Sunday, October 23, 2011

தீபாவளி பார்ட்டி!

அனைவருக்கும் அன்பான, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!ன் கண்ணையே என்னால நம்ப முடியல! இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு! உடனே சரின்னு சொல்லி மெயில் அனுப்பத்தான் கை பரபரத்தது. இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சேன். என்னதான் இவங்க பிரபலமா இருந்தாலும், இவங்களோடல்லாம் நம்மால ஒட்ட முடியுமா, ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்தாப்ல பேச முடியுமா, இப்படில்லாம் ஓடிச்சு நெனப்பு. ராத்திரி பூரா குழப்பிக்கிட்ட பிறகு, என் பெஸ்ட் ப்ரெண்டை கூப்பிட்டு பேசினேன்.

என்ன பார்ட்டி, என்ன ஏது, அப்படி, இப்படின்னு பாட்டி மாதிரி விசாரிச்சப்புறம், “போய்த்தான் பாரேன். உன்னை என்ன கடிச்சா தின்னப் போறாங்க? ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே?”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா! “நீ சைக்காலஜி படிச்சுட்டு கவுன்சிலரா போயேண்டி”, அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கேன், அவகிட்ட!

அன்னிக்கு ராத்திரியே அவங்க தந்த போன் நம்பர்ல கூப்பிட்டு பேசினேன். ஏதாச்சும் சமையல் செய்து கொண்டு வரவான்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம்ப்பா. சும்மா ஜாலியா வா. தீபாவளி பார்ட்டி. வெளியதான் சாப்பிட போறோம்”, அப்படின்னாங்க.

ஹ்ம், இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்ன ட்ரஸ் போட்டுக்கலாம்? தீபாவளிங்கிறதால சேலை, சூரிதார், இப்படி போட்டுக்கிட்டு போனாதான் இலட்சணமா இருக்கும். எங்கிட்ட இருக்க துணிமணிங்களை கெளறி பார்த்துட்டு, கடைசியில கொஞ்சம் எளிமையா, அதே சமயம் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கிற சூரிதாரை தேர்வு செஞ்சு வச்சேன்.

அந்த நாளும் வந்தது. தலை குளிச்சு அழகா சூரிதாரை போட்டுகிட்டு, அதுக்கேத்தாப் போல வளையல் போட்டு, பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணாடி பார்த்தப்போ எனக்கே “பரவாயில்லையே”ன்னு தோணுச்சின்னா பாருங்க!

படபடக்கிற மனசோட பார்ட்டிக்கு போனேன். தீபாவளி பார்ட்டிங்கிறதால பட்டாசு மத்தாப்பெல்லாம் இருக்குமோ?

ஒரு ரெஸ்டாரண்ட்லதான் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்காவில் அதுக்கா பஞ்சம்? உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை! எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார்! என்ன பண்றதுன்னே தெரியல. போச்சு, இன்னிக்கு நெகெட்டிவ் மார்க்தான்ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.

பக்கத்தில் இருந்த பொண்ணு சொன்னா, “சூரிதார்ல நீ ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினது? இந்தியா போயிருந்தியா?”

நான் பதில் சொல்றதுக்குள்ள சர்வர் வந்துட்டா. “குடிக்கிறதுக்கு என்ன வேணும்?”

ஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க –

“பியர்”

“ரெட் வைன்”

“வைட் வைன்”

என் முறை வந்தது. “டயட் பெப்சி”.

எல்லாருடைய ஒரு மாதிரியான பார்வையையும் என் மேல உணர முடிஞ்சது.

சர்வர் அந்த பக்கம் போன பிறகு அறிமுகப் படலம் ஆரம்பிச்சது.

“உமா ஃப்ரம் இண்டியா. நான் மேல்படிப்புக்காக இங்கே வந்திருக்கேன்.”

“சரளா ஃப்ரம் இண்டியா. நான் ரிஸர்ச்சுக்காக.”

“கலா. என் கம்பெனி ப்ராஜக்டுக்காக இந்தியால இருந்து வந்திருக்கேன்”.

எல்லாரும் சொல்லி முடிச்சதும் என்னோட முறை.

“நான் ரேச்சல், ஃப்ரம் நியூயார்க். போஸ்ட் க்ராஜுவேட் பண்ண வந்திருக்கேன்”.


--கவிநயா


பி.கு.1. ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதியது.

