Monday, March 28, 2011

வரமா, சாபமா?

‘நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?’

கிட்டத்தட்ட எல்லோருக்குமே வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்கும். துன்பம் வரும்போது, இந்த உலகத்திலேயே நாம மட்டும் தான் இப்படி கஷ்டப்படறோம்னும், மற்றவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னும் தோணும். ஆனா, உண்மை அது இல்லை. எல்லோருக்குமே துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்துகிட்டுதான் இருக்கு. அவை வெளிப்படையா தெரியறதில்லை; அவ்வளவே.

ஒரு அம்மாவுக்கு 2 பசங்க. இரண்டாவது பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. வயிற்றுப் போக்கு. அதனால அவனுக்கு வெறும் கஞ்சிதான் குடுக்கறா. ஆனா மூத்த பிள்ளைக்கு எப்பவும் போல சாப்பாடு, மற்றதெல்லாம். இதனால இளையவனுக்கு அம்மா மேல கோவம். நம்ம அம்மாவுக்கு மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, நம்மை அவங்களுக்கு பிடிக்கறதே இல்லைன்னு நினைக்கிறான். விவரம் தெரிஞ்ச பிறகு அந்த பிள்ளைக்கு புரியும், அம்மா நமக்கு உடம்பு சரியில்லாதனால அப்படி செய்தாங்க, நமக்கு நல்லதுதான் செய்திருக்காங்க, அப்படின்னு.

இறைவனும் அதைப் போல நம் ஒவ்வொருத்தருக்கும் தேவையானதைத்தான் குடுக்கறான், அப்படின்னு சொல்லுவார், ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு தயார்படுத்தறான் இறைவன். அதுக்கு தகுந்தாப்போல அவங்கவங்களுக்கு வேண்டியதை குடுக்கறான். ஆனா நாம என்னடான்னா, இந்த கடவுளுக்கு என்னிடம் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை, அப்படின்னு நினைக்கிறோம்.

அரவிந்த அன்னை சொல்றதைக் கேளுங்க: "The difficulties and mishaps are tests and must be considered as a Grace from the Lord - and then they will become so and lead you quickly to your goal." - The Mother [p-76, White Roses, Sixth Edition, 1999]

பாகவத்தில் எல்லாருக்குமே தெரிஞ்ச கதை ஒண்ணு உண்டு. முதலைகிட்ட மாட்டிக்கிட்ட யானையை காப்பாற்ற, இறைவன் ஓடோடி வந்த கதை… அந்த கதைக்கு முன்னோடியா இன்னொருரு குட்டிக் கதையும் இருக்கு…

அதாவது, அந்த யானை முன் ஜென்மத்தில் ஒரு ராஜாவா இருந்ததாம். அந்த ராஜாவுக்கு பக்தி அதிகமாம். அவர் ஒரு நாள் ரொம்ப பக்தியோட தன்னை மறந்து சாமி கும்பிட்டுக்கிட்டிருந்தாராம். அப்ப ஒரு முனிவர் அங்கே வந்தாராம். பூஜையில் முழுகியிருந்த ராஜா, அந்த முனிவரை பார்க்கவே இல்லையாம். தன்னை வேணும்னேதான் அந்த ராஜா கண்டுக்காம இருக்கார்னு நினைச்சு, அந்த முனிவருக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சாம். உடனே, “பிடி சாபம்’ னுட்டாராம். ‘யானையாப் போ’ன்னு சொல்லிட்டாராம்.

இந்த யானைதான் தண்ணி குடிக்க போன போது, ஒரு முதலை கிட்ட மாட்டிக்கிச்சு. கூட வந்த யானைகளால அதை காப்பாத்த முடியல. அதாலயும் தன்னையே காப்பத்திக்கவும் முடியல. அப்பதான் அதுக்கு தன் பூர்வ ஜென்ம நினைவும், தான் வச்சிருந்த பக்தியும் நினைவு வந்ததாம். உடனே ‘ஆதி மூலமே’ அது இறைவனை கூவி அழைச்சதாகவும், விஷ்ணு கருடன் மேல ஏறி, பறந்து வந்து அதை காப்பாற்றினதாகவும் கதை முடியும்.

(இதே போல முதலைக்கும் ஒரு கதை உண்டு)

இப்போ நாம நினைப்போம் அந்த ராஜா பாவம், சாமி கும்பிட்டதுக்கு இப்படி ஒரு தண்டனையான்னு. ஆனா உண்மை என்ன?

