Sunday, August 14, 2011

ஜணுத ஜணுத தகி ஜணுத ஜணுத தக

ஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...! - 4

பரதம் பற்றிய மற்ற பதிவுகள் இங்கே...


குனித்த புருவம்.
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு.
பனித்த சடை.
பவளம் போல மேனி.
பால் வெண்ணீறு.
இனித்தமுடன் எடுத்த பொற்பாதம்…

ஆஹா! அப்பர் சுவாமிகள் பாடும்போதே, அவரைப் போல நேரில் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காட்டாலும், அப்படி ஒரு காட்சி கிடைச்சா எத்தனை பிறவி வேணும்னாலும் எடுக்கலாம், அப்படின்னு அவர் சொல்வதன் பொருள் இலேசா புரியறாப்லதானே இருக்கு!

அவரு இப்படி உருகி உருகிப் பாடும் அப்பேற்பட்ட அழகன் யாருன்னு நினைக்கிறீங்க? (இந்தப் பாட்டைப் பற்றி இது வரை தெரியாதவங்க மட்டும்தான் கை தூக்கணும்! :)

ஒரு குறிப்பு தரவா? … அவனுக்கு சுந்தரன், அப்படின்னு கூட ஒரு பேர் இருக்கு. என்ன, யூகிச்சீங்களா? ….. சரி, நானே சொல்லிர்றேன்… அது வேற யாருமில்ல, சாக்ஷாத், நம்ம சுந்தரியோட கணவன், எ(ன் த)ந்தை ஈசன்தான். சுந்தரி தன் மேனியை வேற அவனோட பகிர்ந்தாள் இல்லையா! அதனாலதான் அவனுக்கு அவ்ளோ அழகு வந்திருக்கு போல! :)

நடராஜன், நடனத்துக்கு மட்டும் ராஜனல்ல, இந்த அண்ட சராசரத்துக்கெல்லாம் ராஜன். அவன் எத்தனையோ வித விதமான நாட்டியங்களை ஆடறானாம். அப்படி அவன் ஆடுகிற நாட்டியத்துக்கெல்லாம் ‘தாண்டவம்’ அப்படின்னு பேரு. ‘தாண்டவம்’, அப்படிங்கிற சொல்லிலேயே எத்தனை கம்பீரம்!

இறைவனுக்கு ஐந்து தொழில்கள் உண்டாம். சாதாரணமா மூன்றைத்தான் பிரதானமா சொல்வாங்க. படைத்தல், காத்தல், அழித்தல், அப்படின்னு. ஆனா உள்ளபடி ஐந்து தொழில்கள் இருக்காம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், அப்படின்னு. இந்த ஐந்து தொழில்களையும் செய்யறதால ஈசனுக்கு ஏற்படுகிற ஆனந்தமே, தாண்டவங்களாக வெளிப்படுதாம்.

அப்படி கூத்தபிரான் செய்கிற தாண்டவங்கள், மொத்தம் 7. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், விஜய தாண்டவம், ஊர்த்வ தாண்டவம், உமா தாண்டவம், சம்ஹார தாண்டவம், எனப்படுவன. அவற்றைப் பற்றி சுருக்கமா பார்க்கலாம்…

1. ஆனந்த தாண்டவம்

தன்னுடைய உலகப் படைப்பைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி கொண்டு ஆனந்த தாண்டவம் புரிகிறானாம்.

வலது கையில் ஏந்திய உடுக்கை, உலகப் படைப்புக்குக் காரணமான நாதத்தைத் தோற்றுவிக்கிறது. இடது கையில், படைப்புக்கு இடையூறாக வரும் தீய சக்திகளை ஒழிக்கும் அக்னியை ஏந்துகிறான். ஒரு கை அபயம் அளிக்க, இன்னொரு கை வெற்றியைக் குறிக்கிறது.

2. சந்தியா தாண்டவம்

இடையூறின்றி படைப்புத் தொழில் நடைபெறுவதில் ஆனந்தம் கொண்டு, அந்தி வேளையில் இந்த நடனம் புரிகிறானாம்.