பி.கு.2. கதையில் கலந்திருக்கிற அளவுக்கதிகமான ஆங்கிலத்தை மன்னிக்கவும். கதையில் தன்மை காரணமா நல்ல தமிழில் எழுதினா சரியா இருக்காதுன்னு தோணுச்சு! :)

பி.கு.3. என்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு.  கணினி பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால்...  'நினைவின் விளிம்பில்...', ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்...

Sunday, October 16, 2011

எல்லாம் நன்று!

peaceful


                                    எல்லாம் நன்று; அனைத்தும் நன்று;

                                    உணவும் உடையும் இடமும் நன்று;

                                    பசியேயில்லா உலகம் நன்று;

                                    உலகம் நன்று; மக்கள் நன்று;

                                    அன்பே நிறைந்த மனங்கள் நன்று;

                                    மனங்கள் நன்று; குணங்கள் நன்று;

                                    மகிழ்வே நிறைந்த உயிர்கள் நன்று;

                                    உயிர்கள் நன்று; உறவுகள் நன்று;

                                    உள்ளே ஒளிரும் ஒளியும் நன்று;

                                    ஒளியும் நன்று; வளியும் நன்று;

                                    உலகை நடத்தும் இயற்கை நன்று;

                                    இயற்கை நன்று; இயல்பும் நன்று;

                                    அனைத்தும் காக்கும் இறைமை நன்று;

                                    எல்லாம் நன்று; அனைத்தும் நன்று-

                                    என் கனவுகளில் மட்டும்...

--கவிநயா

Sunday, October 9, 2011

நீங்க பணக்காரரா, பிச்சைக்காரரா?


ஹ்ம்… என்ன கேள்வி இதுன்னு யோசிக்கிறீங்களா? பணக்காரர்னு சொன்னா ஏதாச்சும் கடன் கிடன் கேட்டு வந்துரப் போறாளோன்னு பயந்துராதீங்க :) இந்தக் கேள்வி பணம் சம்பந்தப்பட்டதில்லை, மனம் சம்பந்தப்பட்டது!

ஒரு நாள் தொலைக்காட்சியில் திரு.சுகிசிவம் அவர்களுடைய பேச்சைக் கேட்க நேர்ந்தது. அப்ப அவர் சொன்ன விஷயம் கொஞ்சம் சிந்திக்க வச்சது… அவர் சொன்னார், நாம எல்லாருமே அன்பை பிறரிடம் எதிர்பார்க்கிற பிச்சைக்காரர்களா இருக்கோம், அப்படின்னு!

உண்மைதான்னு தோணுதில்ல? உணவை விட அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தான் மனுஷன் அதிகமா ஏங்கறான், அப்படின்னு அன்னை தெரஸாவும் சொல்லி இருக்காங்க. [“There is more hunger for love and appreciation in this world than for bread.” – Mother Teresa]. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும், அது ரொம்பவே உண்மை அப்படின்னு. மனித இயல்பே அதுதான். அந்த ஏக்கம்தான். அதைத்தான் சுகிசிவம் அவர்கள் கொஞ்சம் உறைக்கிறாப்ல சொல்லியிருக்காரு, அவ்வளவுதான். நாம அன்பு செலுத்தறதைக் காட்டிலும், மற்றவங்க நம்ம மேல அன்பு செலுத்தணும்னுதான் மனசு அதிகமா எதிர்பார்க்குது. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும்போது, எல்லாமே மாறிப் போயிடுது.

நம் மீது ஒருத்தர் அதிகம் அன்பு செலுத்தணும்னு நினைக்கிற போதே தன்னலம், பொறாமை, கோபம், வருத்தம், எல்லாம் கூடவே வந்துடுது. அவங்க நம்மைக் காட்டிலும் இன்னொருத்தர் கிட்ட அன்பா இருந்தாலோ, அதிகமா பேசினாலோ, நம்மால் தாங்க முடியறதில்லை. நாம அவங்ககிட்ட அந்த அளவு அன்பா இருக்கோமோ இல்லையோ, ஆனா நம்ம மேல மட்டும் அவங்க அளவில்லாத அன்பு செலுத்தணும்னு நினைக்கிறோம். அந்த நினைப்பே நம் துயரத்துக்கெல்லாம் காரணமாயிடுது.

