்தினம் ஐயா!

  //In Fact, awareness of ignorance is indeed bliss.//

  நல்லாச் சொன்னீங்க!

  //இருப்பினும் இது ஒரு வட்டச்சூழ்நிலை. சரணாகதி அடைந்தால்தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தால்தான் சரணாகதி அடைய முடியும்.//

  இதுவும்!

  ரொம்ப அழகாக, தெளிவாக எழுதுகிறீர்கள், ஐயா.

  //இவரது 'க'ருத்துக்களிலும் 'க'விதைகளிலும் விநயம்(அடக்கம்) மிளிர்கிறது.//

  தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதே உண்மை :) என்னுடைய சொற்தொகையும் (vocabulary) சரி, அறிவும் சரி... பூஜ்யம். அடியேன் எழுதுவதெல்லாம் எளிமையாய் இருப்பதற்கு அதுவே காரணம். மீண்டும் தங்கள் அன்புக்குத் தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன்!

  ReplyDelete
 20. Kumaran said:

  //வடகலை குரங்குக்குட்டியைப் போல் பெருமாளைத் திடமாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று சரணாகதிக்கு விளக்கம் சொல்ல தென்கலை பூனைக்குட்டியைப் போல் பெருமாள் இட்ட படி கிடப்பதே சரணாகதி என்று விளக்கம் சொல்லும்//

  இந்த இரண்டு சம்பிரதாயங்களும் தாயாருக்கு
  கொடுக்கும் ப்ராதான்யத்திலேயும் (முக்கியத்துவத்திலேயும்)
  சற்று மாறுபடுகின்றனர் என்று சொல்கிறார்களே !
  அப்படியா ?

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 21. //பூனைக் குட்டிதான் நாம. தாய்பூனைதான் இறைவன். சரணடையறதுன்னா அதுதான். தாயை நம்பி, இறைவனை நம்பி, நீ என்ன செய்தாலும் சரின்னு ஒத்துக்கறது! பரிபூரணமா நம்மை ஒப்படைக்கிறது!
  //

  நல்லதொரு கருத்துப்பரிமாற்றம்.

  ReplyDelete
 22. வாங்க நிர்ஷன்! நன்றி!

  ReplyDelete
 23. சுப்புரத்தினம் ஐயா, உங்க கேள்விக்கு குமரனாவது, எஸ்.கே அண்ணாவாவது பதில் சொல்வாங்கன்னு இருக்கேன்..

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)