Sunday, October 31, 2010

முடிவு

ன்னம்மா, இந்த நேரத்தில் இங்கே தனியா என்ன செய்யறே?”

வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்த ராதா, குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் முன்பின் பார்த்தறியாத பெண்மணி அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் நல்ல அரக்குச் சிவப்புப் புடவையும், குங்குமப் பொட்டும், மல்லிகைப் பூவுமாய் இருந்தாள். அழகிய அவள் முகம் நிலவொளியில் ஜொலித்தது. அவள் வயது என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை.

“உங்களுக்கென்ன அதைப் பற்றி அக்கறை?” அடக்க இயலாத ஆத்திரத்துடன் புறப்பட்ட கேள்வி, அந்த மங்கையின் முகத்தைப் பார்த்ததும், வந்த சுவடு தெரியாமல் புறப்பட்ட இடத்துக்கே சென்று விட்டது. ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

அவர்களுக்கு வெகு அருகில், அடம் பிடிக்கும் குழந்தையைப் போல விடாமல் “ஹோ”வென்று இரைந்து கொண்டிருந்தது கடல். எத்தனை எத்தனை யுகங்களாக இப்படி அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! ஒரு நாளேனும், ஒரு கணமேனும் ஓய்ந்திருக்குமா? எப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கிறதோ! எத்தனை வயதானாலும் அதே வேகத்துடன் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்! நினைத்துப் பார்த்தால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில்! இப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் சிந்தனை ஓடிற்று, ராதாவிற்கு.

“என்னம்மா சிந்தனை? இந்த ஏரியால எல்லாம் இத்தனை நேரத்துக்கு மேல பெண்பிள்ளைகள் தனியா இருக்கிறது ஆபத்து. வீட்டுக்கு போயிடம்மா. வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா?” கனிவுடன் ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.

“என்னைச் சொல்றீங்களே, நீங்க என்ன பண்றீங்க இங்கே?” மறுபடியும் கேட்க எண்ணியதைக் கேட்காமல் விழுங்கிக் கொண்டாள்.

“என்னை யாரும் தேட மாட்டாங்க அம்மா. நான் ஒரு அனாதை.”

‘நான் அப்படியொன்றும் பொய் சொல்லலை, இந்த நிமிஷத்தில் நான் அப்படி உணர்வது உண்மைதானே’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“தற்கொலை மிகப் பெரிய பாவம் மட்டுமில்லை, சுயநலமும் கூடத்தான்”, என்றாள் அந்தப் பெண்மணி.

ராதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!

“என் மனதிலுள்ளது இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது போல விழியகல அந்த பெண்மணியை பார்த்தாள்.

“இருக்கலாம். ஆனால் அவரவருக்கு துன்பம் வரும்போதுதான் தெரியும் அம்மா. அதற்குத் தகுந்தாற் போல நியாயங்களும் வேறுபடும்”

“வா. நடந்துகிட்டே பேசலாம். நல்லா இருட்டிப் போச்சு. இங்கே ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்”

அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது. மறுத்துச் சொல்ல மனம் தூண்டினாலும், அதை சட்டை செய்யாமல் அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.

“சுந்தர காண்டம் படிச்சிருக்கியா?”

இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “படிச்சிருக்கேன்”, என்று முணுமுணுத்தாள்.

“படிக்கும் போது ஏன் இதை படிக்கிறோம்னு உணர்ந்து படிச்சியா, சும்மா படிக்கணுமேன்னு படிச்சியா?”

கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்:

“சீதை அசோகவனத்தில் தனியாக இருந்து சொல்லவொணாத துயரங்களை அனுபவிக்கும் காலம் அது. அதைப் படிக்கப் படிக்க, ஸ்ரீலக்ஷ்மியின் திரு அவதாரமான சீதையே இவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்காளே, நம்முடைய துன்பமெல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும். அதனால படிக்கிறவங்களுக்கு துயரங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வரும். ஆஞ்சநேயர் தூது வருவதையும், சீதைக்கு ஆறுதல் சொல்வதையும் படிக்கையில், உயிரோடு இருந்தா நமக்கும் ஒரு நாள் துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை வரும். அதனாலதான் வாழ்க்கையில் துன்பம் வரும்போது பெரியவங்க அதை படிக்கச் சொல்றாங்க.”

