Showing posts with label பரதம். Show all posts
Showing posts with label பரதம். Show all posts

Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா

Sunday, December 11, 2011

தேவி சரணம்


போன வாரம் சனிக்கிழமை அன்று ‘தேவி சரணம்’ என்கிற நடன நிகழ்ச்சி செய்தேன். ரெண்டு மூணு வருஷங்களாகவே அவளுக்காக ஒரு நடன நிகழ்ச்சி பண்ணனும்னு தோணிக்கிட்டே இருந்தது. பல சிரமங்களுக்கு இடையில் அவள் அருளால் நல்லபடியாக நடந்து முடிஞ்சிட்டது.

அன்னை மீதான பல வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினேன். எல்லாமே பிரபலமான பாடல்களாக இருந்ததால, நடனம் எப்படி இருந்தாலும், மக்கள் இரசிச்சாங்கன்னு தெரிஞ்சது :) குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகலேது?’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, இவற்றுக்கெல்லாம் ஆடினேன். என்னுடைய நடன ஆசிரியைக்கும் இந்த சமயத்தில் வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன் (அவங்க இதல்லாம் படிக்க மாட்டாங்கன்னாலும் :).

தேவி பாடல்களுக்கான நடனம் அவ்வளவா தெரியாது, தெரிஞ்சதும் ரொம்ப நாள் முன்னாடி கத்துக்கிட்டதுங்கிறதால மறந்துருச்சு. சில சமயம் மனசில் இருப்பதை பாடணும்னு தோணற மாதிரி, ஆடணும்னும் தோணும். என் பாட்டை நானே பாடி, நானே அபிநயம் பிடித்து ஆடுவதுண்டு. ஆனால், சில பாடல்களாவது ஒழுங்கா கத்துக்கணும், அப்படிச் செய்யற போது அவளை நினைக்கிற நேரமும் அதிகமாகும் என்கிற (சுயநல) நோக்கத்தோடதான் ஆரம்பிச்சேன்.

நிறைய பேருக்கு நான் ஏன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றேன்னு புரியவே இல்லை. நான் ஏதோ புதுவிதமான நடன நிகழ்ச்சி செய்யணுங்கிறதுக்காக செய்யறதா நினைச்சாங்க. உண்மையில் இது திறமையின் வெளிப்பாட்டுக்காக இல்லை (இருந்தாதானே வெளிப்படுத்த! :) மன உணர்வின், அவளுக்கான அன்பின், வெளிப்பாட்டுக்காக என்பது ஒரு சிலருக்குத்தான் புரிஞ்சது.

வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நடக்குது. பல சமயங்களில் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு தெரியறதில்லை. காரணமில்லாம துயரங்கள் வரும் போது, ‘இதுதான் விதி’ன்னோ, அல்லது ‘பூர்வ ஜென்ம பாவம்’னோ, அல்லது ‘பிராப்தம் அவ்வளவுதான்’னோ எழுதி வெச்சிடறோம். சில விஷயங்கள் காலம் கடந்து புரியும். ‘ஓ, அன்றைக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு இப்பதானே தெரியுது?’, அப்படின்னு மனசுக்குள் ஒரு விளக்கு எரியும்.

என் வாழ்க்கையில் எனக்கு என்ன புரிஞ்சதோ இல்லையோ, ரெண்டு விஷயம் மட்டும் இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதன் காரணம், அவளைப் பாடணும் என்கிறதுக்காகவே என்பதும்; காலம் கடந்தாலும் நான் நடனம் கத்துக்கிட்டதுக்கு காரணம், அவளுக்காக ஆடணும் என்பதற்காகவே, என்பதும்தான்.

ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டிருந்தாலும், கவிதை என்பதை என் உணர்வுகளுக்கு வடிகாலாதான் இறைவன் கொடுத்திருக்கான்னு ரொம்ப நாள் நினைச்சிக்கிட்டிருந்தேன் – அவளுக்காக, அவளைப் பற்றி, அவளைப் போற்றி, எழுத ஆரம்பிக்கிற வரை. அதுக்கப்புறம் தான் அந்த விளக்கு எரிஞ்சது!

அதே போலத்தான் நடனமும். சின்ன வயசிலிருந்து உள்ளுக்குள்ள இருந்த ஆசை இங்கே வந்து நிறைவேறக் காரணம் என்னன்னு இப்போதான் புரியுது. இறைவனுக்கான ஏக்கத்தை அருமையாகவும், மனப்பூர்வமாகவும், வெளிப்படுத்த, பரதம் ஒரு மிகச் சிறந்த சாதனம். பரதமும், ஆன்மீகமும் கையோடு கைகோர்த்துச் செல்பவை. வர வர பரதம் குழு நடனமாகவும், fusion நடனமாகவும், மாறிக்கிட்டு வரதைப் பார்த்தா கொஞ்சம் கவலையாதான் இருக்கு. அதனோட ஆன்மீகத் தன்மை அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போயிடுமோன்னு தோணுது.

