உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Wednesday, August 20, 2008
மரம் வைத்தவன்
வந்த கோபத்தில் என் கையை முறித்து அவன் மேல் எறிந்தேன்.
பக்கத்தில் நின்றிருந்த புதியவன், அவசரமாக அவனை எதிர்ப்புறம் இழுத்தான். அப்படியும் அவன் மேல் கொஞ்சம் அடிபட்டதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் தோளைத் தடவி விட்டுக் கொண்டான். இரண்டு பேரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.
"இந்த மரம் ரொம்ப பலஹீனமாத்தான் இருக்கு. வெட்டுறத ரொம்ப நாள் தள்ள முடியாது", என்றான் புதியவன்.
"ஹ்ம்... அப்படித்தான் தெரியுது", யோசனையாய் என்னைப் பார்த்தபடி, ஒப்புக் கொண்டான் அவன்.
"சரி, அப்ப நான் வர்றேன். இந்தாங்க செக். மீதிப் பணம் அடுத்த வாரம் பாக்கும் போது கொடுத்துர்றேன். பத்து நாள்ல காலி பண்ணீடுவிங்களா?"
கண்கள் மின்ன புதியவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டான், "கண்டிப்பா."
புதியவனை அனுப்பி விட்டு மறுபடியும் என்னிடம் வந்தான். சுற்றி வந்து என்னைத் தடவிக் கொடுத்தான். எல்லாம் ஒரு விநாடிதான். கையிலிருந்த புதையல் நினைவுக்கு வர, விசில் அடித்தபடியே வீட்டுக்குள் சென்றான். இந்தப் பணமெல்லாம் சீட்டு விளையாட்டில் மாயமாய் மறைவதற்கு அவனுக்கு இரண்டு நாள் கூடத் தேவையில்லை.
எப்படி இருந்தவன்! அவனைச் சிறு வயது முதலே எனக்குத் தெரியும். என்றோ தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டையான நான், சின்னக் கன்றாக எட்டிப் பார்த்த பொழுது உலக அதிசயம் போல் ஊரையே அழைத்துக் குதூகலித்தவன் அவன். என்னோடுதான் எப்போதும் இருப்பான். ஒரு பூவையோ, பிஞ்சையோ அவனுக்குத் தெரியாமல் என்னால் ஒளித்து வைக்க முடிந்ததில்லை. ஒரு நாள் கடைக்குச் சென்ற அவன் அம்மா விபத்து ஒன்றில் சிக்கி, பிணமாகத்தான் திரும்பி வந்தாள். அது முதல் அவன் வாழ்க்கை இறங்கு முகமாகிவிட்டது. சரியாகப் படிக்கவுமில்லை. அப்பாவும் அவனைப் பார்க்கச் சகிக்காமல் இந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு மாரடைப்பில் போய்ச் சேர்ந்து விட்டார். சொந்த வீடு என்பதால் ஏனோ தானோ வேலைகளில் ஏதோ ஓட்டிக் கொண்டிருந்தான். என் மடியில் படுத்தபடி எவ்வளவோ அழுதிருக்கிறான். நானும் அவனுக்கு முடிந்த வரை தலை கோதி ஆறுதல் சொல்லியிருக்கிறேன். அவன் தன் கைகளால் எனக்குத் தண்ணீர் ஊற்றி வருடக் கணக்காகி விட்டது. அதனாலேயே நோய் கண்டு வாடி வதங்கி விட்டேன். இப்போது எந்தப் புண்ணியவானோ வீட்டை விற்று விட யோசனை சொல்லிக் கொடுத்திருக்கிறான். வீட்டை வாங்கும் புதியவன் என்னை வெட்டி விட்டு வீட்டைப் பெரிதாக்க திட்டம் போடுகிறான்.
"இன்னும் எத்தனை நாளைக்கோ இந்த வாழ்வு?" நொந்தபடி சிலிர்த்துக் கொண்டதில், என் கண்ணீருடன் இலைகளும் சேர்ந்து பொலபொலவென்று உதிர்ந்தன. சில மாதங்களாகத் தொலை தேசத்திற்குச் சென்றிருந்த வானம், இப்போதுதான் நினைவு வந்தது போல் இலேசாக பூமியை நனைக்கத் துவங்குகிறது. சக்தி இழந்து விட்ட வேர்களை நீட்டி ஆவலுடன் பருகுகிறேன். நான் மறுபடியும் செழித்து வளர்ந்தால்... ஒரு வேளை... சோகத்தை உதறி விட்டு நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்!
--கவிநயா
இந்த கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/klashback/162612875/sizes/m/
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முயற்சி!
ReplyDeleteபாராட்டுகள்!
//நான் மறுபடியும் செழித்து வளர்ந்தால்... ஒரு வேளை... சோகத்தை உதறி விட்டு நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்!//
ReplyDeleteமரத்திற்கு இது சாத்தியம் .
மனிதனுக்கு ?
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
"மரம் வைத்தவன்" தண்ணீர் ஊற்றுவான். இது மனிதருக்காகச் சொல்லப் பட்டது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதைக் கூறும் நல்ல கதை. வாழ்த்துக்கள் கவிநயா!
ReplyDeleteகதை நல்லாருக்கு...:-))
ReplyDeleteநல்ல கதை,அருமையா இருக்கு ..வாழ்த்துக்கள் கவிநயா
ReplyDeleteஅருமை கவிநயா. கவித்துவமான கதை.
ReplyDelete/////என் கண்ணீருடன் இலைகளும் சேர்ந்து பொலபொலவென்று உதிர்ந்தன./////
ReplyDeleteமரத்தோடு சேர்ந்து நானும் மரமாகிப்போனேன்.
////அவன் தன் கைகளால் எனக்குத் தண்ணீர் ஊற்றி வருடக் கணக்காகி விட்டது. ////////
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு கேள்விப்பட்டிருக்கிறேனே!
வாழ்த்துகள். அழகான ஓட்டம்.
கதையின் அகலங்கள் மரத்தின் கிளைகளாக மனதில் விரிகின்றன. சின்னக் கதையில் மரத்தின் வலியை அழகாக விவரித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.
// ஒரு பூவையோ, பிஞ்சையோ அவனுக்குத் தெரியாமல் என்னால் ஒளித்து வைக்க முடிந்ததில்லை.//
ReplyDeleteஒரு மரத்தின் வேதனைகூட வெகுளித்தனமாய் எவ்வளவு அழகாகப் பதிவாகியிருக்கிறது! உருவகக் கதை உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன.
நன்றாய் வந்திருருக்கிறது; நிறைய எழுதுங்கள்.
நல்லாயிருக்குக்கா...
ReplyDeleteஜீவா சொல்லியிருப்பது போல, மரத்தின் வேதனையைக் கூட ரொம்ப இயல்பா பதிவு செய்திருக்கீங்க...
இது ஏதும் போட்டிக்கு அனுப்ப இருக்கீங்களா?
வாழ்த்துக்கள்...
//நல்ல முயற்சி!
ReplyDeleteபாராட்டுகள்!//
முதல் வருகைக்கும் பாராட்டும் நன்றி சிக்கி முக்கி அவர்களே.
//மரத்திற்கு இது சாத்தியம் .
ReplyDeleteமனிதனுக்கு ? //
வாங்க சுப்பு தாத்தா. மனிதனுக்கு எதுதான் சாத்தியமில்லை? கதை வாசித்தமைக்கு நன்றி.
//நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதைக் கூறும் நல்ல கதை. வாழ்த்துக்கள் கவிநயா!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.
//கதை நல்லாருக்கு...:-))//
ReplyDeleteநல்வரவு விஜய் ஆனந்த். இப்பதான் முதல் வருகைன்னு நினைக்கிறேன். ரசித்ததற்கு நன்றி.
//நல்ல கதை,அருமையா இருக்கு ..//
ReplyDeleteநன்றி ரம்யா.
வருக அகரம்.அமுதா. மரம் வைக்கிறவன் தண்ணீர் ஊத்தறானோ இல்லையோ, இப்பல்லாம் வச்சோன்னோ வெட்டவும் நாள் குறிச்சிர்றாங்க :( கதை வாசித்ததற்கு நன்றி.
