Showing posts with label பாப்பா பாட்டு. Show all posts
Showing posts with label பாப்பா பாட்டு. Show all posts

Tuesday, June 23, 2015

டிக் டிக் டிக்


டிக் டிக் டிக் எனும் கடிகாரம்

டக் டக் டக்கென அது ஓடும்

பட் பட் பட்டெனப் பறப்போர்க்கு

சட் சட் சட்டென மணி சொல்லும்!


நிற்கும் இடத்தில் ஓடிடுமாம்

நேரம் சரியாய்க் காட்டிடுமாம்

முட்கள் இரண்டால் பேசிடுமாம்

மொழியே இல்லாக் கடிகாரம்!



ஊருக்கெல்லாம் மணி சொல்ல

மணிக் கூண்டினிலே அமைந்திருக்கும்

கண்ணில்லார்க்கும் மணி சொல்ல

கண்டாமணியென ஒலித்திருக்கும்!



டிங் டிங் டாங்கென்று ஒலிக்கும் ஒன்று

குக் குக் கூவெனக் கூவும் ஒன்று

சப்தமின்றி மணி காட்டும் ஒன்று

சகலருக்கும் உதவும் கடிகாரம்!


காலம் காட்டும் கடிகாரம்!

கடமை தவறாக் கடிகாரம்!

சற்றும் ஓயாக் கடிகாரம்!

அயரா உழைப்பே அதன் சாரம்!


--கவிநயா

 படத்துக்கு நன்றி: கூகுளார்

Sunday, June 22, 2014

நல்ல பிள்ளை நானு!

கன்னங் கரு மேகமே!
கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!

காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!

தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!

கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக வெள்ளையே!
உன்னைப் பார்த்துப் பாடங் கற்றேன்,
நானும் நல்ல பிள்ளையே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://anadequatemom.wordpress.com/2012/11/14/there-are-no-words-but-im-trying/

Sunday, July 7, 2013

சின்னச் சின்ன ஆசை!



சிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்க்கலாமா?
வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப் பார்க்கலாமா?
காற்றுத் தேரில் உலகமெங்கும் சுற்றிப் பார்க்கலாமா?
ஆற்று நீரில் நீந்திக் கடலைச் சேர்ந்து பார்க்கலாமா?

மீனைப் போல நீரில் நீந்தி ஆழம் பார்க்கலாமா?
மானைப் போலத் துள்ளித் துள்ளி ஓடிப் பார்க்கலாமா?
வானம் பாடி கானம் நாமும் பாடிப் பார்க்கலாமா?
வானும் மண்ணும் வாய் பிளக்க ஆடிப் பார்க்கலாமா?

மின்னலாகி இருளைக் கொஞ்சம் கீறிப் பார்க்கலாமா?
கன்னல் தமிழில் கொஞ்சும் கவிதை சொல்லிப் பார்க்கலாமா?
வண்ண மலரைக் கையில் ஏந்தி வாசம் பார்க்கலாமா?
எண்ணம் யாவும் அன்பைக் குழைத்து வாழ்ந்து பார்க்கலாமா?


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://pincel3d.deviantart.com/art/The-moon-and-the-birds-46703434

Sunday, March 31, 2013

கிட்ட வாயேன் நிலவே!



வட்ட வட்ட நிலவே
கிட்டக் கிட்ட வாயேன்
குட்டிப் பிள்ளை உன்னைக் கொஞ்சம்
தொட்டுப் பார்க்கத் தாயேன்!

வெள்ளித் தட்டுப் போல
வட்டமிடும் நிலவே
வானம் விட்டு என்னைக் கொஞ்சம்
வட்டமிட வாயேன்!

அம்மா சுட்ட தோசை போல
வட்டமான நிலவே
சும்மா உன்னைத் தொட்டுக் கொஞ்சம்
பிட்டு உண்ணத் தாயேன்!

மேகத் துக்குப் பின் னிருந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
கண்ணா மூச்சி இங்கும் உண்டு
ஆடிப் பார்ப்போம் வாயேன்!

