Monday, October 18, 2010

இரத்த தானம் பண்ணப் போறீங்களா?

இரத்த தானம் பண்றது எனக்கு பிடிச்ச, திருப்தி தரும், விஷயம். ஆனா என்ன, பல முறை ஏதாவது ஒரு சோதனையில் தோத்துப் போய், பண்ணாமயே திரும்பி வந்திருக்கேன். அப்பல்லாம் ரொம்பவே சோ…கமா இருக்கும். ஆனா இந்த முறை வெற்றிகரமா பண்ணியாச்!

நீங்களும் தானம் பண்ண போயிட்டு என்னை மாதிரியே ஏமாந்து, ஏமாற்றி, திரும்பி வராம இருக்கணும்னா என்ன செய்யணும்? எப்படி நம்மை தயார் பண்ணிக்கணும்? பதிஞ்சு வச்சா, நானும் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பப் போகும்போது படிச்சுப் பார்த்துக்கலாம்ல? :)

முதல் விஷயம் இரும்புச் சத்து. அது நிறைய கிடைக்கறதுக்கு என்ன செய்யணும்?

நீங்க ‘கறி’ சாப்பிடறவரா இருந்தா கவலை இல்லை. ஆனா ‘காய்’கறி மட்டும் சாப்பிடறவரா இருந்தா கொஞ்சம் கவனமா சாப்பிடணும். dried beans அப்படின்னு சொல்லப்படற காய்ந்த பட்டாணி, கொண்டைக் கடலை, மொச்சை, இப்படிப்பட்டவைகளிலும், கீரை வகைகளிலும், broccoli போன்ற காய்கறிகளிலும், soy beans, tofu, இவைகளிலும், இரும்புச் சத்து நிறைய கிடைக்குமாம்.

சரி, இரும்புச் சத்து சோதனையில் தேறியாச்சு. அடுத்ததா இரத்தம் எடுக்கிறதுக்கு இரத்தக் குழாயை கண்டு பிடிச்சு அதில் ஊசியைச் செலுத்தணுமே. அதிலும் எனக்கு எப்போதும் பிரச்சனை. இரத்தக் குழாய், ஊசி முனையை விட ரொம்பச் சின்னதா இருக்கு, அப்படின்னு சொல்லிடுவாங்க. பல முறை குத்தி, இரண்டு கையையும் சல்லடைக் கண்ணாக்கி, அப்படியும் கிடைக்காம, இரத்தம் கொடுக்காமலேயே இரண்டு கையிலும் பெரீய்ய்ய்ய கட்டோடு திரும்பி வந்ததும் உண்டு.

அப்படி ஆகாம இருக்க என்ன செய்யணுமாம்? தண்ணீர் நிறைய குடிக்கணுமாம். எப்பவுமே எனக்கு தண்ணீர் குடிக்கிற பழக்கம் இல்லை. கஷ்டப்பட்டு நினைவு வச்சுக்கிட்டு குடிச்சாதான் உண்டு. சில பேர் இயல்பாகவே நிறைய குடிச்சிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இருந்தா பரவாயில்லை. சாதாரணமா ஒரு நாளைக்கு 8 (8-ounce) டம்ளர் தண்ணீர் குடிக்கணும் அப்படின்னு சொல்றாங்க. என்னை மாதிரி இருக்கிறவங்க நேரத்துக்கு மாத்திரை சாப்பிடறவங்களைப் போல தண்ணீர் குடிக்கவும் நேரம் வச்சுக்க வேண்டியதுதான்! அப்படி இருந்தா இந்த இரத்தக் குழாய் பிரச்சனை வராது.

முக்கியமா, இரத்தம் குடுக்கப் போற அன்னிக்கு நல்லா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்.

நமக்காக இதெல்லாம் செய்யலைன்னாலும், இரத்தம் கொடுக்கணும் என்கிறதுக்காக இதெல்லாம் செய்யும் போது நமக்கும் இந்த healthy habits வந்துடும்தானே?

சரி, எல்லாம் சரியாக நடந்து, இரத்தமும் குடுத்தாச்சு. இப்ப என்ன செய்யணும்?

