Sunday, June 30, 2013

தண்ணீர்... தண்ணீர்...!


ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

“யாரைப் பார்க்க வேண்டும்?”

“உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்”

வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?!

இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி (Aabid Surti) என்பவர். இவர் விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியரும் கூட. ஆனால் இவர் தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவது பல்லாயிரம் லிட்டர் தண்ணீரின் சேமிப்பைத்தான். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 414,000 லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்!70-களில் இருக்கும் இவருக்கு, இளம் வயதிலேயே தண்ணீரின் அருமையை மும்பை வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது. ஒரு முறை ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் ஒழுகிய குழாய் இவரை ரொம்பத் தொந்தரவு செய்திருக்கிறது. ஒழுகும் குழாயை சரி செய்வதில் என்ன கஷ்டம் என்று பலரிடமும் பேசிப் பார்த்த போது, குழாய் சரி செய்பவர்கள் கிடைப்பது அரிதென்றும், கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துச் சரி செய்யும் வசதி பலருக்கும் இல்லையென்றும் தெரிய வந்தது.

ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்! அவர் அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம்!

அத்துடன் இல்லாது, எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம் என்ற செய்தியையும் வாசித்திருக்கிறார்.

இந்த இரண்டு விஷயங்களையும் அவரால் நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. சரியாக 2007-ல் (உலக தண்ணீர் வருடம்) அவருக்கு உத்தர பிரதேச அரசிடமிருந்து சாகித்ய சந்த்ஸா (Sahitya Santhsa award) விருது ரூ.100,000 கிடைத்தது. உடனடியாக அந்தப் பணத்தை இந்தப் பணிக்குச் செலவிட முடிவெடுத்து விட்டார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தன்னுடன் ஒரு குழாய் பழுது பார்ப்பவரைக் (plumber) கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று இலவசமாக குழாய்களைப் பழுது பார்த்துத் தருகிறார். இப்போது இவருடையது ஒரு இயக்கமாகவே மாறி விட்டது. பள்ளிக் குழந்தைகளையும் இவருடைய தண்ணீர் சேமிக்கும் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.

“A penny saved is a penny earned” என்று சொல்வார்கள். அது தண்ணீருக்கும் நிச்சயம் பொருந்தும். சிறு துளி பெரு வெள்ளமல்லவா? குறிப்பாகப் பருவ மழை பொய்த்துப் போகும் இந்தக் காலத்தில், ஆறு குளங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், தனி மனிதனால் செய்யக் கூடியவற்றவைகளையாவது நாம் செய்ய வேண்டுமல்லவா? அதுதானே நாம் நம் சந்ததியினருக்கு விட்டு போகும் செல்வம்? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் வறண்ட பூமியைத்தான், உணவும், நீரும், இல்லாத பூமியைத்தான் அவர்களுக்கு விட்டுப் போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்! :(

நாம் ஒவ்வொருவரும் ஆபிட் சுர்தியாக ஆக முடியா விட்டாலும், தண்ணீரைச் சேமிக்க நம்மாலான பல எளிய வழிகள் இருக்கின்றன.

ஒழுகும் குழாய் இருந்தால் உடனடியாகச் சரி பார்க்கலாம்.

காலையில் பல் துலக்கும் போது பலரும் தண்ணீரைத் திறந்து வைத்து, அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, அவர்கள் பல் துலக்குவார்கள். அப்படியில்லாமல் தண்ணீரை வேண்டுமென்னும் போது மட்டும் திறந்து கொள்ளலாம்.

பாத்திரம் துலக்கும் போதும் சிலருக்கு தண்ணீர் போய்க் கொண்டே இருக்க வேண்டும், அல்லது முழு வேகத்தில் திறந்து விடுவார்கள். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

குளிக்கும் போதும் அப்படியே. சோப்பு போடும் போது தண்ணீரை நிறுத்தி வைக்கலாம். குளிக்கும் போது கனவு கண்டு கொண்டிருந்தாலும் (மற்ற விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும்), தண்ணீர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. அதனால் குளியல் கனவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். (இதை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்!)

