Sunday, August 26, 2012

மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சலல்ல!

                                         
நாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு அடிமைதான். சந்தோஷமோ, கவலையோ, கோபமோ, சில பேரை உடனடியா பெரிய அளவில் தாக்கும். சிலர் வெளிப்பார்வைக்கு நிதானமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதிகமா பாதிக்கபடறவங்களா இருப்பாங்க. அல்லது என்னை மாதிரின்னா ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து துன்பத்தை தக்க வச்சுக்கறவங்களா இருப்பாங்க.

சில சமயம் நினைச்சுப்பேன், சினிமாலேல்லாம் ஒரே நினைப்பை, அல்லது ஒரே flash back ஐ திரும்பத் திரும்பக் காண்பிச்சா நமக்கு எப்படி எரிச்சல் வரும்? ஆனா நாம அதைத்தானே தினம் தினம் பண்றோம் அப்படின்னு!

காலம் காலமா நமக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பற்றிதான் பேசப் போறோம் இன்றைக்கு.  அதாவது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. கொஞ்சம் தள்ளிப் போடணும். சொல்லும் போது சுலபமாதானே இருக்கு. ஆனா செயல்படுத்தறது ரொம்பவே கடினம்.

குறிப்பா கோபமா இருக்கும் போது நிச்சயம் எதுவுமே செய்யக் கூடாது, சொல்லவும் கூடாது. ஒருத்தர் மேல எக்கச்சக்கமா கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும் போது, அந்த நபருக்கு நாம மின்னஞ்சலோ, செய்தியோ அனுப்பவே கூடாது. அந்தச் சமயத்தில் நாம சொல்ற வார்த்தைகள் பின்னாடி நம்மையே வருத்தப்பட வைக்கிற சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த மாதிரி செய்துட்டு, என் மேல் தவறு இல்லாத சமயங்களில் கூட, என் இயல்பினால் நானே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவங்கள் எனக்கு இருக்கு. அவங்க என் மனதை ஏதோ ஒரு காரணத்தால் புண்படுத்தியதாலதான் கோபமே வந்திருக்கு. அது நியாயமாகவே இருந்தாலும், அந்தக் கோபத்தில் நான் ஏதோ சொல்லப் போய் அது திரும்ப அவங்க மனதைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா? இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு.  பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும் சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும்! இந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டுதான் மாத்திக்கணும்.

திரு. சுகிசிவம் சொல்லுவார் – அளவுக்கதிகமான கோபம் வந்தா, உடனே நம் position-ஐ மாத்திக்கணுமாம். அதாவது, நின்னுக்கிட்டிருக்கும் போது கோவம் வந்தா, உட்கார்ந்துடணுமாம். உட்கார்ந்திருக்கும் போது வந்தா, படுத்துடணுமாம்.  ஏன்? நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின் தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன்னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும். அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.  (அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க! அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லை! ஹி…ஹி… :))

பொதுவாகவே எல்லோரும், குறிப்பா பெண்களும், அதிலும் குறிப்பா பருவ வயது பெண்களும் மின்னஞ்சல் விஷயத்தில் கவனமா இருக்கணும். நாம தனியான ஒரு நபருக்குதானே எழுதறோம்னு நினைச்சிருப்போம், ஆனா ஒரு முறை அது போயிடுச்சுன்னா, அப்புறம் அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை; அதை ரிசீவ் பண்ணறவங்க, அதை என்ன வேணும்னாலும் செய்யலாம். யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்னு புரிஞ்சுக்கணும். முன்னயாவது forward பண்ணி வர்ற மின்னஞ்சலில் உள்ள செய்தியை மாற்ற முடியாம இருந்தது. ஆனா இப்பல்லாம் அப்படி வர்ற மின்னஞ்சலில் செய்தியை மட்டும் இல்லாம, எதை வேணுமானாலும் மாற்றலாம்!