ஒரே வீட்டில் பிறந்தவங்களா இருந்தா, அம்மாவுக்கு என்னை விட அவன்தான் செல்லம்னும், தோழிகளா இருந்தா, அவ அன்பு பூரா எனக்கே சொந்தமாகணும்னும், காதலர்களா இருந்தா, அவன் வேற பொண்ணுங்ககிட்ட சிரிச்சு பேசவே கூடாதுன்னும், தோணறதுக்கெல்லாம் இந்த எதிர்பார்ப்புதான் காரணம்.

யாரையாவது பற்றி எனக்கு இப்படி தோணும்போதெல்லாம், “பிச்சைக்காரியா இருப்பதல்ல என் விருப்பம், பணக்காரியா இருப்பதே”, அப்படின்னு எனக்கு நானே நினைவுபடுத்திக்கிறேன். பணக்காரியாக் கூட இல்லை; வள்ளலா இருக்கணும். அன்பை அள்ளி அள்ளித் தரும் வள்ளலாக. யாரும் கேட்காமலேயே. யாரும் எதிர்பார்க்காத போதே.

போக வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும், முதல் அடி வைப்பதுதானே முக்கியம்!


அன்புடன்
கவிநயா

Wednesday, October 5, 2011

கனக தாரை - 19, 20, 21


19.
தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(H)ஷ
லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்


பாரெல்லாம் ஓர்குடை யின்கீழ் பரிவுடன் காக்கும் தாயே
பாற்கடல் அமுதாய் வந்து பரமனை மணந்தாய் நீயே
எண்திசை யாவும் காத்து நிற்கின்ற இபங்கள் சேர்ந்து
தங்கக் குடங்கள் தளும்ப கங்கை நீர் முகர்ந்து வந்து
வைகறைப் பொழுதில் உன்னை மங்கள நீராட்டுங்காலை
சென்னியில் பாதம் சூடி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!


20.
கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்
கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:


செய்யக் கமலத்தின் மேலே சிரிக்கின்ற கமலம் உன்னை
கண்பார்த்த அரியும் கமலக் கண்ணனாய் ஆனான்போலும்
கடல்போலக் கருணைபொங்கும் உன்கரிய விழிகள் என்மேல்
பட வேண்டும் அம்மா சற்றே ஏழை நான் உய்வதற்கே
இரக் கின்ற பிள்ளைக்காக இரங்கிடுவாய் அம்மா நீயே
பரந்த உன்கருணைக் கென்னை பாத்திரமாய்ச் செய்வாய் தாயே!


21.
ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்
கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:
ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:


ஆகம வேதப் பொருளின் அற்புத வடிவாம் தேவி
அன்னையாய் அன்புதந்து அகிலங்கள் காக்கும் ராணி
திருமகள் அவளைப் போற்றி தோத்திரம் இதனைப் பாட
கற்பனைக் கெட்டா செல்வமும், அற்புத ஞானக் கல்வியும்
கற்றவர் போற்றும் வாழ்வும், மற்றவர் போற்றும் குணமும்
மட்டிலா இன்பமும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார் உண்மை!


***சுபம்***


தோஹாவில் நம்ம தக்குடு அமர்க்களமா நவராத்திரி உற்சவம் நடத்திக்கிட்டிருக்கார். ஒன்பது நாள்ல பூர்த்தி பண்ற மாதிரி குங்குமலக்ஷார்சனை, தேவி மஹாத்மிய பாராயணம், ப்ரத்யக்ஷ நவகன்யா பூஜை, இப்படி எல்லா விதமான உபசாரங்களோட உற்சவம் நடந்துகிட்டிருக்கு. அதில் குங்கும லக்ஷார்ச்சனைக்கு அமைஞ்ச உம்மாச்சி யாருன்னு நினைக்கிறீங்க! இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான்! படத்தில் பாருங்க! கனக தாரைக்கு உதவினதோட இல்லாம, இப்போ வெகு பொருத்தமாக இந்தப் படத்தையும் அனுப்பித் தந்த தக்குடுவிற்கு நன்றி... நன்றி... நன்றி!!!


கனகதாராவின் மொழியாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. வருகை தந்த அனைவருக்கும் அன்னையின் பேரருள் என்கிற மழை தாரை தாரையாகப் பொழிய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்!


--கவிநயா

Tuesday, October 4, 2011

கனக தாரை - 17, 18


17.
யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!


