Monday, June 9, 2008

அந்தி நேரத்தில்...




மின்னும் ஒளிக் கதிர்களை
வெள்ளிக் காசுகளாக்கி

ஏரி நீர் எங்கிலும்
எறிந்து மிதக்க விட்டு

துள்ளித் திரிகின்ற
தென்றல் குழந்தை வந்து

தத்தித் தவழ்ந்து அதன்
மேலே விளை யாடுகையில்

மலைக்கதவின் பின்னே நின்று
அரைகுறை மறைவினில்

(வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்
வானப் பெண்ணை எண்ணி

கொஞ்சிக் குலவியே
கூடி மகிழ்ந் திருக்க

இன்ப இரவை நோக்கி
இருப்புக் கொள் ளாமலே

காத்துக் கொண் டிருக்கிறான்
காதல் கதிரவன்...


-- கவிநயா

25 comments:

  1. அன்பின் கவிநயா,

    மிக அழகிய ரசனை உங்களது.
    குறிப்பிட்ட வரிகளைச் சொல்லமுடியாமல் எல்லாவரிகளும் அற்புதமாக வாய்த்திருக்கிறது.

    இனி ஒவ்வொரு மாலைப்பொழுதும் உங்கள் கவிவரிகளையே நினைவுபடுத்துமோ என்னமோ ? :)

    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...!

    ReplyDelete
  2. //மின்னும் ஒளிக் கதிர்களை
    வெள்ளிக் காசுகளாக்கி//

    இக் கவிதைக்கு எவ்வளவு பொற்காசுகள் கொடுத்தாலும் தகும்.

    ReplyDelete
  3. //மின்னும் ஒளிக் கதிர்களை
    வெள்ளிக் காசுகளாக்கி

    ஏரி நீர் எங்கிலும்
    எறிந்து மிதக்க விட்டு

    துள்ளித் திரிகின்ற
    தென்றல் குழந்தை வந்து

    தத்தித் தவழ்ந்து அதன்
    மேலே விளை யாடுகையில்//

    அட அட கவிநயா! தாகூரின் கண்கள் உங்களுக்கு!!

    //மலைக்கதவின் பின்னே நின்று
    அரைகுறை மறைவினில்

    (வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்
    வானப் பெண்ணை எண்ணி//

    ம்ம்.. நல்ல உவமை..

    //இன்ப இரவை நோக்கி
    இருப்புக் கொள் ளாமலே

    காத்துக் கொண் டிருக்கிறான்
    காதல் கதிரவன்...//

    அருமை..

    எந்தவரியையும் விட முடியவில்லை.அனைத்தும் மிக அழகு கவி.

    ReplyDelete
  4. Forgive me for leaving my comments in English...My tamil typing skills are very rusty....

    You have a gift to see the world through such imaginative eyes....Keep writing such beautiful poetry so unimaginative people like me get a chance to enjoy the world through your eyes...

    -Meena

    ReplyDelete
  5. //இனி ஒவ்வொரு மாலைப்பொழுதும் உங்கள் கவிவரிகளையே நினைவுபடுத்துமோ என்னமோ ? :)//

    அப்படி ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் ரிஷான்! நன்றி தம்பி! :)

    ReplyDelete
  6. //இக் கவிதைக்கு எவ்வளவு பொற்காசுகள் கொடுத்தாலும் தகும்.//

    எங்கேப்பா? ரெண்டு நாளாச்சு, ஒண்ணும் வரக் காணுமே :P

    நன்றி, ராமலக்ஷ்மி! :)

    ReplyDelete
  7. ஆரம்பம் நல்ல அருமை கவிநயா. நல்ல உவமைகள் கோர்த்த கவிதை. சூப்பர்.

    ReplyDelete
  8. //அட அட கவிநயா! தாகூரின் கண்கள் உங்களுக்கு!!//

    அத்தனை 'அட'யில பசி அடங்கிப் போச்சு, கோகுலன்! :) உங்களைப் போன்ற ரசனைக் கவிஞருக்கு இந்தக் கவிதை பிடிச்சதில எனக்கு மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. வாங்க மீனா! ஏன் அப்படிச் சொல்லிட்டீங்க? எவ்வளவு அழகா ரசிக்கிறீங்க! ரசிக்கத் தெரியறதும் பெரிய gift தாம்ப்பா! மிக்க நன்றி!

    ReplyDelete
  10. வாங்க சதங்கா! உங்களுக்கு கவிதை பிடிச்சிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  11. கவிநயா,
    இயற்கையை அழகாக அருமையாக உங்கள் கவிவரிகளுக்குள் கொண்டு வந்து சுவைதந்திருக்கிறீர்கள்.
    ஒவ்வொரு வரிகளை வாசிக்கும் போதும் அந்தக்காட்சிகள் மனதுக்குள் நிழலாடின.

    உண்மையில் ரசனை மிக்க கவிதை.

    ReplyDelete
  12. அடடா ! என்ன ஆச்சு ?
    இது நிசமா இல்லை கற்பனையா ? !
    கதிரவன் காத்துக்கிடக்கிறானா !
    ஒன்னும் புரியலையே ?
    அது யாரது வானத்துப் பெண் ?

    எனக்குத் தெரிந்தவரை,
    ஏற்கனவே சூரியனுக்கு திருமணமாகி
    உஷா என்னும் மனைவி இருக்கிறாளே !
    சீக்கிரம் வீட்டுக்குப் போகச்சொல்லுங்கள் !