எந்த ஒரு கலைஞனுக்குமே இறையருளினால்தான் அந்தக் கலை வாய்க்கிறது. அந்தக் கலையை இறைவனுக்கே காணிக்கையா தரும்போதுதான் அதன் நோக்கம் நிறைவடைவதைப் போல ஒரு உணர்வு. ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச வட்டம், எல்லா இடமும் சுத்தி வந்து மறுபடியும் அதே புள்ளியில் முழுமை பெறுவதைப் போல.

சின்னப் பிள்ளைங்கல்லாம் அப்பா, அம்மா, மற்ற பெரியவங்கல்லாம் விசேஷங்களுக்கு தர்ற பணத்தை சேர்த்து வைப்பாங்க. பிறகு யாருக்காச்சும் எதுக்காவது பரிசு தரணும்னா, அதில இருந்துதான் எடுத்து செலவழிப்பாங்க. இல்லன்னா அவங்ககிட்ட ஏது பணம்? அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு? எல்லாமே அவன் தந்ததுதான். அவன் தந்ததை அவனுக்கே திருப்பித் தரோம்.

அந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.

பரிசு எப்படி இருந்தாலும், அதில் இருக்கிற பிரியம்தானே முக்கியம்?

அன்னையின் திருவடிகள் சரணம்.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

Saturday, August 27, 2011

ஜணுத ஜணுத தக...

(தொடர்ச்சி)

5. ஊர்த்துவ தாண்டவம்

தாண்டவத்துக்கு சிவன் அதிபதி போல, லாஸ்யத்துக்கு சக்தி அதிபதியாம். அதாவது தாண்டவத்தை சிவன் ஏற்படுத்தியதி போல, லாஸ்யத்தை ஏற்படுத்தியவள், சக்தி. லாஸ்யம் என்பது மென்மையும் நளினமும் கொண்டது.


ஒரு முறை சிவனுக்கும், சக்திக்கும், தத்தம் திறமையே உயர்ந்தது, அப்படின்னு கலகம் ஏற்பட்டதாம். அதைத் தீர்க்கறதுக்காக, அவங்க ரெண்டு பேரும் கந்தர்வர்கள், கின்னரர்கள், இன்னும் பல தேவசாதியினரின் முன்னால் நடனம் ஆட ஆரம்பிச்சாங்களாம். இரண்டு பேரின் நடனமுமே உயர்வு தாழ்வு பிரிச்சு சொல்ல முடியாதபடி ரொம்ப அருமையா இருந்ததாம். போகப் போக இலேசா சக்தியின் கை ஓங்கும் போல இருந்ததாம். அந்த சமயம், சிவன் அவரோட ஒரு காலை தலை வரை தூக்கி வச்சு தாண்டவம் செய்தாராம். சக்திக்கு அப்படிச் செய்ய விருப்பமில்லாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாளாம். அந்த சமயத்தில் சிவபெருமான் ஆடிய நடனம்தான் ஊர்த்துவ தாண்டவம்.

6. உமாமகேசுவர தாண்டவம்

அனைத்தையும் சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொள்கிற சமயம், அவனும், அம்பிகையும், மயானத்தில் நடனம் செய்கின்றனராம். வீர பைரவனாக சிவ பெருமானும், வீர பைரவியாக அம்பிகையும், நிருத்தம் செய்யறாங்க. ஒவ்வொரு உடலினின்றும் விடுபடுகிற உயிர் வந்து அவர்களோட கலக்க, மயானத்தில் எரிஞ்சிக்கிட்டிருக்கும் சிதைகளில் இருந்து பொறிகளாக ஒளிக் கதிர்கள் அவர்களுக்குள்ளே புகுந்து விடுகின்றனவாம். அப்போது அவர்களுடைய நடனம், மலைகள் உருள, கடல்கள் பொங்க, நிலமே தடுமாறி அசைகிற மாதிரி வீராவேசமா இருக்காம். இந்த தாண்டவத்தையே உமா தாண்டவம் அல்லது உமாமகேசுவர தாண்டவம், அப்படின்னு சொல்றாங்க.

7. சம்ஹார தாண்டவம்

உலகங்கள் எல்லாத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்ட பின்னால் பரமசிவன் புரிகிற பிரளய தாண்டவத்தைத் தான் சம்ஹார தாண்டவம் அப்படிங்கிறாங்க. இந்தத் தாண்டவமும் மயானத்தில் தான் நடக்கிறதாம். உடலெங்கும் திருநீறணிந்து, செஞ்சடையில் சந்திரனின் கலை அசைந்து ஆட, உலக மாயையிலிருந்து சீவர்களை விடுவித்து தன்னில் அடக்கிக் கொண்டு விட்ட பெருமையை வெளிப்படுத்தும் வண்ணம் சிவன் இந்த தாண்டவத்தை ஆடுகிறானாம்.

