Sunday, September 7, 2008

அன்பே செல்வம்; அதுவே தெய்வம்; அதுவே இன்பம் !

ஒரு காலத்துல குழந்தைகளுக்கான பாடல்கள் / கவிதைகள் எழுதணும்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா அப்படி எழுதினா அதை யார் படிப்பா, குழந்தைகளுக்கு எப்படி போய்ச் சேரும் அப்படிங்கிற நினைப்பு, அந்த எண்ணத்துக்கு தடை போட்டது. சமீபத்துல ஜீவி ஐயாவுடைய ஒரு 'தினம் தினம் சந்தோஷம்' பதிவுக்கு பின்னூட்டம் இட்டப்போ, அவர் இப்படி சொல்லியிருந்தார்:

//குழந்தைகளின் மனதில் நல்ல சிந்தனைகள் பதிகிற மாதிரி,ஓரிரண்டு எளிமையான கவிதைகளை நீங்கள் எழுதலாம் என்பது என் கோரிக்கை. அது உங்களால் முடியும். ஒரு நல்ல இறைப்பணியாகவும் அமையும்.//

அதன்படி இது ஒரு கன்னி முயற்சி.

குளத்துல விழறோமா, குட்டையில விழறோமா, கடல்ல விழறோமா, ஏரியில விழறோமா, இல்ல சாக்கடையிலதான் விழறோமான்னு பார்த்து பார்த்து மழை பெய்யறதில்லை. அதை போல நாம நல்லதை நினைச்சு எழுதுவோம்; அது நாலு பேருக்கு சேரணும்னு இருந்தா தானா போய்ச் சேரும். சரிதானே? :)


பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
அன்பே செல்வம் அதுவே தெய்வம்
அதுவே இன்பம் நினைவில் கொள்!

மேகம் நீரை உண்டதனாலே
மழையாய்ப் பொழியும் அழகைப் பார்!
நிலமும் நீரைத் தேக்கியதாலே
ஆறாய் ஊற்றாய் மாறுது பார்!

(பாப்பா)

பூக்கள் தங்கள் வாசனையெல்லாம்
காற்றில் பரப்பும் விந்தையைப் பார்!
அன்பால் நிறைந்த மனமிருந்தாலே
மற்றவர்க் களித்தல் சுலபம் பார்!

பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
அன்பே செல்வம் அதுவே தெய்வம்
அதுவே இன்பம் நினைவில் கொள்!

-- கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jeremyhall/2327422231/

24 comments:

  1. //"அன்பே செல்வம்; அதுவே தெய்வம்; அதுவே இன்பம் !"//

    தலைப்பும் நன்று.

    //அதை போல நாம நல்லதை நினைச்சு எழுதுவோம்; அது நாலு பேருக்கு சேரணும்னு இருந்தா தானா போய்ச் சேரும்.//

    என்கிற சிந்தனையும் நன்று.

    பாப்பாக்களுக்குப் புரியும் படியான அழகிய பாடல் வரிகள் அதனினும் நன்று கவிநயா.

    //பூக்கள் தங்கள் வாசனையெல்லாம்
    காற்றில் பரப்பும் விந்தையைப் பார்!//

    இந்தப் பாட்டும் பாப்பாக்களுக்கு தன் சீரிய சிந்தனையை பரப்பிடும் விந்தையைக் கண்டிடலாம். வாழ்த்துக்கள். தொடரட்டும் இம்முயற்சி.

    ReplyDelete
  2. //பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
    பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
    அன்பே செல்வம் அதுவே தெய்வம்
    அதுவே இன்பம் நினைவில் கொள்!//

    நினைவில் கொண்டோம்!
    தமிழகம் விட்டு வசிக்கும் எத்தனை பேருக்கு இப்படி இயல்பான "பாப்பா
    பாட்டுகள்" தேவையாக இருக்கு தெரியுமா?..
    அவர்கள் உங்கள் முயற்சியை நிச்சயம் கொண்டாடுவார்கள்..
    நினைவில் வைத்து, கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அழகான பாடல் சகோதரி. :)

    ReplyDelete
  4. நன்றி திகழ்மிளிர் :)

    ReplyDelete
  5. ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  6. பாப்பா பாட்டு எழுத தூண்டுகோலாக அமைந்த உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  7. பாப்பா பாட்டு நன்றாகவே ஆரம்பித்து இருக்கிறது. நல்ல கருத்து.

