முதல் பகுதி இங்கே...
(2)
“சிவகாமி… முழு பாட்டுக்கும் ஆடிக் காட்டறியா?”ன்னு கேட்கிறா.
“அம்மா… நான்…”, அப்படின்னு அவ தயங்கவும்,
“இங்கே உன்னையும் என்னையும் தவிர யாருமே இல்லை. தைரியமா ஆடலாம், வா” அப்படின்னு அவ கையப் புடிச்சு உள்ள அழைச்சுக்கிட்டுப் போறா.
மறுபடியும் அதே தில்லானா ஒலிக்கவும், ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாப் போல இருந்தவ, இப்ப தயக்கமே இல்லாம, காலம் காலமா நடனம் ஆடிக்கிட்டிருந்தவளைப் போல சுழன்று ஆடறா. காலும், கையும் மட்டுமில்லாம, கண்ணும், முகமும், ஒவ்வொரு அவயவமும் பேசுது.
அசந்து போய் பார்க்கிறா சுந்தரி!
‘இந்தப் பொண்ணு போய் என்கிட்ட கத்துக்கணும்னு சொன்னாளே… நானில்ல இவகிட்ட கத்துக்கணும்?’ அப்படின்னு நினைப்பு ஓடுது.
பாடல் முடிஞ்சதும், கொஞ்சம் கூட மூச்சு வாங்காம, சுந்தரியுடைய காலைத் தொட்டு வணங்கிட்டு, தட்டி நமஸ்காரமும் செய்யறா, சிவகாமி.
அவளை ஒரு பதம் ஆடச் சொல்லிப் பார்க்கணும்னு நினைச்சுக்கறா, சுந்தரி…
“இவ்வளவு அற்புதமா ஆடறியே, உனக்கு யாரம்மா குரு?” ஆச்சர்யம் அகலாத குரல்ல கேட்கறா.
“குருன்னு எனக்கு யாரும் இல்லம்மா. நானா ஏதோ கத்துக்கிட்டதுதான்… அதனாலதான் உங்ககிட்ட முறையா கத்துக்கணும்னு ஆசை. எனக்கு சொல்லித் தருவீங்களா அம்மா?” ஆவலுடன் அவள் முகத்தை பார்க்கிறா.
“நானா?” அப்படின்னு காலைப் பாத்துக்கறா…
“ஏன்மா? எனக்கு கத்துத் தர மாட்டீங்களா?” சிவகாமியின் குரலில் ஏமாற்றம்.
“நீதான் இவ்வளவு நல்லா ஆடறியேம்மா? உன்கிட்ட இருந்துதான் நான் கத்துக்கணும்!”, சிரிச்சுக்கிட்டே, ஆனா உண்மையா சொல்றா சுந்தரி.
“போங்கம்மா, கிண்டல் பண்ணாதீங்க”, அழகா வெட்கப்பட்டு தலை குனிஞ்சுக்கறா அந்த குட்டி.
“நான் நடனம் கத்துக் குடுக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சும்மா…”
“ஏன்மா? இந்த ஊருக்கு வந்த போது உங்ககிட்ட கத்துக்கலாம்னு ஆசையோட வந்தேன். உங்க நிகழ்ச்சிகளை நிறைய தரம் பார்த்திருக்கேன் அம்மா. எனக்கு ரொம்ப பிடிச்ச நடனமணி நீங்கதான்!”, குட்டி பொண்ணோட குரல்ல உற்சாகமும் மகிழ்ச்சியும் ததும்புது.
“என் காலை நீ கவனிக்கலையா? இதை வச்சுக்கிட்டு எப்படி ஆடறது?”, மனசுக்குள் இருந்த ஏக்கமும் வருத்தமும் சுந்தரியின் குரலிலும் தெரியுது.
“ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்தில் இப்படி ஆயிருச்சு. அதுக்கப்புறம் நான் நடனம் ஆடறதையும் சொல்லித் தரதையும் விட்டுட்டேன் கண்ணம்மா”
“எனக்குன்னு யாரும் இல்லை. சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்துட்டு, அனாதை ஆசிரமத்தில் இருந்தேன். சிரமப்பட்டு படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகுதான் அது வரை கனவா மட்டுமே இருந்த நடனத்தை கத்துக்கிட்டேன்… நடனத்துக்காக, அதன் மேல நான் வச்சிருக்க பிரேமைக்காக, கல்யாணமும் பண்ணிக்கலை. நடனத்தையும் மீனாக்ஷியையும் விட்டா எனக்கு வேற துணை இல்லை…
எனக்கு பிடிச்ச நடனம் என்னை நல்லாவே வளர்த்தும் விட்டது… ஆடாத மேடைகள் இல்லை, வாங்காத விருதுகள் இல்லை, அப்படிங்கிற அளவுக்கு. இதோ… இந்த நடன மண்டபத்தைப் பாரு…”
சிவகாமியும் சுற்றிப் பார்த்தாள். மிகப் பெரிய அந்த மண்டபம் இரண்டு பகுதிகளாக இருந்தது. இவர்கள் இருந்த பகுதியில் சுவரெல்லாம் கண்ணாடி பதித்திருந்தது.
