Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!

சதுர்த்தித் திருநாளில் கற்பகக் கணபதியின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

16 comments:

  1. கணபதி போற்றி உச்சரிக்க சந்தமெட்டுடன் இயல்பாக
    இருந்ததால் இதையே பூஜைக்கும் வைத்துக்கொண்டோம்
    நல்ல நாளில் நல்ல பயனுள்ள ப்திவினைத் தந்தமைக்கு
    நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. திருநாள் கற்பக விநாயகரை வணங்கி உங்கள் அழகான பாடலுடன் தொடங்குகிறது. நன்றி. சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. அக்கா குடும்பத்துக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  4. 'பாரதம்' எழுதிட ஒரு தந்தம் ஓடித்திட்ட

    வாரணமே!போற்றி,போற்றி!

    பூரணகொழுக்கட்டை படைககிறோம்;ஏற்றுக்கொள்

    ஹேரம்பா!போற்றி,போற்றி!

    ReplyDelete
  5. தம்பி பேரை அண்ணனுக்கு வச்சிட்டீங்களே அக்கா? :-) பழத்தைத் தான் பிடுங்கினார்ன்னா தம்பிக்கிட்ட இருந்து மயில் வாகனத்தையுமா பிடுங்கினார்?

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  6. //கணபதி போற்றி உச்சரிக்க சந்தமெட்டுடன் இயல்பாக
    இருந்ததால் இதையே பூஜைக்கும் வைத்துக்கொண்டோம்//

    ஆஹா, மிக்க மகிழ்ச்சியும், நன்றியும், ரமணி :)

    ReplyDelete
  7. //திருநாள் கற்பக விநாயகரை வணங்கி உங்கள் அழகான பாடலுடன் தொடங்குகிறது//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  8. //அக்கா குடும்பத்துக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ;-)//

    நன்றி கோபி! :)

    ReplyDelete
  9. //'பாரதம்' எழுதிட ஒரு தந்தம் ஓடித்திட்ட

    வாரணமே!போற்றி,போற்றி!

    பூரணகொழுக்கட்டை படைககிறோம்;ஏற்றுக்கொள்

    ஹேரம்பா!போற்றி,போற்றி!//

    ஹேரம்பா போற்றி போற்றி! நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  10. //தம்பி பேரை அண்ணனுக்கு வச்சிட்டீங்களே அக்கா? :-) பழத்தைத் தான் பிடுங்கினார்ன்னா தம்பிக்கிட்ட இருந்து மயில் வாகனத்தையுமா பிடுங்கினார்?//

    விநாயகர் பெயர்களை தேடினப்ப, இதுவும் ஒண்ணா கிடைச்சது. :( தெரியாமல் செய்யும் பிழை பொறுப்பார் விநாயகர்.

    நன்றி குமரா.

    ReplyDelete
  11. kumaran,
    i've also come across pilaaiyaar being adrsd as 'mayuresaa';as soon as i get the reference i shall mail it to u.so,i don't think kavinaya hs erred.

    ReplyDelete
  12. நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete
  13. in 'morgaon' ashtavinayaga temple,
    one of the 8 pillaiyaar is 'mayureswar'!

    in 'tretha yug' pillaiyar was
    in the form of mayuresar [killed an asura!] ..sorry i'm frgtting name of purana;as soon as i get it i shl give u the exact ref.

    ReplyDelete
  14. eureka!
    in google search 'ganesapurana..
    kridakhandam' i fnd our thoppaiyan s adrsd innumerable times as
    mayuresa!

    [of course i cd'nt locate my book which has this reference.]

    ReplyDelete
  15. அக்கா,

    லலிதாம்மா சொன்னதைப் படிச்சப்புறம் விநாயக புராணத்தில் மயூரேச கணபதியின் கதையைப் படிச்சது நினைவுக்கு வருது. அதனால நீங்க தவறு எதுவும் செய்யலை.

    ReplyDelete
  16. ச்வீட் :) பிள்ளையாரப்பா என்னை கைவிட மாட்டாருன்னு தெரியுமே :)

    லலிதாம்மாவுக்கு மிக்க நன்றி. குமரனுக்கும் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)