ராதாவிற்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது. அவள் மேலே யோசிக்கும் முன் அடுத்த கேள்விக் கணை வந்து விட்டது…

“சரி, சொல்லு… சீதையை விட உனக்கு அதிகமான கஷ்டம் வந்திடுச்சா?”

“ஆமாம் அம்மா. அவளைப் போலவே என் கணவனைப் பிரிய வேண்டிய நிலைமை எனக்கும்.”

அந்த மங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சீதாபிராட்டியுடன் தன் துயரத்தை ஒப்பிட்டுக் கொள்ளும் இந்தச் சிறுமியை என்ன செய்வது? தன் உணர்வுகளை நாடகத் தனமாக மிகைப் படுத்திச் சொல்வதில் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை விருப்பம்?!

ராதாவிற்கு அன்றைக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவில் ஓடியது.

“அண்ணி… நான் ரஞ்சனி பேசறேன். உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் அண்ணி.”

“இன்றைக்கு அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறாங்க. உங்களுக்கு 6 வருஷமா குழந்தை இல்லைன்னு காரணம் சொல்லி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யறாங்க அம்மா”

அமிலத் திராவகத்தை காதில் ஊற்றியது போல் இருந்தது ராதாவிற்கு.

“ராதா, நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன். உன் தங்கச்சி கல்யாண வேலை நிறைய இருக்கும். கொஞ்சம் ஒத்தாசையா இருந்துட்டு வரலாமே”, என்ற மாமியாரின் கனிவுக்கு காரணம் இப்போதல்லவா தெரிகிறது?

“ரஞ்சனி, உங்க அண்ணா…”, என்று கேட்க ஆரம்பித்தவளை,

“அண்ணி, அம்மா வராங்க. நான் உங்களுக்கு போன் பண்றது தெரிஞ்சா என்னை பிச்சிடுவாங்க. பை”, அவள் பதிலுக்குக் காத்திராமல் ரஞ்சனி போனை வைத்து விட்டாள்.

இந்த விஷயமெல்லாம் கணவனுக்கு தெரியுமா என்று தெரிந்து கொள்ளத்தான் நினைத்தாள்.

“குழந்தையே பிறக்காவிட்டாலும் சரி, ராதா. உனக்கு நீயும் எனக்கு நானும்தான் குழந்தை”, என்று கனியக் கனியப் பேசிய கண்ணனா இப்படி? ஆனால், அவனுக்கு தெரியாமலா இத்தனையும் நடக்கும் என்ற முடிவுக்கு அவளே வந்து விட்டாள். இனி நான் வாழ்ந்து என்ன பயன், என்ற முடிவுக்கும்தான்!

“உன்னைப் போல சுயநலவாதிகள் நிறைய இருக்காங்க!” மறுபடியும் அந்தப் பெண்மணியின் குரல் அவளை உசுப்பியது.

ராதாவுக்கு கோபம் வந்து விட்டது!

“அம்மா! உங்களுக்கு என்னை முன்பின் தெரியாது. அதற்குள்ள என்னை எப்படி சுயநலவாதின்னு சொல்றீங்க?”

“ஏன்னா, அப்படிப்பட்டவங்கதான் தற்கொலை பண்ணிக்க துணிவாங்க. தனக்கு என்ன கிடைக்கலைன்னு பார்ப்பாங்க, ஆனால் மற்றவங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு… இந்த முடிவு எடுத்தியே, உன் அப்பா அம்மாவைப் பற்றியோ, அடுத்த மாசம் கல்யாணம் நடக்கவிருக்கிற உன் தங்கையைப் பற்றியோ, ஏன், உன் கணவனைப் பற்றியோ, ஒரு நிமிஷமாவது சிந்திச்சியா?”

அவள் சொல்வது எத்தனை உண்மை! தனக்கு என்ன பாதிப்பு, தான் எவ்வளவு துயரப்படப் போகிறோம், கணவனைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது, தன் வாழ்க்கை என்ன ஆகும், இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அவள் கண்ணீருக்கும் முடிவிற்கும் காரணமாக இருந்தனவே தவிர, வேறு யாருடைய நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை! நினைத்துப் பார்க்கையில் அவளுக்கே வெட்கமாக இருந்தது.