    // இது ஒரு கன்னி முயற்சி//

    தொடர்ந்து எழுதினால் அழ.வள்ளியப்பா போல் பிரகாசிக்க முடியும்.

    ReplyDelete
  8. பாட்டும் பொருளும் அருமை. பொதுவாக மோனையில் பாட்டும் நாணமில்லா நங்கையும் ஒன்றுக்கும் ஆகாது என்பார்கள். குழந்தைகளைப் பொருத்தவரையில் சந்தத்தோடு கூடிய எளிய சொற்களைக் கையாண்டு மோனையமைத்துப் பாடல் அமைத்துத் தரவேண்டும் அவர்களுக்கு. உங்கள் பாடலில் சந்தமிருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்டிருக்கிறீர்கள். நல்ல கருத்துச்செறிவு இருக்கிறது. ஆயினும் அதுமட்டும் போதாது. மோனை எதுகை அமைப்பு முகாமை. மோனை எதுகை அமைப்புத்தான் குழந்தைக்களின் மனதில் ஆழப்பதிய உதவிபுரியும். நீங்கள் சிறுவயதில் படித்த சிறுவர் பாடல்களை நினைவு கூர்ந்து பாருங்கள் நான் சொல்வதன் பொருள் புரியும்.

    கீழ்காணும் பாடலில் மோனை எதுகை அமைப்பைப்பார்வையிடவும் . இதுவும் சிறுவர்களுக்காக எழுதியதுதான்.

    ====== ====== ======

    பம்பரம்!

    ஒற்றைக் காலில் நின்றபடி
    உன்னை என்னை பார்த்தபடி
    சற்றே காற்றைக் கிழித்தபடி
    சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?

    நிலையே இல்லா இவ்வாழ்வில்
    நிலைத்து வாழ வேண்டுமெனில்
    நில்லா துழைத்தல் வேண்டுமென்று
    நிற்கும் பம்பரம் சொல்கிறது!

    ஊனம் உடலில் இல்லையென்றும்
    உளத்தில் தானது உள்ளதென்றும்
    காணும் பேரைக் கூப்பிட்டுக்
    கனிவுடன் பம்பரம் சொல்கிறது!

    வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
    வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்
    இட்ட முடனே எல்லோர்க்கும்
    இயன்றது செய்திட இயம்பிடுது!

    தலைக்கனம் கொண்டே ஆடுவதால்
    தாழ்வே வந்து சேருமென்று
    தலையை ஆட்டித் தக்கபடி
    தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!

    தன்னைச் சுற்றும் சாட்டைக்கே
    தன்னை வழங்கும் பம்பரம்போல்
    உன்னை சார்ந்த உறவுக்கும்
    உன்னை ஈந்திடு என்கிறது!

    சொந்தக் காலில் நிற்பதுதான்
    சுகத்திற் சிறந்த சுகமென்றும்
    அந்தப் பம்பரம் சொல்கிறதே!
    அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!

    அகரம். அமுதா

    ReplyDelete
  9. மிக அருமையாயிருக்கு. முயற்சி திருவினையாக்கும். நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  10. செல்வமான தெய்வம்,
    இன்பமான தெய்வம்,
    எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம் - அதை
    எட்டிட வேண்டியதெல்லாம் அன்பு மட்டுமே என எளிதாய் சிறார்களுக்கு சொல்லும் பாங்கு அருமை!

    ReplyDelete
  11. அருமையான ஆரம்பம் கவிநயா, தொடர்ந்து இன்னும் பல எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாங்க கபீரன்பன்.

