Friday, June 20, 2008

தையல் நாயகி போற்றி!

2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது.

தையல்நாயகி படம் சரியா கிடைக்கல; அபிராமிதான் கிடைச்சா :) எவ்வுருவில் இருந்தாலும் அவள்தானே அன்னை, அப்படின்னு போட்டுட்டேன் :)


ஒளிசிந்தும் வதனமுடன் வைத்தீஸ் வரன்கோயில்
உறைகின்றதேவி யவள்!
அன்னையென்ற சொல்லுக்கு அன்பான இலக்கணமாய்
அருள்சுரக்கும் அரசியவள்!
ஏழுலகம் காப்பவளே ஏங்கியுனை அழைக்கின்றேன்
ஏழையெனைப் பார்த்தருள்வாய்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

கடல்போலத் துன்பங்கள் வந்தாலும் எனைநீயும்
கரைசேர்த்துக் காத்தருள்வாய்!
மலைபோலத் துயரங்கள் வந்திருக்கும் போதினிலும்
கடுகாக்கி மறைத்தருள்வாய்!
பனிபோலக் கவலைகள் யாவையும் கரைந்திடவே
பாவைநீ அருள்புரிவாய்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

குற்றங்களை மன்னித்து குறைகள்தம்மை மறந்துவிடும்
குழந்தைமனம் எனக்குவேண்டும்!
எப்போதும் நன்மையையே எல்லார்க்கும் வேண்டுகின்ற
வெள்ளைமனம் எனக்குவேண்டும்!
பற்றின்றி இருக்கையிலும் மற்றவர்க்கு உதவுகின்ற
அன்புமனம் எனக்குவேண்டும்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

நானென்ன செய்தாலும் நானென்ற கருவமது
வாரா திருத்தல்வேண்டும்!
எப்போதும் உன்னடிகள் பணிந்தபடி என் நிலைமை
மறவாதி ருத்தல்வேண்டும்!
வேண்டாத செல்வங்கள் ஆசைகள் போகங்கள்
தேடாதிருத்தல் வேண்டும்!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

உனையெண்ணி அனுதினமும் ஊனுருகப் பாடுகின்றேன்
உமையவளே போற்றிபோற்றி!
மாந்தர் தம்மைக்காத்திடவே மனமுருகி வேண்டுகின்றேன்
மங்கை மீனாட்சிபோற்றி!
இடர்களெல்லாம் களைந்துஎமை கடைக்கண்ணால் ரட்சிக்கும்
கற்பகமே போற்றி போற்றி!
தையல்நா யகியுந்தன் தளிர்ப்பாதம் பணிகின்றேன்
திருவடிகள் போற்றிபோற்றி!

--கவிநயா

30 comments:

 1. தாயகம் செல்லும்போதெல்லாம் தவறாமல் செல்லுமிடம் வைத்தீஸ்வரன்கோயில். அன்னையைப் போற்றிப் பாடிய பாடலில் அழகு மிளிர்கிறது.

  ReplyDelete
 2. 'வேண்டும், வேண்டும்' என்று கேட்டவையும், 'போற்றி, போற்றி'யாய் முடித்தமையும் அற்புதம்!

  மனமுதிர்ச்சி வெளிப்படுகிறது! இறைவியின் அருள் கூடி நிற்கட்டும்!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.

  மிக அருமையா இருக்கிறது.

  எவ்வுருவில் இருந்தாலும் அன்னை அன்னைதான்.

  அவள் அருள் என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 4. நல்லாயிருக்குங்க...தையல் நாயகி உங்களுக்கு துணையிருக்கட்டும்.. :)

  ReplyDelete
 5. // VSK said...

  தாயகம் செல்லும்போதெல்லாம் தவறாமல் செல்லுமிடம் வைத்தீஸ்வரன்கோயில். அன்னையைப் போற்றிப் பாடிய பாடலில் அழகு மிளிர்கிறது////


  திரும்ப சொல்லிக்கொள்வதில் திருப்தி கொள்கிறேன்!

  நானும் கூட ஊருக்கு செல்கையில் செல்லும் ஆலயம் :)

  ReplyDelete
 6. வருடாவருடம் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் பக்தர்களை கண்டு அவர்தம் பக்தியினை கண்டு வியந்த நாட்கள் என் மனவானில் காட்சிகளாய் விரிகின்றன! :)

  ReplyDelete
 7. வைத்தீஸ்வரன்கோவில்  எப்போதோ ஒரு முறை கூகுளில் பெற்ற படம் சேமித்திருந்த சுட்டி!

  ReplyDelete
 8. நல்லா எழுதி இருக்கீங்க.. கவிநயா..

  ReplyDelete
 9. //அன்னையைப் போற்றிப் பாடிய பாடலில் அழகு மிளிர்கிறது.//

  நன்றி அண்ணா!