“உன் கணவனை தொலைபேசியில் கூப்பிட்டு பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?”

“அவருக்கு தெரியாமலா அம்மா, பொண்ணு பார்க்க போவாங்க?”

“இவ்வளவுதானா நீ உன்னவர் மேல வச்சிருக்க அன்பும் நம்பிக்கையும்?” என்று அவள் கேட்ட போது ராதாவிற்கு ‘சுருக்’கென்றது.

“ராதா… எந்த ஒரு பிரச்சனையையும் எத்தனையோ விதமா தீர்க்கலாம். நீ ரொம்ப முட்டாள்தனமான வழியை தேர்ந்தெடுத்திருக்கே. அவ்வளவுதான் சொல்லுவேன்!”

சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள். ராதாவின் மனம் பல விஷயங்களையும் எண்ணி பரபரப்படைந்திருந்தது. கரையை நோக்கி நடந்து கொண்டிருந்ததையும், கிட்டத்தட்ட சாலையருகில் வந்து விட்டதையும் கூட அவள் உணரவில்லை.

வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக கண்ணனைக் கூப்பிட்டு பேச வேண்டும். நாம் செய்யவிருந்த காரியம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்! இந்த பெண்மணி மட்டும் சரியான சமயத்தில் வந்து நம் கண்களைத் திறக்காமல் இருந்திருந்தால்! அடடா, அவர் பெயரைக் கூட இன்னும் கேட்கவில்லை, நன்றி கூடச் சொல்லவில்லை...

ராதாவிற்கு இந்த நினைப்பு வரவும், அந்தப் பெண்மணி வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தவும், சரியாக இருந்தது. ஆட்டோக்காரருக்கு அம்மா வீட்டு விலாசத்தை சொன்னாள், ராதா.

ஏறிக் கொள்ளும் முன், “ரொம்ப நன்றி அம்மா” என்று சொல்லியவாறே விடைபெற்றுக் கொள்ளத் திரும்பினாள்.

ஆனால் அங்கே விரவிக் கிடந்த இரவு மட்டுமே அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.


--கவிநயா

Sunday, October 24, 2010

கண்ணாமூச்சி


மழைப்பெண் ஒருத்தி
கருமேகத் திரைக்குப்பின்
குறும்பாய் ஒளிந்திருக்க

விண்மீன் குழந்தைகள்
தங்கள் பங்குக்கு
வானெங்கும் மறைந்து கொள்ள

நீண்ட கதிர்களுடன்
ஒளிய வழியின்றி கதிரவன்
நாணத்தில் சிவந்திருக்க

இடிகள் ஒவ்வொன்றும்
மின்னல் விளக்கெடுத்து
விண்ணெங்கும் தேடி வர

உதவிக்குக் காற்றன்னை
தாவரங்கள் தம்மை
தலை கோதி அனுப்பித் தர

நீல மயில்கள் தங்கள்
தோகை விரித்தாடி
மழைப் பெண்ணைக் கவர எண்ண

அந்திப் பொழுதில் ஓர்
கண்ணாமுச்சி ஆட்டம்
அழகாய் நடக்கிறது...


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/danielmohr/4590740748/sizes/z/in/photostream/

Monday, October 18, 2010

இரத்த தானம் பண்ணப் போறீங்களா?

இரத்த தானம் பண்றது எனக்கு பிடிச்ச, திருப்தி தரும், விஷயம். ஆனா என்ன, பல முறை ஏதாவது ஒரு சோதனையில் தோத்துப் போய், பண்ணாமயே திரும்பி வந்திருக்கேன். அப்பல்லாம் ரொம்பவே சோ…கமா இருக்கும். ஆனா இந்த முறை வெற்றிகரமா பண்ணியாச்!

நீங்களும் தானம் பண்ண போயிட்டு என்னை மாதிரியே ஏமாந்து, ஏமாற்றி, திரும்பி வராம இருக்கணும்னா என்ன செய்யணும்? எப்படி நம்மை தயார் பண்ணிக்கணும்? பதிஞ்சு வச்சா, நானும் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பப் போகும்போது படிச்சுப் பார்த்துக்கலாம்ல? :)

முதல் விஷயம் இரும்புச் சத்து. அது நிறைய கிடைக்கறதுக்கு என்ன செய்யணும்?