நாம பலரிடமும் வெள்ளந்தியா பேசறோம், எழுதறோம். ஒரே ஒருத்தரிடம் மட்டும்தான் நாம கொஞ்சமே கொஞ்சம் நம்ம சொந்த விஷயத்தை பகிர்ந்துக்கறோம்னு நினைப்போம், ஆனா அது பிறகு யாரால எப்படியெப்படி பயன்படுத்தப் படும்னு நமக்கு தெரியாது.  சினிமாலேல்லாம் நிறைய பாத்திருக்கோமே, பழைய காதலன் காதல் கடிதங்களை வச்சு ப்ளாக் மெயில் பண்றதை!

ஒரு நாள், நான் ஒரு தோழிக்கு அனுப்ப நினைச்சு டைப் பண்ணின text message -ஐ இன்னொருத்தருக்கு அனுப்பிட்டேன்!  கண்ணாடி போடாம, அவசரமா அனுப்பினதால, அதே மாதிரி இருந்த இன்னொருத்தர் பெயருக்கு அனுப்பிட்டேன். நல்ல காலமா அது எதுவும் சொந்த விஷயமா இருக்கலை, பொதுவான ஒரு விஷயமா போச்சு.

கடிதம்னாலும், மின்னஞ்சல்னாலும், நாம எழுதற விஷயத்தை கவனமா எழுதணும். சில சமயம் நாம நல்ல நோக்கத்தோடயே எழுதினாலும், அவசரத்தில் எழுதிட்டோம்னு வைங்க, படிக்கிறவங்களுக்கு ரொம்ப rude-ஆ எழுதின மாதிரி இருக்கும். அப்புறம் அவங்க கோவப்பட, நாம சமாதானம் செய்ய, மறுபடி அதே வட்டம். பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது? அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.

குழும மடல்கள் வரும்போது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் பதில் எழுத நினைச்சு reply தட்டினா, குழும முகவரிதான் அதில் வந்து உட்கார்ந்திருக்கும். அதையும் கவனமா பார்த்துக்கணும். அந்த சமயத்தில் reply தட்டாம forward தட்டி, முகவரியை நாமே தட்டச்சி, பதில் எழுதினா இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு.

இப்பல்லாம் மின்னஞ்சல்ல முகவரி டைப் பண்ணும்போதே ‘auto suggestion’ என்கிற பெயரில் நாம் தொடர்பு வரிசையில் வச்சிருக்க மின்னஞ்சல்களில் அதே மாதிரி ஆரம்பிக்கிற பெயர்களெல்லாம் வரிசையா வருது. அவசரப்பட்டு “return” –ஐத் தட்டிட்டா போச்சு! நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ போயிடும்! அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது! தலை கீழா நின்னாலும் திரும்ப வருமா?

அதனால, உணர்ச்சி வசப்பட்டாலும் சரி, அல்லது ஒரு அந்தரங்கமான சொந்த விஷயத்தை யாரோடயாவது மின்னஞ்சல் மூலமா பகிர்ந்துக்க நினைச்சாலும் சரி, அல்லது ஒருத்தரைப் பற்றி புகார் பண்ணி (!) இன்னொருத்தருக்கு எழுதறதா இருந்தாலும் சரி, ஒரு முறைக்கு பல முறை யோசிச்சிட்டு செய்ங்க. முகவரியையும் ஒரு முறைக்கு பல முறை சரி பாருங்க. சில விஷயங்களை மின்னஞ்சலில் எழுதறதை விட, தொலைபேசியிலேயோ, நேரிலேயோ பேசிடறது நல்லது.

இந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான். (நம்மளையும் தான்! :)) அப்பதான் அது தவறான  ஆளுக்கே போயிட்டாலும், எந்த பிரச்சனையும் இருக்காது.

Never decide anything without stepping back, never speak a word without stepping back, never throw yourself into action without stepping back.”  அப்படின்னு அரவிந்த அன்னை சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.

இனிமேலாவது இந்த விஷயத்தில் எல்லோருமே இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம்! என்ன சொல்றீங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!   

அன்புடன்
கவிநயா.