சிலர் தண்ணீர் குடிப்பதற்கென எடுக்கும் போது தம்ளர் நிறைய எடுத்து விட்டு, கால் தம்ளர் மட்டுமே குடித்து விட்டு மீதியைக் கீழே ஊற்றி விடுவார்கள். அதற்குப் பதில் வேண்டுமென்கிற அளவு மட்டுமே எடுத்துக் குடிக்கலாம்.

சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!


அன்புடன்
கவிநயா

பி.கு.: சுகி. சிவம் அவர்கள் ஒரு முறை இவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அதிலிருந்துதான் இந்தக் கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. ஆகையால், அவருக்கு நன்றி!

படத்துக்கு நன்றி: http://superaalifragilistic.wordpress.com/2013/01/26/saving-the-planet-one-drop-at-a-time/

நன்றி: வல்லமை

Sunday, June 23, 2013

நேற்று இல்லாத மாற்றம்...என்மனதில் உன்வதனம் வரைந்து பார்க்கிறேன்
என்னுடலில் உன்னுயிரால் வாழ்ந்து பார்க்கிறேன்
கண்ணிமையில் உன்கனவு ரசித்துப் பார்க்கிறேன்
கனியிதழில் உன்பெயரை ருசித்துப் பார்க்கிறேன்!

எண்ணி எண்ணிப் பார்த்திருந்தேன் எண்ணம் நின்றது
வண்ண வண்ண வார்த்தை சொல்லிக் கவிதை என்றது
முன்னும் பின்னும் நடந்த தெல்லாம் மறந்து போனது
நேற்றும் இன்றும் நாளும் பொழுதும் கலந்து போனது!

மறையாத கதிரவனாய் மனதில் இருக்கிறாய்
மடுவின் நடுவில் தாமரை போல் மலர்ந்து சிரிக்கிறாய்
காயாத சுனையாக என்னை நனைக்கிறாய்
தாயாக பேரன்பால் அள்ளி அணைக்கிறாய்!

வானைப் போல விரிந்த அன்பில் தொலைந்து போகிறேன்
தேனைக் குடித்த வண்டாய் நானும் கிறங்கிப் போகிறேன்
நுனி விரலால் தீண்டினாலும் உருகிப் போகிறேன்
பனி மலராய்ப் பாதம் சேர்ந்து புனிதமாகிறேன்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.kateathome.com/love-birds/

Sunday, June 16, 2013

இணையமே… இதயமே…"I had a life once... now I have a computer." ~Author Unknown
 
போன வாரக் கடைசியில் எங்க வீட்ல திடீர்னு இணையம் வேலை செய்யலை! இணையம் வழிதான் தொலைபேசி, தொலைக்காட்சி, எல்லாமே. இந்த மாதிரி சமயங்கள்லதான் தெரியுது,  நாம எந்த அளவு இணையத்தை சார்ந்திருக்கோம்னு.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கணினியில் செலவிடாட்டா தூக்கம் வராது. சனிக்கிழமை மட்டும் விதி விலக்கு. முழுக்க நடன வகுப்புகள் இருக்கும், அதுலயே அசந்துடும். கணினியாவது ஒண்ணாவதுன்னு இருக்கும். ஆனா திரும்ப ஞாயிற்றுக் கிழமை தேட ஆரம்பிச்சிடும். கோடை விடுமுடுறைனால இந்த வாரத்தில் இருந்து நடன வகுப்புகளும் குறைஞ்சிடுச்சு.

இந்தியால இருக்கிற என் தங்கைகிட்ட பேசிக்கிட்டிருந்த போது சொன்னேன், "ஒண்ணுமே இல்லாம போரடிக்குதுடி”ன்னு. அவ சிரி சிரின்னு சிரிச்சிட்டு சொல்றா, “எங்க வாழ்க்கைய நீயும் ரெண்டு நாளைக்கு வாழ்ந்து பாரேன்”, அப்படின்னு! “என்னடி பண்றது, உனக்கு அப்படியே பழகிருச்சு, எனக்கு இப்படியே பழகிருச்சு”ன்னு சொன்னேன்.