நீங்க ‘கறி’ சாப்பிடறவரா இருந்தா கவலை இல்லை. ஆனா ‘காய்’கறி மட்டும் சாப்பிடறவரா இருந்தா கொஞ்சம் கவனமா சாப்பிடணும். dried beans அப்படின்னு சொல்லப்படற காய்ந்த பட்டாணி, கொண்டைக் கடலை, மொச்சை, இப்படிப்பட்டவைகளிலும், கீரை வகைகளிலும், broccoli போன்ற காய்கறிகளிலும், soy beans, tofu, இவைகளிலும், இரும்புச் சத்து நிறைய கிடைக்குமாம்.

சரி, இரும்புச் சத்து சோதனையில் தேறியாச்சு. அடுத்ததா இரத்தம் எடுக்கிறதுக்கு இரத்தக் குழாயை கண்டு பிடிச்சு அதில் ஊசியைச் செலுத்தணுமே. அதிலும் எனக்கு எப்போதும் பிரச்சனை. இரத்தக் குழாய், ஊசி முனையை விட ரொம்பச் சின்னதா இருக்கு, அப்படின்னு சொல்லிடுவாங்க. பல முறை குத்தி, இரண்டு கையையும் சல்லடைக் கண்ணாக்கி, அப்படியும் கிடைக்காம, இரத்தம் கொடுக்காமலேயே இரண்டு கையிலும் பெரீய்ய்ய்ய கட்டோடு திரும்பி வந்ததும் உண்டு.

அப்படி ஆகாம இருக்க என்ன செய்யணுமாம்? தண்ணீர் நிறைய குடிக்கணுமாம். எப்பவுமே எனக்கு தண்ணீர் குடிக்கிற பழக்கம் இல்லை. கஷ்டப்பட்டு நினைவு வச்சுக்கிட்டு குடிச்சாதான் உண்டு. சில பேர் இயல்பாகவே நிறைய குடிச்சிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இருந்தா பரவாயில்லை. சாதாரணமா ஒரு நாளைக்கு 8 (8-ounce) டம்ளர் தண்ணீர் குடிக்கணும் அப்படின்னு சொல்றாங்க. என்னை மாதிரி இருக்கிறவங்க நேரத்துக்கு மாத்திரை சாப்பிடறவங்களைப் போல தண்ணீர் குடிக்கவும் நேரம் வச்சுக்க வேண்டியதுதான்! அப்படி இருந்தா இந்த இரத்தக் குழாய் பிரச்சனை வராது.

முக்கியமா, இரத்தம் குடுக்கப் போற அன்னிக்கு நல்லா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.

நமக்காக இதெல்லாம் செய்யலைன்னாலும், இரத்தம் கொடுக்கணும் என்கிறதுக்காக இதெல்லாம் செய்யும் போது நமக்கும் இந்த healthy habits வந்துடும்தானே?

சரி, எல்லாம் சரியாக நடந்து, இரத்தமும் குடுத்தாச்சு. இப்ப என்ன செய்யணும்?

இரத்தம் குடுத்த பிறகு இரத்த அழுத்தம் திடீர்னு குறையறதால, சில பேருக்கு படபடன்னு வரும், தலை சுத்தும், மயக்கம் வரும். அதனால உடனே கிளம்பணும்னு அவசரப்படக் கூடாது. அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவங்க குடுக்கற பழச் சாறு, மற்றும் வேற ஏதாவது சாப்பிடக் கொடுத்தாங்கன்னா, வெட்கப் படாம அதைச் சாப்பிடணும். கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, எல்லாம் சரியா இருக்குன்னு தெரிஞ்ச பிறகுதான் கிளம்பணும். குறிப்பா இங்கேல்லாம் நாமே கார் ஓட்டிக்கிட்டு போய் வர வேண்டி இருக்கறதால, இந்த விஷயத்தில் கொஞ்சம் கூடவே கவனமா இருக்கணும்.