    //தொடர்ந்து எழுதினால் அழ.வள்ளியப்பா போல் பிரகாசிக்க முடியும்.//

    ஆஹா, அவர் எங்கே, நான் எங்கே. ஆயினும் உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  13. வருக அகரம்.அமுதா. அசத்தலான பம்பரப் பாடலோட வந்து கலக்கிட்டீங்க!

    //பொதுவாக மோனையில் பாட்டும் நாணமில்லா நங்கையும் ஒன்றுக்கும் ஆகாது என்பார்கள்.//

    :)) அருமையான கருத்தை உதாரணப் பாடலோட கொடுத்திருக்கீங்க. அடுத்த முறை எழுதும்போது நினைவில வச்சுக்க முயற்சிக்கிறேன் :))

    ReplyDelete
  14. வாங்க மௌலி.

    //மிக அருமையாயிருக்கு. முயற்சி திருவினையாக்கும். நிறைய எழுதுங்கள்.//

    ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி :)

    ReplyDelete
  15. வருக ஜீவா. நல்லா ரசிச்சிருக்கீங்கன்னு பின்னூட்டத்துல இருந்தே தெரியுது. மிக்க நன்றி :)

    ReplyDelete
  16. வருக கைலாஷி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. நல்ல கவிதை கவிநயா. குழந்தைகளுக்காக செய்யப்படும் எந்த ஒரு நல்ல முயற்சியும் இறை சேவையே.

    ReplyDelete
  18. //பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
    பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
    அன்பே செல்வம் அதுவே தெய்வம்
    அதுவே இன்பம் நினைவில் கொள்!

    மேகம் நீரை உண்டதனாலே
    மழையாய்ப் பொழியும் அழகைப் பார்!
    நிலமும் நீரைத் தேக்கியதாலே
    ஆறாய் ஊற்றாய் மாறுது பார்!

    (பாப்பா)

    பூக்கள் தங்கள் வாசனையெல்லாம்
    காற்றில் பரப்பும் விந்தையைப் பார்!
    அன்பால் நிறைந்த மனமிருந்தாலே
    மற்றவர்க் களித்தல் சுலபம் பார்!

    பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
    பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
    அன்பே செல்வம் அதுவே தெய்வம்
    அதுவே இன்பம் நினைவில் கொள்!//

    வாவ்.. கவியக்கா.. அழகான பாட்டு..
    அருமையான கருத்து...

    ஆர்யா கொஞ்சம் வளர்ந்தவுடன் இந்த பாட்டெல்லாம் சொல்லித்தர்றேன்..

    மிக மிக நல்ல மியற்சி!!

    வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  19. வாங்க ரமேஷ். மிக்க நன்றி.

    ReplyDelete
  20. //ஆர்யா கொஞ்சம் வளர்ந்தவுடன் இந்த பாட்டெல்லாம் சொல்லித்தர்றேன்..//

    ஆஹா. அந்த நாளுக்காக வெயிட்டிங்! மிக்க நன்றி கோகுலன் :)

    ReplyDelete
  21. அருமை அருமை. ஒளவைப் பாட்டி பெரிய பெரிய தத்துவங்களை எல்லாம் சிறு குழந்தைகளுக்காக எழுதி வைக்கவில்லையா? அப்போது புரிந்தா படிக்கிறோம்/படிக்கிறார்கள். வளர்ந்த பின்னாலாவது அவற்றை எண்ணிப் பார்த்துப் புரிந்து கொண்டு நடக்க முயலலாமே. அதே போல் நீங்கள் எழுதும் இந்தக் குழந்தைகளுக்கான பாடல்களும் அமையும் என்று எண்ணுகிறேன் அக்கா.

    ReplyDelete
  22. //அருமை அருமை.//

    இப்படி சொன்னோன்னயே குளுந்து போச்சு :) நம்பிக்கையூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி குமரா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)