இன்னும் எத்தனையோ விதமான தாண்டவங்களும், சில சமயங்களில் வெவ்வேறு பெயர்களிலும் அறியக் கிடைக்கின்றன. இவற்றை முக்கியமான ஏழு தாண்டவங்களாகக் கொள்ளலாம்.


அன்புடன்
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.

படம் இங்கேர்ந்து. அங்கேயே இன்னும் வேற நல்ல படங்களும் பார்த்தேன்.

Sunday, August 14, 2011

ஜணுத ஜணுத தகி ஜணுத ஜணுத தக

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 4

பரதம் பற்றிய மற்ற பதிவுகள் இங்கே...


குனித்த புருவம்.
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு.
பனித்த சடை.
பவளம் போல மேனி.
பால் வெண்ணீறு.
இனித்தமுடன் எடுத்த பொற்பாதம்…

ஆஹா! அப்பர் சுவாமிகள் பாடும்போதே, அவரைப் போல நேரில் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காட்டாலும், அப்படி ஒரு காட்சி கிடைச்சா எத்தனை பிறவி வேணும்னாலும் எடுக்கலாம், அப்படின்னு அவர் சொல்வதன் பொருள் இலேசா புரியறாப்லதானே இருக்கு!

அவரு இப்படி உருகி உருகிப் பாடும் அப்பேற்பட்ட அழகன் யாருன்னு நினைக்கிறீங்க? (இந்தப் பாட்டைப் பற்றி இது வரை தெரியாதவங்க மட்டும்தான் கை தூக்கணும்! :)

ஒரு குறிப்பு தரவா? … அவனுக்கு சுந்தரன், அப்படின்னு கூட ஒரு பேர் இருக்கு. என்ன, யூகிச்சீங்களா? ….. சரி, நானே சொல்லிர்றேன்… அது வேற யாருமில்ல, சாக்ஷாத், நம்ம சுந்தரியோட கணவன், எ(ன் த)ந்தை ஈசன்தான். சுந்தரி தன் மேனியை வேற அவனோட பகிர்ந்தாள் இல்லையா! அதனாலதான் அவனுக்கு அவ்ளோ அழகு வந்திருக்கு போல! :)

நடராஜன், நடனத்துக்கு மட்டும் ராஜனல்ல, இந்த அண்ட சராசரத்துக்கெல்லாம் ராஜன். அவன் எத்தனையோ வித விதமான நாட்டியங்களை ஆடறானாம். அப்படி அவன் ஆடுகிற நாட்டியத்துக்கெல்லாம் ‘தாண்டவம்’ அப்படின்னு பேரு. ‘தாண்டவம்’, அப்படிங்கிற சொல்லிலேயே எத்தனை கம்பீரம்!

இறைவனுக்கு ஐந்து தொழில்கள் உண்டாம். சாதாரணமா மூன்றைத்தான் பிரதானமா சொல்வாங்க. படைத்தல், காத்தல், அழித்தல், அப்படின்னு. ஆனா உள்ளபடி ஐந்து தொழில்கள் இருக்காம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், அப்படின்னு. இந்த ஐந்து தொழில்களையும் செய்யறதால ஈசனுக்கு ஏற்படுகிற ஆனந்தமே, தாண்டவங்களாக வெளிப்படுதாம்.

அப்படி கூத்தபிரான் செய்கிற தாண்டவங்கள், மொத்தம் 7. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், விஜய தாண்டவம், ஊர்த்வ தாண்டவம், உமா தாண்டவம், சம்ஹார தாண்டவம், எனப்படுவன. அவற்றைப் பற்றி சுருக்கமா பார்க்கலாம்…

1. ஆனந்த தாண்டவம்

தன்னுடைய உலகப் படைப்பைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி கொண்டு ஆனந்த தாண்டவம் புரிகிறானாம்.

வலது கையில் ஏந்திய உடுக்கை, உலகப் படைப்புக்குக் காரணமான நாதத்தைத் தோற்றுவிக்கிறது. இடது கையில், படைப்புக்கு இடையூறாக வரும் தீய சக்திகளை ஒழிக்கும் அக்னியை ஏந்துகிறான். ஒரு கை அபயம் அளிக்க, இன்னொரு கை வெற்றியைக் குறிக்கிறது.

2. சந்தியா தாண்டவம்

இடையூறின்றி படைப்புத் தொழில் நடைபெறுவதில் ஆனந்தம் கொண்டு, அந்தி வேளையில் இந்த நடனம் புரிகிறானாம்.

உமா தேவி இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்க, இந்திரன் குழல் ஊத, திருமால் மிருதங்கம் வாசிக்க, பிரும்ம தேவன் தாளமிட, கலைமகள் வீணை மீட்ட, தேவரெல்லாம் கண்டு களிக்க, சிவபெருமான் சந்தியா தாண்டவம் செய்கிறானாம்.