எந்த ஒரு ஜீவனும், முக்தி அடையறதுக்கு முந்தி எத்தனையோ பிறவிகள் எடுக்கணும். அந்த ராஜாவும் அப்படித்தான். அவர் ராஜாவாகவே இருந்திருந்தா, இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்திருக்கணுமோ… ஆனா அந்த முனிவர் கொடுத்த சாபத்தால், அவர் யானையாகப் பிறந்த உடனே, அதே பிறவியில் இறைவனை அறிய முடிஞ்சது; மோக்ஷம் கிடைச்சது. அதனால, அவருக்கு கிடைச்சது வரம்தானே? (இதுவும் ஒரு சுவாமிஜி சொன்னதுதான். பேர் மறந்துட்டேன்).

அதே போலத்தான். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பின்னணி இருக்கு; பொருள் இருக்கு; காரணம் இருக்கு; அதில் கண்டிப்பா ஒரு பாடமும் இருக்கு. அது என்னன்னு நமக்கு உடனே தெரியலைங்கிறதுக்காக அந்த நிகழ்வை நல்லதுன்னோ, கெட்டதுன்னோ, நாம நம் சிற்றறிவை வச்சு எப்படி முடிவு பண்ண முடியும்?

“There is something good in all seeming failures. You are not to see that now. Time will reveal it. Be patient.” இது சுவாமி சிவானந்தர் சொல்றது.

வரம் என்பது சாபத்தின் ரூபத்திலும் வரக் கூடும் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டா, எத்தகைய துன்பம் வந்தாலும், தெய்வத்தின் துணையோட நாம அதை கடந்துரலாம்.

(அதே போல சாபமும் வரத்தின் வடிவில் வரக்கூடும். ‘Be careful what you wish for’ னு கேட்டிருப்பீங்களே. அதைப் பற்றி இன்னொரு முறை பேசலாம் :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Sunday, March 20, 2011

நீ அங்கு நலமா?துயரக்கடலில் நீண்ட நேரம் நீந்தியும்
கரை சேராமல் களைத்துப் போகின்றன
நினைவலைகள்

கதிரவனைக் காணாத தைரியத்தில்
இறுக்கமாய் மனசை மூடிக்கொள்கின்றன
சூல்மேகங்கள்

கனவுகளில்கூட கணமும் நிற்காமல்
விடாமல் கொட்டுகிறது
கண்ணீர் கனமழை

எட்டிப் பார்த்த ஒரே ஒரு நட்சத்திரம்கூட
இருட்டுக்குப் பயந்து
சுருக்குப் போட்டுக் கொள்கிறது

எப்படியோ கண் அயரும்
அரைகுறை உறக்கத்தில்
அம்மாவின் அழைப்பு -
"நல்லாருக்கியாம்மா?"

அனிச்சையாய் ஒலிக்கும்
இவளின் பதில் -
"ஓ! ரொம்ப நல்லாருக்கேம்மா!"


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/gumpfisher/2061251378

Sunday, March 13, 2011

அவளும் நானும்

வெள்ளிக்கிழமை. கோயிலுக்கு போகலாமா வேண்டாமான்னு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. எங்க ஊர் கோவிலில் மகாலக்ஷ்மிக்கு அபிஷேகம், லலிதா சகஸ்ரநாமம், இதெல்லாம் வெள்ளிக்கிழமை விசேஷங்கள். எனக்கும் அன்றைக்கு ஒரு நாள்தான் உருப்படியா கோவிலுக்கு போற வழக்கம். அப்படின்னா இந்த தரம் மட்டும் என்ன யோசனைங்கிறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு.

போன வாரம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது ஏதோ ஒரு காரணத்தால் மனசு ஏற்கனவே சஞ்சலப் பட்டுக்கிட்டிருந்தது. கோவிலுக்கு போயி, நல்லாதான் அபிஷேகம், அலங்காரம், எல்லாம் பார்த்தேன், லலிதா சகஸ்ரநாமமும் சொன்னேன். வழக்கமா தீபம் காண்பிச்ச பிறகு, அர்ச்சகர் தீபம், தீர்த்தம், சடாரி, பிரசாதம், இதெல்லாம் ஒவ்வொண்ணா குடுப்பார். தீபம், தீர்த்தம், ரெண்டும் கிடைச்சது. அடுத்ததா சடாரிக்கு குனியறதுக்காக, கைப்பையெல்லாம் கீழே வச்சுட்டு தயாரா நின்னேன்.. சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் நின்னவங்களுக்கு வரிசையா சடாரி வச்சுக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்துட்டு, போயே போயிட்டாரு! எனக்கு ஒரே வருத்தமா போச்சு. ஏற்கனவே வேற மனசு கஷ்டமா இருந்ததா, அதோட இதுவும் சேர்ந்துக்கிச்சு. சரி, என் மேல அவளுக்கு ஏதோ கோவம் போல, அப்படின்னு நினைச்சுக்கிட்டே வந்துட்டேன்.