  ReplyDelete
 10. //இறைவியின் அருள் கூடி நிற்கட்டும்!//

  //அவள் அருள் என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.//

  மிக்க நன்றி ஜீவி ஐயா, மற்றும் புதுகைத் தென்றல்! உங்கள் ஆசிகளும் வார்த்தைகளும் மனதுக்கு எவ்வளவோ இதமாக இருக்கின்றன. அனைவருக்கும் அன்னையின் அருள் கிட்டட்டும்!

  ReplyDelete
 11. //தையல் நாயகி உங்களுக்கு துணையிருக்கட்டும்.. :)//

  நன்றி மௌலி! உங்களுக்கும்தான் :)

  ReplyDelete
 12. நல்வரவு ஆயில்யன்! வைத்தீஸ்வரன் கோவில் நடைப்பயணம் கடினமானதுதான். நானும் ரொம்ப சிரமப்பட்டேன்; ஆனாலும் எப்படியோ அன்னை கொண்டு வந்து சேர்த்து விட்டாள். அந்த அனுபவம் பற்றி எழுதியும் வைத்திருக்கிறேன்... கோவிலுக்கான சுட்டிக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 13. //நல்லா எழுதி இருக்கீங்க.. கவிநயா..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கயல்விழி!

  ReplyDelete
 14. வைதீஸ்வரன் கோவில் தையல் நாயகி அம்மன் மேல் ஒரு பாட்டா !
  எங்கள் வீட்டு குலதெய்வம் அல்லவா ?
  எத்தனை அழகா எழுதி இருக்கிறீர்கள் !
  எங்கள் வீட்டுக்காரர் இதற்கு ஆபோகி ராகத்தில் மெட்டு போட்டு
  நீ பாடு என்று சொல்லிவிட்டார்.
  முடிஞ்சவரை மூச்சை அடக்கிண்டு பாடியிருக்கேன்.
  தப்பா இருந்தா கோவிச்சுக்காதே அம்மாடி !
  http://www.youtube.com/watch?v=fZKCvJz242E
  எங்கள் வீட்டு மருமகள் வந்த வுடன் அவளைப்பாடச் சொல்லி
  சி.டி.யிலே எடுத்து விடவேண்டும்.
  யுகம் யுகமா இந்த பாட்டு நிற்கும். ஆயிரம் ஆயிரம் பேர்
  இந்த பாட்டை என்னிக்கும் பாட அந்த தையல் நாயகி
  கண்டிப்பா அருள் புரிவா. சந்தேகமே இல்லை.

  மீனாட்சி பாட்டி.
  தஞ்சை.

  ReplyDelete
 15. பாட்டீ! உங்க குலதெய்வமா? ரொம்ப ரொம்ப சந்தோஷம்!

  நீங்க என்னை ஒருமையிலயே அழைக்கலாம். இதுல கோவிக்க என்ன இருக்கு? நான் குடுத்துல்ல வச்சிருக்கணும். பாட்டைக் கேட்டு கண் கலங்கிடுச்சு. மிக்க நன்றி உங்களுக்கும், ஐயாவிற்கும்! உங்க மருமகள் பாடினதும், எனக்கும் அனுப்புவீங்களா? :) உங்க மனமார்ந்த ஆசிகளுக்கு மீண்டும் நன்றி!

  ReplyDelete
 16. அழகிய வரிகள். உமதிச் சந்தப்பாடலை மீண்டும் மீண்டும் படித்தேன். அது ஒருபடித் தேன்!

  ReplyDelete
 17. //உமதிச் சந்தப்பாடலை மீண்டும் மீண்டும் படித்தேன். அது ஒருபடித் தேன்!//

  ஆஹா. தமிழ் விளையாட்டைப் போல இனிமையானது என்ன உண்டு :) நீங்களும் ஜீவாவும் ஆடும் தேனாட்டத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்! நன்றி, அகரம்.அமுதா.

  ReplyDelete
 18. ////நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)/////

  என்ன? நினைச்சதைச் சொல்லனுமா?

  தையல் கவிநயா சந்தக் கவிபுனைந்துத்
  தையலிள நாயகிக்குச் சாற்றிவிட்டாள்! -மையலுற்றே
  மேகத்தைக் கண்டாடும் மாமயில்போல் தையலவள்
  கீதத்தில் போனேன் தொலைந்து!

  ReplyDelete
 19. //எப்போதும் நன்மையையே எல்லார்க்கும் வேண்டுகின்ற
  வெள்ளைமனம் எனக்குவேண்டும்!//

  'தையல்நா யகியுந்தன்'
  வாழ்விலே எக்குறையும்
  வாராது காத்தருள்வாள்கவிநயா!

