Monday, December 20, 2010

கோவிந்தக் கிளி

கோவிந்தா… கோவிந்தா’

பிருந்தை உள்ளே நுழையும் போதே கிளியின் குரல்தான் அவளை வரவேற்கிறது.

வீட்டில் நிசப்தத்தின் ஆட்சி. பெரியாழ்வார் வீட்டில் இல்லை போலிருக்கிறது. கோதை என்ன செய்கிறாள்? ஒரு வேளை உறங்கிக் கொண்டிருக்கிறாளோ? இந்த எண்ணம் வந்தவுடன் தன் கொலுசுச் சத்தத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக அடி எடுத்து வைக்கிறாள். ஆனால், கிளியின் கூவலுக்கு எழாதவளா என் கொலுசுக்கு எழுந்திருக்கப் போகிறாள், என்று கூடவே தோன்றுகிறது.

அதோ… தரையில் துவண்ட கொடி போல் கிடக்கிறாள் கோதை. விழிகள் திறந்துதான் இருக்கின்றன. சரிதான்… அவள்தான் உண்பதையும் உறங்குவதையும் மறந்து எத்தனையோ காலமாகிறதே.

பக்கத்தில் போய் மெதுவாக அமர்கிறாள், தோழியின் மோனத்தைக் கலைக்க மனமில்லாமல். அவளைப் பார்க்கப் பார்க்க, கழிவிரக்கத்தால் கண்கள் கசிகின்றன, பிருந்தைக்கு. எப்படி ஆகி விட்டாள், என் தோழி!

சிவந்திருக்க வேண்டிய கன்னங்களுக்குப் பதில் உறக்கமிழந்த கண்கள் சிவந்திருக்கின்றன. வெளுத்திருக்க வேண்டிய கண்களுக்குப் பதில் முகமும் அதரங்களும் வெளிறிப் போய்க் கிடக்கின்றன. வசந்த கால மலரைப் போல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தவள், இப்போது இலையுதிர் கால உதிர்ந்த சருகைப் போல் கிடக்கிறாள்.

கன்னத்தில் விழுந்து கண்களை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலைப் பரிவுடன் விலக்கி விடுகிறாள், பிருந்தை. அந்த ஸ்பரிசத்தில் கோதையின் கருவிழிகள் இலேசாக அசைகின்றன.

“யார் அது?..... ஓ…. வா… பிருந்தை”

அந்த வார்த்தைகளிலேயே களைத்து விட்டவள் போல் மீண்டும் மௌனமாகி விட்டாள் கோதை.

திரட்டி வைத்த வெண்ணெய் எதையும் உருக விடாமல் உடனடியாக உண்டு உண்டு, பேழை வயிறோனாய்* இருக்கும் அந்த நீலக் கண்ணன், இந்தப் பெண்ணை மட்டும் இப்படி இரக்கமில்லாமல் உருக விட்டு, இவள் பேதை வயிறை இப்படிக் காய வைத்து விட்டானே!

“கோபாலா… கோபாலா…” மறுபடியும் கொஞ்சுகிறது கிளி.


கைகளைத் தரையில் ஊன்றி, சற்றே நகர்ந்து தோழியின் மடியில் தலை வைத்துக் கொள்கிறாள் கோதை.

ஊன்றிய கைகளிலிருந்து வளையல்கள் தானாகக் கழன்று விழுகின்றன. அவற்றை எடுத்து தோழியின் கைகளில் மறுபடியும் போட்டு விடுகிறாள், பிருந்தை.

“பாரடி இந்தக் கிளியை… எப்போது பார்த்தாலும் அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது…”, என்று தோழியிடம் முறையிடுகிறாள் கோதை, சின்னக் குழந்தையைப் போல.

“வேறு என்னடி செய்யும் பாவம்? நீதானே அவன் பெயர்களை மட்டுமே அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்? உன் மேல்தான் தவறு!”

“ஆமாமடி. அவன் பெயரையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவலில் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போது அவன் பெயரைக் கேட்டாலே என் ஏக்கமும் துக்கமும் அதிகரிக்கிறதேடி…. என்ன செய்வேன்?”

“உலகளந்தான்… உலகளந்தான்” என்று அழைக்கிறது கிளி, இப்போது.