அதனாலதான் இந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறது பத்தி சின்ன தயக்கம். ஆனா பழக்கம்கிறது விடக் கூடியதா என்ன? 7 மணிக்கு போய் அவள் முகத்தை பார்க்காமல் எப்படி இருக்கறது? சரின்னு அவகிட்ட ஒரு டீல் போட்டுக்கிட்டேன், “இன்றைக்கு எனக்கு எல்லாமே குறையில்லாம கிடைக்கணும், இல்லன்னா அடுத்த வாரத்திலிருந்து கோயிலுக்கு வர மாட்டேன், சொல்லிட்டேன்” அப்படின்னு!

அபிஷேகம் நல்லா முடிஞ்சது. பச்சைப் பட்டுப் புடவையில் அவ்ளோ அழகா இருந்தா. அர்ச்சனைக்கு குடுத்தவங்க யாரோ பூ வாங்கிக்கிட்டு வந்திருந்தாங்க, அந்த பச்சை புடவைக்கு பொருத்தமா, அதே பச்சையில் பூ. எப்படி அமையுது பாரு, அப்படின்னு தோணுச்சு. அதையும் வைச்சோன்ன, அழகுக்கு கேட்கவே வேணாம்!

தீபம் முடிஞ்சதும், வழக்கம் போல, தீபம், தீர்த்தம்…, இப்படி ஒவ்வொண்ணா வந்தது. எனக்கும் கிடைச்சது. சடாரி கொண்டு வந்தார். என்னை மறக்கப் போறார்னு நினைச்சுக்கிட்டே, ஆனாலும் தயாரா நின்னேன். மறக்கலை. அப்பாடின்னு இருந்தது! அடுத்ததா பிரசாதம்.

பிரசாதம்னா எங்க ஊர் கோவிலில் பாதாம் பருப்பும், கல்கண்டும் கலந்த கலவை. சில சமயம் பழம். இன்றைக்கு பருப்பு கலவை. ரெண்டு வரிசையிலும் மாத்தி மாத்தி குடுத்துக்கிட்டே வந்தவர், என்னை மட்டும் மறந்தே மறந்துட்டார்! எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்? சின்னப் புள்ள மாதிரி எனக்கும் குடுங்கன்னு கையை நீட்ட வெட்கமா இருந்தது. அவர் வேற ஏதோ அவசரத்தில் இருந்தார்.

இப்படியாக, இன்றைக்கும் ஒரே வருத்தமா போச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம, அங்கேயே சில நிமிஷங்கள் அப்படியே நின்னுக்கிட்டிருந்தேன். எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. சந்நிதியிலிருந்து எல்லாரும் கலைஞ்சு போன பிறகு வழக்கம் போல பக்கத்தில் போய் விழுந்து கும்பிட்டேன். “அப்படின்னா நான் அடுத்த வாரத்திலிருந்து வர வேண்டாமா? இல்ல, என்னால வராம இருக்க முடியுதான்னு சோதிச்சு பார்க்கிறியா?” அப்படின்னு அவளைக் கேட்டேன். “அப்ப நம்ம டீல் படி இனி நான் வராம இருக்க வேண்டியதுதானா?” அப்படின்னு சொல்லும் போது கண் கலங்கிடுச்சு…

அப்பதான் இன்னொருத்தரும் சந்நிதிக்கு அருகில் வந்தார்… எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பர்தான். வந்து கையை நீட்டினார், நானும் என்னன்னே தெரியாம, அனிச்சையா, இயல்பா, கையை நீட்டினேன். என் கையில் அவர் என்ன கொடுத்திருப்பார்னு உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்!

என் சந்தோஷத்தை சொல்லி முடியாது! அப்புறம் என்ன? அடுத்த வெள்ளியும் அவளை பார்க்கத்தான் போறேன்!

அன்னையின் திருவடிகள் சரணம்.