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://esellermedia.com/2012/07/03/6-tips-punchy-email-campaign/

Sunday, August 19, 2012

எமிலி டிக்கின்ஸனின் "Hope" கவிதையின் மொழியாக்கம்
நம்பிக்கை

நம்பிக்கை என்பது
சிறகுகளுடன் கூடியது…
அது -
ஆன்மாவைத் தன்னுடைய
உறைவிடமாய்க் கொண்டிருக்கும்;
கணங்கூட இடைவெளி யின்றி
மொழியில்லா கானம் பாடும்.

இடி மின்னல் பெரு மழையும்
தரும் வலியைத் தாங்கிய படி
பலருக்கும் நிழல் தந்த
அந்தச் சின்னஞ்சிறு பறவை,
தன்னையே அழிக்க வரும்
புயற் காற்றின் நடுவினிலும்
இனிய கீதம் இசைத்திருக்கும்!

கடுங் குளிர் பிரதேசத்தில்
அதன் குரலைக் கேட்டதுண்டு;
தனிமையான கடல் நடுவே
அதன் பாடல் கேட்டதுண்டு;
எனினும்,
துயரங்கள் எல்லை மீறும் நேரங்களிலும்,
பிரதியாக அது என்னைத்
துகள் உணவும் கேட்டதில்லை!

--கவிநயா

Hope
 By: Emily Dickinson 

“Hope” is the thing with feathers
That perches in the soul
And sings the tune without the words
And never stops at all,


And sweetest in the gale is heard;
And sore must be the storm
That could abash the little bird
That kept so many warm.


I’ve heard it in the chillest land
And on the strangest sea,
Yet never, in extremity,
It asked a crumb of me.

நன்றி: வல்லமை.
2010-ல் எழுதிய நம்பிக்கை பற்றிய கவிதையையும் இங்கே படிச்சுப் பாருங்க!

Tuesday, August 14, 2012

எங்கள் இந்தியா!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! 


எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!

இந்தியர் நாம் என்பதிலே
இன்பம் மிகக் கொள்ளுவோம்!
இந்தியராய் வாழ்ந்து நல்ல
இதயங்களை வெல்லுவோம்!

கடமைகளைச் செய்வதிலே
பெருமை மிகக் கொள்ளுவோம்!
கொடுமைகளை வேரறுத்து
சிறுமைகளை வெல்லுவோம்!

நல்லொழுக்கம் நம்முடைய
விழிகளெனப் போற்றுவோம்!
நற்குணங்களை வளர்த்து
நன்மைகளைக் கூட்டுவோம்!

சுத்தம் சுகா தாரமென்னும்
சூத்திரத்தை எண்ணுவோம்!
சுற்றும் பூமித் தாயைக் காக்க
சுற்றுச் சூழல் பேணுவோம்!

அன்பு என்னும் வேதந்தன்னை
அகிலமெங்கும் பரப்புவோம்!
அன்னை பாரதத்தை என்றும்
அருமையுடன் ஏற்றுவோம்!

எங்கள் நாடு இந்தியா!
தங்க நாடு இந்தியா!
எங்கள் நாடு இந்தியா! – இன்பம்
தங்கும் நாடு இந்தியா!


--கவிநயா

நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.indiacsr.in/en/?p=3795/

Monday, August 6, 2012

பிறந்த நாள் பரிசு

முன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க!). அப்ப, வருஷா வருஷம் பிறந்த நாள், பிறந்த நாள்னு ஒண்ணு வரும். பிறந்த நாள்னா கண்டிப்பா புத்தாடை இருக்கும். காலையில் எழுந்து தலைக்குக் குளிச்சு, புதுசு போட்டுக்கிட்டு சாமி கும்பிடுவோம். பிறகு ஒரு தட்டுல நெறய்ய்ய சாக்லேட் எடுத்துக்கிட்டு பக்கத்து வீடு, அதுக்கும் பக்கத்து வீடு, எதிர் வீடு, அதுக்கும் எதிர் வீடு, இப்படி வீடு வீடா போயி, “எனக்கு பிறந்த நாள். மிட்டாய் எடுத்துக்கோங்க” ன்னு சொல்லுவோம். (அப்பல்லாம் மிட்டாய்னாலும், சாக்லேட்னாலும், எல்லாம் ஒண்ணுதான். இப்பல்லாம் சாக்லேட்னா வேற, மிட்டாய்(candy) ன்னா வேறயாம்!) பெரியவங்களா இருந்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்குவோம். “புது ட்ரஸ்ஸா? அழகா இருக்கே!”ன்னு சொல்வாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும்! கூடவே, “நல்லாப் படிச்சு முதல் ராங்க் வரணும்”, அப்படின்னுதான் முக்கால்வாசி பேர் ஆசீர்வாதம் பண்ணுவாங்க!