3. கலிக தாண்டவம்

உலக முன்னேற்றத்தைத் தடை செய்யும் அஞ்ஞானம், அதர்மம், போன்ற தீய சக்திகளை அழித்து, அணையா ஜோதியை ஏற்றி வைத்ததன் சிறப்பை இந்த தாண்டவத்தின் மூலம் உணர்த்துகிறானாம்.

4. விஜய தாண்டவம்

ரொம்ப காலங்களுக்கு முன்னால், சில பேருக்கு நெறய்ய மந்திர சக்தி இருந்துச்சாம். ஆனா அதை கெட்டது செய்யத்தான் பயன்படுத்தினாங்களாம். அவங்கள திருத்தறதுக்காக, நம்மாளு, ஒரு முனிவரைப் போல அவங்க இடத்துக்கு போனானாம். ஆனா அவங்க திருந்தற மாதிரி இல்லையாம். சிவனை அழிக்கறதுக்குன்னே ஒரு வேள்வி வளர்த்து, அதுல இருந்து ஒரு பயங்கரமான புலியை வர வச்சு, சிவபெருமான் மேல ஏவினாங்களாம். ஆனா சிவன், அந்தப் புலியை ரொம்ப சுலபமா பிடிச்சு, சுண்டு விரலாலேயே அதோட தோலை உரிச்சு, இடுப்புத் துணியா கட்டிக்கிட்டானாம்!

அடுத்த்தா அந்த கெட்ட முனிவர்கள், ஒரு பெரிய்ய்ய்ய நச்சுப் பாம்பை ஏவி விட்டாங்களாம். ஆலஹால விஷத்தையே விழுங்கினவனுக்கு பாம்பு எம்மாத்திரம்? அதையும் பிடிச்சு, தன் கழுத்தில் மாலை ஆக்கிட்டானாம்!

அப்பவும் அந்த முனிவர்கள் முயற்சியை விடலையாம். எல்லா தீய சக்திகளையும் ஒண்ணு சேர்த்து, கஜாசுரன் அப்படிங்கிற அசுரனை ஏற்படுத்தி, சிவனை அழிக்க அனுப்பினாங்களாம். அந்த அரக்கனை சிவபெருமான் தன் காலடில போட்டு மிதிச்சு வெற்றி பெற்று, தாண்டவம் செய்தானாம். அதுதான் விஜய தாண்டவமாம்.

**

மீதி இருக்கிற 3 தாண்டவங்களையும் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

அன்புடன்,
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.


Wednesday, June 30, 2010

ரசமோ ரசம்!

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 3

முதல் பகுதி: இங்கே; இரண்டாம் பகுதி: இங்கே



ரசம்னு சொன்னவுடனே பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், இந்த ரச வகைகள் பத்திப் பேசப் போறோம்னு நினைச்சு வந்திருந்தீங்கன்னா, மன்னிச்சுக்கோங்க :) இன்னிக்கு நாம பரதத்தில் உள்ள நவரசங்களைப் பத்திதான் பார்க்கப் போறோம்!

‘ரசம்’ என்பது என்ன? நடனம் ஆடுபவர் வெளிப்படுத்தும் பாவங்கள், பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே ரசம் அப்படின்னு நாட்டிய சாஸ்திரம் சொல்லுது. ரசனை, ரசிகர், இந்த சொற்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தா தெரியும்...

சினிமா பார்க்கும்போது எத்தனை பேர் கைக்குட்டையால கலங்கின கண்ணை துடைச்சிருக்கீங்க! வில்லனை பார்க்கும்போது நாமே திரைக்குள்ள போய் ரெண்டு போடு போடலாம்கிற மாதிரி கோவம் வந்திருக்கா? :) எல்லாம் சுபமா முடியும் போது ‘அப்பாடி’ன்னு மனசு நிறைவா, சந்தோஷமா உணர்ந்ததுண்டா?

அதே போலத்தான் இதுவும். நடனமாடுபவர் மிகவும் திறமையானவராய் இருக்கும் பட்சத்தில் அவர் வெளிப்படுத்தும் பாவங்கள் கண்டிப்பா பார்ப்பவர்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவரச பாவங்கள் என்பது தென்னிந்திய நடனங்களுக்கே, குறிப்பா பரதத்துக்கே உரிய சிறப்பு. மற்ற நடனங்கள் பார்த்தீங்கன்னா, வெறும் உடலை, கைகால்களை மட்டுமே பயன்படுத்துவாங்க. ஆனா பரதத்திலும், பிற தென்னிந்திய பாரம்பரிய நடனங்களிலும்தான், கதை சொல்லும் உத்தியும், அதன் காரணமா பலவித உணர்வுகளை முகபாவத்தாலும், முத்திரைகளாலும் வெளிப்படுத்துவதும் இருக்கு.

அன்றாட வாழ்க்கையில் நாம அனுபவிக்கும் பலவிதமான மன நிலைகளைத்தான் விதவிதமான முகபாவங்களாக பரதத்தில் வெளிப்படுத்தறாங்க. நாட்டிய சாஸ்திரத்தில் இந்த மாதிரியான உணர்வுகளை ஒன்பது விதமா வகைப்படுத்தி இருக்காங்க.

சிருங்காரம் –

சிருங்காரம் என்றால் அழகு. மனிதனுக்கு அழகு எது? அன்பு. அன்பில் பலவகை இருக்கு. ஆண், பெண்ணுக்கிடையேயான காதல், தாய், பிள்ளைக்கிடையேயான அன்பு, குரு, சிஷ்யர்களுக்கிடையிலான அன்பு, முக்கியமாக, இறைவனிடம் பக்தன் காட்டும் அன்பு, இப்படி…

ஏனோ சிருங்காரம்னா காதல் மட்டுமேங்கிற மாதிரிதான் இப்போதைய புரிதல் இருக்கு. இது தவறு. நாட்டியமே ஆன்மீகத்துக்கு மிக நெருக்கமானது, அதுவும் இறைவனை அடைய உதவுகிற ஒரு யோகம் தான்! அதனால இறைவனிடம் காட்டும் அன்புதான் இங்கே தலையாயது. அஷ்டபதியில் கோபியர்கள் கண்ணனிடம் காட்டும் அன்பு வெறும் காதல் மட்டும் இல்லை. அது மிகவும் மேலான ஒரு நிலைப்பட்ட பக்தி. சிருங்காரம் பற்றி இப்படி சொல்வது நான் இல்லை, திருமதி. பாலசரஸ்வதி, திரு. தனஞ்சயன், இந்த மாதிரியான நாட்டிய ஜாம்பவான்கள்தான் இப்படி சொல்லி இருக்காங்க.

இதன் காரணமாத்தான் சிருங்காரத்தை ரசங்களில் முதன்மையானதாக சொல்றாங்க. (‘king of rasas’)

ரௌத்ரம் –

கோபத்தை பல விதமா வெளிப்படுத்துவதுதான் ரௌத்ரம். கோபம் வராதவங்கன்னு யாராவது உண்டா? விசுவாமித்திரர், துர்வாசர், இவங்களைப் போன்ற முனிவர்களுக்கே மூக்குக்கு மேல கோவம் வருமாம்! அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?

அதனால மிக சுலபமா யாருமே வெளிப்படுத்த முடியற உணர்வு இதுதான் :) உங்களையும் சேர்த்துத்தான்!

ராட்சதர்களைக் காட்டும் போதோ, அல்லது தெய்வம் அரக்கர்களை அழிக்கையில் ஏற்படும் ஆங்காரத்தைக் காட்டும் போதோ, அல்லது இயற்கையின் சீற்றத்தைக் காட்டும் போதோ, இந்த மாதிரி சமயங்களில் இந்த ரசம் பயன்படுகிறது. நடராஜர் ஆடும் பலவிதமான தாண்டவங்களில், அவர் அழிக்கும் கடவுளாக ஆடும் தாண்டவத்தை, ‘ருத்ர தாண்டவம்’ அப்படின்னுதானே சொல்றாங்க…

வீரம் –

தன்னம்பிக்கை, தைரியம், ஆண்மை, உறுதி, இந்த மாதிரியான மனநிலைகளை வெளிப்படுத்தறதுதான் வீரம் என்பது. வீரம் என்பதை உடலுடைய தோரணையிலேயே காட்டலாம். அதை சரியா செய்யலைன்னா அதுவே ‘ஹாஸ்ய’ ரசமாயிடும் அப்படிங்கிறார், திரு. தனஞ்செயன் :)

வீரம்னு சொன்ன உடனே வில்லேந்திய ஸ்ரீ ராமன் தான் என் நினைவுக்கு வருவான்….

பீபஸ்தம் –

பீபஸ்தம்னா அருவருப்பு. எதையாவது பார்க்கும் போது “ஐயய்ய…ச்சீ..ச்சீ” அப்படின்னு முகம் சுளிக்க வைக்கிற உணர்வு. அதை நினைச்சாலே உமட்டுதுன்னு சொல்றோம்ல, அந்த உணர்வை வெளிப்படுத்தற பாவம்தான் இது.

ஹாஸ்யம் –

சந்தோஷம், சிரிப்பு. நகைச்சுவை. இப்படி இதையெல்லாம் வெளிப்படுத்தறதுதான் ஹாஸ்யம். தோழியுடன் கிண்டல் பண்ணி விளையாடறபோதோ, அல்லது குட்டிக் கிருஷ்ணனோட குறும்புகளைப் பற்றிச் சொல்லும் போதோ, இந்த ரசம் பயன்படும்.

கருணா –

கருணை. இரக்கத்தால் ஏற்படுகிற அன்பு. ஒருவருடைய துன்பத்தைப் பார்த்து நமக்கு ஏற்படும் இரக்க உணர்வு. மனிதர்கள் படும் துன்பத்தைக் கண்டு புத்தருக்கு ஏற்பட்டது கருணை. அதனால தான் அந்த துன்பத்துக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்துச் சொன்னார். தேவர்கள் மகிஷனால் பட்ட துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு இரங்கி, அவர்களைக் காக்க வந்தாள், தேவி.

அத்புதம் –

அற்புதம். அதிசயம். ஆச்சர்யம். எதிர்பாராத ஒன்றை பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, அல்லது அதிர்ச்சி, இரண்டையுமே இதனால் வெளிப்படுத்தலாம்.

பயம் –

இதைப் பற்றி சொல்லாமலேயே தெரியுமே… கருங்கும்னு இருக்கிற இருட்டில் தனியாப் போகும்போதோ, சிங்கம், புலிகிட்ட மாட்டிக்கும் போதோ, தீயவற்றைக் கண்டு ஓடி ஒளியும்போதோ, இப்படி பல இடங்களில் ‘பயம்’ ‘காட்டலாம்’ :)

சாந்தம் –

சாந்தம் என்பது அமைதி. இன்பமோ துன்பமோ எதுவுமற்ற அமைதியான மனநிலை. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற போது இந்த நிலையைத்தான் அடைந்தார். பரதமும் ஆன்மீகமுக் கைகோர்த்துச் செல்வதால், வெவ்வேறு ரசங்களையும் அனுபவித்தப் பின், அலை ஓய்ந்தாற்போல அனைத்தும் ஓய்ந்து, இறைவனை அடைகையில் ஏற்படும் மிகவும் உயர்வான மனநிலை இது.

எந்த விதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதால் இதை நவரசங்களில் ஒன்றாக சொல்லக் கூடாது என்ற சர்ச்சை இருக்கிறது. இருந்தாலும் நாட்டிய சாஸ்திரத்தின் படி, முதல் 8 ரசங்களையும் தந்தவர் பிரம்மா என்றும், சாந்தம் என்கிற ஒன்பதாவது ரசத்தை நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பரத முனிவரே சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலே படத்தில் இருப்பது இதுதான்...

***

அது சரி... நீங்க இன்னிக்கு என்னென்ன ரசம் செய்தீங்க? சொல்லுங்க பார்க்கலாம்... :)



அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி:http://www.carolinejariwala.com/paintings_03-05/images/navarasa_hasya.jpg

Sunday, March 21, 2010

நீங்களும் நடனமணிதான்... :)

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 2

முதல் பகுதி இங்கே...



நாட்டியக் கலைக்கு அடிப்படையான நூல்கள் இரண்டு உண்டு. அநேகமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க.

1. "நாட்டிய சாஸ்திரம்", பரத முனிவர் எழுதியது
2. "அபிநய தர்ப்பணம்", நந்திகேஸ்வரர் அருளியது

குருகுலத்தில் முறையாக நடனம் கற்றுக் கொள்ளும்போது, நடனம் மட்டும் கத்துக்கறதில்லை. நடனத்துக்கு தேவையான வாய் பாட்டு, நட்டுவாங்கம், நடன அமைப்பு, இப்படி நடனத்துக்கு தேவையான எல்லாமே கத்துக்கலாம். அதோடு கூடவே, புராணக் கதைகள், கலாசாரம், பக்தி, போன்றவையும் அத்தகைய சூழ்நிலையில் இயல்பாக கை வந்துவிடும்.

ஆனால் அந்த மாதிரி சூழ்நிலை அமையாத போது என்ன செய்யறது? எனக்கெல்லாம் நடனம் தவிர மற்றதெல்லாம் தெரியாது. நடனம் மட்டுமே கத்துக்கிட்டேன். நடனம் ஆடறதுக்கும், அமைக்கிறதுக்கும் தாளம் கொஞ்சம் புரிஞ்சிருக்கணும், அவ்வளவுதான். அதை தவிர மற்ற அறிவெல்லாம் குறையுதே என்கிற குறை இப்போவும் இருக்கு. ஆர்வமும் வாய்ப்பும் இருக்கறவங்க மேலும் மேலும் வளர்வதையும் பார்க்கிறோம். அந்த வகையில் சந்தோஷம் தான்.

சரி, தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போயாச்சு... நான் தியானம் பண்ற அழகும் இப்படித்தான்! :) வாங்க, மறுபடி தலைப்புக்குள்ள போவோம்...

"நாட்டிய சாஸ்திர"த்தின் படி, நடனத்தில் மூன்று வகை இருக்கு. இதை "நடன பேதங்கள்" அப்படின்னும் சொல்லலாம் - நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் - அப்படிங்கிற மூணும்தான் அவை.

