சிறகடித்துப் பறந்து வானை எட்டிப்
பார்க்கலாமா?
வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப்
பார்க்கலாமா?
காற்றுத் தேரில் உலகமெங்கும்
சுற்றிப் பார்க்கலாமா?
ஆற்று நீரில் நீந்திக் கடலைச்
சேர்ந்து பார்க்கலாமா?
மீனைப் போல நீரில் நீந்தி ஆழம்
பார்க்கலாமா?
மானைப் போலத் துள்ளித் துள்ளி
ஓடிப் பார்க்கலாமா?
வானம் பாடி கானம் நாமும் பாடிப்
பார்க்கலாமா?
வானும் மண்ணும் வாய் பிளக்க ஆடிப்
பார்க்கலாமா?
மின்னலாகி இருளைக் கொஞ்சம் கீறிப்
பார்க்கலாமா?
கன்னல் தமிழில் கொஞ்சும் கவிதை
சொல்லிப் பார்க்கலாமா?
வண்ண மலரைக் கையில் ஏந்தி வாசம்
பார்க்கலாமா?
எண்ணம் யாவும் அன்பைக் குழைத்து
வாழ்ந்து பார்க்கலாமா?
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://pincel3d.deviantart.com/art/The-moon-and-the-birds-46703434
ஆகா... கவிதையை பார்க்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் :) நீங்க கண்டிப்பா பார்த்துடுவீங்கன்னு தெரியும்! :)
Deleteஎளிய சொற்கள் நிறைய எடுத்து இதுபோல் சொல்ல ஆசைதான் முயன்றாலும் முடியனுமே ....மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி திரு.ரமணி!
Deleteபார்க்கலாமா மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கலாமா என்று நினைக்க வைக்கும் அழகிய கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி சே.குமார்!
Deleteஅழகான ஆசைகள்!
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
Deleteதிரும்ப திரும்ப படிக்க வைக்கும் கவிதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி பார்வதி :)
Deleteநல்ல ஆசைகள்.... வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteசிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்த்தபின்
ReplyDeleteவானிலேறி வட்ட நிலாத் தொட்டு பார்த்தபின்
காற்றுத் தேரில் உலகனைத்தும் சுற்றிப் பார்த்தபின்
ஆற்று நீரில் ஆடிக் கடல் கோடிப் பார்த்தபின்
மீனைப் போல நீந்தி நீரின் ஆழம் பார்த்தபின்
மானைப்போலத் துள்ளித் துள்ளி ஓடிப் பார்த்தபின்
வானம்பாடி கானம் நானும் பாடிப் பார்த்தபின்
வாய்பிளக்க வானும் மண்ணும் ஆடிப் பார்த்தபின்
மின்னலாகி நல்லிருளைக் கிள்ளிப் பார்த்தபின்
கன்னல் தமிழில் கொஞ்சு கவிதை சொல்லிப் பார்த்தபின்
வண்ண மலரைக் கையில் ஏந்தி வாசம் பார்த்தபின்
கிண்ணம் நிறையத் தங்கக்காசு இருந்த போதிலும்,
தேவையிங்கு ரசிக்கும் நெஞ்சம் உணர்ந்து கொள்கிறேன்!!!
//கிண்ணம் நிறையத் தங்கக்காசு இருந்த போதிலும்,
Deleteதேவையிங்கு ரசிக்கும் நெஞ்சம் உணர்ந்து கொள்கிறேன்!!!//
இது நல்லாருக்கே! ரசித்தேன் :) முதல் வருகைக்கும் நன்றி திரு.சுந்தர் புருஷோத்தமன்!
தங்களுக்கும் எனது நன்றி!
ReplyDeleteதங்களின் படைப்புகள் சிறப்பானவை!
தங்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் :)
நேரம் அனுமதித்தால் எனது வலைப்பதிவுகளையும் கண்ணுறுங்கள் :)
http://sundarpurushothaman.blog.com/
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
நன்றிகள் கவிநயா!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் :)