“பாருங்க, என் தங்கை இப்படிச் சொல்றா”, அப்படின்னு என் தோழிகிட்ட சொன்னா, அவங்க அதுக்கு மேல சிரி சிரி! இது எப்படி இருக்கு? இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக”, அப்டின்னு சொன்னாரோ வள்ளுவர்? :)

இதைப் பற்றி புகார் குடுக்கறதுக்காக அந்த கம்பெனிக்கு தொலைபேசினா, பதிவு பண்ண தகவல்தான் (voice portal) வந்தது. அது நல்லாதான் வேலை செஞ்சதனால (முன்ன பின்ன செத்திருந்தாதானே சுடுகாடு தெரியும்?) நானும் நிஜ மனுஷங்களைக் கூப்பிடாம அதுலயே திங்கட்கிழமைக்கு ஆள் வந்து பார்க்கிறதுன்னு ஏற்பாடு பண்ணி வெச்சாச்சு.

திங்கட்கிழமை கூப்பிட்டு கேட்டா, “அப்படி எதுவுமே எங்க சிஸ்டத்துல இல்லை, நீங்க மறுபடி புதுசா புகார் குடுக்கணும். அதுக்கப்புறம் எப்ப முடியுதோ அப்பதான் தருவோம்”னு சொல்லிட்டாங்க! ரொம்ப டென்ஷனாயிடுச்சு. மறுபடி தொலைபேசில அந்த கம்பெனியக் கூப்பிட்டேன். இந்த முறை முன் ஜாக்கிரதை முத்தம்மாவாகி, நிஜ ஆள்கிட்டதான் பேசணும்னு முதல்லயே '0'வை அமுக்கிட்டேன்! ஒரு பெண்மணிதான் எடுத்தாங்க, பொறுமையாதான் பேசினாங்க, ஆனா செவ்வாய்க்கிழமைதான் முடியும்னு சொல்லிட்டாங்க. வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னாடி கூப்பிடுவாங்க, யாராவது வீட்ல இருக்கணும் அப்படின்னாங்க. எங்க ரெகார்டட் சிஸ்டத்தை இனிமே பயன்படுத்தாதீங்கன்னு வேற சொன்னாங்க!

இன்னொரு தரம் கூப்பிட்டா இன்னொரு ஆள் வருவாங்க, அவங்ககிட்ட மறுபடி கேட்டுப் பாருன்னு ஐடியா குடுத்தார், ரங்கமணி. சரின்னு மறுபடி கூப்பிட்டப்ப, வேற ஒரு பெண்மணி எடுத்தாங்க. அவங்களும், நான் சொன்னதையெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டாங்க. “என் தப்பில்லை, உங்க சிஸ்டத்து மேலதான் தப்பு. அது வேலை செய்யாதுன்னு எனக்கு எப்படித் தெரியும்?” அப்படின்னு சொன்னேன். “அச்சோ, இப்படியெல்லாம் உங்களுக்கு பிரச்சனை வருதே, பாவம்தான் நீங்க. ரொம்ப ஸாரி”, அப்படின்னு சொல்லி, “ஆனா உங்களுக்கு என்னால உதவ முடியாது, நான் வேற பகுதியில் வேலை செய்யறேன், உங்களுக்கு உதவ வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுக்கறேன்”னு சொல்லிட்டு, வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுத்தாங்க.