  ReplyDelete
 20. அகரம்.அமுதா. உங்க வெண்பா மிக இனிமை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? எல்லா வரிகளும் எதுகை, மோனை, சந்த நயத்துடன் இனிக்கின்றன. மிக்க நன்றி!

  ReplyDelete
 21. //'தையல்நா யகியுந்தன்'
  வாழ்விலே எக்குறையும்
  வாராது காத்தருள்வாள்கவிநயா!//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 22. இப்போதுதான் நேரம் கிடைத்தது, இங்கு வந்து பார்க்க, என்றாலும் எப்பொதும் கேட்டுக் கொண்டிருக்கலாம், இந்தக் கவியை.
  இன்னும் கேட்கவில்லை, கேட்டுவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 23. இன்னுமொருமுறை படித்தேன் தையல் நாயகி பதிகப்பாதியினை! 'போனேன் தொலைந்து' என நச்சென்று முடியும் வெண்பாவையும் படித்தேன்!
  பாடலை பாடிக்காட்டியுள்ள பாட்டியின் பாடலையும் கேட்டேன். தையல் நாயகி படத்தினை நாம் தேடிப்பார்க்கலாம் என்று நினைத்தால், அதையும் ஆயில்யன் தருவித்து விட்டார். இவ்வளவு பேரையும் காந்தமென ஈர்த்து
  மயக்கிய உங்கள் இடுகையை எப்படிப் புகழ்வதென அறியேன், எல்லாம் அம்பிகை அருள்.

  ReplyDelete
 24. வாங்க ஜீவா!

  //எல்லாம் அம்பிகை அருள்//

  சத்தியமான வார்த்தை.

  அவளன்றி ஓரணுவும் அசையாது - அவள் கருணைக்கோ ஈடேதும் கிடையாது!

  ReplyDelete
 25. எல்லோரும் சொல்லிவிட்டார்கள். நாமென்ன சொல்ல இருக்குனு யோசிச்சாலும், ஜீவா சொன்னது மாதிரி அனைத்தும் ஒருங்கே சேர்ந்தது அற்புதம். அப்புறம் ஜீவி ஐயாவின் பின்னூட்டத்தின் முதல் பாராவுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.

  ReplyDelete
 26. வாங்க சதங்கா! கருத்து ரிப்பீட்டினதுக்கு என்னுடைய நன்றியும் ரிப்பீட்டேய்ய்ய்! :)

  ReplyDelete
 27. நானும் அப்படித் தானே அக்கா? அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு எப்பவுமே அபிராமி படம் மட்டுமே போடறேனா? நிறைய தடவை மீனாட்சி அம்மன் தானே முன்னாடி முன்னாடி வந்து முகத்தைக் காட்டுறாங்க.

  எதுகையை விட மோனை அமைவது மிக எளிதாக வருகிறது உங்களுக்கு. திருப்பாவையைப் போலவும் அபிராமி அந்தாதியைப் போலவும் மோனை முதல் பாடலில் நன்கு வந்திருக்கிறது.

  இங்கேயும் மீனாட்சி முகம் காட்டியிருக்கிறாள் போலிருக்கே. :-) எங்கள் அரசியின் மகிமையே மகிமை. :-)

  ReplyDelete
 28. //நானும் அப்படித் தானே அக்கா? அபிராமி அந்தாதிப் பாடல்களுக்கு எப்பவுமே அபிராமி படம் மட்டுமே போடறேனா? நிறைய தடவை மீனாட்சி அம்மன் தானே முன்னாடி முன்னாடி வந்து முகத்தைக் காட்டுறாங்க.//

  :)) சரிதான், குமரா.

  //திருப்பாவையைப் போலவும் அபிராமி அந்தாதியைப் போலவும் மோனை முதல் பாடலில் நன்கு வந்திருக்கிறது.//

  ஆத்தாடி! பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்லிட்டீங்களே. அவங்க வச்சதுல ஒரு சின்ன சதவிகிதம் அன்பும் பக்தியும் அன்னை அருளினால் அது பெரும் பாக்கியம்.

  //எங்கள் அரசியின் மகிமையே மகிமை. :-)//

  உங்க அரசியா! சரியாப் போச்சு. அப்ப நாங்கல்லாம் எங்க போறது? எல்லோர்க்கும் அரசியாச்சே அவள்!

  நன்றி குமரா :)

  ReplyDelete
 29. முத்து குமரனை ஈன்ற முக்கண்ணிக்கு முத்தான கவிதை கவிநயா. வளர்க தங்கள் தொண்டு.

  ReplyDelete
 30. //முத்து குமரனை ஈன்ற முக்கண்ணிக்கு முத்தான கவிதை கவிநயா. வளர்க தங்கள் தொண்டு.//

  வாங்க கைலாஷி! உங்க வருகை கண்டு மகிழ்ச்சி :) வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)