அன்புடன்
கவிநயா

பி.கு. பொதுவா சின்ன புள்ளங்களுக்குத்தான் கல்கண்டு, பாதாம்லாம் பிடிக்கும். அதனால கோவிலில் வாங்கற பிரசாதத்தை நானுமே அங்கே பார்க்கும் புள்ளைகளுக்கு குடுக்கறதுண்டு. ஆனா! நான் எவ்ளோ பெரிய (சின்ன) பிள்ளை! என் முகத்தில் என்ன எழுதியிருந்ததோ! எனக்கு குடுக்கணும்னு அந்த நண்பருக்கு தோணியிருக்கே… தோண வச்சிருக்காளே… அவளைப் போல யாருண்டு?

Tuesday, March 8, 2011

அவள் வருவாளா?

முதல் பகுதி இங்கே; இரண்டாம் பகுதி இங்கே...

(3)

அன்றைக்கு தொடங்கி தினமும் அந்த குட்டி பொண்ணை எதிர்பார்த்துக் காத்திருப்பது சுந்தரிக்கு வாடிக்கை ஆகிப் போச்சு. முன்னெல்லாம் நடன நிகழ்ச்சிகளுக்கு பார்த்து பார்த்து பாடல்கள் தேர்வு செய்யறதைப் போல, அவளுடைய புதிய சின்னக் கண்ணமாவுக்காகவே பாடல்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யறா இப்பல்லாம்…

ரெண்டு பேருமா சேர்ந்து புது நடனங்கள் அமைப்பதும், அவற்றை சிவகாமியை ஆடச் சொல்லிப் பார்ப்பதும், சுந்தரிக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் அவள் வரலைன்னாலும் இவளால தாங்க முடியறதில்லை.

பள்ளி விடுமுறைக்காலமா இருக்கறதால இவளோட நிறைய நேரம் இருக்க முடியுது அவளால.

நடனம் ஆடறது மட்டுமில்லாம சுந்தரிக்கு பயபக்தியோட பலவிதமா பணிவிடைகளும் உதவிகளும் செய்யறா, சிவகாமி.

ஒரு நாள், “அம்மா, இந்த எண்ணெய், காலுக்கு தடவினா நல்லதாம். வலி போயிருமாம், என் அம்மா குடுத்தாங்க”, என்றபடி ஒரு எண்ணெய் கொண்டு வந்தா. கொண்டு வந்ததோட நிக்கல; தினமும் வீட்டுக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி, தன்னோட பூப்போல சின்னக் கையால அவள் கால்ல அந்த எண்ணெயை தேய்ச்சு நல்லா நீவிவிடுவா. சுந்தரிக்கு ரொம்ப சுகமா இருக்கும். அந்த எண்ணெய் போட ஆரம்பிச்சதில் இருந்து அவளுக்கும் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு. அது மட்டுமில்லாம தாங்கி நடக்கறது கூட குறைஞ்ச மாதிரி இருக்கு…

இப்பல்லாம் இஷ்ட தெய்வமான மீனாக்ஷியை வணங்கும் போது, “அம்மா, சிவகாமியை எனக்குத் தந்ததுக்கு நன்றிம்மா. என் வாழ்க்கையிலேயே நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கறது இதுவே முதல் முறை… நடனமாடிக்கிட்டு நல்லா இருந்த காலத்தில் கூட எப்பவும் தனிமையாதான் உணர்ந்திருக்கேன்…”, அப்படின்னு சொல்றா.

அவள் சொன்னது மீனாக்ஷி காதில் கேட்டிருச்சு போல, அன்றைக்கு வெகு நேரமாகியும் சிவகாமி வரலை.

இத்தனை நாளும், என்னிக்காவது வர முடியலைன்னா, முன்னாடியே சொல்லிடுவா. ஆனா நேத்து அவ ஒண்ணுமே சொல்லலை. சுந்தரியும் காத்துக் காத்துப் பாத்துட்டு ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுதான் வீட்டுக்குள்ள போறா. இயந்திரமா செய்ய வேண்டிதைச் செய்துட்டு படுக்கறா. ஆனா தூக்கம் என்னமோ வர்றதா இல்லை.

“அடியே மீனாக்ஷி, நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பொறுக்கலையா? என் சின்னக் கண்ணம்மாவுக்கு என்ன ஆச்சு? அவ ஏன் வரலை? அவள் வீடும் எனக்கு தெரியாதே? அவளை எங்கேன்னு போய்த் தேடுவேன்?”

ஏக்கத்திலும், சுய இரக்கத்திலும், தலையணை நனையுது…

இப்படியே எத்தனை நாள் ஓடுச்சோ, அவளுக்கே தெரியலை.