    எதற்கும் உஷாகிட்டே சொல்லி
    உஷாரா இருக்கச்சொல்லுங்க..

    சுப்பு தாத்தா.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com
    சும்மா சொல்லக்கூடாது கவிதை நல்லாத்தான் கீது.
    அம்மா கிட்டே சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்க.
    த்ருஷ்டி விழுந்துடப்போவுது.

    ReplyDelete
  13. மிக அற்புதமான வருணனை. பொதுவாக பெண்கள் மட்டும் காதலிக்கப் படவேண்டியவர்கள் அல்லர். கவிதையும்தான். அந்த வகையில் நான் காதலித்த கவிதை இது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாங்க நிர்ஷன்! உங்க ரசனைக்கு மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  15. //எதற்கும் உஷாகிட்டே சொல்லி
    உஷாரா இருக்கச்சொல்லுங்க..//

    :)) வாங்க சுப்பு தாத்தா! கண்டிப்பா சொல்லிடறேன்.

    //அம்மா கிட்டே சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்க.
    த்ருஷ்டி விழுந்துடப்போவுது.//

    ஊருக்கு போகும்போது அம்மாகிட்ட சொல்றேன். அன்புக்கு மிக நன்றி! :)

    நீங்க பெரிய வலைப்பூங்காவே வச்சிருக்கீங்க போல! முடியறப்பல்லாம் எட்டிப் பார்க்கறேன்...

    ReplyDelete
  16. //அந்த வகையில் நான் காதலித்த கவிதை இது.//

    ஆஹா! ரொம்ப சந்தோஷமா இருக்கு! :) மிக்க நன்றி, அகரம்.அமுதா அவர்களே!

    ReplyDelete
  17. ஒளிக்கற்றைகள் வெள்ளிக்காசுகளா? சரி தான். நல்லா இருக்கு அக்கா.

    ReplyDelete
  18. //ஒளிக்கற்றைகள் வெள்ளிக்காசுகளா?//

    ஆமா, குமரா! தண்ணில சூரிய ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறிக்கும் போது மாலையில பாத்தா வெள்ளிக்காசா மிதக்கறாப்ல இருக்கும். அதுவே பகல்லன்னா வைரக்காசுகள் மாதிரி இருக்கும்! :)

    ReplyDelete
  19. /ஏரி நீர் எங்கிலும்
    எறிந்து மிதக்க விட்டு

    துள்ளித் திரிகின்ற
    தென்றல் குழந்தை வந்து

    தத்தித் தவழ்ந்து அதன்
    மேலே விளை யாடுகையில்

    மலைக்கதவின் பின்னே நின்று
    அரைகுறை மறைவினில்

    (வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்
    வானப் பெண்ணை எண்ணி/

    அற்புதமாக
    இருக்கிற்து
    ஒவ்வொரு வரிகளும்

    ReplyDelete
  20. //மின்னும் ஒளிக் கதிர்களை
    வெள்ளிக் காசுகளாக்கி

    ஏரி நீர் எங்கிலும்
    எறிந்து மிதக்க விட்டு

    துள்ளித் திரிகின்ற
    தென்றல் குழந்தை வந்து

    தத்தித் தவழ்ந்து அதன்
    மேலே விளை யாடுகையில்//

    --இவையெல்லாம் மிகவும் பிடித்த வரிகளாக அமைந்து விட்டன.
    அந்த மின்னும் ஒளிக்கதிரின் வெள்ளிக்காசு மினுமினுப்பும், தென்றல் ஏரி நீரில் ஊஞ்சலாடும் உற்சாக உறவும் விஷூவலாகக் கண்ணுக்குப் புலப்படுகிற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்..

    சுகமான கற்பனை..இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. கவிநயா said..
    //எங்கேப்பா? ரெண்டு நாளாச்சு, ஒண்ணும் வரக் காணுமே :P //

    கொஞ்சம் பிஸிப்பா. ஆனா லேட்டா வந்தாலும் கவிநயாவின் லேட்டஸ்ட் (பதிவு) என்னான்னு பாக்காம போக மாட்டேன்ல..!

    ReplyDelete
  22. வாங்க திகழ்மிளிர்! வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  23. //அந்த மின்னும் ஒளிக்கதிரின் வெள்ளிக்காசு மினுமினுப்பும், தென்றல் ஏரி நீரில் ஊஞ்சலாடும் உற்சாக உறவும்//

    நீங்களும் அழகுக் கவிதையாகவே சொல்லி விட்டீர்கள், ஜீவி ஐயா. மிக்க நன்றி!

    ReplyDelete
  24. வாங்க ராமலக்ஷ்மி! கட்டாயம் வருவீங்கன்னு தெரியும்; ஆனா பொற்காசைத்தான் மறந்துட்டீங்க! ஓடிப் போய் எடுத்துட்டு வந்துருங்க :)

    ReplyDelete
  25. //ஆனா பொற்காசைத்தான் மறந்துட்டீங்க! ஓடிப் போய் எடுத்துட்டு வந்துருங்க :)//

    நான் ஒரு பொற்காசு (பின்னூட்டம்) அளித்தால் அது ஓராயிரம் பொற்காசுகளுக்குச் சமமாகும்! புரிகிறதா கவிநயா?

    (தங்கம் விக்கற விலையிலே நீங்க அப்படி மாட்டி விட்டால் நான் இப்படிச் சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது:))!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)