இப்ப வந்தவரு ஒரு ஆண்மணி. அதுவும் இந்தியர். குரலையும் பேசற விதத்தையும் கேட்டாலே தெரியுது. மற்றவங்களை மாதிரி இவர் தன்னை பேர் சொல்லி அறிமுகப் படுத்திக்கலை. மொட்டையா "ஹலோ… ஹலோ"ன்னாரு. என்னமோ தப்பான எண்ணுக்குப் போயிருச்சாக்கும்னு நினைச்சிட்டேன். பிறகு நானே எதுக்குக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அவருக்குப் பொறுமையும் இல்லை. அவர் சொல்றது ஏதாச்சும் புரியலைன்னு இன்னொரு தரம் கேட்டா கோவம் வேற வருது. சிடுசிடுப்பா பதில் சொல்றாரு. நியாயமா பார்த்தா கோவப்பட வேண்டியது நானு. ஆனா நான் பொறுமையா, நிதானமா, மென்மையா, நிலைமையை எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கேன். இத்தனைக்கும் இந்த உரையாடல்களை எல்லாம் ரெகார்ட் பண்றாங்க. அப்படியும் இவங்கல்லாம் இப்படிப் பேசறாங்க. ஆனா இவரு மறுபடியும் பார்த்துட்டு திங்கட்கிழமையே பார்க்க முடியும்னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் குடுத்துட்டாரு. அந்த வரை பரவாயில்லை.

திங்கள் மதியம் அந்த டெக்னீஷியன் கூப்பிட்டப்போ செல் போன்ல வேற கால்ல இருந்ததால எடுக்கல. இதென்னடா வம்புன்னு சொல்லி, இன்னும் ஒரு முறை கூப்பிட்டு, மறுபடியும் (நெசம்மா!) இன்னும் ஒரு நிஜ ஆள்கிட்ட பேசினேன். அவரும் ஒரு ஆண்மணி. அமெரிக்கர். அவ்வளவு அருமையா பொறுமையா பேசினாரு.

வாடிக்கையாளர் சேவையை நான் அவ்வளவா கூப்பிட்டதில்லை, இது வரை. ஆனா நிறைய பேரு இதைப் பற்றி புகார் பண்றதைக் கேட்டிருக்கேன். என் அனுபவம் மோசம் இல்லைன்னாலும், முன்னல்லாம் வாடிக்கையாளர்களை ராஜா மாதிரி நடத்துவாங்க. இப்பல்லாம் வேண்டாத விருந்தாளி மாதிரி நடத்தறாங்க. நாம தினசரி சந்திக்கிற, பழகற மனுஷங்ககிட்டயே அன்பா இருக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இங்கே, அன்பா, சிநேகமா இருக்கறதுக்குன்னே காசு (சம்பளத்தைத்தான் சொல்றேன்) குடுக்கறாங்க, அப்படியும் அதொண்ணும் காணும். தொலைபேசியில் மட்டும் சொல்லலை. கடைகளுக்குப் போகும் போதும் அப்படித்தான். சில கடைகள்லதான் வாடிக்கையாளர்களை மரியாதையா நடத்தறாங்க.

இதைப் பற்றிப் பேசும் போது பார்வதிஇராமச்சந்திரன் வல்லமையில் எழுதின கதை ஒண்ணு நினைவு வருது.

ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கத்தான் இருக்கு. ஆனா அதை வேலைக்குன்னு வர்ற இடத்தில் காண்பிக்கிறது நல்லதில்லை. இந்த விஷயத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை நினைச்சாதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். எப்பவும் புதுசா, பளிச்சுன்னு, முகம் சுளிக்காம சிரிச்சிக்கிட்டு, கலகலன்னு பேசிக்கிட்டு…. ஒரு நாள், ரெண்டு நாள்னா பரவாயில்லை. வருஷம் பூரா அப்படி இருக்கறது கஷ்டம்தான். ஆனா அவங்க தொடர்ந்து தினமும் வேலை செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ஒருத்தரோட பழகும்போது “இவர் நமக்கு எதுக்கு பயன்படுவார்” அப்படின்னு காரியவாதித்தனமா யோசிச்சு, ஆதாயம் இருந்தால் மட்டுமே பழகறவங்க அதிகம். அப்படியில்லாம, ஒருத்தரைச் சந்திக்கும்போது “இவருக்கு நாம எப்படி உதவலாம்?” அப்படின்னு நினைச்சே பழகணுமாம். அப்படிச் செய்தா, மனசுக்குள்ள நல்ல எண்ணமும், நட்பும், அன்பும், தானா வந்துரும். அப்படின்னா, மற்றவங்களுக்கு உதவறதையே வேலையா பார்க்க வர்றவங்க இன்னும் எவ்வளவு நல்லபடியா நடந்துக்கணும்!