அன்றைக்கு பூஜை அறையில் விளக்கேற்றப் போகும்போது அழைப்பு மணி சத்தம்… ஆவலைக் கட்டுப் படுத்த முடியலை… சிவகாமியாதான் இருக்கும்! ஓ…..டிப் போய் கதவைத் திறக்கறா…ஆனா அங்கே யாருமே இல்லை. ஒண்ணும் புரியாம கொஞ்சம் வெளியில் வந்து சுத்து முத்தும் பாத்துட்டு ஏமாற்றத்தோட கதவைச் சாத்திட்டு திரும்பறா…

திரும்பும்போது தான் உணர்றா, கதவு திறக்க தான் ஓடி வந்ததை!

குனிஞ்சு ரெண்டு காலையும் பாத்துக்கறா… தனித் தனியா உதறிப் பார்க்கிறா; நடந்து பார்க்கிறா; ஓடிப் பார்க்கிறா… விபத்துக்கு முன்னாடி இருந்ததை விடவும் கால் ரெண்டும் உறுதியா இருக்கு! நம்பவே முடியலை அவளால! தட்டி நமஸ்காரம் செய்து, அரைமண்டி உட்கார்ந்து ரெண்டு ஜதி போட்டு ஆடிப் பாக்கிறா, “த கிட… த கிட”…

சந்தோஷம் தாங்கலை அவளுக்கு! உடனே சலங்கை கட்டி ஆடணும் போல இருக்கு. சிவகாமி வரும்போது, அவளோட தானும் சேர்ந்து ஆடலாம்! ஆஹா, எவ்வளவு நல்லாருக்கும்! மீனாக்ஷிக்கு முதல்ல நன்றி சொல்லணும். பூஜை அறைக்கு மறுபடி போறா….

மீனாக்ஷி முகத்தில் புன்னகை பிரகாசமா இருக்கு இன்றைக்கு… அவள் பக்கத்தில்… என்ன அது?

சிவகாமி, தன் சின்னக் கால்களில் கட்டியிருந்த சலங்கைகள்!

சுந்தரியின் கண்ல இருந்து கண்ணீர் பெருகி வழியுது.

சிவகாமி இனி வர மாட்டாள்.


--கவிநயா

(நிறைவுற்றது)

Monday, March 7, 2011

அவள் வருவாளா?

முதல் பகுதி இங்கே...

(2)

“சிவகாமி… முழு பாட்டுக்கும் ஆடிக் காட்டறியா?”ன்னு கேட்கிறா.

“அம்மா… நான்…”, அப்படின்னு அவ தயங்கவும்,

“இங்கே உன்னையும் என்னையும் தவிர யாருமே இல்லை. தைரியமா ஆடலாம், வா” அப்படின்னு அவ கையப் புடிச்சு உள்ள அழைச்சுக்கிட்டுப் போறா.

மறுபடியும் அதே தில்லானா ஒலிக்கவும், ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாப் போல இருந்தவ, இப்ப தயக்கமே இல்லாம, காலம் காலமா நடனம் ஆடிக்கிட்டிருந்தவளைப் போல சுழன்று ஆடறா. காலும், கையும் மட்டுமில்லாம, கண்ணும், முகமும், ஒவ்வொரு அவயவமும் பேசுது.

அசந்து போய் பார்க்கிறா சுந்தரி!

‘இந்தப் பொண்ணு போய் என்கிட்ட கத்துக்கணும்னு சொன்னாளே… நானில்ல இவகிட்ட கத்துக்கணும்?’ அப்படின்னு நினைப்பு ஓடுது.

பாடல் முடிஞ்சதும், கொஞ்சம் கூட மூச்சு வாங்காம, சுந்தரியுடைய காலைத் தொட்டு வணங்கிட்டு, தட்டி நமஸ்காரமும் செய்யறா, சிவகாமி.

அவளை ஒரு பதம் ஆடச் சொல்லிப் பார்க்கணும்னு நினைச்சுக்கறா, சுந்தரி…

“இவ்வளவு அற்புதமா ஆடறியே, உனக்கு யாரம்மா குரு?” ஆச்சர்யம் அகலாத குரல்ல கேட்கறா.

“குருன்னு எனக்கு யாரும் இல்லம்மா. நானா ஏதோ கத்துக்கிட்டதுதான்… அதனாலதான் உங்ககிட்ட முறையா கத்துக்கணும்னு ஆசை. எனக்கு சொல்லித் தருவீங்களா அம்மா?” ஆவலுடன் அவள் முகத்தை பார்க்கிறா.