சில சமயம் சாக்லேட்டுக்கு பதில் அம்மாவே ஏதாவது இனிப்பு செய்து தருவாங்க. அதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுப்போம். பிறகு கோவிலுக்குப் போவோம். அப்புறம் அம்மா நமக்குப் பிடிச்சதாப் பார்த்து சாப்பிட செய்து கொடுப்பாங்க. ஏதாவது குட்டியா தப்பு செய்தாக் கூட யாரும் திட்ட மாட்டாங்க. அப்படியே திட்டினாலும், அம்மா, “பிறந்த நாளும் அதுவுமா புள்ளைய ஒண்ணும் சொல்லாதீங்க”, அப்படின்னு தடையுத்தரவு போட்டுருவாங்க! நம்மையும் எதுக்கும் வருத்தப்படவோ, கோபப்படவோ விட மாட்டாங்க. “இன்றைக்கு உனக்கு பிறந்த நாள். சந்தோஷமா இருக்கணும்”, அப்படின்னு நினைவு படுத்துவாங்க. ஆக மொத்தம், அன்றைக்கு பூரா நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும்.

பிறந்தா நாள்னாலே தரையில் கால் பாவாத பெருமையா இருக்கும். ஒண்ணுமே பண்ணாமயே, ஆனா என்னவோ பெரீசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு ச்செல்ல கர்வம்! ஹ்ம்… பிறந்து, வந்து, வளர்ந்து, இந்த உலகத்தில் ஒவ்வொரு வருஷமும் வாழறதே, survive பண்ணறதே, சாதனைதான்னு இப்பதானே புரியுது!

அதுக்கப்புறம் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி, ‘0’ வாயிருச்சு. யாராவது ஒரு சிலர் நினைவு வச்சுக்கிட்டு வாழ்த்து சொன்னாலே பெரிய விஷயம், பெரிய சந்தோஷம் என்கிற அளவு! இப்பல்லாம் பிறந்த நாள், அப்படின்னு சொல்லிக்கிறதும் இல்ல. யாராச்சும் மறந்து போயிட்டாங்கன்னா, ‘நீங்க என்னை வாழ்த்தவே இல்லையே’ன்னு கோவிச்சுக்கிறதும் இல்லை! (எவ்ளோ சமர்த்தாயிட்டேன் பாருங்க!) யாராவது சொல்ற வரை எனக்கே மறந்து போன பிறந்த நாட்களும் உண்டு.


இந்த வருஷம் என்னமோ என் பிறந்த நாளை (போன வாரம்) நானே ரொம்பத்தான் கொண்டாடினேன். அதாவது காலைலயே கோவிலுக்குப் போனேன். (அதுவே பெரிய்ய கொண்டாட்டம்தான்!) ஆனா அர்ச்சகர் ரொம்ப பிசியா இருந்தார், அதனால தீபமோ, தீர்த்தமோ ஒண்ணும் கிடைக்கல. சின்னூண்டு ஏமாற்றம்தான். அம்மாகிட்ட போய் ஒரு டீல், ‘உன்னைத் தேடி வந்தேன், ஒண்ணுமே குடுக்கலையே நீ எனக்கு? உனக்கு என் மேல அன்பிருந்தா அதை எப்படியாச்சும் எனக்குக் காட்டு’ அப்படின்னு.