கற்பகத் தருவே உன்றன் கடைக்கண் பார்வை வேண்டி
விருப்புடன் ஓர்நொடி யேனும் கருத்துடன் தொழுது நின்றால்
அளவில்லா பொருளும் வளமும் இன்பமும் அவர்க்குத் தருவாய்
அகிலத்தைக் காக்கும் அரங்கன் இதயத்தை ஆளும் தேவி
மனதாலும் வாக்காலும் செய்கின்ற செயல்கள் அனைத்தாலும்
அடிபணிந்து வணங்கு கின்றோம் அற்புதமே போற்றி போற்றி!18.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)
ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே
த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்


பங்கயத்தில் பாங்காய் அமர்ந்து பங்கயங்கள் கரத்தில் ஏந்தி
பால் வெள்ளைப் பட்டுடுத்தி பதுமம் போல் வீற்றிருப்பாய்
மார்பினில் மாலைகள் தாங்கி மணக்கின்ற சந்தனம் பூசி
மாலவன் மனையாள் அடியார் மனமெல்லாம் மணம்பரப் பிடுவாய்
முடிவில்லா செல்வம் தந்து மூவுலகும் காக்கும் தேவீ
என்மேலும் கருணை வைத்தால் என்றும்நான் மகிழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, October 3, 2011

கனக தாரை - 15, 16


15.
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை
நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை
நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை


கதிரவனின் காதலியாம் கமலத்தில் வசிப்பவளே போற்றி
கமலத்தின் நடுவினிலே கதிரவன் போல் ஒளிர்பவளே போற்றி
புவி யாக்கும் அன்னையே பூ தேவியே போற்றி
புவி காக்கும் அன்னையே ஸ்ரீ தேவியே போற்றி
வான வரெல்லாம் வணங்கும் வசுந் தரியே போற்றி
நந்த கோபன் மருமகளே திருமகளே போற்றி போற்றி!16.
ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி
ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி
த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி
மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே


அளவில்லாச் செல்வங்களைஅருள்கின்ற அன்னையே போற்றி
ஆண்டியையும் அரசனாக்கும் அற்புதத் தேவியே போற்றி
ஐம்புலனுக்கும் இன்பந் தரும் அஞ்சுக மொழியாளே போற்றி
பதுமங்களும் நாணும் எழில் பங்கய விழியாளே போற்றி
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் திருவே போற்றி
மாறாத அன்பைத் தந்தருளும் தாயே போற்றி போற்றி!


--கவிநயா

(தொடரும்)

Sunday, October 2, 2011

கனக தாரை - 13, 14

Sri Vishnu Bhagwan and Lakshmi Mata

13.
நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை
நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை
நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை
நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை


தங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி
தாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி
தரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி
தரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி
தேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி
சாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி!


14.

நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை


பிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி
ஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி
கோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி
தாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி
தாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி
தாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி!


--கவிநயா

(தொடரும்)

Saturday, October 1, 2011

கனக தாரை - 11, 1211.
ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை
ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை


நற்பலன்கள் எல்லாம் அளிக்கும் நான்மறையின் தலைவி போற்றி
அகிலத்தின் அழகுக் கெல்லாம் ஆதார ஸ்ருதியே போற்றி
அழகுக்கு அழகு செய்யும் அழகுருவே அமுதே போற்றி
ஆயிரம்இதழ் தாமரையில் அமர்ந் தாட்சி செய்வாய் போற்றி
செல்வங்கள் எல்லாம் வணங்கும் செல்வநா யகியே போற்றி
புருஷோத்தமன் மார்பில் விளங்கும் பொன்மகளே போற்றி போற்றி!


12.

நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை
நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை
நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை
நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை


எழி லென்னும் சொல்லுக்குப் பொருளான திருவே போற்றி
கமலந்தான் விரிந்தது போல் மலர்ந்திட்ட முகத்தாய் போற்றி
கடைந்திட்ட பாற்கடலில் கதிரவன்போல் உதித்தாய் போற்றி
இன்னமுதும் மதியும் மகிழ இளையவளாய் எழுந்தாய் போற்றி
ஆதிசேஷன் மடியில் துயிலும் அரங்கனவன் மனையே போற்றி
அஞ்சனக் கருமை வண்ணன் அருமைத் துணையே போற்றி போற்றி!--கவிநயா

(தொடரும்)