“நானா?” அப்படின்னு காலைப் பாத்துக்கறா…

“ஏன்மா? எனக்கு கத்துத் தர மாட்டீங்களா?” சிவகாமியின் குரலில் ஏமாற்றம்.

“நீதான் இவ்வளவு நல்லா ஆடறியேம்மா? உன்கிட்ட இருந்துதான் நான் கத்துக்கணும்!”, சிரிச்சுக்கிட்டே, ஆனா உண்மையா சொல்றா சுந்தரி.

“போங்கம்மா, கிண்டல் பண்ணாதீங்க”, அழகா வெட்கப்பட்டு தலை குனிஞ்சுக்கறா அந்த குட்டி.

“நான் நடனம் கத்துக் குடுக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சும்மா…”

“ஏன்மா? இந்த ஊருக்கு வந்த போது உங்ககிட்ட கத்துக்கலாம்னு ஆசையோட வந்தேன். உங்க நிகழ்ச்சிகளை நிறைய தரம் பார்த்திருக்கேன் அம்மா. எனக்கு ரொம்ப பிடிச்ச நடனமணி நீங்கதான்!”, குட்டி பொண்ணோட குரல்ல உற்சாகமும் மகிழ்ச்சியும் ததும்புது.

“என் காலை நீ கவனிக்கலையா? இதை வச்சுக்கிட்டு எப்படி ஆடறது?”, மனசுக்குள் இருந்த ஏக்கமும் வருத்தமும் சுந்தரியின் குரலிலும் தெரியுது.

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்தில் இப்படி ஆயிருச்சு. அதுக்கப்புறம் நான் நடனம் ஆடறதையும் சொல்லித் தரதையும் விட்டுட்டேன் கண்ணம்மா”

“எனக்குன்னு யாரும் இல்லை. சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்துட்டு, அனாதை ஆசிரமத்தில் இருந்தேன். சிரமப்பட்டு படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகுதான் அது வரை கனவா மட்டுமே இருந்த நடனத்தை கத்துக்கிட்டேன்… நடனத்துக்காக, அதன் மேல நான் வச்சிருக்க பிரேமைக்காக, கல்யாணமும் பண்ணிக்கலை. நடனத்தையும் மீனாக்ஷியையும் விட்டா எனக்கு வேற துணை இல்லை…

எனக்கு பிடிச்ச நடனம் என்னை நல்லாவே வளர்த்தும் விட்டது… ஆடாத மேடைகள் இல்லை, வாங்காத விருதுகள் இல்லை, அப்படிங்கிற அளவுக்கு. இதோ… இந்த நடன மண்டபத்தைப் பாரு…”

சிவகாமியும் சுற்றிப் பார்த்தாள். மிகப் பெரிய அந்த மண்டபம் இரண்டு பகுதிகளாக இருந்தது. இவர்கள் இருந்த பகுதியில் சுவரெல்லாம் கண்ணாடி பதித்திருந்தது.

“இங்குதான் முன்பு வகுப்புகள் நடத்தினேன், அடுத்த பகுதியையும் போய் பார்த்துட்டு வா”, என்றாள்.

அடுத்த பகுதி ஒரு பிரம்மாண்டமான நடன அரங்கமாக இருந்தது.

மிகப் பெரிய மேடை. கிட்டத்தட்ட 500 பேர் உட்காரும் அளவு வசதியான நாற்காலிகள் மேடையைச் சுற்றி. மேடையின் ஒரு பக்கத்தில் நடராஜருக்கென்றே ஒரு சின்ன மேடை. அதன் மேல் நடராஜரின் திருவுருவம். மேடையில் திரைக்குப் பின்னால் ஒப்பனை அறை. கழிவறை. இப்படி எல்லா வசதிகளுடனும் இருந்த அந்த நடன அரங்கத்தைக் கண்டு திறந்த வாய் மூடவில்லை, சிவகாமிக்கு.

“அடேங்கப்பா! எவ்ளோ பெரிசு அம்மா!” என்று கடல் போல விரிந்த விழிகளை மேலும் அகல விரித்தபடி அவள் சொன்ன அழகை ரசித்தாள், சுந்தரி.

“ஆமாம். இங்கே நடனமாடாத கலைஞர்கள் இல்லை. இங்கே ஆட வாய்ப்புக் கிடைச்சா அதை ஒரு தனிப் பெருமையா நினைப்பாங்க. இப்ப எல்லாம் நின்னு போச்சு”

“ஏனம்மா, உங்களால ஆட முடியாட்டியும் நிகழ்ச்சிகளையாவது நடத்தலாமே?”