என் பெற்றோர், தங்கைகள், தோழிகள், எல்லோருமே தொலை பேசி வாழ்த்தினாங்க. யாருமே மறக்கலை, இந்த முறை! சாயந்திரம் நடன வகுப்பு இருந்தது. 7, 8 வயசு பிள்ளைங்களோடது. எதற்கோ பேச்சு வந்த போது, ஒரு குட்டிப் பொண்ணு, “என் அம்மாவுக்கு ஆகஸ்ட் 15 பிறந்த நாள்”, அப்படின்னு சொன்னா. உடனே நானும் யோசிக்காம சின்னப் பிள்ளை மாதிரி, “அப்படியா. எனக்குக் கூட இன்னிக்குதான் பிறந்த நாளாக்கும்”னு சொன்னேன்! அப்புறம் கொஞ்ச நேரம் அவங்கவங்க பிறந்த நாள் எப்பன்னு பேசிட்டு, வகுப்பில் ஆழ்ந்துட்டோம்.

வகுப்பு முடிஞ்ச பிறகு எல்லோருடைய வீட்டுப் பாட புத்தகத்தையும் பார்த்தேன். அதில் இரண்டு பிள்ளைங்க, அவங்க புத்தகத்தில் “Happy Birthday!”ன்னு, எழுதி வெச்சிருந்தாங்க! நான் மற்றவங்க புத்தகத்தைப் பார்க்கும் போது இவங்க எழுதி இருக்காங்க! சந்தோஷமா இருந்தது. நான் நன்றி சொன்ன போது, “முதல்லேயே தெரிஞ்சிருந்தா உங்களுக்காக நாங்க ஏதாவது செய்திருப்போம்”, அப்படின்னு சொன்னா, ஒரு பெரிய மனுஷி!

எல்லாம் பார்த்து முடிச்ச பிறகு, பிள்ளைங்க திடீர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, ஏதோ கண் ஜாடை காட்டிக்கிட்டாங்க. ஒரு பொண்ணு, “1…2…3…!” அப்படின்னு சொன்னா. உடனே எல்லோரும் சேர்ந்து “Happy Birthday to you” அப்படின்னு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாட ஆரம்பிச்சிட்டாங்க! “Happy Birthday to you... chaa..chaa..chaa…” அப்படின்னு நடுவில் வாயாலேயே music effect வேற!

அப்பாடி! அந்த நிமிஷத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சந்தோஷத்தையும் நெகிழ்வையும், அனுபவிச்ச அன்பையும் வார்த்தைகளால் சொல்வது கஷ்டம். யாரும் சொல்லிக் கொடுக்காம, தானா மனசில் தோணி, அன்பை இந்த மாதிரி வெளிப்படுத்திய அந்தக் குட்டீஸையும், அந்த நாளையும் மறக்க முடியாது.

இப்பேற்பட்ட அழகான தருணத்தில் மறக்காம என் மனசுக்குள் வந்து சிரிச்சது யார்னு நினைக்கிறீங்க? நான் டீல் போட்டேனே, சாக்ஷாத் அவளேதான்!

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Thursday, August 2, 2012

ஸ்ரீ மாதா

டி வெள்ளியும் அதுவுமாக, ஆடிக்குரியவளை, நம்மை ஆட்டி வைக்கிறவளைப் பற்றிப் பேசுவதற்கு ஆசை வந்தது :)

லலிதா சஹஸ்ரநாமத்தில் முதலாவதாக வரும் நாமம்தான், “ஸ்ரீ மாதா”. பிறகுதான் “ஸ்ரீ மஹாரஜ்ஞீ”. அதாவது, முதலில் அம்மா. பிறகுதான் அவள் மஹாராணி!

அம்மாவிடம் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம் இயல்பு மாறாமல், நாம் நாமாகவே இருக்க முடியுமென்றால், அது அன்னையிடம் மட்டும்தான். அவளிடம்தான் நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

ஆனால் மஹாராணி என்றால் அப்படியா? அவளைப் பார்க்க வேண்டுமென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும்? அவளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டும்? அப்படியே மஹாராணியைச் சென்று பார்த்து விட்டாலும், அவளிடம் எவ்வளவு பயம், மரியாதை, ஒரு விஷயத்தைச் சொல்லலாமா கூடாதா என்கிற தயக்கம், இப்படி எத்தனையோ உணர்வுகள் இருக்கும்.

அப்படியெல்லாம் அன்னை பராசக்தியிடம் தயங்கவோ பயப்படவோ தேவையில்லை. அவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம்மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம்.