வீட்டுக்கு வந்த பிறகும், 5, 6 மணி நேரத்துக்கு கடினமான வேலைகள் செய்ய வேண்டாம். குறைஞ்சது, அன்னிக்கு பூராவும், அடுத்த நாளும், நல்ல சத்துள்ள சாப்பாடா சாப்பிடணும். மறுநாள் விரத நாள்னா, முதல் நாள் இரத்தம் கொடுக்கிறதைத் தவிர்ப்பது நல்லது.

அமெரிக்காவில் இருக்கறவங்கள்ல 37% மக்கள்தான் இரத்த தானத்துக்கு தகுதியானவங்களாம். அதிலும் 5% தான் வருஷா வருஷம் donate பண்றாங்களாம். அதனால இரத்தத்துக்கு எப்பவுமே தேவை இருந்துக்கிட்டே இருக்குன்னு சொல்றாங்க. ஒருத்தர் கொடுக்கற இரத்தத்தால 3 உயிர்களை காப்பற்ற முடியுமாம். அதனால நீங்க தகுதியானவரா இருந்தா, கண்டிப்பா தானம் பண்ணுங்க!

என்ன, கிளம்பிட்டீங்களா? All the Best!


அன்புடன்
கவிநயா

Thursday, October 14, 2010

ஆய கலைகளின் அரசி!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


ஆய கலைகளின் அரசியளாம் – அவள்
வேத முதல் வியளாம்
மாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்
ஞான வடி வினளாம்

வெள்ளைக் கலை உடுத்தி
வீணை மடி இருத்தி
மின்னல் கொடியெனவே வீற்றிருப்பாள்
கன்னல் தமிழில் தொழ களித்திருப்பாள்

தென்றலைப் போல் நடைஎழிலாள்
தேறல்இசைக் கனி மொழியாள்
தேவியுன்றன் திருப்பதங்கள் சரணம்அம்மா
தெண்டனிட்டோம் உன்பதங்கள், வரணும்அம்மா!


--கவிநயா

Sunday, October 10, 2010

பங்கயம் அமர்ந்தவள்!

நவராத்திரி சிறப்புப் பதிவு.


தாமரைப் பூவினில் உதித்தவளாம்
தரணி யெல்லாம்தொழ முகிழ்த்தவளாம்
பாற்கடல் அலைகளில் பனிமலர்போல்
பார்ப்பவர் மயங்கிட பூத்தவளாம்!

மாலவன் மார்பினில் குடியிருப்பாள்
மன்னுயிர் பணிந்திட மகிழ்ந்திருப்பாள்
கோலஎழில் மிக திகழ்ந்திருப்பாள்
கொஞ்சிடும் குறுநகை புரிந்திருப்பாள்!

நான்கு கரங்களைக் கொண்டிருப்பாள்
நானிலம் நலம்பெற வரமளிப்பாள்
பாங்குடன் பங்கயம் அமர்ந்திருப்பாள்
பக்தரின் அன்பினில் களித்திருப்பாள்!!

--கவிநயா

Thursday, October 7, 2010

நீலநிறக் காளியம்மா!

நவராத்திரி சிறப்புப் பதிவு. அன்னையின் திருவடிகள் சரணம்.


நீலநிறக் காளியம்மா!
சூலங்கொண்டு வாடியம்மா!
தண்ணருளைப் பொழிகின்ற தாயே!
தரணியினைக் காத்திடவே வாயேன்!

கங்கெனவே இருகண்கள்
கயவர்களைக் கலக்கிவிடும்!
தொங்குகின்ற தீநாவோ
தீயவரைத் துரத்திவிடும்!
பதினெட்டுக் கரங்களுடன் தாயே!
பிள்ளைகளை அரவணைக்க வாயேன்!

கோரைப்பல் உடன்வந்து
கொடுவினைகள் களைந்துவிடும்!
விரிந்திருக்கும் கருங்கூந்தல்
வல்வினையை விரட்டிவிடும்!
பயங்கரியாய் உருக்கொண்ட தாயே!
பால்வெள்ளை உள்ளத்தில் வாயேன்!

