நடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா?
ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு
நல்ல நடிகனாகவும், அதற்கும் மேலே நல்ல மனிதனாகவும், சூர்யாவை எனக்கும் பிடிக்கும்.
அதுவும் இப்ப விஜய் தொலைக்காட்சியில் வர்ற கோடி ரூபா நிகழ்ச்சியை அவர் நடத்தற விதத்திலிருந்து
(பொதுவா இந்த மாதிரி விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் எனக்கே) இன்னுமே பிடிச்சிருக்கு!
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு
நல்ல கருத்து (message), அல்லது நல்ல விஷயம் கற்றுத் தரக் கூடிய ஏதாவது ஒரு நிகழ்வு,
இப்படி ஏதாவது சொல்றார். அதே போல, முடிக்கும் போதும் ஏதாவது ஒரு நல்ல சிந்தனையோட முடிக்கிறார்.
போட்டியாளர்கள்கிட்ட அவங்களுக்குத்
தகுந்த மாதிரி, அல்லது அவங்க வாழ்க்கையின் நிலைமைக்குத் தகுந்த மாதிரி, கனிவாவும்,
பொறுப்பாவும் பேசறார். பேசற விஷயத்துக்குத் தகுந்த மாதிரி தன்னோட அனுபவங்களையும் பகிர்ந்துக்கறார்.
சில சமயம் இலவச அறிவுரைகளும் கிடைக்கும்…
மொத்தத்தில் சூர்யா ரொம்ப நல்ல
பிள்ளை அப்படிங்கிற எண்ணம் இன்னும் உறுதிப்படற மாதிரி நடந்துக்கறார். தமி’ழ்’ உச்சரிப்பு
மட்டும் இன்னும் கொஞ்சம் அ’ழு’த்தமா இருக்கலாம்னு தோணுது :) நேரங் காட்டியை (அதாங்க ‘timer”!)
“மணி அண்ணே”ன்னு கூப்பிடறது க்யூட் :)
அதெல்லாம் சரி… சிப்ஸுக்கும்
சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு உங்களுக்குத் தோணுமே?
அதொண்ணுமில்லீங்க… உருளைக்கிழங்கு
வறுவல் (சுத்தத் தமிழில் ‘சிப்ஸ்’!) எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்தானே?
அதுவும் இப்ப பிரபலமா இருக்கிற ஒரு brand (brand-க்கு தமிழில் என்ன?) சிப்ஸ்ல – ‘ஒண்ணே
ஒண்ணு சாப்பிடுங்க, அப்புறம் நிறுத்தவே மாட்டீங்க’ அப்படின்னு போட்டிருப்பாங்க. என்னை
வச்சுத்தான் அப்படிப் போட்டாங்களோ என்னவோ? நான் சிப்ஸ் சாப்பிட ஆரம்பிச்சாலும் அப்படித்தான்.
நிறுத்தவே முடியாது!
என்னடா இது, அப்படின்னு எனக்கு
என் மேலேயே வெறுப்பு. இந்த சிப்ஸ் இவ்ளோண்டா இருந்துக்கிட்டு நமக்கு இவ்வளவு தொந்தரவு
குடுக்குதே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்…
ஒரு நாள் ‘டக்’குன்னு தீர்மானம்
பண்ணி, சிப்ஸ் சாப்பிடற பழக்கத்துக்கு ஒரு பெரீய்ய்ய முற்றுப் புள்ளி வச்சிட்டேன்.
கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாவது இருக்கும்னு நினைக்கிறேன், இப்பல்லாம் சிப்ஸை தொடறதில்லை.
(touch wood).
ஆனா என்ன, இப்ப இந்த சிப்ஸ் மாதிரிதான்
சூர்யா நிகழ்ச்சியும் ஆகிக்கிட்டிருக்கு. பார்க்க ஆரம்பிச்சிட்டா, பாதில நிறுத்த முடியலை!
அதுவும் இங்கே விஜய் டி.வி.ல விளம்பரங்களே இல்லாம வேற நிகழ்ச்சிகள் போடறாங்களா, அதனால
பார்க்கணும்கிற எண்ணத்தை இன்னும் தூண்டி விடுது… இப்ப தலைப்பு வந்திருச்சா? :)
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cinema/TelevisionDetail.aspx?id=6165&id1=6