அதனால்தான் சஹஸ்ரநாமத்தை எழுதிய வாக் தேவதைகள், “ஸ்ரீ மாதா” என்பதை முன்னால் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
 
‘டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான்’ என்ற பழமொழி நினைவிருக்கிறதா? நாட்டிற்கு ராணியானாலும், தன் பிள்ளைகளுக்கு அம்மாதான். குழந்தைகளுக்கு தன் அம்மா மஹாராணியாக இருந்தாலும், வேலைக்காரியாக இருந்தாலும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது? அவர்களைப் பொறுத்த வரை, அவள் செல்லமான, அன்பைப் பொழிகின்ற அம்மா மட்டுமே.

அம்மா என்றால் அன்பு. அன்பு என்றால் அம்மா. அம்மாவிற்கு நம் மீது எப்போதாவது கோபம் வந்தாலும், அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும். நாம் துயரப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் காண முடியாமல், அப்படி ஒரு நிலைமை வருவதைத் தடுக்கவே அவள் கோபம் கொள்ளுவாள். அதையும் மீறி நாம் தவறு செய்து விட்டாலும், நம் நிலையைக் கண்டு, நமக்கு முன்னே அவள்தான் கண்ணீர் விடுவாள். நம்மை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த மனித உலகத்தைச் சேர்ந்த அன்னையருக்கே இத்தகைய உயர்ந்த குணம் இருக்கும் போது, உலகத்தையே ஆக்கிய, அண்ட சராசரத்துக்கெல்லாம் காரணியான அவளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ

மூடனாய் அடியேனும் அறிந்திலேன்

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ

என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.


சுப்பு தாத்தா சாவேரியில் இந்தப் பாடலை அழகுறப் பாடித் தந்திருக்கிறார், அற்புதமான படங்களோடு! நீங்களும் கேட்டு + பாருங்கள்! மிக்க நன்றி தாத்தா!

என்றார் பட்டினத்தார். எத்தனை எத்தனை ஜன்மங்களோ, அத்தனை அத்தனை அன்னையர் நமக்கு. ஆனால் இப்போதும் எப்போதும் எல்லோருக்கும் இருக்கிற ஒரே அன்னை அவள்தான். எத்தனையோ கோடானு கோடி பிள்ளைகள் இருந்தாலும், அவள் அன்பிற்குக் குறைவே இல்லை.

அவள் அன்பை எப்படித் தெரிந்து கொள்வது? எப்படி அனுபவிப்பது? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்வதைப் பாருங்கள் -"There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle."

இந்த உலகத்தின் ஒரு சின்னஞ்சிறு இலையின் அசைவிலும் அவள் இருக்கிறாள்; அவள் அருள் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு நிகழ்விலும் அவளைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, அவள் அன்பில் நனைந்து திளைக்கின்ற பாக்கியம் கிடைக்கிறது.

மழை எல்லோருக்கும் தான் பெய்கிறது. மழை பெய்கிற சமயத்தில் அண்டாவைத் திறந்து வைத்தால்தான் அதில் நீர் நிரம்பும். அதை விட்டு விட்டு, அண்டாவை மூடி வைத்து விட்டு, பிறகு மழை விட்ட பிறகு, “எனக்கு மட்டும் தண்ணீரே கிடைக்கவில்லை” என்று புலம்பினால் யார் குற்றம் அது?

அதே போல்தான், அவள் அருள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. மழையாவாது அவ்வப்போதுதான் பெய்கிறது, ஆனால் அவள் பேரருள் என்கிற மழை, விடாமல் பெய்து கொண்டேதான் இருக்கிறது. மனதைத் திறந்து வைத்தவர்களுக்கு, மனதை அதற்குப் பாத்திரமாக்கியவர்களுக்கு, மனம் முழுக்க அவள் அன்பும் அருளும் நிச்சயம் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

அன்னையின் திருவடிகள் சரணம்.

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை

[இன்றைய மகிழ்ச்சி: ஆடி வெள்ளியும் அதுவுமாக அவளைப் பற்றி எழுதக் கிடைத்தது... அதுவும் 300-வது பதிவு (but who is counting? ஹி...ஹி...:)]