Showing posts with label துர்க்கை. Show all posts
Showing posts with label துர்க்கை. Show all posts

Thursday, October 7, 2010

நீலநிறக் காளியம்மா!

நவராத்திரி சிறப்புப் பதிவு. அன்னையின் திருவடிகள் சரணம்.


நீலநிறக் காளியம்மா!
சூலங்கொண்டு வாடியம்மா!
தண்ணருளைப் பொழிகின்ற தாயே!
தரணியினைக் காத்திடவே வாயேன்!

கங்கெனவே இருகண்கள்
கயவர்களைக் கலக்கிவிடும்!
தொங்குகின்ற தீநாவோ
தீயவரைத் துரத்திவிடும்!
பதினெட்டுக் கரங்களுடன் தாயே!
பிள்ளைகளை அரவணைக்க வாயேன்!

கோரைப்பல் உடன்வந்து
கொடுவினைகள் களைந்துவிடும்!
விரிந்திருக்கும் கருங்கூந்தல்
வல்வினையை விரட்டிவிடும்!
பயங்கரியாய் உருக்கொண்ட தாயே!
பால்வெள்ளை உள்ளத்தில் வாயேன்!

தத்தகிட என்றாடி
தானவரை அழித்திடுவாய்!
தீம்தகிட என்றாடி
தீமைகளைப் பொசுக்கிடுவாய்!
திக்கெட்டும் சுழன்றாடும் தாயே!
தூவெள்ளை உள்ளத்தில் வாயேன்!


--கவிநயா

Sunday, September 20, 2009

ஓம் ஓம் ஓம் !

நவராத்திரி சிறப்பு பதிவு.



சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!

நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!

பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!

கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!

அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!

உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!

துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!

Tuesday, September 30, 2008

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

நவராத்திரி சிறப்பு பதிவு. துர்க்கை அம்மாவை நல்லா வணங்கிக்கோங்க!


வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg