Thursday, August 7, 2008

அம்மாவோட நேயர் விருப்பம்...

"எல்லா கடவுள் மேலயும் பாட்டு எழுதியிருக்கியே, சிவன் மேல ஒண்ணு எழுதேன்", இதான் என் அம்மா என்கிட்ட போன முறை பேசும்போது சொன்னது :) அவங்களுக்காக இந்தப் பதிவு. இதுல கொஞ்சம் cheating இருக்கு! இந்த பாடல்/கவிதை முன்ன எழுதினதுதான். அம்மாவுக்கு நினைவு இருக்காதுன்னு ரொம்ப நம்பிக்கை! சில காலத்துக்கு முன்னாடி "நிலாச்சாரல்"ல பிரசுரமாச்சு. ஆனா அதுல இங்கொண்ணும் அங்கொண்ணுமா சில மாற்றங்களோட, புதிய கடைசி பத்தியோட, இங்கே பதிக்கிறேன். அவன் அருள் இருந்தா புதுசா வேற கூடிய சீக்கிரம் எழுதறேன், அம்மா :)



தாண்டவம்!!

நெஞ்சில் கனன்ற நெருப்பு கண்ணில் சிவப்பாய் உமிழ்ந்திடவே!
நெற்றிக் கண்ணின் வெப்பம் புவியைப் பொசுக்கத் தகித்திடவே!
"தனதன தந்தன" நவமணி மாலைகள் நர்த்தனம் புரிந்திடவே!
"தொம் தொம் தொம்" என ஒவ்வொரு அடியிலும் அண்டங்கள் அதிர்ந்திடவே!

கற்றைக்குழ லசைந் தெட்டுத் திசையிலும் காற்றைக் கிழித்திடவே!
காற்சதங் கைமணி ஒன்றுடன் ஒன்று உரசி உயிர்த்திடவே!
"டம டம டம" வென நந்தியின் கைகளில் மேளம் முழங்கிடவே!
"தரிகிட தரிகிட" உடுக்கையின் ஒலிஉல கெங்கும் நிறைந்திடவே!

தீயன யாவையும் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்திடவே!
நல்லவர் யாவரும் போற்றித் துதித்துத் திருவடி பணிந்திடவே!
"தீம் தீம் தீம்" என பாதம் தூக்கிப் பாவங்கள் போக்கிடவே!
"ஓம் ஓம் ஓம்" என ஓதுபவர்க்கு அபயம் அளித்திடவே!

நர்த்தனம் ஆடும் நடனராஜனை காண்போம் வாருங்கள்!
பொற்பதம் பற்றி பார்வதி கணவனை துதிப்போம் வாருங்கள்!
நானிலம் போற்றும் நாயகன் அவனைப் பணிவோம் வாருங்கள்!
‘நமசிவாய’ என நாளும் பொழுதும் சொல்வோம் வாருங்கள்!

--கவிநயா

நடராஜர் படத்துக்கு நன்றி: http://www.yogaelements.com/blog/today-is-the-night-of-shiva.html

19 comments:

  1. தாண்டவ தரிசனத்தை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள். அம்மாவுக்கும் சேர்த்து!

    ReplyDelete
  2. கோபால கிருஷ்ண பாரதி பாடல்கள இப்படி ஜதி நிறைய வரும் இல்லையா?

    நல்ல பாடல்....நடனத்துல யூஸ் பண்ணினீங்களா?..தில்லானாவாக ஆக்கலாமோ?.

    ReplyDelete
  3. அம்மாவின் நேயர் விருப்பத்தால் வாசகர் நாங்களும் பெற்றோமே பயனை. அதன் பலனை நர்த்தன நடராஜன் படைத்திட்ட உங்களுக்கும் கேட்டிட்ட அம்மாவுக்கும் பரிபூர்ணமாக அருளட்டும்.

    ReplyDelete
  4. பாடல் நல்லாருக்கு :))

    ReplyDelete
  5. பாடல் வெகு அருமை. சிவபெருமானை பற்றிய எல்லா பாடல்களிலும் ஒருவித வலிமை இருக்கும். இந்த பாடலிலும் அது இருக்கிறது.

