Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts
Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts

Thursday, December 4, 2014

அருள் மலை!

அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஊர்க் கோவிலில் திருகார்த்திகைத் தீபம்

எண்ணும் மனம் உறைந்தான்
எண்ணமெல்லாம் நிறைந்தான்
அண்ணா மலை அவன் தான்
அருள் மலையாய் வளர்ந்தான்!

உண்ணா முலைக் கெனத்தான்
தண்ணிலவாய்க் குளிர்ந்தான்
கண்ணுதலான் கனிந்தான்
தன்னில் சரி பாதி தந்தான்!

கேட்கும் வரம் அத்தனையும்
அள்ளி யள்ளித் தந்திடுவான்
ஓமென்றால் ஆமென்பான்
தா யென்றால் தாயுமாவான்!

அயன் அரி அறியாத
அடி முடி கொண்டவன்தான்
கள்ளமற்ற அன்புக் கென்றால்
கட்டுப்பட்டு வந்திடுவான்!


--கவிநயா



Friday, November 19, 2010

அண்ணாமலையாய் அருள்பவன்!

அனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!


அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!

கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!

விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!

--கவிநயா

Sunday, November 29, 2009

யார் இந்தக் குழந்தை?


இன்றைக்கு இங்கே ஏதோ விசேஷம் போலும். இந்த இடமே எத்தனை குதூகலமாக இருக்கிறது! வாருங்கள், நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ர்கலாம்!

நேற்று வரை பசேலென்று மட்டுமே இருந்த மரங்களெல்லாம் இன்று பூத்துக் குலுங்குகின்றன. புள்ளிமான் குட்டிகள் புதர்ச் செடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தம் தாய் மான்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன!

கருங்குயில்கள் யாரையோ எதிர்பார்ப்பது போல் வரவேற்பு கீதம் பாடுகின்றன. மூங்கில்களின் துளைகளில் புகுந்து புறப்படும் காற்று அதற்கேற்ப கானம் இசைக்கிறது. எப்போதும் மென்மையாகத் தவழும் தென்றல் கூட இன்று சற்றே அதிகமான துள்ளலுடன் ஜதி போடுகின்றது.

மயில்கள் “என்னைப் பார் என்னழகைப் பார்” என்று தம் பெரிய தோகைகளை ஒய்யாரமாக அசைத்து நடனம் புரிகின்றன. சின்னஞ்சிறு அணிற் பிள்ளைகளும், வெள்ளை வெளேர் முயல் குட்டிகளும், தம் கருகரு கண்களை அகல விரித்து, அந்த நடனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றன!

அதோ, அந்தப் பொய்கையில் நேற்று வரை அமைதியாகத் தளும்பிக் கொண்டிருந்த தண்ணீர், இன்றைக்கு எதனாலோ பூரிப்பு தாங்காமல் சளசளத்துக் கொண்டிருக்கிறது!

அதோ… கங்காதேவி பாய்ந்து வருகிறாள். அவளுடைய நீண்ட கரங்களில் எதையோ தாங்கி வருகிறாள். ஆம், செஞ்சடையானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த நெருப்புச் சுடர்களைத்தான் ஏந்தி வருகிறாள். அவளாலேயே அவற்றின் வெம்மையைத் தாங்க முடியவில்லை போலும். வந்த வேகத்தில் நெருப்புச் சுடர்களை அதற்காகவே காத்திருக்கும் நமது பொய்கையில் விடுகிறாள்.

அழகான ஆறு தாமரை மலர்கள் மலர்ந்து மகிழ்ந்து அவற்றைக் குழந்தைகளாய் வாங்கிக் கொள்கின்றன!

அந்தக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு!

ஒரு குழந்தை தன் சின்ன முகத்தைச் சுளுக்கிக் கொண்டு அழுகிறது.

ஒன்று ஈறுகள் தெரிய கலகலவெனச் சிரிக்கிறது.

மற்றொரு குழந்தை கட்டை விரலை வாயில் வைத்து சுவாரஸ்யமாகச் சூப்புகின்றது.

இன்னொரு குழந்தை தான் படுத்திருக்கும் தாமரை மலரின் இதழை இழுத்து விளையாடுகிறது.

மற்றுமொரு குழந்தை தன்னுடைய கருகமணி விழிகளைச் சுழற்றி, மான் கூட்டங்களையும் மயில் ஆட்டங்களையும் வேடிக்கை பார்க்கிறது.

ஆறாவது குழந்தையோ தியானத்தில் ஆழ்ந்து விட்டது போல அமைதியாக இருக்கிறது.

கார்த்திகைப் பெண்கள் ஆசையுடன் வளர்க்கும் அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பராசக்தி கண்டதும், அவற்றின் மீது அன்பு மீற, ஒன்றாகச் சேர்த்து அரவணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உகந்த நாளான இன்று நாமும் அவனை மனமார வாழ்த்துவோம்!






முருகா போற்றி கந்தா போற்றி!
முத்தமிழ் தந்த குமரா போற்றி!

அழகா போற்றி அமுதா போற்றி!
பழகிய திருக்கை வேலா போற்றி!

முக்கண் முதல்வன் மைந்தா போற்றி!
நெற்றிக் கண்ணில் பிறந்தாய் போற்றி!

பித்தன் பெற்ற முத்தே போற்றி!
சித்தம் நிறைந்த செவ்வேள் போற்றி!

ஆனை முகனின் இளையோய் போற்றி!
ஆறு முகங்கள் கொண்டாய் போற்றி!

மாலவனின் எழில் மருகா போற்றி!
வேலெடுத்து வினை களைவாய் போற்றி!

சக்தியின் கரங்களில் தவழ்ந்தாய் போற்றி!
அத்தனுக் கரும்பொருள் சொன்னாய் போற்றி!

பக்தியிற் சிறந்தோற் கருள்வாய் போற்றி!
நித்தமும் உன்பதம் பணிந்தோம் போற்றி!!


--கவிநயா

பி.கு.: "நினைவின் விளிம்பில் உலவும் நேரம்" நாளை மறு நாள் தொடரும் :)

படத்துக்கு நன்றி: http://murugan.org/gallery/kanda_puranam/images/kp_02.jpg

Wednesday, December 10, 2008

ஓராறு முகம் கொண்ட வேலா !


அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஓராறு முகம் கொண்ட வேலா
ஓம்காரப் பொருள் சொன்ன பாலா
ஔவைக்கு தமிழ் தந்த அழகா - இவ்
அடிமைக்கு அருள் செய்ய வாவா!

நெற்றிக் கண் நெருப்பிலே உதித்தாய் - உனைப்
பற்றிக் கொண்டோர் நெஞ்சில் நிலைத்தாய்
சுற்றிக் கொண்ட வினைக ளெல்லாம் - எனை
விட்டுத் தெறித் தோடச் செய்வாய்!

சக்திவேல் ஏந்து கின்ற கந்தா - உனை
பக்திகொண் டேத்து கின்றேன் குமரா
முத்தாக வந்து தித்த உன்னை - என்
சொத்தாக ஆக்கிக் கொண்டேன் முருகா!

மயில் மீது ஏறியே வருவாய் - என்
மனதிலே கோவில் கொண் டமர்வாய்
பரிதியாய் என் னுள்ளே ஒளிர்வாய்
பிறவிப் பயன் தந்து அருள்வாய்!


--கவிநயா


அம்மன் பாட்டு நூறாவது இடுகையும் இன்றுதான். வந்து அன்னையைத் தரிசித்து அருள் பெறுங்கள்!