Sunday, August 7, 2011

சொக்கத் தங்கமே உறங்கு...!

Sleeping Baby

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ

அம்மவென் றழைக்கவந்த அஞ்சுகமே கண்ணுறங்கு
ஆராரோ பாடுகிறேன் அம்மாடி நீயுறங்கு

தேவரெல்லாந் தாலாட்ட தெய்வமக ளேயுறங்கு
மூவருன்னைத் தாலாட்ட முத்தமிழே கண்ணுறங்கு

வான்நிலவு தாலாட்ட வண்ணமல ரேயுறங்கு
தேன்நிலவு தாலாட்ட தேவதையே கண்ணுறங்கு

ஆடிவருந் தென்றலிலே அல்லிமல ரேயுறங்கு
பாடிவருந் தென்றலிலே பங்கயமே கண்ணுறங்கு

வண்டாடுஞ் சோலையிலே வண்ணமயில் போலுறங்கு
செண்டாடும் பூவிழியே செண்பகமே கண்ணுறங்கு

சூரியனும் உறங்குதடி செல்வமக ளேயுறங்கு
வாரியுன்னைக் கட்டிக்கொள்ள வட்டமிடுங் கண்ணுறங்கு

சிப்பிக்குள்ளே முத்துறங்க சிட்டுப்போல நீயுறங்கு
வித்துக்குள்ளே மரமுறங்க அத்திப்பூவே கண்ணுறங்கு

மேகத்திலே மழையுறங்க மெல்லமெல்ல நீயுறங்கு
சோகமெல்லாந் தீர்க்கவந்த சொக்கத்தங்க மேயுறங்கு

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ


--கவிநயா

14 comments:

  1. /வான்நிலவு தாலாட்ட வண்ணமல ரேயுறங்கு
    தேன்நிலவு தாலாட்ட தேவதையே கண்ணுறங்கு/

    எல்லா வரிகளும் அழகு. காலைநேரமாயினும் வாசிக்கையில் தூக்கம் கண்களை சுகமாய்த் தழுவிடுது:)!

    ReplyDelete
  2. அப்பாடி, ஒரு வழியாப் பெண் குழந்தைக்கும் தாலாட்டுப் பாடிட்டீங்க. :))))))))))

    விளையாட்டுக்குச் சொல்லி இருக்கேன். சீரியஸா எடுத்துக்காதீங்க! பொதுவா எல்லாருமே ஆண் குழந்தைக்குத் தான் தாலாட்டுப் பாடறாங்க. அதை வைச்சுச் சொன்னேன்.

    ReplyDelete
  3. ஹாஆஆவ்!!தூக்கக்கலக்கத்தில் டைப் அடிக்கிறேன்!தப்புத்தப்பா இருந்தா தப்பாநினைக்காதே!உன்மேலதான் பழி!

    ReplyDelete
  4. அருமையான தாலாட்டுப் பாடல்
    தாய்மையும் இயல்பான வார்த்தைகளும்
    மிகச்சரியாகக் கைகோர்த்து நடக்கப்
    பிறந்த கவிதை அற்புதம்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வரியை வாசிக்க வாசிக்க
    உறக்கம் வந்து விட்டது.

    ReplyDelete
  6. //அம்மா என்றழைக்க வந்த அஞ்சுகமே கண்ணுறங்கு
    ஆராராரோ பாட வந்தேன், அம்மாடி கண்ணுறங்கு.. //

    அந்த ஆரம்பம் தான் கவிதைக்கே மகுடம் சூட்டிக் கொண்டு மிளிர்கிறது.

    'அம்மா என்றழைக்க வந்த அஞ்சுகமே'-- அந்த அழைப்பில் தான் அந்தத்தாய்க்கு எவ்வளவு பெருமிதமும் ஆசையும்.. அதனால் தான் அந்த 'அம்மா' அழைப்பையே திருப்பி, அந்த 'அம்மாடி'யில் அத்தனை அன்பையும் குழைத்துத் தேக்கி வைத்து தாலாட்டுகிறாள்!

    எனக்கென்னவோ,

    'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
    காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே'-- என்கிற கவியரசர் கண்ணதாசனின் பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  7. //எல்லா வரிகளும் அழகு. காலைநேரமாயினும் வாசிக்கையில் தூக்கம் கண்களை சுகமாய்த் தழுவிடுது:)!//

    ராத்திரி வாசிங்க, தூங்கறதுக்கு உதவும் :)

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  8. வாங்க கீதாம்மா! உங்களுக்காகவே இதுக்கு முன்னாடியும் ஒரு பெண் குழந்தை தாலாட்டுதான் எழுதியிருந்தேன் :)

    //விளையாட்டுக்குச் சொல்லி இருக்கேன். சீரியஸா எடுத்துக்காதீங்க!//

    அச்சோ! இதுல என்ன இருக்கு? அப்படில்லாம் எடுத்துக்க மாட்டேன் அம்மா :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. //அருமை ;-)//

    வாங்க கோபி. நன்றி :)

    ReplyDelete
  10. //தப்புத்தப்பா இருந்தா தப்பாநினைக்காதே!உன்மேலதான் பழி!//

    :) ரசித்தேன், லலிதாம்மா :) நன்றி.

    ReplyDelete
  11. //அருமையான தாலாட்டுப் பாடல்
    தாய்மையும் இயல்பான வார்த்தைகளும்
    மிகச்சரியாகக் கைகோர்த்து நடக்கப்
    பிறந்த கவிதை அற்புதம்//

    மிக்க நன்றி, ரமணி :)

    ReplyDelete
  12. //வரியை வாசிக்க வாசிக்க
    உறக்கம் வந்து விட்டது.//

    மகிழ்ச்சி திகழ் :) நன்றி.

    ReplyDelete
  13. //அந்த 'அம்மாடி'யில் அத்தனை அன்பையும் குழைத்துத் தேக்கி வைத்து தாலாட்டுகிறாள்!//

    அழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. எழுதுகையில் அப்படியே உணர்ந்தேன் :)

    //'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
    காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே'-- என்கிற கவியரசர் கண்ணதாசனின் பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது!//

    ஆசிகளுக்கு மிக்க நன்றி, ஜீவி ஐயா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)