நீரைக் கண்டால் ஓடி வந்து
எட்டிப் பார்க்கும் நிலவே
நீரென்ன உன் கண்ணாடியோ
சொல்லி விட்டுப் போயேன்!

ஊருக் கெல்லாம் ஒளி கொடுத்து
உதவு கின்ற நிலவே
உன்னைப் போல உதவும் உள்ளம்
நானும் கொள்வேன் பாரேன்!!


-கவிநயா


நன்றி: செல்லம், வல்லமை
படத்துக்கு நன்றி: http://rainydaythought.blogspot.com/2010/10/autumn-full-moon-in-yellowstone-park.html

Sunday, December 9, 2012

கல்லால் அடித்த போதினிலும்...



ஓங்கி உயர்ந்து வளர்ந்திடுமாம்!
ஒதுங்க நிழலைத் தந்திடுமாம்!
பாடித் திரியும் பறவைகட்கு
கூடி வசிக்க இடந்தருமாம்!

வானந் தொட்டு வளர்ந்தாலும்
வளைந்தே காற்றில் அசைந்திடுமாம்!
மேகந் தொட்டு மழை நீரால்
மண்ணின் தாகம் தீர்த்திடுமாம்!

வளர்ந்து அடர்ந்து காடாகி
விலங்கு களுக்கும் புகல்தருமாம்!
இயற்கைத் தாய்க்கு உறுதுணையாய்
இயல்பாய் உதவி செய்திடுமாம்!

கல்லால் அடித்த போதினிலும்
கனியே தந்திடும் மரத்தைப் போல்
இன்னா செய்யும் மனிதருக்கும்
இனிதாய் அன்பே செய்திடுவோம்!

--கவிநயா 

நன்றி: வல்லமை


Quotes on trees:
Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago
--- Warren Buffett 
Trees are the earth's endless effort to speak to the listening heaven.
-- Rabindranath Tagore

Wednesday, November 14, 2012

உன்னைப் போல எவருண்டு!

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!




சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
சின்னப் பாப்பா வா
கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
கண்ணே பாப்பா வா

அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
அழகாய்ப் பேசிடணும்
நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
கண்ணாய்ப் போற்றிடணும்

உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
பகிர்ந்தே உண்டிடணும்
உதவி வேண்டும் பேர்க்கு உடனே
ஓடி உதவிடணும்

கோபம், அழுகை, பிடிவாதம், இவை
எல்லாம் விட்டிடணும்
அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
மனதில் நின்றிடணும்

குழந்தை உள்ளம் மாறாமல் நீ
உலகில் வாழ்ந்திடணும்
உன்னைப் போல எவருண்டு என
உலகம் சொல்லிடணும்!

--கவிநயா




நன்றி: வல்லமை

Monday, November 12, 2012

அன்பெனும் ஒளி


அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!


தீபாவளியும் வந்தது;
திக்கெட்டும் ஒளி தந்தது!
பரவசம் நெஞ்சில் வந்தது;
பலப்பல இன்பம் தந்தது!

காலையில் எல்லோரும் கேட்கும் கேள்வி,
‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’
களிப்புடன் அனைவரும் சொல்லும் பதில்தான்
‘கங்கா ஸ்நானம் ஆச்சே!’

‘பளபள’ வென்று புத்தாடை அணிவோம்!
‘படபட’ வென்று பட்டாசு வெடிப்போம்!
பலப்பல ருசியுடன் பலகாரம் தின்போம்!
பக்கத்தில் எல்லோர்க்கும் பகிர்ந்தே உண்போம்!

தீமைக் குணங்கள் யாவும் அழிப்போம்!
நற்குணங்களையே போற்றி வளர்ப்போம்!
இருளை அழிப்போம்; துன்பம் ஒழிப்போம்!
அன்பெனும் ஒளியை அனைவர்க்கும் அளிப்போம்!

--கவிநயா

நன்றி: வல்லமை