“இங்குதான் முன்பு வகுப்புகள் நடத்தினேன், அடுத்த பகுதியையும் போய் பார்த்துட்டு வா”, என்றாள்.
அடுத்த பகுதி ஒரு பிரம்மாண்டமான நடன அரங்கமாக இருந்தது.
மிகப் பெரிய மேடை. கிட்டத்தட்ட 500 பேர் உட்காரும் அளவு வசதியான நாற்காலிகள் மேடையைச் சுற்றி. மேடையின் ஒரு பக்கத்தில் நடராஜருக்கென்றே ஒரு சின்ன மேடை. அதன் மேல் நடராஜரின் திருவுருவம். மேடையில் திரைக்குப் பின்னால் ஒப்பனை அறை. கழிவறை. இப்படி எல்லா வசதிகளுடனும் இருந்த அந்த நடன அரங்கத்தைக் கண்டு திறந்த வாய் மூடவில்லை, சிவகாமிக்கு.
“அடேங்கப்பா! எவ்ளோ பெரிசு அம்மா!” என்று கடல் போல விரிந்த விழிகளை மேலும் அகல விரித்தபடி அவள் சொன்ன அழகை ரசித்தாள், சுந்தரி.
“ஆமாம். இங்கே நடனமாடாத கலைஞர்கள் இல்லை. இங்கே ஆட வாய்ப்புக் கிடைச்சா அதை ஒரு தனிப் பெருமையா நினைப்பாங்க. இப்ப எல்லாம் நின்னு போச்சு”
“ஏனம்மா, உங்களால ஆட முடியாட்டியும் நிகழ்ச்சிகளையாவது நடத்தலாமே?”
“நியாயமான கேள்விதான்… ஆனா ஒவ்வொருத்தரும் ஆடறதையும் பார்க்கும் போதும், நம்மால ஆட முடியலயேங்கிற என்னோட ஏக்கம் அதிகமாகுதே தவிர குறையல. ஒவ்வொருத்தரும் கேட்கிற கேள்விக்கும் பதில் சொல்லவும் விருப்பமில்லை. அதனால என்னை தனிமைப் படுத்திக்கிட்டேன்…”
இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன புரியும்னு நினைக்காம, ஏன் அவகிட்ட இப்படி எல்லாத்தையும் கொட்டறோம், அப்படின்னு சுந்தரிக்கே ஒரு நிமிஷம் தோணுது…
“அதை விடு, நீ என்ன சாப்பிடறே? பிஸ்கட் இருக்கு, பால் இருக்கு…” குரல் கொஞ்சம் இலேசா இருக்கு இப்போ, மனசைப் போலவே.
“இல்லம்மா, நான் வீட்டுக்கு போகணும். அம்மா தேடுவாங்க… நாளைக்கு சாப்பிடறேன்…”, என்றவள், கொஞ்சம் தயங்கி, “நாளைக்கு நான் வரலாமா அம்மா?”, என்கிறாள், கொஞ்சம் சந்தேகமாய்…
“கண்டிப்பா வரணும். உன்னை எதிர்பார்த்துக்கிட்டிருப்பேன்! உனக்காக வேற ஒரு பதம் எடுத்து வைக்கிறேன் நாளைக்கு…சரியா?”
பலகாலம் பழகினவள் போல உணர்வில் அந்த குட்டிப் பொண்ணை இறுக்கி அணைச்சு நெற்றியில் முத்தம் குடுத்து அனுப்பி வைக்கிறா, சுந்தரி.
--கவிநயா
(தொடரும்)
இரண்டாம் பகுதியும் மிகப் பிரமாதமாக
ReplyDeleteகளைகட்டி இருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
//குரல் கொஞ்சம் இலேசா இருக்கு இப்போ, மனசைப் போலவே.//
ReplyDelete-- அருமையான வரிகள். பகிர்ந்து கொண்டாலே லேசாகிவிடுமல்லவா மனம் எனும் அற்புதம்....
nalla pakirvu
ReplyDeleteதொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி, ரமணி.
ReplyDelete//பகிர்ந்து கொண்டாலே லேசாகிவிடுமல்லவா மனம் எனும் அற்புதம்....//
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள். நன்றி ஸ்வர்ணரேக்கா :)
வருகைக்கு நன்றி ஆயிஷா :)
ReplyDeleteதானே தனக்கு சுற்றமும்
ReplyDeleteதானே தனக்கு உயிர்வகையும்
இந்த இருவரியும் ஏன் இப்ப மனசுல ஓடுதுன்னு தெரியலை அக்கா. அடுத்த பகுதிகளையும் படிச்சா தெரியுமோ என்னவோ? :-)
//தானே தனக்கு சுற்றமும்
ReplyDeleteதானே தனக்கு உயிர்வகையும்//
பொருத்தம் தான் குமரா :) சீக்கிரமே அடுத்த பகுதிகளை வாசிச்சிட்டு சொல்லுங்க!