நிருத்தம் - அப்படின்னா முழுக்க முழுக்க வெறும் நடனம் தான். அதாவது அதில் கதையோ, செய்தியோ, எதுவும் இருக்காது. நடன அசைவுகளுக்கும் அடவுகளுக்குமே இதில் முக்கியத்துவம் தரப்படும். ('அடவு'ன்னா step அப்படின்னு முன்னமே பார்த்தோம்). நடனங்கள் பற்றி தெரிஞ்சவங்களுக்கு "ஜதிஸ்வர"த்தை உதாரணமா சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.

நிருத்தியம் - கதை சொல்லும் தன்மையோடு இருக்கிற நடனம்தான் நிருத்தியம். முத்திரைகளின் உதவியோடும், 'பா'வத்தின் உதவியோடும் ஒரு கதையையோ அல்லது செய்தியையோ சொல்லுவதே நிருத்தியம். கூடவே அடவுகளும் இருக்கும். சில கதை செய்திகள் குறிப்பால் உணர்த்தப்படும் (symbolic). இங்கே "சப்தம்" அல்லது "வர்ண"த்தை உதாரணமா சொல்லலாம்னு நினைக்கீறேன்.

நாட்டியம் - இங்கே முழுக்க முழுக்க 'பா'வம், அல்லது அபிநயத்திற்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். இங்கே ஒரு நிகழ்ச்சி 'நிருத்திய'த்தில் உள்ளது போல குறிப்பால் மட்டுமே உணர்த்தப் படாமல், அப்படியே விளக்கமாகவும் (realistic) செய்து காட்டப்படும். இதற்கு 'பத'த்தை உதாரணமா கொள்ளலாம்.

(இங்கே தந்த உதாரணங்களெல்லாம் என் புரிதலை வைத்து தரப்பட்டவை.)

"நாட்டிய சாஸ்திரத்தின்" படி அபிநயத்திலும் 4 வகை இருக்கு. அதாவது ஒரு செய்தியை எப்படியெல்லாம் சொல்லலாம், convey பண்ணலாம், அப்படிங்கிறதுக்கு.

ஆங்கிகம் - அங்க அசைவுகள், அடவுகள், முத்திரைகள், மூலமா சொல்றது

வாச்சிகம் - நடனத்துக்கு பக்கபலமாய் இருக்கின்ற பாடலையும் இசையையும் குறிக்கும், நாட்டிய நாடகங்களில் பேசறதையும் எடுத்துக்கலாம்

ஆஹார்யம் - ஆடை, ஆபரணங்கள் மூலமா சொல்றது - ராஜான்னா அதற்கு தகுந்த மாதிரி உடை, கிரீடம், கண்ணன்னா தலையலங்காரத்தில் ஒரு மயிலிறகு, இப்படி...

சாத்வீகம் - உணர்வுகளை வெளிப்படுத்தறது - முகத்தில் மட்டும் இல்லை, உடம்போட ஒவ்வொரு அசைவிலும் ஒரு உணர்வை வெளிப்படுத்தலாம், அதனாலதான் 'முக'பாவம் அப்படின்னு மட்டும் சொல்லாம பொதுவா 'பா'வம்னு சொல்றோம்.

விடை பெறும் முன்னாடி சிந்திக்க ஒரு செய்தி:

தினசரி வாழ்க்கையிலேயே நாம எல்லாரும் நடனமணிகள்தான் :) "இங்கே வா" அப்படின்னு தூ...ரத்தில் இருக்கிறவங்களை எப்படி கூப்பிடுவீங்க? கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் இருக்கவங்க கிட்ட அவங்க உடை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லணும்னு வைங்க, அப்ப நீங்க நிச்சயம் "ஹம்ஸாஸ்யோ" பண்ணியிருப்பீங்க! "கொஞ்சம் போதும்", அப்படின்னு காது கேட்காத உங்க பாட்டிக்கிட்ட எப்படி சொல்லுவீங்க? இப்படித்தான் நாம தினசரி பயன்படுத்தறவையே முத்திரைகளா (stylized) நடனத்தில் பயன்படும் போது பார்க்கிறவங்களுக்கும் புரிஞ்சுக்க சுலபமா இருக்கு. உங்க வீட்ல நீங்க செய்யும் முத்திரைகளை அடுத்த முறை நடன நிகழ்ச்சிக்கு போகும் போது ஒப்பிட்டு பாருங்க!


மீண்டும் பிறகு பார்க்கலாம்...


அன்புடன்
கவிநயா

Sunday, February 7, 2010

ஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…!



அப்படின்னு சொல்லத்தான் ஆசை. அபூர்வமா இது உண்மையாகவே இருந்தால் கூட 60-ஐ 40-ன்னாவது கொஞ்சம் குறைக்கத்தான் வேணும்!

பரதநாட்டியம்!

இந்தக் காலத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பு தவிர பல கலைகளும் கத்துக்கணும், பல துறைகளிலும் சிறந்து விளங்கணும்னு எல்லா பெற்றோர்களும் ரொம்ப விரும்பறாங்க. பல அம்மாக்கள் பெண் குழந்தை பிறந்த உடனேயே “எப்பங்க என் பொண்ணை டான்ஸ் க்ளாசில் சேர்க்கலாம்?”னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க!