இரத்தம் குடுத்த பிறகு இரத்த அழுத்தம் திடீர்னு குறையறதால, சில பேருக்கு படபடன்னு வரும், தலை சுத்தும், மயக்கம் வரும். அதனால உடனே கிளம்பணும்னு அவசரப்படக் கூடாது. அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவங்க குடுக்கற பழச் சாறு, மற்றும் வேற ஏதாவது சாப்பிடக் கொடுத்தாங்கன்னா, வெட்கப் படாம அதைச் சாப்பிடணும். கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, எல்லாம் சரியா இருக்குன்னு தெரிஞ்ச பிறகுதான் கிளம்பணும். குறிப்பா இங்கேல்லாம் நாமே கார் ஓட்டிக்கிட்டு போய் வர வேண்டி இருக்கறதால, இந்த விஷயத்தில் கொஞ்சம் கூடவே கவனமா இருக்கணும்.

வீட்டுக்கு வந்த பிறகும், 5, 6 மணி நேரத்துக்கு கடினமான வேலைகள் செய்ய வேண்டாம். குறைஞ்சது, அன்னிக்கு பூராவும், அடுத்த நாளும், நல்ல சத்துள்ள சாப்பாடா சாப்பிடணும். மறுநாள் விரத நாள்னா, முதல் நாள் இரத்தம் கொடுக்கிறதைத் தவிர்ப்பது நல்லது.

அமெரிக்காவில் இருக்கறவங்கள்ல 37% மக்கள்தான் இரத்த தானத்துக்கு தகுதியானவங்களாம். அதிலும் 5% தான் வருஷா வருஷம் donate பண்றாங்களாம். அதனால இரத்தத்துக்கு எப்பவுமே தேவை இருந்துக்கிட்டே இருக்குன்னு சொல்றாங்க. ஒருத்தர் கொடுக்கற இரத்தத்தால 3 உயிர்களை காப்பற்ற முடியுமாம். அதனால நீங்க தகுதியானவரா இருந்தா, கண்டிப்பா தானம் பண்ணுங்க!

என்ன, கிளம்பிட்டீங்களா? All the Best!


அன்புடன்
கவிநயா

18 comments:

  1. //நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)// பின்ன, சொல்லாம போறதாவது? :-)

    எனக்கும் சேம் "ப்ளட்"! பொதுவா இந்த இரும்பு சத்து இல்லாமைன்னு கையைக் காட்டி "விட்டுடுவாங்க"...:-(

    ஆனால், இன்னும் ஒரு தலைவலியும் அமெரிக்காவில்: இந்தியா போன்ற "மூன்றாம் உலக" நாடுகளுக்குக் கடந்த ஒரு வருடத்துக்குள் போய் வந்திருந்தால் இரத்த தானம் செய்ய முடியாது. கர்ர்!

    ReplyDelete
  2. அவசியமான குறிப்புகளுடன் மிக நல்ல பகிர்வு கவிநயா.

    ReplyDelete
  3. //இரத்தம் கொடுக்காமலேயே இரண்டு கையிலும் பெரீய்ய்ய்ய கட்டோடு திரும்பி வந்ததும் உண்டு//
     
    உங்களுக்கு இரத்தம் கொடுக்குற நிலைமை வந்திருச்சா :-)
     
    நல்ல அக்கறையுள்ள பதிவுதான்.. சமீபத்தில்தான் நான் ரத்தம் குடுத்தேன். இப்படி எழுதனும்னு எனக்குத் தோணல பாருங்க :-)
    என் கூட ஒரு நண்பரும் ரத்தம் கொடுக்க வந்தாரு. அவருக்கு இதுதான் பர்ஸ்ட் டைம். பயத்துல அவருக்கு பல்ஸ் ரேட் கண்ணா பின்னானு ஏறிப்போச்சு.. அவரால ரத்தம் கொடுக்க முடியல.
     
    அதானல நான் என்ன சொல்ல வர்றேனா, முதன் முறையா ரத்தம் கொடுக்கப் போறவங்க டென்சன் ஆகாதீங்க; பயப்படாதீங்க.

    ReplyDelete
  4. நான் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்து விடுவேன்.. எந்த பிரச்சினையும் இதுவரை வரவில்லை.ஆத்ம திருப்திக்கான செயல் அது.

    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. வாங்க கெக்கே பிக்குணி.