“நியாயமான கேள்விதான்… ஆனா ஒவ்வொருத்தரும் ஆடறதையும் பார்க்கும் போதும், நம்மால ஆட முடியலயேங்கிற என்னோட ஏக்கம் அதிகமாகுதே தவிர குறையல. ஒவ்வொருத்தரும் கேட்கிற கேள்விக்கும் பதில் சொல்லவும் விருப்பமில்லை. அதனால என்னை தனிமைப் படுத்திக்கிட்டேன்…”

இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன புரியும்னு நினைக்காம, ஏன் அவகிட்ட இப்படி எல்லாத்தையும் கொட்டறோம், அப்படின்னு சுந்தரிக்கே ஒரு நிமிஷம் தோணுது…

“அதை விடு, நீ என்ன சாப்பிடறே? பிஸ்கட் இருக்கு, பால் இருக்கு…” குரல் கொஞ்சம் இலேசா இருக்கு இப்போ, மனசைப் போலவே.

“இல்லம்மா, நான் வீட்டுக்கு போகணும். அம்மா தேடுவாங்க… நாளைக்கு சாப்பிடறேன்…”, என்றவள், கொஞ்சம் தயங்கி, “நாளைக்கு நான் வரலாமா அம்மா?”, என்கிறாள், கொஞ்சம் சந்தேகமாய்…

“கண்டிப்பா வரணும். உன்னை எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன்! உனக்காக வேற ஒரு பதம் எடுத்து வைக்கிறேன் நாளைக்கு…சரியா?”

பலகாலம் பழகினவள் போல உணர்வில் அந்த குட்டிப் பொண்ணை இறுக்கி அணைச்சு நெற்றியில் முத்தம் குடுத்து அனுப்பி வைக்கிறா, சுந்தரி.


--கவிநயா

(தொடரும்)

Sunday, March 6, 2011

அவள் வருவாளா?

(1)

“தித் தில்லானா திரனா தீம்த ததிங்கிணதோம்”

கண்ணு ரெண்டும் மூடி இருக்க, ஓடிக்கிட்டிருந்த பாட்டுக்கு சரியா சுந்தரியோட கால்களும் தாளம் போட்டுக்கிட்டிருக்கு. சலங்கை கட்டி ஆடாத குறைதான். ஆனா மனசுக்குள்ள மானசீக ஆட்டம் அது பாட்டுக்கு நடக்குது.

திடீர்னு நிஜமாகவே சலங்கை சத்தம் கேட்குது, அவளுக்கு. அட்சர சுத்தமா, இம்மியும் பிசகாம ரெண்டு கால்கள் ஜதி போடற ஒலி! சட்டுன்னு கண்ணைத் திறந்து பாக்கறா. அத்தனை பெரிய நடன மண்டபத்துல, அவளைத் தவிர யாருமே இல்லை. பாட்டு முடியவும், சலங்கை சத்தமும் நின்னுடுது. ஒண்ணும் புரியாம, மறுபடியும் சாய்வு நாற்காலில சாஞ்சு கண்ண மூடிக்கிறா.

திடீர்னு ஏதோ தோணவும், மறுபடியும் எழுந்து, அதே பாட்டை ஓட விடறா. முதல் கோர்வை வரும்போது மீண்டும் சலங்கை சத்தம். இப்போ அவளால் ஆவலை கட்டுப் படுத்த முடியல. சிரமத்தோட நாற்காலியில் இருந்து எழுந்து குட்டையா போயிட்ட ஒரு காலை தாங்கித் தாங்கி அந்த மண்டபத்தை விட்டு வெளில வர்றா. பக்கத்தில் சின்ன சின்னதா இருக்கிற அறைகளை ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டே வரா.

இதோ… இப்ப சத்தம் ரொம்ப பக்கத்தில் கேட்குதே… இலேசா ஒருக்களிச்சிருந்த அந்த கதவை திறக்கவும், சலங்கை சத்தம் சட்டுன்னு நின்னுடுது. அந்த அறைக்குள்ள…


ஒரு அழகான குட்டி பொண்ணு! மிஞ்சி மிஞ்சி போனா 9 அல்லது 10 வயசுதான் இருக்கும். தங்க விக்கிரகம் மாதிரி பளிச்சுன்னு அப்படி ஒரு அழகு! அவளை உட்கார வச்சு இன்னிக்கெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்!