உமா தேவி இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்க, இந்திரன் குழல் ஊத, திருமால் மிருதங்கம் வாசிக்க, பிரும்ம தேவன் தாளமிட, கலைமகள் வீணை மீட்ட, தேவரெல்லாம் கண்டு களிக்க, சிவபெருமான் சந்தியா தாண்டவம் செய்கிறானாம்.

3. கலிக தாண்டவம்

உலக முன்னேற்றத்தைத் தடை செய்யும் அஞ்ஞானம், அதர்மம், போன்ற தீய சக்திகளை அழித்து, அணையா ஜோதியை ஏற்றி வைத்ததன் சிறப்பை இந்த தாண்டவத்தின் மூலம் உணர்த்துகிறானாம்.

4. விஜய தாண்டவம்

ரொம்ப காலங்களுக்கு முன்னால், சில பேருக்கு நெறய்ய மந்திர சக்தி இருந்துச்சாம். ஆனா அதை கெட்டது செய்யத்தான் பயன்படுத்தினாங்களாம். அவங்கள திருத்தறதுக்காக, நம்மாளு, ஒரு முனிவரைப் போல அவங்க இடத்துக்கு போனானாம். ஆனா அவங்க திருந்தற மாதிரி இல்லையாம். சிவனை அழிக்கறதுக்குன்னே ஒரு வேள்வி வளர்த்து, அதுல இருந்து ஒரு பயங்கரமான புலியை வர வச்சு, சிவபெருமான் மேல ஏவினாங்களாம். ஆனா சிவன், அந்தப் புலியை ரொம்ப சுலபமா பிடிச்சு, சுண்டு விரலாலேயே அதோட தோலை உரிச்சு, இடுப்புத் துணியா கட்டிக்கிட்டானாம்!

அடுத்த்தா அந்த கெட்ட முனிவர்கள், ஒரு பெரிய்ய்ய்ய நச்சுப் பாம்பை ஏவி விட்டாங்களாம். ஆலஹால விஷத்தையே விழுங்கினவனுக்கு பாம்பு எம்மாத்திரம்? அதையும் பிடிச்சு, தன் கழுத்தில் மாலை ஆக்கிட்டானாம்!

அப்பவும் அந்த முனிவர்கள் முயற்சியை விடலையாம். எல்லா தீய சக்திகளையும் ஒண்ணு சேர்த்து, கஜாசுரன் அப்படிங்கிற அசுரனை ஏற்படுத்தி, சிவனை அழிக்க அனுப்பினாங்களாம். அந்த அரக்கனை சிவபெருமான் தன் காலடில போட்டு மிதிச்சு வெற்றி பெற்று, தாண்டவம் செய்தானாம். அதுதான் விஜய தாண்டவமாம்.

**

மீதி இருக்கிற 3 தாண்டவங்களையும் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

அன்புடன்,
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.


6 comments:

 1. தம்பி ப்ளாக்ல சுந்தரி, சுந்தரன் அக்காவோட ப்ளாக்லையா? பேஷ்! பேஷ்! சுந்தரனோட நடனம் உங்களோட சுந்தரமான தமிழ்ல அழகு சுந்தரமா இருக்கு அக்கா! :))

  ReplyDelete
 2. தெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய அரிய
  தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //தம்பி ப்ளாக்ல சுந்தரி, சுந்தரன் அக்காவோட ப்ளாக்லையா? பேஷ்! பேஷ்! சுந்தரனோட நடனம் உங்களோட சுந்தரமான தமிழ்ல அழகு சுந்தரமா இருக்கு அக்கா! :))//

  :) அவங்களைப் பற்றி பேசினா தமிழ் தானா சுந்தரமாயிடும் :) நன்றி தக்குடு, முதல் வருகைக்கும் :)

  ReplyDelete
 4. //தெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய அரிய
  தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி
  இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரமணி. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. "aarilum kaththukkalaam...
  arubathilum kaththukkalaam"

  enakken vambu?to be on the safer side,i better stop with learning theory
  by reading yr pathivu rather than taking any further risk!
  ithu epdi irukku?

  ReplyDelete
 6. //enakken vambu?to be on the safer side,i better stop with learning theory
  by reading yr pathivu rather than taking any further risk!
  ithu epdi irukku?//

  சரியான முடிவுதான் லலிதாம்மா :)

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)