“ஏய் கிளியே… சற்று சும்மா இருக்க மாட்டாய்!”, பிருந்தைக்கே பொறுமை போய்விடும் போல் இருக்கிறது.

“என்றைக்கேனும் உணவு தராமல் இருந்து விட்டால், முறையிடுவதற்காக இப்படித்தான் அவனை அழைக்கும்.**

கிளி சிறகடித்து வந்து பிருந்தையின் தோளில் அமர்ந்து கொள்கிறது.

“என்னை விட இந்தக் கிளிதான் அவன் பெயரை அதிகம் சொல்லியிருக்கும் என்று தோன்றுகிறதடி”, என்றவள், “இந்தக் கண்ணன் இருக்கிறானே… அவன் சரியான கள்வனடி”, என்கிறாள், சம்பந்தமில்லாமல்.

“அதுதான் தெரிந்த செய்தியாயிற்றே… அதற்கென்னடி இப்போது?” என்கிறாள் பிருந்தை பேச்சை வளர்க்க எண்ணி. இந்த மட்டுமாவது கோதை மோனத்தைக் கலைத்து இந்த உலகிற்கு வந்தாளே என்று இருக்கிறது அவளுக்கு.

“மனிதர்களை விட அவனுக்கு மற்ற உயிர்களிடத்தில்தான் அதிகப் பற்று போலும் என்று சமயத்தில் தோன்றுகிறதடி”

“எப்படிச் சொல்கிறாய்?”

“ம்… பாரேன்… மாடு கன்றுகள் இறப்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவன் காளிங்கனைக் கொன்றான்?”

“ஆமாமடி”

“கஜேந்திரன் அழைத்தவுடன் நொடியும் தாமதிக்காது கருடனில் ஏறிக் கணத்தில் வந்து விட்டானே?”

“உண்மைதான்”

“ஆயர்பாடியில் ஆவினங்களைக் காப்பதற்காக தன் பிஞ்சு விரலில் குன்றைக் குடையாக எடுத்தவனல்லவா அவன்?”

“ம்…”

“அதனால்தான், நான் அழைத்தால் வராதவன், என் கிளியின் குரலைக் கேட்டாவது ஓடோடி வந்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருக்கிறதடி…”

“ஓஹோ... இப்போதல்லவா புரிகிறது, நீ இந்தப் பொல்லாத கிளியைச் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம்!”, ஆச்சரியத்தில் கண்கள் பெரிதாக விரிகின்றன, பிருந்தைக்கு.

“என்றுதான் வருவானோ என் கண்ணன்?” பெருமூச்சொன்று தப்பிச் செல்கிறது, கோதையிடமிருந்து.

“ஒரு வேளை நான் இப்படி உருகி உருகிக் கரைய வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம் போலும்... அவன் விருப்பப்படி இருப்பதுதானே என்னுடைய விருப்பமும்!”

இதைச் சொல்லும்போது இத்தனை நேரமும் சோகமாக இருந்த கோதையின் முகம், ஏதோவொன்று புரிந்து விட்டாற் போல சட்டென்று ஒளி பெற்று, சந்தோஷத்தில் பொலிகிறது.

**
*1ம் பத்து 4-ம் (பெரியாழ்வார்) திருமொழி
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

**12-ம் (நாச்சியார்) திருமொழி
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

**

--கவிநயா

பி.கு.: சில நாட்களுக்கு முன் கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன். எனக்கே பிடித்த பதிவு என்பதாலும், மார்கழிக்குப் பொருத்தம் என்பதாலும், வாசகர் வட்டம் வேறு என்பதாலும், இங்கும் இடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே வாசித்தவர்கள், பொறுத்தருள்க!

4 comments:

  1. கோவிந்தன் நாமம் சொல்லியபடி இருக்கும் கிளியையும், உருகிக் கரையும் கோதையின் ஏக்கத்தினையும் இங்கும் பகிர்ந்தமைக்கு நன்றி:)! மார்கழி காலையில் மனதுக்கு நிறைவான பதிவு.

    ReplyDelete
  2. வழக்கம்போல தவறாமல் வந்து வாசித்துப் பின்னூட்டியமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  3. hughly picteruesque descriptions! kann munnaadi nadakkaraapla irunthathu! beautiful!

    ReplyDelete
  4. வாருங்கள் மாதங்கி. முதல் வருகை என்று நினைக்கிறேன், ரசித்தமைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)