பச்சை பட்டு பாவாடையும், அரக்கு சிவப்பில் சட்டையுமா… இடுப்பில் ஒட்டியாணம். கன்னம் ரெண்டையும் லேசா தொட்டும் தொடாம காதில் தொங்கற ஜிமிக்கி. ஒத்தையா நடு வகிட்டுல ஒரு நெத்திச் சுட்டி. அந்த நேர்த்தியான சிமிழ் மாதிரியான மூக்கில் ஒரு குட்டி மூக்குத்தி வேற. அவளோட சின்ன சிவப்பு உதட்டை லேசா முத்தமிடற மாதிரி ஒரு புல்லாக்கு. குஞ்சலம் வச்சு பின்னின நீள ஜடை. தலை நிறைய மல்லிகைப் பூ. அதையும் யாரோ அவளுக்கு அழகா ரசனையோட வச்சு விட்டிருக்காங்க.

இப்படி மொத்தத்துல ஒரு நடன நிகழ்ச்சிக்கு தயாரா வந்திருந்தாப்போல இருக்கா, அந்த குட்டி பொண்ணு! அவளைப் பார்த்த சுந்தரி ஆச்சர்யமான அதிர்ச்சியில இருந்து மீள கொஞ்ச நேரம் ஆகுது.

ஒரு வேளை என்னுடைய மாணவிகளில் ஒருத்தியா இருக்குமோ? நடனம் கத்துக் குடுக்கறதை நிறுத்தி ஒரு வருஷம் ஆகப் போகுது. சின்ன பிள்ளங்க சீக்கிரம் வளர்ந்துடுவாங்களே… அவங்கள்ல ஒருத்தியோ? அப்படியும் இப்படியும் நினைவை பொரட்டி பாக்கறா. ஆனா இந்த முகம் மறக்கக் கூடிய முகமா என்ன? இப்படி ஒரு முகத்தை பார்த்திருந்தா மறந்திருக்கவே வாய்ப்பே இல்லை!

“யாரும்மா நீ? எப்படி உள்ள வந்தே?” கொஞ்சம் கண்டிப்பாவே கேக்கறா.

கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமா சட்டுன்னு அவ காலை தொட்டு கும்பிடறா அந்த குட்டி.

“வணக்கம்மா. என்னை மன்னிச்சிடுங்க. இங்கே தினம் பாட்டு சத்தம் கேட்கும். ஒரு நாளாச்சும் உள்ள வந்து பாக்கணும்னு ஆசையா இருந்தது.. இன்னிக்கு கதவு லேசா திறந்திருந்ததா… அதான்…”, தலையை குனிஞ்சிக்கிட்டே தனக்கே கேட்காத குரலில் பயந்துக்கிட்டே சொன்னா அவ.

“அப்படியா… சரி… உம் பேரென்னம்மா? உனக்கு பரதம் தெரியுமா?”, சுந்தரியோட குரல் இப்போ லேசா தணிஞ்சிருக்கு.

“என் பேர் சிவகாமசுந்தரி அம்மா. சிவகாமின்னு கூப்பிடுவாங்க. கொஞ்சம் நடனம் கத்துக்கிட்டது உண்டு அம்மா. நான் உங்ககிட்ட கத்துக்கணும்னு எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்ப ஆசை.”

சிவகாமி முகத்தில் இப்ப சின்னதா புன்னகை கூட எட்டி பாக்குது…சுந்தரி முகத்திலும்தான்…

“என்கிட்ட போயி கத்துக்கணுமாமே…” அப்படின்னு கூடவே ஒரு பெருமூச்சும்..

பிறகு சுதாரிச்சுக்கிட்டு சொல்றா,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா! என் பேரும் உன் பேரேதான். சிவகாமசுந்தரி! ஒரே ஒரு வித்தியாசம்…என்னை சுந்தரின்னு கூப்பிடுவாங்க…”

என்றதும் அந்த குட்டி பொண்ணு முகத்தில் சந்தோஷம் தண்டவமாடுது.

“ஹைய்யா… உங்களுக்கும் எனக்கும் ஒரே பேரு!” ரெண்டு கையையும் சேர்த்து பலமாக தட்டிக்கிட்டு, கூடவே ரெண்டு குதி குதிக்கிறா!

அவ சந்தோஷம் சுந்தரியையும் தொத்திக்க, அவளும் வாய் விட்டு சிரிக்கிறா… இப்படி சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு, அப்படிங்கிற நினைப்பும் கூடவே…


--கவிநயா

(தொடரும்)

படத்துக்கு நன்றி: http://www.4to40.com/coloring_designs_patterns