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பரதம் கத்துக்க ஆரம்பிப்பதற்கு குறைஞ்சது 6 வயசாவது ஆகியிருக்கணும். அப்பதான் குழந்தைகளுக்கு கை கால்களை, விரல்களை விருப்பம் போல் நீட்டவும், மடக்கவும், சொல்வதை உள்வாங்கிப் புரிந்து கொண்டு அதன்படி செய்யவும் முடியும். coordination and comprehension ரொம்ப அவசியம்.

சில பேர் ஆர்வக் கோளாறால ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாலும், வயசுக்கேத்த மாதிரியும், கிரகிப்புத் தன்மைக்குத் தகுந்த மாதிரியும்தான் அவங்களோட கத்துக்கற வேகமும் இருக்கும். அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம்! 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.

முத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி! :)

கத்துக்க ஆரம்பிச்ச பிறகு ஆடிப் பார்க்கிறதும் பயிற்சி செய்யறதும் முக்கியம்தான். ஆனா குழந்தைகளுக்கு வெறுப்பு வந்திர்ற அளவு அவங்களை வற்புறுத்தக் கூடாது. எப்பவும் தன்மையா சொல்லி, நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். ஒரு சில பிள்ளைகளுக்கு நடனம் கத்துக்கறதில் விருப்பமே இருக்காது, பெற்றோரின் விருப்பத்துக்காக கஷ்டப்பட்டு வருவாங்க. அதனால பெற்றோருக்கும், சொல்லித் தர்றவங்களுக்கும், அந்த குழந்தைக்கும், இப்படி எல்லோருக்குமே கஷ்டம்தான்.

அதனால குழந்தைக்கு எதனாலாவது ஆர்வம் குறையற மாதிரி இருந்தா, அவங்க சொல்ற காரணங்களை காது கொடுத்துக் கேளுங்க. ஆனால், சில காலத்திற்கு பிறகுதான் குழந்தைக்கு ஓரளவாச்சும் தெரியும் தனக்கு இது பிடிக்குதா, இல்லையான்னு. அதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடந்துக்கணும். அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து முடிவுகள் எடுங்க.

பொதுவா, சிறுமிகள் பருவ வயசை எட்டறதுக்கு முன்னாடியே கத்துக்க ஆரம்பிக்கிறது நல்லது. டீனேஜ் வயசில் அவங்களுக்கு பல கவலைகளும் பல distractions-ம் இருக்கும். நண்பர் வட்டத்தின் பாதிப்பு நிறையவே இருக்கும். அதனால, சின்ன வயசிலேயே ஆரம்பிச்சிட்டா, வளரும்போதே அவங்களுக்கு பரதமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆயிடும்.

நல்ல அங்க சுத்தத்தோட அடவுகள் (steps) பண்ணவும், ஓரளவு பாவம் வரவும் குழந்தைக்கு மனதிலும் முதிர்ச்சி வரணும். இதுக்கெல்லாம் சில வருஷங்களாவது ஆகும். “30 நாட்களில் ஹிந்தி” அப்படின்னு அவசரமா கத்துக்கற மாதிரி இதுல சாத்தியமில்லை. அதனால இதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்.

பரதம் கத்துக்க அதிகபட்ச வயசுன்னு ஒண்ணும் இல்லை! ஆர்வம் இருந்தா, உடம்பில் தெம்பு இருந்தா, யார் வேணும்னாலும் கத்துக்கலாம்! ஆனால் என்ன இருந்தாலும் சின்ன வயசில் உடம்பு வளையற மாதிரி வயசான பிறகு வளையாது. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், தீவிரமான பயிற்சி இருந்தா அதையுமே சரி செய்திடலாம்.

உதாரணத்துக்கு நானே இருக்கேன். 30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன். என்னாலேயே முடியும்னா, ஆர்வம் இருந்தால் உங்களாலும் முடியும்னு சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன். நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.

எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும். கலைகள் இயல்பாகவே சுவாரஸ்யமாக இருக்கறதால, அவற்றில் ஈடுபடுதலும் இயல்பாகவே அமையுது. நடனக்கலைக்கு இருக்கும் இன்னுமொரு சிறப்பு, அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இயக்கறதால, தியானம் (மனசுக்கு), யோகம் (உடம்புக்கு), இரண்டுமே சாத்தியமாகும்படி செய்வதுதான்.

என்ன, பரதநாட்டிய வகுப்பை தேடி கிளம்பிட்டீங்களா? :)


அன்புடன்
கவிநயா

பி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.

Monday, March 30, 2009

பதங்களின் சரசம் !



அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

படத்திற்கு நன்றி: கயல்விழி முத்துலக்ஷ்மி, மற்றும் ராமலக்ஷ்மி