(இணையத்திலிருந்து இதயத்துக்கு வந்துட்டோமா? :)

என்னமோ போங்க… நாமளாவது நம்ம வரைக்கும் நல்ல பிள்ளைகளா இருப்போம்!

அன்புடன்
கவிநயா 

Sunday, June 9, 2013

கண்ணீர்... கண்ணீர்...

மூன்றாம் சுழியில் அப்பாதுரை அவர்களின் மொழிபெயர்ப்பில் 'sad woman' கவிதை படிச்சோன்ன என்னுடைய கண்ணீர்க் கவிதையெல்லாம் நினைவு வந்துருச்சு! இந்த மாதிரி கவிதைகள் நெறய்ய்ய எழுதியிருக்கேன். இப்போ இப்படிப்பட்ட கவிதைகள் எழுதறது ஏனோ குறைஞ்சிருச்சு. I think She is the reason... அதாவது இதுக்கு பதில் அதெல்லாம் அம்மன் பாட்டில் இருக்கும்! ஹி.. ஹி..

கண்ணீர் விடறது நல்ல விஷயம். கண்ணுக்கு. கண்ணு வரண்டு போயிடுச்சுன்னா, மருத்துவர் 'செயற்கை கண்ணீர்'னு ஒரு சொட்டு மருந்து போடச் சொல்லுவார். அந்த பிரச்சனையெல்லாம் நமக்கு வராதுன்னு நினைக்கிறேன் :)

நாம நிறைய்ய்ய அழுதாலும் மற்றவங்க கண்டு பிடிக்காம இருக்கறதுக்கு ஒரு வழி இருக்கு. அதாவது அழும்போது வழியற கண்ணீரை மட்டுமே துடைக்கணும். கண்ணை அழுத்தித் துடைச்சு, மூக்கைச் சிந்தி, இப்படில்லாம் செஞ்சாதான், கண்ணு சிவந்து, முகம் வீங்கி, காட்டிக் குடுத்துடும் :)

நமக்காக அழறதைக் காட்டிலும், பிறருக்காக அழும் போது நம்ம மனசு தூய்மையாகுது. அதுக்காக உக்காந்து அழணும்னு இல்ல, பிறர் துயரத்தை உணர்ந்து அவங்க துன்பம் தீர்ந்து நல்லாருக்கணும்னு மனசார நினைச்சாலே போதும். இல்லன்னா நாம மனுஷங்களா பொறந்ததுக்கு என்னதான் அர்த்தம் இருக்கு?தண்ணீர் தரியாமல்
தவித் தலையும் மேகமே!
என்னிடத்தில் நீ வந்தால்,
உன் சூல் நிரம்பக்
கண்ணீர் தருவேன், உனக்கு.

**

பனித் துளிகள் பிறப்பெடுக்கும்
அதிகாலையில் மட்டும்
ஆனால்,
நேரம் காலம் எதுவுமில்லை
விழித் துளிகள் பிறப்பதற்கு.

**

கண்ணீர் மட்டும்
உப்புக் கரிக்காதிருந்தால்
இவ்வுலகில்,
தண்ணீர் பஞ்சமே
இல்லாது போயிருக்கும்.

**

இந்த ரெண்டு கவிதையும் ஏற்கனவே குட்டிக் கவிதைப் பக்கம் வந்திருக்கு -

அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?


**

இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!