ReplyDelete//கதையின் அகலங்கள் மரத்தின் கிளைகளாக மனதில் விரிகின்றன. சின்னக் கதையில் மரத்தின் வலியை அழகாக விவரித்திருக்கிறீர்கள்.//
ReplyDeleteகவித்துவமான பாராட்டுக்கு நன்றி ரிஷான்.
//ஒரு மரத்தின் வேதனைகூட வெகுளித்தனமாய் எவ்வளவு அழகாகப் பதிவாகியிருக்கிறது! உருவகக் கதை உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன.//
ReplyDeleteசரியான புரிதல் ஜீவி ஐயா. மிக்க நன்றி.
//ஜீவா சொல்லியிருப்பது போல, மரத்தின் வேதனையைக் கூட ரொம்ப இயல்பா பதிவு செய்திருக்கீங்க...//
ReplyDeleteநன்றி மௌலி. ஜீவி ஐயாவைத்தான் ஜீவான்னு நினைச்சுக்கிட்டீங்க :)
//இது ஏதும் போட்டிக்கு அனுப்ப இருக்கீங்களா?//
அப்படி எல்லாம் இல்ல. முதல்லயே 'திசைகள்'ல பிரசுரமானது. அதனால் இனி எங்கேயும் அனுப்பவும் வாய்ப்பில்லை.
//அருமை கவிநயா. கவித்துவமான கதை.//
ReplyDeleteநன்றி ரமேஷ்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். அதற்கான பதிவு கண்ணன் பாட்டுல போட்டிருக்கேன். முடியும்போது பாருங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிநயா நல்ல கருத்தாகன கதை...
ReplyDeleteவாங்க தமிழன். மிக்க நன்றி.
ReplyDeleteமரம் சொல்வதுபோல் கதையை சொல்லியிருப்பது அருமை :)))
ReplyDeleteமிக்க நன்றி ஜி.
ReplyDeleteஇங்கே எங்கள் வீட்டுப் புழைக்கடையில் இரண்டு நெடிய மரங்கள் இருக்கின்றன. வீட்டைக் கட்டி பத்து வருடங்கள் ஆகின்றன. இந்த மரங்கள் வீடு கட்டுவதற்கு முன்பிருந்தே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல வேளை வீடு கட்டியவர்கள் அந்த மரங்களை வெட்டாமல் விட்டார்கள். எங்கள் வீட்டில் இதற்கு முன்னர் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் இப்போது எங்கள் வாழ்க்கையையும் அந்த மரங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்; தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் என்று சில நேரம் எண்ணுவதுண்டு.
ReplyDeleteவாழ்க்கையில் நாம் மதிக்காமல் ஆனால் நம்மை மதிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை இழப்பது நமக்குப் பெரியதாக இருப்பதில்லை; ஆனால் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும் போது நாம் அவர்களை மதிக்காமல் அவர்களை இழப்பதில் ஒரு சுணக்கம் கூட இல்லாமல் இருப்பது அவர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை என்று சில நேரம் எண்ணிக் கொள்வதுண்டு. ஆனாலும் வாழ்க்கை இன்னும் அப்படியே தான் போகிறது.
//வாழ்க்கையில் நாம் மதிக்காமல் ஆனால் நம்மை மதிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை இழப்பது நமக்குப் பெரியதாக இருப்பதில்லை; ஆனால் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும் போது நாம் அவர்களை மதிக்காமல் அவர்களை இழப்பதில் ஒரு சுணக்கம் கூட இல்லாமல் இருப்பது அவர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை என்று சில நேரம் எண்ணிக் கொள்வதுண்டு.//
ReplyDeleteஉண்மைதான். அந்த விழிப்புணர்வு இருப்பதே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். அதுதானே மாறுதலுக்கு முதற்படி? அருமையான எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி குமரா.
நல்லாயிருந்தது.
ReplyDelete//நல்லாயிருந்தது.//
ReplyDeleteநல்வரவு சர்வேசன் :) முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.