    ReplyDelete
  6. யக்கா
    கில்லாடி நீங்க!
    மீள் பதிவு தெரியும்!
    இது மீள் கவிதையா? :)))

    ReplyDelete
  7. //"தீம் தீம் தீம்" என பாதம் தூக்கிப் பாவங்கள் போக்கிடவே!
    "ஓம் ஓம் ஓம்" என ஓதுபவர்க்கு அபயம் அளித்திடவே!//

    Sooper!
    Let's all dance! :)

    சிவன் பாட்டு வலைப்பூவில் இதை ஏற்றட்டுமா?
    கண்டிஷன்: ஒலிப்பேழையும் கொடுக்கணும் :)

    ReplyDelete
  8. //தாண்டவ தரிசனத்தை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள். அம்மாவுக்கும் சேர்த்து!//

    தரிசித்த உங்களுக்கும் நன்றி ஜீவா!

    ReplyDelete
  9. //நல்ல பாடல்....நடனத்துல யூஸ் பண்ணினீங்களா?..தில்லானாவாக ஆக்கலாமோ?.//

    அட, மௌலி! பிறைசூடன் உங்களை வர வச்சுட்டார் போல :) இல்லப்பா, இன்னும் அப்படி ட்ரை பண்ணல. பண்ணினா நல்லாதான் இருக்கும். பார்க்கலாம்...

    ReplyDelete
  10. //அம்மாவின் நேயர் விருப்பத்தால் வாசகர் நாங்களும் பெற்றோமே பயனை. அதன் பலனை நர்த்தன நடராஜன் படைத்திட்ட உங்களுக்கும் கேட்டிட்ட அம்மாவுக்கும் பரிபூர்ணமாக அருளட்டும்.//

    வாங்க ராமலக்ஷ்மி. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  11. //பாடல் நல்லாருக்கு :))//

    நன்றி சதங்கா.

    ReplyDelete
  12. //பாடல் வெகு அருமை. சிவபெருமானை பற்றிய எல்லா பாடல்களிலும் ஒருவித வலிமை இருக்கும். இந்த பாடலிலும் அது இருக்கிறது.//

    ரசித்ததற்கு நன்றி ரமேஷ்!

    ReplyDelete
  13. நல்வரவு கண்ணா!

    மீள்பதிவை விட மீள்கவிதை பெட்டர்தானே :)

    //சிவன் பாட்டு வலைப்பூவில் இதை ஏற்றட்டுமா?
    கண்டிஷன்: ஒலிப்பேழையும் கொடுக்கணும் :)//

    கண்ணன் இருக்க கவலை இல்லை! நீங்களே பாடி சிவன் பாட்டுல வலையேத்திடுங்க :) நல்ல வேளை ஒளிப்பேழை கேட்காம விட்டீங்க :)

    ReplyDelete
  14. வாழ்த்துகள். பாடல் அருமை!

    ReplyDelete
  15. //வாழ்த்துகள். பாடல் அருமை!//

    நன்றி அகரம்.அமுதா.

    ReplyDelete
  16. ஆடுகின்றானடி தில்லையிலே என்ற சூலமங்கலம் சகோதரிகளின் பாடலை நினவு படுத்தியது உங்கள் பாடல். நன்றாக உள்ளது.

    ஆயினும் தனியாக எழுதப்பட்டதாலோ என்னவோ கடைசி பத்தி ஒட்டாமல் நிற்பதாக தோன்றியது. அதை ஒட்டவைக்க சற்றே உங்களுடைய வரிகளை மாற்றி அமைத்து பார்த்தேன். உரிமை மீறல் அல்ல, நட்பு தரும் சுதந்திரம் தான் :))

    நர்த்தனம் ஆடும் நடனராஜனை கண்டு தரிசித்திடவே
    பொற்பதம் பற்றி பார்வதி கணவனை போற்றி துதித்திடவே
    நானிலம் போற்றும் நாயகன் அவனே என நாடி நின்றிடவே
    நாளும் பொழுதும் சொல்வோம் நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயவே

    ReplyDelete
  17. வருக கபீரன்பன்! நீங்கள் (நட்பின் சுதந்திரத்தோடு :) செய்திருக்கும் மாற்றங்கள் நன்று. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  18. http://valluvam-rohini.blogspot.com/2007/11/4-8-12-16-20-24-28.html#links
    ===
    சிவனை சிந்தையில் வைப்போம் என்ற தலைப்பில் நான் எழுதிய ஆன்மீக வரிகளைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி கோமா. உங்கள் இடுகைக்கு சென்று பார்க்கிறேன்..

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)