**

--கவிநயா


படத்துக்கு நன்றி: கூகுளார் 

இதையும் வாசிங்க!
காதல் - எவ்வளவு அழகான தமிழ் சொல்! காதலிக்கப் பிடிக்குமா உங்களுக்கு? காதலில் விழுந்தவரா நீங்கள்? அல்லது விழ இருப்பவரா? எப்படியிருந்தாலும் நீங்கள் எவ்வளவு romantic ஆனவர் என்று உலகிற்கு காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு! ஆமாங்க, கரும்பு தின்னக் கூலி கூடத் தர்றாங்களாம்! காதல் கடிதம் எழுதுங்கள்!

Monday, June 3, 2013

தளைப்படுத்தா அன்பு

ஒரு கற்பனை. அல்லது பெரும்பாலும் நடைமுறைதான் இது. பிள்ளை பள்ளிக்குச் சென்று விட்டான். (வேலைக்குப் போகாத :) அம்மா அவனுக்காக வேண்டியதெல்லாம் செய்கிறாள். துணி துவைக்கிறாள், அதைத் தேய்த்து வைக்கிறாள், அவனுக்குப் பிடித்ததைச் சமைத்து வைக்கிறாள், அவனுக்கு வேண்டியதை வாங்கி வைக்கிறாள். அவனுக்கோ பள்ளிக்குச் சென்ற பின், நண்பர்களைப் பார்த்த பின், எல்லாமே மறந்து விடுகிறது. பள்ளி வேலைகளிலும், நண்பர்களோடு விளையாடுவதிலும் அவன் கவனம் சென்று விடுகிறது. அம்மாவின் நினைவே வருவதில்லை. ஆனால், இங்கே அம்மாவோ அவனையே நினைத்துக் கொண்டு, அவனுக்காகவே காத்திருக்கிறாள்.


தாகூரின் இந்தக் கீதாஞ்சலி கவிதை. எனக்கு மிகப் பிடித்தது. உலகத்தாரின் அன்பு எல்லாமே, பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளை, நண்பர்கள் உட்பட, நம்மை எப்படியோ தளைப்படுத்துவதாகத்தான் இருக்கிறது, ஆனால், இறைவனின் அன்போ அப்படி இல்லை. நம்மை எப்போதும் நேசித்துக் கொண்டிருப்பவன் இறைவன். நாம் அவனை மறந்தாலும், நமக்காகவே அவன் காத்துக் கொண்டிருக்கிறான், பள்ளி சென்ற பிள்ளைக்காகக் காத்திருக்கும் தாயைப் போல.

Free Love
By all means they try to hold me secure who love me in this world.
But it is otherwise with thy love which is greater than theirs,
and thou keepest me free.
Lest I forget them they never venture to leave me alone.
But day passes by after day and thou art not seen.
If I call not thee in my prayers, if I keep not thee in my heart,
thy love for me still waits for my love.

Original in English by Rabindranath Tagore

***

என்னை நேசிப்போர் அனைவரும்
இயன்ற வழிகளிலெல்லாம் என்னைக்
இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
ஆயின்,
அவர்கள் எல்லோரையும் விட
என்னை அதிகம் நேசிக்கும் நீயோ,
என்னை விடுவித்தே வைத்திருக்கிறாய்.
அவர்களை நான் மறந்து விடுவேனோ என்ற அச்சத்தினால்
அவர்கள் என்னைத் தனியே விடுவதே இல்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டே இருக்கிறது,
உன்னைக் காணாமலேயே…
என் பிரார்த்தனைகளின் மூலம்
நான் உன்னை அழைக்காதிருக்கும் போதிலும்,
என் இதயத்தில் உன்னைப்
போற்றி வைக்காதிருக்கும் போதிலும் கூட,
எனக்கான உன் அன்பு,
என் அன்புக்காகக் காத்துக் கொண்டுதான் இருக்கிறது…

--கவிநயாபடத்துக்கு நன்றி: http://comefillyourcup.com/2012/10/01/mothers-in-waiting/


Saturday, June 1, 2013

நன்றிச்சரம்

இன்றுடன் வலைச்சர வாரம் முடிகிறது! நன்றி நவிலல் இன்று...