தத்தகிட என்றாடி
தானவரை அழித்திடுவாய்!
தீம்தகிட என்றாடி
தீமைகளைப் பொசுக்கிடுவாய்!
திக்கெட்டும் சுழன்றாடும் தாயே!
தூவெள்ளை உள்ளத்தில் வாயேன்!


--கவிநயா

Tuesday, October 5, 2010

உங்களுக்கு எத்தனை அம்மா?



ஹையோ…. நீங்க நினைக்கிறாப்ல இது ஒண்ணும் வில்லங்கமான கேள்வி இல்லீங்க :) "அன்னை எத்தனை அன்னையோ" அப்படிங்கிற ஆன்மீகக் கேள்வியும் இல்லை!

அம்மான்னாலே ரொம்ப சிறப்பில்லையா? அம்மா-பிள்ளை உறவுக்கே தனி மதிப்பு; தனிச் சிறப்பு. பிள்ளைன்னா அதுல ஆம்புளப் புள்ள, பொம்பளப் புள்ள, எல்லாப் புள்ளையும் அடக்கம் :) எத்தனைதான் தவறு செஞ்சாலும் திரும்பத் திரும்ப மன்னிச்சு ஒரே மாதிரி அன்பு செலுத்த அம்மாவால் மட்டுமே முடியும்.

என்னைப் பொறுத்த வரை தன்னலமில்லாம, எதிர்பார்ப்பில்லாம, கலப்படமில்லாம, அன்பு செலுத்தறவங்க எல்லோருமே அம்மாதான்!

உதாரணத்துக்கு என் உயிர்த்தோழி. பல சமயங்களில் ஏன்தான் என் மேல இவ்ளோ அன்பு வச்சிருக்காங்களோ, இவங்களுக்கு நான் என்ன செய்திருக்கேன்னு நினைச்சு நினைச்சு வியப்பதுண்டு. அவங்க அளவு எனக்கு அவங்க மேல அன்பிருக்கான்னும் கேட்டுக்கறதுண்டு. அந்த அளவுக்கு என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாங்க :) (touchwood!)

அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும். அதனாலதான் உங்களுக்கு எத்தனை அம்மான்னு கேட்டேன்!

சரி, எல்லா அம்மாவையும் சொல்லிட்டு, எல்லாருக்கும் அம்மாவை சொல்லாம விட்டுட்டேன்னா, அவ என்னை மன்னிக்கவே மாட்டா! குருவாய் திருவாய் உருவாய் அருவாய் திகழும் அவளைப் பற்றி சொல்லாம விட்டா எப்படி! இன்னும் சொல்லப் போனா அன்புக்கு ஏங்குபவர் யாராய் இருந்தாலும், ஏதோவொரு ரூபத்தில் வந்து அந்த அன்பை அள்ளித் தரும் அம்மா அவள்தானே! அவளை நவராத்திரிக்கு வரவேற்க உங்களைப் போலவே நானும் ஆயத்தமாகிக்கிட்டிருக்கேன்…

அனைவருக்கும் முன் கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்!

அம்மா

தொப்புள் ‘கொடி’யை அறுத்தாலும்
தொடரும் உறவோ 'ஆலா'கும்
அம்மா என்ற ஒரு சொல்லில்
அன்(பு) ஆலயமே உருவாகும்

உதரத்தில் சுமப்பாள் சிலகாலம்
இதயத்தில் சுமப்பதோ பலகாலம்
குதறிடும் துன்பம் துளைத்தாலும்
கதறிடச் சுக(ம்)அவள் மடியாகும்

பதறும் மனமும் பதமாகும்
சிதறும் உணர்வும் சீராகும்
மதுரமாம் அவளின் மொழிகேட்டால்
கதிரொளி யாய்க்களி உருவாகும்!

--கவிநயா

பி.கு. இப்ப என்ன Mother’s Day கூட இல்லையே, ஒரே அம்மா புராணமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? அதாங்க, என் பெற்றோர் நேற்று ஊருக்கு போயிட்டாங்களா… அவங்களை ரெண்டு கண்ணிலும் தே…டி வருதா… அதுக்குத்தான் இந்த (புலம்பல்) பதிவு…


படம் இங்கேர்ந்து சுட்டேன்: http://www.jesus-christ-channel.com/mary-mother-of-jesus-christ.html