    //பொதுவா இந்த இரும்பு சத்து இல்லாமைன்னு கையைக் காட்டி "விட்டுடுவாங்க"...:-(//

    இனிமே இரும்புச் சத்துள்ளதா நல்லா சாப்பிட்டுட்டு போங்க :) தினம் ஒரு multivitamin சாப்பிட்டாலும் பலன் தெரியும் :)

    //ஆனால், இன்னும் ஒரு தலைவலியும் அமெரிக்காவில்: இந்தியா போன்ற "மூன்றாம் உலக" நாடுகளுக்குக் கடந்த ஒரு வருடத்துக்குள் போய் வந்திருந்தால் இரத்த தானம் செய்ய முடியாது. கர்ர்!//

    ஆமாம் :(

    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. //அவசியமான குறிப்புகளுடன் மிக நல்ல பகிர்வு கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  7. //உங்களுக்கு இரத்தம் கொடுக்குற நிலைமை வந்திருச்சா :-)//

    இன்னும் அந்த அளவு வரலை :P

    //நல்ல அக்கறையுள்ள பதிவுதான்.. சமீபத்தில்தான் நான் ரத்தம் குடுத்தேன்.//

    அப்படியா. மிக்க சந்தோஷம், உழவன்.

    //இப்படி எழுதனும்னு எனக்குத் தோணல பாருங்க :-)//

    கஜினி முகம்மது மாதிரி விடாம படையெடுத்துக்கிட்டிருக்கேன்ல. 4 தரம் போனா, ஒரு தரம் வெற்றி கிடைக்கும். இந்த முறையும் சும்மா திரும்பி வந்திருந்தா எழுதியிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன் :)

    //அதானல நான் என்ன சொல்ல வர்றேனா, முதன் முறையா ரத்தம் கொடுக்கப் போறவங்க டென்சன் ஆகாதீங்க; பயப்படாதீங்க.//

    அதுவும் சரிதான். சிலருக்கு ஊசி, இரத்தம், மருத்துவமனை சூழல், இதெல்லாம் பார்த்தாலே அலர்ஜி. அப்படியிருந்தா கஷ்டம்தான்.

    ReplyDelete
  8. //நல்ல பகிர்வு ;))//

    நன்றி கோபி.

    ReplyDelete
  9. //நான் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்து விடுவேன்.. ஆத்ம திருப்திக்கான செயல் அது.//

    உண்மைதான். கேட்கவே சந்தோஷமா இருக்கு.

    //எந்த பிரச்சினையும் இதுவரை வரவில்லை.//

    அப்படியே தொடர என்னுடைய வாழ்த்துகள். பொதுவாக பதிவில் குறிப்பிட்ட மாதிரி பிரச்சனைகள் பெண்களுக்குத்தான் அதிகம் பார்த்திருக்கேன்.

    வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்.

    ReplyDelete
  10. கொஞ்சம் இல்லை, நிறையப் பொறாமையோடு படிச்சேன்! :))))

    ReplyDelete
  11. //கொஞ்சம் இல்லை, நிறையப் பொறாமையோடு படிச்சேன்! :))))//

    வாங்க கீதாம்மா. ரொம்ப நாளாச்சு பாத்து. நலம்தானே?

    நீங்க உங்க உடல் நலத்தைக் கவனிச்சுக்கிட்டாலே போதுமே, அதுவே பெரிய பொக்கிஷம், எங்களுக்கு :)

    வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  12. //good one//

    வாங்க ஈரோடு கதிர். மிக்க நன்றி.

    ReplyDelete
  13. மிக நல்ல பகிர்வு கவிநயா.

    ReplyDelete
  14. //மிக நல்ல பகிர்வு கவிநயா.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

    ReplyDelete
  15. எனக்கும் ஆசைதான் ஆனா எப்ப டெஸ்ட் பண்ணினாலும் ஹீமோக்ளோபின் குறைச்சலா இருக்கு...நீங்க தானம் பண்ண முடியாதுன்னு சொல்லப்பட்டுவிடுவேன்

    ReplyDelete
  16. வாருங்கள் கோமா.

    //எனக்கும் ஆசைதான் ஆனா எப்ப டெஸ்ட் பண்ணினாலும் ஹீமோக்ளோபின் குறைச்சலா இருக்கு...நீங்க தானம் பண்ண முடியாதுன்னு சொல்லப்பட்டுவிடுவேன்//

    அதையும் உணவிலேயே சரி பண்ணிடலாம். பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, ஊற வைத்த பாதாம், கீரை போன்றவை எல்லாமே இரத்த சோகையை சரி செய்ய உதவும். அல்லது மருத்துவரிடம் அதற்குத் தேவையான வைட்டமினைக் கேட்டு எடுத்துக்கலாம்... விரைவிலேயே இரத்த தானம் செய்ய வாழ்த்துகள் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)